Published:Updated:

கன்னாபின்னா ஸ்விங், 39 எக்ஸ்ட்ரா, நோ பால் அலர்ஜி...சவுதாம்ப்டன் சம்மரி! #ENGvIND

முதல் முறையாக அந்நிய மண்ணில் ஒரு ஆதிக்க வெற்றி இப்போதுதான் கிடைத்தது. அந்த நம்பிக்கைதான் கேப்டன் விராட்டின் ரொடேஷன் பாலிசிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த நம்பிக்கைதான் இப்போது சௌதாம்ப்டனிலும் இந்தியாவைக் கம்பீரமாக நிற்கவைத்துள்ளது. 

கன்னாபின்னா ஸ்விங், 39 எக்ஸ்ட்ரா, நோ பால் அலர்ஜி...சவுதாம்ப்டன் சம்மரி! #ENGvIND
கன்னாபின்னா ஸ்விங், 39 எக்ஸ்ட்ரா, நோ பால் அலர்ஜி...சவுதாம்ப்டன் சம்மரி! #ENGvIND

வெள்ளை உடை அணிந்து ``We are unchanged" என்று கோலி இதுவரை சொல்லியதில்லை. சவுதாம்ப்டன் மைதானத்தில் டாஸ் போடப்பட்டதும் முதல் முறையாக அந்த வார்த்தையைச் சொன்னார். கோலி தலைமையில் இந்த 4 ஆண்டுகளில் அதே பிளேயிங் லெவனோடு களமிறங்கியது இந்திய அணி. நாட்டிங்ஹாமில் பெற்ற வெற்றி அப்படி. போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய வெற்றி. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதெல்லாம் பந்து சுழன்றாடும் இந்திய மண்ணில். முதல் முறையாக அந்நிய மண்ணில் ஒரு ஆதிக்க வெற்றி இப்போதுதான் கிடைத்தது. அந்த நம்பிக்கைதான் கேப்டன் விராட்டின் ரொடேஷன் பாலிசிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த நம்பிக்கைதான் இப்போது சவுதாம்ப்டனிலும் இந்தியாவைக் கம்பீரமாக நிற்கவைத்துள்ளது. ENGvIND

ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டியிலும் பேட்ஸ்மேன்களையும், ஸ்பின்னர்களையும் மட்டுமே நம்பி களம் கண்ட அணி, இப்போது `ஸ்விங் பேரடைஸி'ல் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய வேகப்பந்துவீச்சுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவதைப் பார்ப்பது ரொம்பவே புதிதாக இருக்கிறது. அதிலும் சவுதாம்ப்டன் ஆடுகளத்தை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொண்டவிதம் அபாரம். முதல் நாளே இங்கிலாந்தை 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக்கியிருப்பது மிகப்பெரிய விஷயம்!

கீடன் ஜென்னிங்ஸ்... ஓவர் தி விக்கெட்டிலிருந்து வந்து குட் லென்த்தில் மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகும் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போகும் என்று நினைத்தார். பொதுவாக 140+ வேகத்தில் வரும் ஒரு `இந்தியப் பந்துவீச்சாளரி'ன் பந்து அப்படித்தான் வரும். எந்த பேட்ஸ்மேனும் அது வெளியே போகும் என்றுதான் எதிர்பார்ப்பார். ஆனால் பும்ரா, அவ்வளவு வேகமான பந்தை பேட்ஸ்மேனை நோக்கி ஸ்விங் ஆகச்செய்தார். பெரிய அளவில் பௌன்ஸும் கொடுக்கவில்லை. ஜென்னிங்ஸ் எதிர்பார்த்ததற்கு நேரெதிராகப் பந்து ஸ்டம்புகளை நோக்கி நகர்ந்தது. `ஜென்னிங்ஸ் ஹேஸ் நோ ஐடியா'. விக்கெட். வேகம், ஸ்விங், அக்யூரசி எனத் தன் இரண்டாவது ஓவரிலேயே மிரட்டினார் பும்ரா. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பும்ராவுக்கு இணையாக இஷாந்த், ஷமி இருவரும்கூட கலங்கடித்தனர். 

பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்களில் ஆடும்போது இங்கிலாந்து பௌலர்களைப் போலவே யோசிக்க வேண்டும். ஆடுகளத்தின் புற்கள், இங்கிலாந்தின் வெதர், காற்றின் தன்மை அனைத்தையும் பயன்படுத்தவேண்டும். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மூவரும் அதை சிறப்பாகச் செய்தனர். அதிலும் இப்போது பயன்படுத்தப்படும் ட்யூக் பந்துகளை நேற்று நடனமாடவைத்தனர். காற்றில் பந்தின் மூவ்மென்ட் ஆண்டர்சன், மெக்ராத் போன்றவர்கள் பந்துவீசுகிறார்களோ என்று சிந்திக்கவைத்தது. பந்தை இருபுறமும் அற்புதமாக ஸ்விங் செய்தனர். பேட்ஸ்மேனைத் தாண்டி கீப்பரை நெருங்கும்போதும்கூட பந்து காற்றில் ஆட்டம் காட்டியது.

தன் இரண்டாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கியிருக்கும் பன்ட், தன் வாழ்நாளின் மிகவும் கடினமான போட்டியைக் கண்டிருப்பார். பந்து பிட்ச் ஆனதும் இங்குதான் வரும் என்று கணிக்கக் கூடிய இந்திய ஆடுகளங்களில் கீப்பீங் நின்றவருக்கு நேற்றைய நாள் மிகவும் சவாலாக இருந்தது. இந்திய பௌலர்களின் ஸ்விங், வேகம் இரண்டும் இணைந்து ஆட்டம் காட்ட, பந்துகள் எட்டுத் திசைக்கும் பயணித்தன. லெக் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆன சில பந்துகளைப் பிடிக்க, அவர் முதல் ஸ்லிப்பைத் தாண்டவேண்டியிருந்தது. இருந்தும் சில பந்துகளைத் தடுக்க முடியவில்லை. அதற்கு மத்தியில் ஒரு கேட்ச் டிராப். ஷமியின் பந்துவீச்சில் மிகவும் தாழ்ந்து வந்த பந்தை அவரால் சரியாகப் பிடிக்க முடியாமல் போனது. ஸ்விங்கின் தன்மை அறிந்த இந்திய வீரர்களுக்கு அந்த இளைஞனின் கஷ்டம் கொஞ்சம் புரியவே செய்தது. 

மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆன பந்துகள், இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற கோலியைக் குறிவைத்தன. இன்னும் சில பந்துகள் அதே லைனில் பிட்ச் ஆகி பேட்ஸ்மேனின் லெக் சைட் சென்று ஃபைன் லெக் பௌண்டரியை அடைந்தன. அந்த அளவுக்கு இரண்டு திசையிலும் மூவ்மென்ட் கொடுத்தார்கள் நமது வேகங்கள். தொடர்ந்து Bye மூலம் எக்கச்சக்க ரன்கள் (23 ரன்கள்) போக, ஒருகட்டத்தில் நொந்துபோய்ப் படுத்தேவிட்டார் பன்ட். ``இப்போ 'என்ன பேசாம டெல்லிக்கே அனுப்பிடுங்க' என்று பன்ட் நினைத்துக்கொண்டிருப்பார்" என்று சிரித்தார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. இப்படி கீப்பரே திணறுகிறார் எனில் பேட்ஸ்மேன்கள் நிலை?!

ஒன்றல்ல, இரண்டல்ல... பத்தில் ஐந்து விக்கெட் எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்ந்தன. பந்தின் லைன், லென்த், மூவ்மென்ட் எதையும் கணிக்க முடியாமல் ரூட், ஸ்டோக்ஸ் போன்ற தேர்ந்த பேட்ஸ்மேன்களே திணறினார்கள். நம் வேகப்பந்துவீச்சாளர்கள்தாம் மெர்சல் செய்கிறாரென்றால் நம் ஃபீல்டர்களும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைச் சோதித்துவிட்டனர். இங்கிலாந்து மண்ணில் கால் வைக்கும் முன், ஸ்லிப்பில் கை `ஸ்லிப்' ஆகும் இந்திய ஃபீல்டர்கள் இப்போது டாம் ஃபார்மில் இருக்கிறார்கள். நாட்டிங்ஹாம் போட்டியில் ராகுல் அசத்த, நேற்று கேப்டன் கோலியின் டர்ன். 

