Published:Updated:

`பீக்ல இருந்தப்பவே விவியன் ரிச்சர்ட்ஸ் டீம் இங்க தோத்துச்சு..!' காரணம் சொல்லும் சேப்பாக்கம் பிட்ச் பார்த்தசாரதி

`பீக்ல இருந்தப்பவே விவியன் ரிச்சர்ட்ஸ் டீம் இங்க தோத்துச்சு..!' காரணம் சொல்லும் சேப்பாக்கம் பிட்ச்  பார்த்தசாரதி
`பீக்ல இருந்தப்பவே விவியன் ரிச்சர்ட்ஸ் டீம் இங்க தோத்துச்சு..!' காரணம் சொல்லும் சேப்பாக்கம் பிட்ச் பார்த்தசாரதி

``விக்கெட்ல நிக்காதிங்க. டேமேஜ் ஆயிரும். இங்கிட்டு வந்துருங்க...’’ - பெற்ற பிள்ளையைப் போல அந்த பிட்ச்சை அப்படிப் பார்த்துக்கொள்கிறார் பார்த்தசாரதி. `காலையில 5 மணிக்கு கிரவுண்டுக்கு வந்தா, வீட்டுக்குப் போக லேட் நைட் ஆயிடும். காலேஜ் படிக்கிற என் பொண்ணு எந்திருக்கிறதுக்குள்ள வீட்டுல இருந்து கிளம்பி, அவ தூங்குனதுக்கு அப்புறம்தான் வீட்டுக்கே போவேன்’ எனச் சலிப்பாகச் சொன்னாலும், இந்த வேலை மீது அவருக்கு அவ்வளவு பிரியம். அதனால்தான் அவரால், ஐ.சி.எஃபில் கிடைத்த வேலையை உதறிவிட்டு, இந்த 22 கெஜத்துக்குள் 30 ஆண்டுகளைக் கழிக்க முடிந்தது. 

மறுநாள் நடக்கவுள்ள ஓர் உள்ளூர் போட்டிக்காக பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தது எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம். அவுட் ஃபீல்டு கட் பண்ணிக்கொண்டிருந்தவர்களிடம் இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துவிட்டு, டி.என்.சி.ஏ-வின் இப்போதைய பிட்ச் கியூரேட்டர் விஜயகுமாருடன் விக்கெட்டை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பார்த்தசாரதியை, ஒரு காலை வேளையில் சந்தித்தோம். நவாப் அலி கான் பட்டோடியிலிருந்து விராட் கோலி வரை அத்தனை கேப்டன்களையும் டீல் செய்தவர். 27 டெஸ்ட் போட்டிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர். அவரிடம் கதைக்கா பஞ்சம்... இதோ, அவரிடம் பேசியதில் கொஞ்சம்! 

கியூரேட்டர் ஆனது எப்படி?

என் அப்பா கே.எஸ்.கண்ணன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளராக இருந்தார்; ரஞ்சி டிராபி வீரர்; அவர் கியூரேட்டராகவும் இருந்தார். அவரிடம் இருந்துதான் கியூரேட்டர் பணியைக் கற்றுக்கொண்டேன். 1973-ல் அதாவது, என் 19-வது வயதில், இதை என் புரொஃபஷனாக எடுத்துக்கொண்டேன். இந்தப் பணிக்கு வந்தபின் பிட்ச் கியேூரேட்டிங் தொடர்பாக ஏராளமான புத்தகங்கள் படித்தேன். இருந்தாலும், அனுபவ அறிவுதான் ரொம்பவே கைகொடுத்தது.

எப்படி பிட்ச் தயார் செய்கிறீர்கள்?

பொதுவாக, பிரிக் பேஸ்டு விக்கெட்தான் போடுகிறோம். 18 இன்ச் தோண்டிவிட்டு, அடியில் ஆற்று மணலையும், அதன் மேலே முழு செங்கலை படுத்த மாதிரி வைத்து ஒரு லேயர் அமைப்போம். செங்கல்களுக்கு இடையிலான இடைவெளியில் மீண்டும் ஆற்று மணலைப் போட்டு நிரப்பி, தண்ணீர் விடுவோம். அடுத்து செங்கலை செங்குத்தாக வைத்து, மணல் போட்டு அந்த இடைவெளியில் தண்ணீர் விடுவோம். 

