Published:Updated:

கோலியை டெஸ்ட்டில் நம்பர் -1 பேட்ஸ்மேனாக்கிய 5 இன்னிங்ஸ்! #10yrsOfKohli #VikatanCelebratesVirat

அது கோலியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சவால். சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாகக் களமிறங்கியபோது இருந்த அதே சவால். ஆனால், அதை தன் ஸ்டைலில் எதிர்கொண்டு பதில் சொன்னார் விராட் - தி கம்ப்ளீட் பேட்ஸ்மேன். 

கோலியை டெஸ்ட்டில் நம்பர் -1 பேட்ஸ்மேனாக்கிய 5 இன்னிங்ஸ்! #10yrsOfKohli #VikatanCelebratesVirat
கோலியை டெஸ்ட்டில் நம்பர் -1 பேட்ஸ்மேனாக்கிய 5 இன்னிங்ஸ்! #10yrsOfKohli #VikatanCelebratesVirat

ஒருநாள் போட்டிகளில் உச்ச நட்சத்திரமாக மாறிக்கொண்டிருந்தபோதுகூட, `இவர் டெஸ்ட் போட்டிக்கு லாயக்கில்லை' என்ற விமர்சனம் எழத்தான் செய்தது. அதுவும் விளையாடியது சச்சினின் இடத்தில். டெஸ்ட் போட்டிகளில் தன் மீதான எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய ரொம்பவே சிரமப்பட்டார் விராட் கோலி. தன் தவறுகளைத் திருத்தினார்; அணுகுமுறையை மாற்றினார்; நுணுக்கங்களை மாற்றினார்... இன்று - நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன். விராட் 3 ஃபார்மட்களிலும் பல சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டியில் ஆடிய இன்னிங்ஸ்தான் காலத்துக்கும் பேசப்படும். அந்த வரிசையில் என்றென்றும் விராட் பெயர் சொல்லும் டாப்-5 டெஸ்ட் இன்னிங்ஸ்!


அடிலெய்டு - 141 (2014)

தோல்விகளால் ஏற்பட்ட மனஉளைச்சல், தொலைந்த புத்துணர்வு, ரசிகர்களின் அவநம்பிக்கை என அடிலெய்டில் தொடங்கியது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர். கேப்டன் தோனியும் காயத்தால் விலக, கூடுதல் பிரஷ்ஷரோடு கோலியின் கேப்டன்ஷிப்பில் மேட்ச் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அதற்கேற்ப 517 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி 119-2. கோலி சந்தித்த முதல் பந்திலேயே பௌன்ஸரால் ஹெல்மெட்டைப் பதம் பார்த்தார் மிச்செல் ஜான்சன். அது, சான் அபோட் வீசிய பௌன்ஸரில் பிலிப் ஹியூஸ் மரணமடைந்திருந்த சமயம். ஆனாலும், கோலி அசரவில்லை. அக்ரஷிவ் பேட்டிங்குடன் ஸ்ட்ரெயிட் டிரைவ், கவர் டிரைவ் எனத் தன் பிரத்யேக கிளாசிக் ஷாட்களுடன் வெளுத்து வாங்கினார் கோலி. லயானின் சுழலில் மட்டும் பந்து பௌன்ஸ் ஆகிக்கொண்டிருந்தது. ஆனால், அவரைத் தனியாக டீல் செய்தார் விராட். கொஞ்சம் மெதுவாக ஆடினாலும் ஆஸ்திரேலிய பௌலர்களின் கை ஓங்கும் என்பதனால், ஒருநாள் போட்டியைப் போல் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்துகொண்டே இருந்தார். 

பயம், பதற்றம் எதுவுமில்லாமல் 90 ரன்களில் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்பதையெல்லாம் மறந்து ஜான்சன் பந்தில் மிட் ஆனில் அடித்த அந்த பௌண்டரி எல்லாம் வேற லெவல். அடுத்த இன்னிங்ஸிலும் ஆஸி பௌலர்களை வதம் செய்து, தான் ஒரு மாஸ் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். அதாவது ஆட்டத்தின் கடைசி நாள் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வைத்த டார்கெட் 364. முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாக 57/2 என இந்த முறையும் இக்கட்டான நிலையில்தான் கோலி இறங்கினார். ஜான்சனின் பௌன்ஸர் எல்லாம் இந்த முறை பஞ்சர் ஆனது.

