Published:Updated:

மூன்று இடங்கள்... ஆறு வீரர்கள்... பிளேயிங் லெவன் பரிதாபங்கள்! #ENGvIND

மூன்று இடங்கள்... ஆறு வீரர்கள்... பிளேயிங் லெவன் பரிதாபங்கள்! #ENGvIND
News
மூன்று இடங்கள்... ஆறு வீரர்கள்... பிளேயிங் லெவன் பரிதாபங்கள்! #ENGvIND

கோலியின்முன் இந்த முறை வழக்கத்தும் அதிகமான கேள்விகள் இருக்கின்றன. தொடரைத் தோற்றுவிட்டதாலும், இரண்டு அறிமுக வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருப்பதாலும், அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படும்.

ன்று ஓவலில் இந்தியா வெற்றி பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தொடரை இழந்தது இழந்ததுதான். வெஸ்ட் இண்டீஸ் தவிர்த்து ஆசியாவுக்கு வெளியே இந்தியா இன்னும் தடுமாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த வெற்றி ஒருவகையில் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்று. இதற்கு முன்பு தோல்விகள் உறுதியானதாக இருந்தாலும், இப்போது இந்திய அணி எதிரணிகளுக்கு சவால் கொடுக்கிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியைத் தவிர்த்து, வேறு எந்தப் போட்டியிலும் அவர்கள் சரண்டர் ஆகவில்லை. நான்காவது இன்னிங்ஸில்தான் ஆட்டம் முடிவு செய்யப்பட்டது. ஜோகன்னஸ்பெர்க், பிர்மிங்ஹாம், சௌதாம்ப்டன் போன்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்து ஆட்டத்தை இழந்துள்ளது. இந்தியாவின் இந்த மாற்றம், அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்களில் வெற்றியாக மாற, ஓவல் வெற்றி அவசியம். #ENGvIND

இந்தப் போட்டி 'டிசைடர்' இல்லை என்பதால், பலரும் இந்திய அணியில் பல மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். சிலர் 'பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகியோருக்கு அறிமுக வாய்ப்பு தர வேண்டும்' என்கிறார்கள். சிலர் அஷ்வின் நீக்கப்பட்டு ஜடேஜாவை எடுக்க வேண்டும் என்கிறார்கள். அஷ்வினுக்குக் காயம் வேறு! இன்னும் சிலர், இந்தியா இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும் என்கிறார்கள். மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் இந்திய அணியில் பலரையும் வெளியேற்றலாம். தவான், ராகுல், ஹர்டிக், அஷ்வின் அனைவரையும் வெளியேற்றலாம். ஆனால், அதற்கு முன் இந்தப் போட்டி நடக்கும் ஆடுகளத்தின் தன்மையையும், இந்திய அணியின் தேவையையும் கருத்தில் கொள்வது அவசியம். 

கென்னிங்டன் ஓவல் - நான்காவது போட்டி நடந்த சௌதாம்ப்டன் ஆடுகளத்தைப் போலத்தான். மற்ற ஆடுகளங்களைவிட பேட்டிங் செய்வது கொஞ்சம் எளிதுதான். போகப்போக ஸ்பின்னுக்கு ஒத்துழைப்பு தரும். இந்த ஆடுகளத்தின் 20 ஆண்டு ரெக்கார்டைப் பார்த்தால், சராசரியாக ஒரு இன்னிங்ஸில் 293 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. முதல் இன்னிங்ஸ் சராசரி - 346! ஆக, நிதானமாக பேட்டிங் செய்யும்போது இங்கு நல்ல ஸ்கோர் எடுக்க முடியும். நம் ஓப்பனர்கள் போல் ஓவருக்கு 4 ரன்கள் வீதத்துக்கு விளையாடினால் இங்கு நிலைத்து ஆடுவது ரொம்பவே கடினம். இந்தத் தொடரில் இரண்டு அணிகளுமே பேட்டிங்கில் மிகவும் சுமாராகவே செயல்பட்டுள்ளன. முதல் இன்னிங்ஸ் சராசரி வெறும் 242 தான். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மூன்றாவது நாளிலிருந்து ஆடுகளம் சுழலுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்வதும், முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் எடுப்பதும் ரொம்ப அவசியம். இந்தியாவின் ஓப்பனர்கள் நல்ல தொடக்கம் என்பதை இந்தத் தொடரில் ஏற்படுத்திக் கொடுக்கவே இல்லை. 8 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய ஓப்பனர்கள் அடித்தது வெறும் 230 ரன்கள். அதிலும் ஒரு முறை மட்டுமே 100 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடித்துள்ளனர். 8 இன்னிங்ஸ்களில், ஆண்டர்சன், பிராடு, வோக்ஸ், ஸ்டோக்ஸ், சாம் கர்ரன் என மானாவாரியாக அனைத்து பௌலர்களின் பந்துவீச்சிலும் அவுட்டாகியுள்ளனர். சொல்லப்போனால், மூன்று காம்பினேஷன்களுமே ஃபெயிலியர்தான். அதனால் மீண்டும் ஒரு மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் இருப்பதால், அவரை பிளேயிங் லெவனில் இறக்கிப்பார்க்கலாம். 

பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும், ஸ்லிப் ஃபீல்டிங்குக்காவது இந்தப் போட்டிக்கு ராகுல் தேவை. தவான் - தொடர்ந்து மோசமாக விளையாடிவருகிறார். லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளைத் தேடிப்போய் ஆடுகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விட்டுவிடலாம் என்ற டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படையைக்கூடப் பின்பற்றுவதில்லை. அவரிடமிருந்து இதுபோன்ற ஆடுகளங்களில் அதிகம் எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு பிரித்விக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக அவரை விட தவான், ராகுல் இருவரும்தான் அதிக நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்யும்போதுதான் ஷா பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கும் திட்டம் அணி நிர்வாகத்துக்கு இருக்கிறதா தெரியவில்லை.

சௌதாம்ப்டன் டெஸ்ட்டில் பெரிதாக சோபிக்காத ஹர்டிக் பாண்டியாவின் இடமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுவரை ஆடிய 8 இன்னிங்ஸ்களில் ஒரு இன்னிங்ஸில் மட்டும் பௌலராக பெர்ஃபார்ம் செய்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் மட்டும் பேட்ஸ்மேனாக கைகொடுத்துள்ளார். ஒருநாள், டி-20 போட்டிகளுக்கு பாண்டியா ஓகே. ஆனால், டெஸ்ட் போட்டிகளில், ஒரு போட்டியில் நன்றாக ஆடுவதற்கு 10 போட்டிகள் காத்திருப்பது தவறானது. அவரது இடத்தில் யாரைக் கொண்டுவருவது என்பதுதான் முக்கியமான விஷயம். ஹனுமா விஹாரி அல்லது ஜடேஜா இருவரில் ஒருவரைக் களமிறக்கலாம். கோலி வெளிநாட்டு ஆடுகளங்களில் 5 பௌலர்களுடனேயே களமிறங்க விரும்புவதால் ஜடேஜா நல்ல சாய்ஸ்.

இந்த இடத்தில் அஷ்வினுக்குப் பதிலாக ஜடேஜா களமிறக்கப்படவேண்டும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. அஷ்வின் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை மறுக்க முடியாது. பிர்மிங்ஹாம் போட்டிக்குப் பிறகு 3 போட்டிகளிலும் சுமாராகவே பந்துவீசினார். அதுவும் கடந்த போட்டியில் மொயீன் அலி இந்திய பேட்டிங் ஆர்டரைக் குலைத்துக்கொண்டிருக்க, இவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குக் கஷ்டமே கொடுக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடினமான சூழ்நிலைகளில் அஷ்வினை மிகவும் கவனமாக எதிர்கொண்டனர். ரன் எடுப்பதைவிட, விக்கெட் விழாமல் தடுப்பதில் குறியாக இருந்தனர். இந்தத் தொடரில், குறைந்தபட்சம் 20 ஓவர்கள் பந்துவீசிய பௌலர்களில் இரண்டாவது சிறந்த எகானமி வைத்திருப்பது (2.57) அஷ்வின்தான். 

தங்களின் அந்த முயற்சியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெற்றியும் பெற்றனர். 4 போட்டிகளிலும் சேர்த்து 838 பந்துகளை வீசிய அஷ்வின், மொத்தமே 11 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியிருக்கிறார். ஸ்டிரைக் ரேட் - 76.1. இந்தப் 4 போட்டிகளில், குறைந்தபட்சம் 10 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியுள்ள 13 பௌலர்களில், மோசமான ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பது அஷ்வின்தான். இதற்குக் காரணம், புதிது புதிதாக அஷ்வின் செய்யும் வேரியேஷன்கள் - அஷ்வின் சோபிக்காததன் இரண்டாவது காரணம். சௌதாம்ப்டன் போட்டியில், மொயீன் அலி தன் ஆஃப் ஸ்பின் பௌலிங்கால் இந்தியாவை வாரிச் சுருட்டினார். அவர் அதற்காக ரொம்பவும் மெனக்கெடவில்லை. வித்தியாசமாக எதையும் முயற்சி செய்யவில்லை. அவர் வீசியதில் 94 சதவிகிதம் ஆஃப் பிரேக் டெலிவரிகள். 

