Published:Updated:

கோலியை குறை சொல்லும் முன்...ஒரு விஷயம்! #10YearsOfKohli #VikatanCelebratesVirat

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோலியை குறை சொல்லும் முன்...ஒரு விஷயம்! #10YearsOfKohli #VikatanCelebratesVirat
கோலியை குறை சொல்லும் முன்...ஒரு விஷயம்! #10YearsOfKohli #VikatanCelebratesVirat

`கோலி தன்னிடம் இருந்த சிறு தவறுகளை மாற்றிக்கொண்டுவிட்டார். ஆனால், நம் காக்னிடிவ் ஆட்டிட்யூட், இன்னும் விராட் பற்றிய பிம்பத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இங்கு பிரச்னை கோலியின் ஆட்டிட்யூட் அல்ல. நமது ஆட்டிட்யூட்தான்.'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இங்கு விராட் கோலியின் ஆட்டிட்யூட் பற்றி விவாதிப்பதற்கு முன், ஆட்டிட்யூட்  என்பதன் அர்த்தத்தையும், நாம் இத்தனை நாள்கள் அதை விளையாட்டோடு தவறுதலாகப் புரிந்துகொண்டிருப்பதையும் விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆம், விளையாட்டு பற்றிய பலரது புரிதல் தவறாகத்தான் இருக்கிறது. விளையாட்டு என்பதையே தவறாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை அது அதிக ஈடுபாடு காட்டும் பொழுதுபோக்கு மட்டுமே. அந்தப் பொழுதுபோக்கில் நமக்குத் தேவை வெற்றி மட்டுமே. அதேபோல் வெற்றி பெறுபவன் மட்டுமே இங்கு ஹீரோ. இந்தத் தவறான புரிதல் விளையாட்டுகுள்ளும் பல தவறான புரிதல்களுக்கு வழிவகுத்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதில் ஒன்று ஆட்டிட்யூட் !

விளையாட்டுக்கு வெளியில் இந்த ஆட்டிட்யூட்  பல விதமாகக் கணிக்கப்பட்டாலும், விளையாட்டு உலகில் அது ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான் தீர்மானிக்கப்படுகிறது. சொல்லப்போனால், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத்தான் ஆட்டிட்யூட் பற்றிய பேச்சு விளையாட்டு உலகில் அதிகமாகியிருக்கிறது. உளவியல் தொடர்பான இந்த விஷயத்தை மிகவும் மேலோட்டமாக, அடிப்படைப் புரிதல் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் சோகம். அதுவும், கோலி போன்ற மிகச்சிறந்த வீரர் ஒருவரை அந்தக் குறுகிய வட்டத்துக்குள் வைத்து தரம் தாழ்த்துவது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. அதனால்தான் இந்தக் கட்டுரையை எழுத வேண்டியிருக்கிறது.

ஆட்டிட்யூட் 3 கூறுகளைக் கொண்டது : 1) Affective - எமோஷன்களால் ஆனது 2) Cognitive - ஒரு விஷயத்தைப் பற்றிய நமது புரிதல் 3)Behavioral - அந்த இரண்டு கூறுகளையும் வைத்து நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பது.  2012-ம் ஆண்டு சிட்னியில் தன்னைச் சீண்டிய ரசிகர்களிடம் நடுவிரலைக் காட்டினார் விராட். உணர்ச்சி பொங்க, அவர் கொடுத்த ரியாக்ஷன் தவறானது. 23 வயதில் அவரிடம் மெச்சூரிட்டி இருக்கவில்லை. அன்று கெவின் பீட்டர்சன் உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் அது தவறுதான். ஆனால், அது முழுக்க முழுக்க ஆட்டிட்யூட் Affective component ஏற்படுத்திய விளைவுதான். அதனால் ஏற்படும் தவறுகளை, அதை உணரும்போது எளிதாகத் திருத்திக்கொள்ள முடியும்.

Cognitive component - கொஞ்சம் பிரச்னையானது. நமது புரிதலையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு பொருளைப் பற்றியோ, நபரைப் பற்றியோ `இது இப்படித்தான்', `இவர் இப்படித்தான்' என்ற எண்ணம் ஏற்படுத்திக்கொள்வது. இந்த இடத்தில் அந்தப் பொருளைப் பற்றியோ, நபரைப் பற்றியோ தீவிரமாக ஆராய்ந்து அந்த முடிவு எடுக்கப்படவேண்டும். இந்த இடத்தில் அனைவருமே தவறு செய்கிறோம். 75 சதவிகிதம் ஜட்ஜ்மென்டலாகவே இருக்கிறோம். ஒன்றைப் பத்தி முன்கூட்டியே முடிவெடுத்துவிட்டு, அதற்கு ஏற்ப ரியாக்ட் செய்கிறோம். 