அடுத்து, 6 இன்ச் வரை செம்மண்ணைப் போட்டு, அதன்மேல் புல்லைப் பதிவிட்டுவிடுவோம். ஒவ்வொரு லேயருக்கும் வைப்ரேட்டர் போட்டு வலுப்படுத்திவிட்டு, தண்ணீர் விடுவோம். பின், டை அமோனியம் பாஸ்போட் அடி உரம் போடுவோம். நன்றாக பச்சைப்பசேல் என வளர்ந்துவிடும். அதை கட் பண்ணிவிட்டு, தரமான களிமண்ணைப் போட்டு, டாப் டிரெஸ்ஸிங் செய்து, லெவல் செய்வோம். நன்றாக புல் வளர்ந்தபின் பிட்ச் பராமரிப்பைத் தொடங்குவோம்.

பொதுவாக, ஒரு விக்கெட் (பிட்ச்) தயார் செய்வதற்கு மூன்று மாதங்களாகிவிடும். டெஸ்ட் மேட்ச் எனில் அதற்கேற்ப, ஒன்டே எனில் அதற்கேற்ப, டி-20 எனில் அதற்கேற்ப விக்கெட் தயாரிப்போம். நல்ல ஸ்போர்ட்டிங் விக்கெட் வேண்டுமெனில் புல் அடர்த்தியாக வைத்து, வலுவான பிட்ச் ரெடி பண்ண வேண்டும்.

இந்திய அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சேப்பாக்கத்தில் பொதுவாக டர்னிங் டிராக்ஸ் கேட்பது சகஜம். மூன்றாவது நாள் டர்ன் ஆவதுபோல ரெடி செய்திருப்போம். சுழலுக்குச் சாதகமாக விக்கெட் செய்வது என்பது தண்ணீர் எவ்வளவு விடுகிறோம், எந்தளவு ரோலிங் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.  

மூன்றாவது நாள் பந்து திரும்ப வேண்டுமெனில், தண்ணீரைக் குறைக்க வேண்டும். அதற்கேற்ப ரோலிங்கையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். நல்ல விக்கெட் வேண்டுமெனில் சர்ஃபேஸ் சாலிடாக இருக்க வேண்டும். சரியான அளவில் தண்ணீர் விட்டு, அதற்கேற்ப ரோலிங் பண்ண வேண்டும். மூன்றாவது நாள் சர்பேஸ் உடைய வேண்டுமெனில், தண்ணீரையும் குறைக்க வேண்டும், ரோலிங்கையும் குறைக்க வேண்டும். அடித்தளம் எட்டு பிட்ச்சுக்கும் ஒரேமாதிரிதான் இருக்கும். எந்த மாதிரி பிட்ச் கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்து, மேட்ச்சுக்கு ஏற்ப பிட்ச்சை ரெடி செய்வோம். பிட்ச் உருவாக்குவதற்கு தட்பவெப்பநிலை ரொம்ப முக்கியம். 

முன்பெல்லாம், பொங்கல் சமயத்தில்தான் இங்கு இன்டர்நேஷனல் போட்டிகள் நடக்கும். பொங்கல் நேரம்தான் தமிழ்நாட்டில் ஐடியல் கிளைமேட். பருவமழை முடிந்துவிடும். பனி முடிந்துவிடும். விக்கெட் ரெடி பண்ண பொருத்தமாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் ஆண்டு  முழுவதும் மேட்ச் நடக்கிறது.  மழைக்காலத்தில் விக்கெட் தயார் செய்வது ரொம்பவே கஷ்டம்.

விக்கெட் கவரிங் என்பது ஒரு வகை. பிட்ச்சை கவர் பண்ண ஆரம்பித்தாலே விக்கெட் ஸ்லோ டவுனாகி விடும். மூக்கைப் பிடித்துக்கொண்டே நீண்ட நேரம் நம்மால் இருக்க முடியாதல்லவா. அதேபோலத்தான் பிட்ச் பராமரிப்பும்...