பாண்டியா பந்துவீச்சில், வெளியே சென்ற பந்தை குக் விளையாட, மூன்றாவது ஸ்லிப்பில் மிகவும் தாழ்வாக வந்த கேட்சை மிகச் சிறப்பாகப் பிடித்தார் விராட். அடுத்த பட்லர் கொடுத்த கேட்சையும் கூலாகப் பிடித்தார். ஸ்லிப்பில் கேப்டன் பட்டையைக் கிளப்ப, பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா, ஃபீல்டிங்கிலும் அசத்தினார். மொயீன் அலி தூக்கி அடித்த பந்தை, மிட் - விக்கெட் திசையிலிருந்து வந்து பிடித்து பார்ட்னர்ஷிப்பை உடைத்தெறிந்தார். ஆனால், மீண்டும் மீண்டும் தன் நோ பால்களால் இந்திய ரசிகர்களின் இதயத்தை உடைத்துவிடுகிறார். கடந்த போட்டியைப்போல் நேற்றும் நோ பாலில் ஒரு விக்கெட். அதனால் ஒரு ரிவ்யூவும் வீண். இந்த விஷயத்தில் மட்டும் பும்ரா கொஞ்சம் மாற்றிக்கொள்ளவேண்டும். 

ஒட்டுமொத்தமாக இந்திய பௌலர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட நாளில், இங்கிலாந்து அணியைத் தூக்கி நிறுத்தியவர் சாம் கரன். முதல் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸைப் போல் இப்போதும் தனி ஆளாக சமாளித்து ஆடி இங்கிலாந்தைக் கரைசேர்த்தார். ஆனால், நேற்று அவர் காட்டிய பொறுமை அசாத்தியமானது. இந்தியாவின் 5 பௌலர்களையும், அவர்கள் செய்த வேரியேஷன்களையும் நிதானமாக எதிர்கொண்டார். ஸ்டம்புகள் நோக்கி வரும் பந்துகளை மட்டுமே பேட்டால் டீல் செய்வது என்று தீர்மானமாக இருந்தார். மொயீன் அலி மட்டும் அந்தத் தேவையில்லாத ஷாட் அடிக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் இங்கிலாந்து அணியை 300 ரன்னுக்கு மேல் எடுத்துச் சென்றிருப்பார். 

இந்திய பேட்ஸ்மேன்கள் இந்தப் போட்டியில் காட்டவேண்டியது இந்த நிதானம்தான். பௌலர்களை, பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆடவேண்டும். பும்ராவுக்கு அவ்வளவு ஸ்விங் ஆகுமென்றால், ஆண்டர்சனுக்கு. ஆனால், அவரிடம் வேகம் இருக்காது. அதனால் நிதானமாக இருந்தால் நிச்சயம் ஆண்டர்சன், பிராட் இருவரையும் எளிதாகக் கையாள முடியும். சாம் கரன். பென் ஸ்டோக்ஸ் இருவரும்தாம் இந்தியாவுக்குப் பெரும் பிரச்னையாக இருப்பார்கள். அவர்களை இன்னும் கவனமாக எதிர்கொள்ளவேண்டும்.

ஆடுகளத்தில் பௌன்ஸ் பெரிய அளவில் இல்லையென்பதால், கொஞ்சம் கவனம் சிதறினாலும் விக்கெட்டை இழக்க நேரிடும். நேற்று மட்டும் 39 (இந்தியா - 34, இங்கிலாந்து - 5) ரன்கள் உதிரிகளாக வந்துள்ளன. அதையும் பயன்படுத்திக்கொண்டு இந்தியா ரன்சேர்க்கவேண்டும். இந்தியா நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவேண்டுமென்பதால் குறைந்தபட்சம் 50 ரன்களாவது முன்னிலை பெறுவது அவசியம்!