`இதுதான் கோலி' என்ற எண்ணம் எப்போதோ நம்மால் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கோலி தன்னிடம் இருந்த சிறு தவறுகளை மாற்றிவிட்டார். ஆனால், நம் காக்னிடிவ் ஆட்டிட்யூட் , இன்னும் விராட் பற்றிய பிம்பத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இங்கு பிரச்னை கோலியின் ஆட்டிட்யூட் அல்ல. நமது ஆட்டிட்யூட் தான். இன்னும் கொஞ்சம் புரிதல் அவசியம். அதுவும் உலகம் புகழும் ஒரு வீரனை, நம் வீரனை நாமே திட்டிக்கொண்டிருக்கிறோம். அதற்கு முன்பு அவரைப் பற்றிய புரிதல் அதிகமாக இருந்திருக்கவேண்டும். இல்லாதது மிகப்பெரிய தவறு.

`கோலி எங்கு தன் தவற்றைத் திருத்திக்கொண்டார். இன்னமும் அவர் அளவுக்கு மீறிக் கோபப்படுகிறார், கத்துகிறார், எதிரணி வீரர்களைச் சீண்டுகிறார். அது மிகவும் தவறானது' என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த இடத்தில் நமக்கு உளவியல் மட்டுமல்ல, விளையாட்டின் மீதான புரிதலும் தவறாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டாலும், அதை வைத்து எந்த ஒரு வீரரின் ஆட்டிட்யூடும்குற்றமாகப் பார்க்கப்படவில்லை. ஏனெனில், இது விளையாட்டு. இங்கு வெறுமனே வெற்றி தோல்வியை மட்டும் குறிவைத்து யாரும் நகர்வதில்லை. அதுதான் பிரதானம் என்றாலும், போராட்ட குணமே விளையாட்டின் அடி நாதம். Every player will pour their soul into it. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிக்கொண்டுவருவார்கள். போராட்ட குணம் இருக்கும் இடத்தில் எல்லா வகையான உணர்வுகளும் வெளிப்படும். 

ரன்களும், கோல்களும் இப்படித்தான் அடிக்கப்படவேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, உணர்வுகளை இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை. அது எல்லை மீறக் கூடாது. விளையாட்டைப் பாதிக்கக் கூடாது. அவ்வளவுதான். அந்த உணர்வுகள் வெளிப்பட்டால்தான் அது விளையாட்டு. அந்த உணர்வுகள்தாம் ஒவ்வொரு களத்துக்கும் அர்த்தம் தரும். உயிர் தரும். ஒருவேளை கோலி செய்வது எல்லை மீறல் என்றால் இந்நேரம் `demerit' புள்ளிகள் பெற்று இரண்டு மூன்று முறை தடை செய்யப்பட்டிருப்பார். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லையே. விளையாட்டு விதிகளில் உணர்வகளுக்குப் போதுமான இடம் தரப்பட்டிருக்கிறது. நாம்தான் அதைக் கொடுப்பதில்லை. 

இதைவிடக் கொடுமை என்னவென்றால், இன்று நாம் ஒருசில வீரர்களை வைத்து ஒட்டுமொத்த விளையாட்டுக்குமான அளவுகோலை நிர்ணயித்திருக்கிறோம். மெஸ்ஸியைப் போல், தோனியைப் போல் அமைதியாக இருந்தால் பாராட்டுவோம், கொண்டாடுவோம். ஆனால், களத்தில் கொஞ்சம் கத்தினாலும் கூட அது தவறு. பாராட்டுவோம், ஆனால் தவறுக்குத் தூற்றுவோம். சொல்லப்போனால் இதுதான் தவறான ஆட்டிட்யூட். விளையாட்டையும், உளவியலையும் புரிந்துகொள்ளாமல், அதைக் குற்றம் சுமத்துவதுதான் தவறான ஆட்டிட்யூட். 