கிளைமேட் சேஞ்ச் பிட்ச்சில் பாதிப்பை ஏற்படுத்துமா? 

கண்டிப்பாக. பிட்ச் மட்டுமல்ல கிளைமட்டும் முக்கியப் பங்கு வகிக்கும். மேகமூட்டமாக இருந்தால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் ஆகும். நல்ல வெயில், டிரையாக இருந்தால் ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக இருக்கும். 

உதாரணத்துக்கு, லார்ட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து பேட்டிங் செய்யும்போது வெதர் நன்றாக இருந்தது. இந்தியா விளையாடும்போது மேகமூட்டமாக இருந்ததால், ஸ்விங் அதிகமாக இருந்தது. அதனால், நம் பேட்ஸ்மேன்களால் ஆட முடியவில்லை. ஆனால், மூன்றாவது டெஸ்ட்டில் அப்படியே மாறிவிட்டது. இங்கிலாந்து கண்டிஷன் அப்படித்தான். மழை வரும்போது பேட் செய்பவன் மாட்டிக்கொள்வான். தட்பவெப்ப சூழல் ஒத்துழைத்ததால்தான் ஹர்டிக் பாண்டியா ஐந்து விக்கெட் எடுக்க முடிந்தது.

இங்கும் கூட இங்கிலாந்து ஆடுகளங்களைப் போல பிட்ச் ரெடி பண்ணலாம். ஆனால், வெதர் ஒத்துழைக்க வேண்டுமே. ஒரு விஷயம்... இங்கிலாந்து அணி இங்கு வரும்போது கிராஸ் (புல்) வைத்த விக்கெட் கேட்க மாட்டார்கள். இந்திய அணிக்குச் சாதகமாகவே விக்கெட் ரெடி பண்ண வேண்டும். இதை ஹோம் கிரவுண்ட் சாதகம் என்பார்கள். எல்லா அணிகளுமே தங்களுக்குச் சாதகமாகவே விக்கெட் கேட்பார்கள். சமீபகாலமாக, எல்லா இடத்திலும் விக்கெட் எடுக்கும் வகையில் வேகப்பந்துவீச்சாளர்களை தயார்ப்படுத்தி வருகிறாம். பெளலர்களும் விக்கெட் எடுத்து வருகிறார்கள். இது நல்ல முன்னேற்றம்.

சர்வதேசப் போட்டிகளுக்கு பிசிசிஐ கேட்பது போல பிட்ச் தயார் செய்வீர்கள்.. உள்ளூர் போட்டிகளுக்கு எப்படி?

உள்ளூர் போட்டிகளிலும் ஹோம் கிரவுண்ட் அட்வான்டேஜ் இருக்கும்படிதான் பிட்ச் அமைத்தோம். ஆனால், இப்போது விதிமாற்றப்பட்டது. இரு அணிகளுக்கும் பொதுவான கியூரேட்டரை நியமித்து விட்டார்கள். அப்படி இருக்கும்போது 50-50 அளவில்தான் பிட்ச் ரெடி பண்ண முடியும். 

ஓர் அணிக்கு மட்டும் சாதகமாக பிட்ச் தயாரித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததா?

எங்களுக்கு ஒன்றும் கிடையாது. அவர்கள் (BCCI) கேட்பதைக் கொடுக்கிறோம். சொன்னதைச் செய்கிறோம். 1988-ல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சென்னையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அவ்வளவு பெரிய வெஸ்ட் இண்டீஸ் அணியை ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி 255 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியத் தரப்பில் ஹிர்வானி 16 விக்கெட்டுகள் எடுத்திருப்பார். 

அது, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் வேகப்பந்துவீச்சில் கோலோச்சிய காலம். அவர்களுக்குச் சாதகமாக, வேகப்பந்துக்குச் சாதகமாக, இங்கு விக்கெட் ரெடி பண்ணி கொடுத்து, இந்தியா தோற்றால் நன்றாக இருக்காது அல்லவா. அதற்காக, சுழலுக்குச் சாதகமான விக்கெட் கேட்டார்கள். இந்தியா வென்றது. 