அஷ்வின் அதற்கு நேரெதிர். தொடர்ந்து பந்துவீச்சில் மாற்றங்கள் செய்துகொண்டே இருந்தார். ஆஃப் பிரேக், லெக் பிரேக், ஆர்ம் பால் எனப் பலவிதமான வேரியேஷன்களை முயற்சிசெய்தார். அவர் வீசியதில் 74 சதவிகிதம் மட்டுமே ஆஃப் பிரேக் பந்துகள். இந்த வேரியேஷன்கள், பெரிதாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை மிரட்டவில்லை. சமாளிப்பதும், ரன் எடுப்பதும் அவர்களுக்கு சுலபமாக இருந்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரொம்பவும் கவனமாக எதிர்கொண்டபோது, அஷ்வின் செய்த வேரியேஷன்கள், இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துவிட்டது. 

இந்நிலையில், புதன்கிழமை மொத்த அணியும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அஷ்வின் உடற்பயிற்சி மட்டுமே செய்துள்ளார். அதுவும் கொஞ்ச நேரம் மட்டும். அவர் இன்னும்  காயத்திலிருந்து முழுமையாக குனமடையாதது போல் தெரிகிறது. ஒருவேளை அஷ்வின் களமிறங்குவதற்கான உடற்தகுதியுடன் இல்லையெனில், அவருக்குப் பதில் ஜடேஜாவைக் களமிறக்கலாம். அவர் ஃபிட்டாக இருந்தால், ஜடேஜா பாண்டியாவின் இடத்தில்தான் களமிறங்க வேண்டும். அஷ்வின் விளையாடவேண்டியது அவசியம். ஏனெனில், கென்னிங்டன் ஓவல் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு மிகவும் உகந்த ஆடுகளம். 

கென்னிங்டன் ஓவல் மைதானத்தின் கடந்த 20 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், வேகப்பந்துவீச்சுக்கு இணையாக ஆஃப் ஸ்பின்னுக்கும் இந்த ஆடுகளம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு (ஸ்டிரைக் ரேட்: 64.04) இணையான வேகத்தில் ஆஃப் ஸ்பின்னர்களும் (ஸ்டிரைக் ரேட் : 64.67) விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இந்த மைதானத்தில் அஷ்வின் (ஸ்டிரைக் ரேட் : 43), மொயீன் அலி (ஸ்டிரைக் ரேட் : 45.44) இருவருமே கூட சிறப்பாகப் பந்துவீசியுள்ளனர். இந்நிலையில், அஷ்வின் விளையாடாமல் போனால், இந்தியா மீண்டும் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கவேண்டியிருக்கும். அதுவும் இடது கை ஸ்பின்னருடன்!

இந்த ஆடுகளத்தில் இடது கை ஸ்பின்னர்கள் பெரிதாக சோபித்ததில்லை. இடது கை ஸ்பின்னர்கள் வீசிய 454.3 ஓவர்களில், 29 விக்கெட்டுகள் மட்டுமே (ஸ்டிரைக் ரேட்: 94.03) வீழ்ந்துள்ளன. அதிலும், கடந்த 2014 இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஜடேஜாவின் ஸ்டிரைக் ரேட் 104. வெறும் 9 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அதிகம் 'டர்ன்' ஆகாத இவரது பந்துவீச்சு எந்த அளவு எடுபடும் என்று தெரியவில்லை. இந்தியா ஜடேஜாவை மட்டுமே ஸ்பின்னராகக் கொண்டு களமிறங்கினால், அணிக்குப் பின்னடைவுதான். அஷ்வினை அணி நிச்சயம் மிஸ் செய்யும். 

 

கோலியின்முன் இந்த முறை வழக்கத்தும் அதிகமான கேள்விகள் இருக்கின்றன. தொடரைத் தோற்றுவிட்டதாலும், இரண்டு அறிமுக வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருப்பதாலும், அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படும். அதனால் அவர் தீர்க்கமாக சில அதிரடி முடிவுகளை எடுப்பது அவசியம். தவான், ராகுல், பிரித்வி மூவரில் எந்த இருவரை ஓப்பனர்களாக் களமிறக்குவது; ஒருவேளை அஷ்வின் ஆடினால், பாண்டியா, விஹாரி, ஜடேஜாவில் யாரைக் களமிறக்குவது என்ற இரண்டு கேள்விகளுக்கும் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். 

இங்கிலாந்தின் அனைத்து ஆல் ரவுண்டர்களும் பட்டையைக் கிளப்பும்போது, பாண்டியாவை ஆல் ரவுண்டர் பட்டியலில் சேர்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. சாம் கர்ரன் கூட ஆல்ரவுண்டராக உருவாகிவிட்டார். அது மட்டுமின்றி, அலெஸ்டர் குக் விளையாடப்போகும் கடைசிப் போட்டி என்பதால், அவருக்கு 'வின்னிங் ஃபேர்வெல்' கொடுக்க, இங்கிலாந்தும் முழு பலத்தோடு விளையாடும். அதனால், டாஸ் வெல்வது இந்தப் போட்டியில் ரொம்பவே முக்கியம்.