இந்த இன்னிங்ஸில் கோலி அரை சதம் கடந்ததும், பௌண்டரிகளாக சதத்தையும் இலக்கையும் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை இன்னும் அதிகமாக்கி கொண்டே இருந்தது. அவர் 141 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தாலும் இந்த சதம்தான் இன்றளவில் கோலிக்குப் பிடித்தமான சதங்களில் முதல் இடத்தில் உள்ளது. இந்த அக்ரஸிவ் பெர்பாமன்ஸ்தான் இன்று வரை ஒரு கேப்டனாக கோலியிடம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பர்மிங்ஹாம் - 149 (2018)

ஒவ்வொரு நாட்டிலும் தன் கொடியைப் பறக்கவிட்டுவிட்டார். இன்னும் அந்தச் சின்னத் தீவில் மட்டும் முடியவில்லை. 2014 இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் கோலியின் செயல்பாடு, அவரது கிரிக்கெட் வாழ்வின் கறும்புள்ளி. இன்றுவரை இங்கிலாந்து கோலிக்கு சொப்பனம்தான். சச்சினின் சாதனைகளை அடுத்த 2 வருடத்தில் முறியடித்தாலும்கூட, இங்கிலாந்தில் சோபித்தால்தான் தன்னை கம்ப்ளீட் பேட்ஸ்மேனாக இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும். அது கோலியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சவால். சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாகக் களமிறங்கியபோது இருந்த அதே சவால். ஆனால், அதைத் தன் ஸ்டைலில் எதிர்கொண்டு பதில் சொன்னார் விராட் - தி கம்ப்ளீட் பேட்ஸ்மேன்.

இந்தமுறை இங்கிலாந்தில் தன் பிரதான எதிரியான ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஸ்விங் பந்துகள் கோலியின் மைக்ரோ அட்வான்ஸ் ஃபுட் ஒர்க்கிடம் வேலை செய்யவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட், சாம் கரண் மிரட்டிக்கொண்டே இருந்தனர். கோலி விக்கெட்டை எடுக்க ஆண்டர்சன் ஓவர்டைம் பார்த்துக்கொண்டிருந்தார். மதிய இடைவேளைக்கு முன்பே 15 ஓவர்களை வீசியிருந்தார். அத்தனையும் ஸ்விங்குகள். டிரைவ் ஆட ஆசைப்பட்டால் எட்ஜாகும். ஒரே லென்த்தில், ஒரே லைனில் போட்டு கோலியை டிரைவ் ஆடத் தூண்டிக்கொண்டே இருந்தார். அவ்வளவு கவனமாக இருந்தும் இரண்டுமுறை எட்ஜானது. நல்லவேளை அது கேட்ச்சாகவில்லை. அரை சதம் அடித்தபின் இன்னும் கவனமாக எதிர்கொண்டார். மறுமுனையில் விக்கெட் விழுந்துகொண்டே இருக்க, டெயிலெண்டர்களை வைத்துக்கொண்டு சதம் அடித்து அசத்தினார். பத்தாவது விக்கெட்டுக்கு மட்டும் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதில் 50 ரன்களை கோலி அடித்தது பெரிய விஷயமாகப் பேசப்பட்டது. 


வெல்லிங்டன் - 105* (2014)

