Published:Updated:

ஐ.பி.எல்: மும்பையிடம் சரணடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல்: மும்பையிடம் சரணடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல்: மும்பையிடம் சரணடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

6வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 5வது லீக் ஆட்டத்தில் இரண்டு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரிக்கிபாண்டிங் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து சச்சினும், ரிக்கி பாண்டிங்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முந்தைய ஆட்டத்தில் தாக்குப்பிடித்த இருவரும் இந்த போட்டியிலும் சோபிக்கவில்லை.

திர்க் நேன்னஸ் வீசிய முதல் ஓவரில் சச்சின் எல்.பி.டபிள்யூ ஆகி டக் அவுட் ஆனார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சச்சிசன்  டக் அவுட் ஆவது இது 4வது முறை. பாண்டிங் (6), புதுமுக இளம் வேகப்பந்து வீச்சாளர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அங்கித் ராஜ்பூத்தின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

##~~##
அனுபவம் வாய்ந்த இரு வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டதால், மும்பை அணி தடுமாறியது. தினேஷ் கார்த்திக் (37) சிறிது நேரம் அதிரடி காட்டிய போதிலும், இன்னொரு பக்கம் ரோகித் ஷர்மா (8), அம்பத்தி ராயுடு (7), வெய்ன் ஸ்மித் (3) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 12 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களுடன் தவித்தது.
பாதாளத்தி்ல் கிடந்தயை அணியை பொல்லார்ட்டும், ஹர்பஜன்சிங்கும் சரிவில் இருந்து மீட்டதுடன், சவாலான ஸ்கோரை எட்டவும் உதவினர். அவ்வப்போது சிக்சர்களை பறக்க விட்டு தூள் கிளப்பிய இந்த ஜோடியை சென்னை பவுலர்களால் இறுதி வரை பிரிக்க முடியவில்லை.
20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் 57 ரன்களுடனும், ஹர்பஜன்சிங் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் 149 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உள்ளூரில் திணறியது. முரளிவிஜய் 5 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் சென்னை அணி நெருக்கடிக்குள்ளானது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மைக் ஹஸ்ஸியும் 20 ரன் எடுத்திருந்தபோது, ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
இதன் பிறகு மிடில் வரிசையில் கேப்டன் டோனி போராட, அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. என்றாலும் தனிவீரராக மல்லுக்கட்டிய அவர் சிக்சரும், பவுண்டரியுமாக அடித்து ஒரு வழியாக ஆட்டத்தை பரபரப்பான கட்டத்துக்கு கொண்டு வந்தார். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது.
பரபரப்பான 20வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முனாப்பட்டேல் போட்டார். இதில் முதல் பந்தை சிக்சர் அடிக்கும் நோக்கில் டோனி தூக்கியடித்தார். எல்லைக்கோட்டை நோக்கி பறந்த அந்த பந்தை, பொல்லார்ட் துள்ளி குதித்து கேட்ச் செய்தார். அத்துடன் சென்னை அணியின் நம்பிக்கையும் தகர்ந்து போனது. டோனி 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
எஞ்சிய 5 பந்துகளில் கடைசி ஜோடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 20 ஓவர்களில் சென்னை அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
தனது முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் தோற்று இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது முதல் வெற்றியாகும்.