ஆம், கோலி களத்தில் கத்திக்கொண்டே இருக்கிறார். எதிரணியின் விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டால் அதீதமாகக் கத்துகிறார். பேட்டிங்கின்போதும் அவ்வப்போது கோபத்தை வெளிப்படுத்துகிறார். இன்று இவை மட்டுமே கோலியின் முகமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது பெரும் கொடுமை. அது கோலியின் தாகம். ரன் அடிக்கவேண்டும், வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கை. ஒவ்வொரு நிலக்கரித் துண்டிலும் வைரத்தைத் தேடவேண்டும் என்ற பேராசை. அதுதான் கோலியை ஆட்டத்துக்குள் அப்படி உயிர்ப்போடு வைத்திருக்கிறது. டு பிளெஸ்ஸி, அம்லா போன்ற வீரர்கள் அவுட்டானபோதும் கத்தியிருக்கிறார். ஆனால், இன்று அவர்களுக்கு இடையிலான புரொஃபஷனல் உறவில் எந்தக் சிக்கலும் இல்லையே. அது களத்தோடு முடிந்துவிட்டது. நம்மைத் தவிர வேறு யாரும் அதை விராட்டின் பெர்சனல் பக்கங்களோடு ஒப்பிடவில்லை.

அந்த 29 வயது வீரன் கிரிக்கெட்டை வெறுமனே விளையாடவில்லை. அவன் அணு அணுவாய் ரசிக்கிறான்; காதலிக்கிறான். காதலை அடக்கி வைக்க யாரால் முடியும். ஒவ்வொரு நொடியும் அந்தக் காதல் ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பிகளை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கும். உணர்வுகள் அங்கு மோதிக்கொண்டேதான் இருக்கும். ``விராட் கோலியின் ஆட்டிட்யூடில் எனக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை. இந்த விளையாட்டின்மீது உச்சகட்ட தாகம் கொண்டவர்களை எனக்குப் பிடிக்கும். விராட்டை ரொம்பப் பிடிக்கும்" என்றார் சர் விவியன் ரிச்சர்ட்ஸ். அவர் கண்களுக்கு விராட்டின் நேசம் மட்டும்தான் தெரிகிறது. அது அவரது ஆட்டிட்யூடை வரையறுக்கவில்லை. ஆனால், நாம் வரையறுத்திருக்கிறோம்!

எந்த விளையாட்டாக இருந்தாலும், அங்கு உளவியல் ரீதியில் பல முடிவுகள் எடுக்கப்படும். விளையாட்டு உளவியலோடும் இரண்டற கலந்ததுதான். தோனி எத்தனை இடங்களில் எதிரணி வீரர்களின் உளவியலைப் பயன்படுத்தியிருப்பார். 2008 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் லக்ஷ்மிரத்தன் சுக்லாவை ரன் அவுட் செய்தது அதற்கான மாஸ்டர் பீஸ் எடுத்துக்காட்டு. அதேபோல்,  2006 உலகக் கோப்பை ஃபைனலில் ஜிடேன் `பனேன்கா' பெனால்டி அடித்ததையும் சொல்லலாம். பந்துவீசும் முன் டி வில்லியர்ஸ் கிரீஸுக்குள் நகர்ந்துகொண்டே இருப்பது, பௌலரை உளவியல் ரீதியாகத் தாக்குவதற்காகத்தான். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ததும் அதற்காகத்தான். 

அதேபோல்தான், கோலியும். அவர் நினைப்பது - எந்த இடத்திலும் எதிரணிக்கு `சைக்காலஜிக்கல் அட்வான்டேஜ்' கொடுத்துவிடக் கூடாது என்பதுதான். 2014 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பினார். ஆனால், அந்தத் தொடரின் கடைசி டெஸ்டில் களமிறங்கியபோதும், முதல் டெஸ்டில் இருந்த அதே நம்பிக்கையை தன் முகத்தில் படர வைத்திருந்தார். பௌலருக்கு எந்த இடத்திலும் வாய்ப்பு கொடுத்திடக் கூடாது என்று நினைப்பார். ஃபீல்டிங் செய்யும்போதும் அதேதான். எதிரணி நல்ல நிலையில் இருக்கையில் அவர்களின் விக்கெட்டை வீழ்த்தும்போது, `இன்னும் எங்களின் ஸ்பிரிட் அப்படியேதான் இருக்கிறது' என்பதை உணர்த்துவதற்காகவே தன் மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவார். உண்மையில் கேப்டனாக அவரது அந்த ஆக்ரோஷ கொண்டாட்டங்கள் இந்தியாவுக்கு ரொம்பவே அவசியம் (அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்).