பாஸ்ட் பவுலிங் ஆடுவதற்கு தைரியம், டெக்னிக், ஃபுட்வொர்க் தேவைப்படுவது போல, ஸ்பின் ஆடுவதற்கும் டெக்னிக், ஃபுட்வொர்க் வேண்டும். கிரிக்கெட்டில் வேகம், மிதவேகம், ஸ்பின் என எல்லா கேட்டகிரியும் இருக்கிறது. அந்தவகையில் நம் அணியில் ஸ்பின்னர்ஸ் இருந்ததால் வெற்றிபெற முடிந்தது. ஸ்பின் இந்திய அணிக்குப் பொருத்தமாக இருப்பதால், நாம் அப்படிப்பட்ட பிட்ச் ரெடி பண்ணுகிறோம். இதைப் பாரபட்சமாகச் செயல்படுவதாகச் சொல்ல முடியாது. 

மறக்க முடியாத பாராட்டு...!

1980-ல் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்திருந்தது. ஐந்தாவது டெஸ்ட் சென்னையில் நடந்தது. கபில்தேவ் 11 விக்கெட் எடுத்தார், கவாஸ்கர் 166 ரன்கள் அடித்தார். இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் தோற்றபோதும், அந்த அணியின் கேப்டன் ஆசிப் இக்பால், `This is the way of preparing Test match wicket’ எனப் பாராட்டினார். அந்தப் போட்டியில் ஆடுகளம் வேகப்பந்துக்கும் சாதகமாக இருந்தது; பேட்ஸ்மேன்களும் ரன் எடுத்தார்கள். ஸ்பின்னருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

சேப்பாக்கம் எந்த வகையான விக்கெட்?

அந்தக் காலத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம், டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரே மாதிரிதான் ஆடுகளத்தைத் தயார் செய்துவருகிறது. முதல்நாள் பெளன்ஸ் இருக்கும். வேகப்பந்துக்குச் சாதகமாக இருக்கும். இரண்டாவது நாள் பேட்ஸ்மேன்கள் நன்றாக ரன் எடுப்பார்கள். மூன்றாவதுநாள்  டீ டைம் முடிந்ததும், பந்து திரும்ப ஆரம்பிக்கும். சுழலுக்குச் சாதகமாக இருக்கும். கடைசி இரண்டு நாள்களில் பந்து நன்றாகவே திரும்பும். ஆக, இந்த ஐந்து நாள்களில் கிரிக்கெட்டில் இருக்கும் எல்லா ஏரியாவும் கவராகி விடும். ரிசல்ட்டும் கிடைத்துவிடும். ஐந்து நாள் விளையாடும் போட்டியில் ரிசல்ட் கிடைத்தால்தானே நன்றாக இருக்கும். ரசிகர்களும் ரசிப்பார்கள்?!

சச்சின் எப்போதுமே சேப்பாக்கம் மைதானத்தை விரும்புவார். ஏனெனில், பெளன்ஸ் இருக்கும். பந்து பேட்டுக்கு வரும். இங்கு அவர் 5 சதங்கள் அடித்திருக்கிறார். சச்சின் மட்டுமல்ல, எல்லா கிரிக்கெட்டர்களும் சேப்பாக் மைதானத்தை விரும்புவார்கள். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெளன்ஸ் இருக்கும், ஸ்பின்னர்ஸுக்கு பெளன்ஸ் அண்ட் டர்ன் இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு முதல் மூன்றுநாள்கள் பந்து பேட்டுக்கு வரும். அதனால், எல்லோருமே சேப்பாக்கத்தை விரும்புவர்.

நீங்கள் நினைத்த மாதிரியே பிட்ச் அமைந்துவிடுமா? 

