Published:Updated:

ஐ.பி.எல்: சூப்பர் ஓவரில் சன் ரைசர்ஸ் வெற்றி

ஐ.பி.எல்: சூப்பர் ஓவரில் சன் ரைசர்ஸ் வெற்றி
ஐ.பி.எல்: சூப்பர் ஓவரில் சன் ரைசர்ஸ் வெற்றி

ஹைதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான த்ரிலிங்கான ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 7வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் நேற்றிரவு மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. கிறிஸ் கெய்லும், தில்ஷானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

சிக்சர் மன்னன் கெய்ல் ஒரு ரன்னில் ஏமாற்றம் அடைந்து வெளியேறினார். சுழற்பந்து வீச்சாளர் ஹனுமா விஹாரியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலிடம் அவர் கேட்ச் ஆனார். தில்ஷானும் (5) நிலைக்கவில்லை. அடுத்து வந்த கருண் நாயரும் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

கேப்டன் விராட் கோலி- ஹென்ரிக்ஸ் ஆகியோர் கணிசமான ரன்களை சேகரித்து அணியின் ரன் ரேட்டை  உயர்த்தினர்.  விராட் கோலி 46 ரன்களும், ஹென்ரிக்ஸ் 44 ரன்களும் விளாசினர். இவர்கள் மட்டும் தான் அந்த அணியில் இரட்டை இலக்கை தொட்டவர்கள் ஆவர்.

##~~##
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
131 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இறுதி கட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி ஓவரில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது. 20வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார் வீசினார். முதல் பந்தில் ஆஷிஷ் ரெட்டியை (14) வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்டெயின் 2வது பந்தில் 2 ரன் எடுத்தார். 3வது பந்தை வீணடித்த ஸ்டெயின் 4வது பந்தில் ஒரு எடுத்தார். இதைத் தொடர்ந்து 5வது பந்தில் ரன் அவுட்டில் இருந்து தப்பித்து விஹாரி 2 ரன் சேகரித்தார்.
இதனால் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் கடைசி பந்தை சந்தித்த விஹாரி அதை அடிக்கவில்லை. பந்து பின்னால் விக்கெட் கீப்பர் அருண்கார்த்திக் வசம் சென்றது. அதற்குள் இந்த ஜோடி ஒரு ரன் எடுக்க ஓடியது. எளிதான ரன் அவுட் வாய்ப்பை அருண் கார்த்திக் நழுவ விட, ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது. அதாவது ஹைதராபாத் அணியின் ஸ்கோரும் 7 விக்கெட்டுக்கு 130 ரன்களுடன் சமநிலையை எட்டியது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் டை ஆன 3வது ஆட்டம் இதுவாகும்.
இதையடுத்து வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி இரு அணியும் தலா ஒரு ஓவர் வீதம் பந்து வீச வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் 2 விக்கெட் வழங்கப்படும். இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு, சூப்பர் ஓவரை வினய்குமார் வீசினார். இந்த ஓவரில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் விளாசியது. அந்த அணியின் கேமரூன் ஒயிட் 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
பின்னர் 21 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூர் அணி ஆடியது. கிறிஸ் கெய்ல், விராட் கோலி ஜோடி பேட் செய்தது. அவர்களுக்கு ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர்  ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணியால் 15 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 5 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2வது வெற்றியாகும். ஏற்கனவே புனே அணியை தோற்கடித்து இருந்தது  குறிப்பிடத்தக்கது.