நியூசிலாந்து மண்ணில் அடித்த இந்த சதம்தான் கோலி சேஸிங்கில் அடித்த முதல் சதம். முதல் இன்னிங்ஸில் தவான் ரஹானே தோனி என அனைவரும் நன்றாக விளையாடியபோதும், மெக்கல்லம் டிரிபிள் செஞ்சுரி அடிக்க, இந்திய அணிக்கு 413 ரன்கள் டார்கெட் வைத்தது. ஆனால், கோலி களமிறங்கியபோது ஸ்கோர் 10/2. போல்ட், சவுதி, வாக்னர் என மூவரும் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் எனத் தாக்குதல் தொடுக்க, அனைத்தையும் சமாளித்தார். நியூசிலாந்து ஆடுகளங்களுக்கே உரிய பௌன்ஸர்களை பொறுமையாகக் கையாண்டார். மிட் ஆஃப் திசையில் இரு ஃபீல்டர்களை அருகருகே நிற்க வைத்து, பல யுத்திகளை மாற்றி மாற்றி பார்த்த நியூசிலாந்து பௌலர்கள் எவரையும் பொருட்படுத்தாமல், எப்படிப் போட்டாலும் அடிப்பேன் என எக்ஸ்ட்ரா கவரில் கெத்தாக‌ பௌண்டரி அடித்தார். அரை சதம் கடந்ததும் அடித்த ஒவ்வொரு ரன்களும் பௌண்டரிகளாக ஓடிக்கொண்டே இருந்தன. டிராவுக்குப் பதிலாக வெற்றிக்காக விளையாடுவதே விராட் பாணி. ஆனால், இந்தப் போட்டியில் அது சாத்தியப்படவில்லை. தோல்வியைத் தவிர்ப்பது மட்டுமே பிரதான தேவையாக இருந்தது. தன்னால் ஒரு இன்னிங்ஸை முழுமையாக முடிக்க முடியும் என்று நிரூபித்து, இந்தியாவின் தோல்வியைத் தவிர்த்திருப்பார் கோலி!

மெல்போர்ன் - 169 (2014)


சிறு சிறு தவறுகளால் தொடர்ந்து ஏற்பட்ட இரு தோல்விக்குப் பிறகு மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னில் தொடங்கியது. தொடரை இழந்து விடக் கூடாது என வெற்றிக்காக இந்திய அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி 530 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் தொடங்கிய இந்திய அணி 112 /2 எடுத்தபோது கோலி கிரீஸுக்கு வந்தார். கோலி பேட்டிங்கை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஸ்லெட்ஜிங் செய்வது என ஜான்சன் கோலியைச் சீண்டிப் பார்த்தார். மேட்ச் ஜான்சனுக்கும் கோலிக்கும் இடையிலான போராக மாறி களைகட்டியது. 

கோலி 84 ரன்களில் இருந்தபோது கோலி ஒரு பௌண்டரி அடிக்க, ஜான்சன் பந்தை எடுத்து கோலியின் கால்களில் வீசி கடுப்பேற்ற, பதிலுக்குக் கோலியும் அடுத்த பௌண்டரியில் ஜான்சனை நோக்கி முத்தம் கொடுத்து கிண்டல் செய்ய, டி-20 போட்டிகளைவிட உச்சகட்ட என்டெர்டெயின்மென்ட் கொடுத்தது அந்த டெஸ்ட் மேட்ச். இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக கோலி மட்டும் தனி ஒருவனாக மிரட்டிக்கொண்டே இருந்தார். ஹாரிஸ், ஜான்சன், லயான் என எவரையும் விட்டுவைக்கவில்லை. இதே மிரட்டல் இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்து, அரை சதம் அடித்து மேட்ச்சை டிராவை நோக்கிப் பயணிக்க வைத்தது. 

ஜோகன்னஸ்பர்க் - 119 (2013)

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 8 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி, சச்சினின் ஓய்வுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் தொடங்கியது இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம். இந்தத் தொடரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோலி அடித்த சதம்தான் இந்திய அணிக்குப் புது உத்வேகமாக அமைந்தது. 24/2 என்ற நிலையில் கோலி சந்தித்த முதல் பந்திலேயே பௌண்டரி அடித்து சச்சின் இடத்துக்கு நான் சரியானவன் என்று நிரூபிக்க ஆரம்பித்தார். உலகின் நம்பர் ஒன் பௌலர் ஸ்டெய்ன், ஃபிலாந்தர், மோர்னே மோர்கல், காலிஸ், இம்ரான் தாஹிர் என அனைவரது பந்துகளையும் எந்தவித பதற்றமின்றி கோலி எதிர் கொண்டார். ஸ்டெய்ன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளை புல் ஷாட் அடித்தது, ஸ்லெட்ஜிங்கை கண்டுகொள்ளாமல் நின்றது என ஓவர்சீஸ் மேட்ச்களில் ஒரு பேட்ஸ்மேன் இப்படித்தான் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்று மற்ற வீரர்களுக்கு மறைமுகமாகப் பாடம் எடுப்பது போல இருந்தது அந்த இன்னிங்ஸ். இந்த சதம் கோலியின் சிறந்த சதம் என்பதை விட சக வீரர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்திய சதம் என்பதே சரி!