இல்லை. சில நேரங்களில், நாம் நினைப்பதற்கு நேர்மாறாகவும் நடக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி. அனில் கும்ப்ளே கேப்டன். அந்தப் போட்டிக்காக விக்கெட்டை டிரையாக ரெடி செய்திருந்தோம். ஆனால், போட்டிக்கு இரண்டு நாள்களுக்கு முன் மழை பெய்துவிட்டது. விக்கெட் லேசாக நனைந்துவிட்டது. கவர் செய்தாலும் மழை அதற்கு மேல் பெய்ததால் விக்கெட் dampen ஆகி, ஸ்லோவாகி விட்டது. ஆனால், அது முழுக்கமுழுக்க சுழலுக்குச் சாதகமாக ரெடி பண்ணிய விக்கெட். ஆனால், வெதர் எங்களை ஏமாற்றிவிட்டது. சேவாக், 319 அடித்தாரே... அந்த டெஸ்ட் மேட்ச்தான்... நடந்தது இதுதான். இது யாருக்கும் தெரியாது. இரு தரப்பிலும் வெளுத்து வாங்கினார்கள். (தென்னாப்பிரிக்கா 540, 331/5d, இந்தியா 627). ஆனால், மேட்ச் டிரா. 

ஐ.பி.எல் விக்கெட் எப்படி இருக்கும்?

ரசிகர்களைத் திருப்பி அளிக்கும் வகையில், டி-20 என்றாலேபேட்டிங்குக்குச் சாதகமான பிட்ச்சைத்தான் தயார் செய்வோம். 20 ஓவரில் ஓர் அணி 180 அடித்தாலும், எதிரணி அந்த ரன்னை சேஸ் செய்யும் வகையில்தான் பிட்ச் இருக்கும். டர்னிங் டிராக், வேகப்பந்துக்குச் சாதகமாக புல் தரை அமைப்பது என எந்த விதியும் டி-20-க்கு எடுபடாது. ஒருநாள் போட்டிகளிலும், பெரும்பாலும் பேட்டிங் விக்கெட்தான் இருக்கும். 

உதவியாளர்கள் மற்றும் சாதனங்கள்..?!

எனக்கு உதவியாக 20 - 25 பேர் இருப்பார்கள். இப்போது எக்யூப்மென்ட்ஸ் அதிகம் வந்துவிட்டது. முன்பு இவ்வளவு சாதனங்கள் இல்லை. ரோலரும் ஹேண்ட் ரோலர்... அவுட்ஃபீல்டையும் கையால்தான் கட் பண்ண வேண்டியிருக்கும். இப்போது பரவாயில்லை. 20 பேர் கட் பண்ண வேண்டிய அவுட்ஃபீல்டை 6 பேர் நாலு மிஷனைப் போட்டு கட் பண்ணி விடுகிறார்கள். 

சேப்பாக்கத்தில் டோரோ கிரவுண்ட் மாஸ்டர், பவர் ரோலர், லேண்ட் மோவர், ஏரேட்டர், சூப்பர் சாப்பர் என எல்லாவகையான ஹைடெக் சாதனங்களும் இருக்கின்றன. இந்த மாதிரி ஹைடெக் சாதனங்கள் இருந்தால் 10 நாள்களில் கூட ஒரு விக்கெட் தயார்செய்துவிடலாம். அந்தக் காலத்தில் அப்படியில்லை ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே தயார் செய்ய வேண்டும்.

மழை பெய்தால்..?!

இங்கு அண்டர்கிரவுண்ட் டிரெய்னேஜ் சிஸ்டம் இருக்கிறது. மழை பெய்தால் கிரவுண்டில் இருக்கும்  தண்ணீரைக் கீழே இழுத்து, டிரெய்னேஜுக்கு கொண்டு வந்து வெளியேற்றிவிடலாம். மழை நின்ற அரை மணி நேரத்தில் போட்டியைத் தொடங்கிவிடலாம். விக்கெட்டை கவர் செய்வதால் பிட்ச்சுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், மழை பெய்யும் நேரம் அதிகமாக அதிகமாக விக்கெட் கொஞ்சம் ஸ்லோவாகும்.

ஒவ்வோர் ஆண்டும் கிரவுண்டுக்கும், விக்கெட்டுக்கும் மூன்று மாதம் ரெஸ்ட் கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ரீலே பண்ணி, டாப் டிரெஸ்ஸிங் மாற்றி விக்கெட்டை பக்காவாகப் பராமரிக்க முடியும். அவ்வப்போது களிமண், செம்மண் மாற்ற வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே விக்கெட் ஃபிரெஸ்ஸாக இருக்கும். பழையதையே பயன்படுத்தினால் விக்கெட் ஸ்லோடவுனாகி விடும்.