இந்த ஆக்ரோஷ கொண்டாட்டமெல்லாம் அவரது கிரிக்கெட் மீதான தாகத்தின் வெளிப்பாடுதான். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ, விக்கெட் வீழ்த்தியபின், எதிரணியினரின் முகத்துக்கு அருகே சென்று `கிளம்பு கிளம்பு' என்று சைகை காட்டுவார். அவர் அதைச் சிரித்துக்கொண்டே செய்வதனால் அது கொண்டாட்டமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. கோலி செய்வது எல்லை மீறல் எனும்போது பிராவோ செய்தது எல்லை மீறல் இல்லையா, கோலி கோபமாகச் செய்வதால் அது பிரச்னையாகிறதா, கோலி என்றாலே அந்த முகம் மட்டும்தான் தெரிகிறதா, அந்த மனிதனுக்கு நாம் கொடுத்திருக்கும் முகத்திலிருந்து நூறு சதவிகிதம் வேறுபட்ட முகம் இருக்கிறது. அதைப் பற்றி யாரேனும் பேசியதுண்டா, அதையும் பேசியாகவேண்டும். 

சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து ஹோட்டலுக்கு வெளியே, இந்திய வீரர்கள் அனைவரும் புறக்கணித்த பின், ஒரு ரசிகர் கோலியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ வைரலானது. ``2016-ம் ஆண்டு டெல்லியில் நியூசிலாந்து அணியுடனான போட்டிக்குப் பின், வீரர்களின் பேருந்தைப் பார்த்தோம். நாங்கள் அவர்களை நோக்கி கையசைத்தபோது, கோலியைத் தவிர யாரும் கண்டுகொள்ளவேயில்லை. அவர் மட்டுமே புன்னகையுடன் எங்களைப் பார்த்து கையசைத்தார்" என்று பதிவிட்டிருந்தார் விபுல் குப்தா என்ற ரசிகர். விளையாட்டு வீரர்களால் எல்லோருக்கும் ஆட்டோகிராஃப் போட்டுத்தர முடியாது. ஆனால், கையசைக்கலாம். அதையும் கூட  செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. அங்கு அவர்களுக்கான `ஸ்பேஸ்' கொடுக்கப்படவேண்டும். ஆனால், விராட் அப்படியல்ல. தங்களைக் கடவுள்களாகப் பார்க்கும் முட்டாள் ரசிகனுக்கு வரம் தராவிட்டாலும், காட்சியேனும் தர நினைப்பவர்.

கடந்த ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பு சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ``சிறுவர்கள் கேட்டால் மறுக்காமல் ஆட்டோகிராஃப், போட்டோ என உங்கள் நேரத்தை அவர்களுக்காகச் செலவிடுகிறீர்களே" என்று ஒருவர் கேட்க, ``எனக்கு அது ஒருசில நொடிகள்தான். ஆனால், அவர்களுக்கு அப்படியில்லை. அது அவர்கள் குழந்தைப் பருவத்துக்கான நினைவு. அதை என் கடமையாக நினைக்கிறேன்" என்று சிரித்தார் விராட். ஒவ்வொருவரின் உணர்வுக்கும் மதிப்பளிக்கத் தெரிந்தவர் அவர். 

இவ்வளவு ஏன், முகம்மது ஆமிர், முகம்மது இர்ஃபான் என தன்னைத் திணறடித்த பௌலர்களை எத்தனையோமுறை மனமுவந்து பாராட்டியிருக்கிறார். அதுவும் ஆமிரை களத்திலேயே பாராட்டியிருக்கிறார். ``கோலி, மிகச்சிறந்த இதயம் கொண்ட மிகச்சிறந்த வீரர்" என்று முகம்மது இர்ஃபான் ட்வீட் செய்திருக்கிறார். இதிலிருந்தே கோலி மற்ற வீரர்களை எப்படி மதிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருமுறை, சச்சினுடன் தன்னை ஒப்பிடுவதைப் பற்றி கோலியிடம் கேட்கிறார்கள்... ``அவரையும் என்னையும் ஒப்படுவது தவறு. அவர் ஜாம்பவான்" என்கிற ரீதியில் அவர் பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் கோலி சொன்ன பதில்... ``ஒப்பிடுவதற்குத் தகுதியே இல்லாத இரண்டு வீரர்களை ஒப்பிடுவது மிகவும் தவறு. யாரைப் பார்த்து நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேனோ அவரோடு என்னை ஒப்பிடுகிறீர்கள். என்னோடு ஒப்பிட்டு அவரது தரத்தைக் குறைத்துவிடாதீர்கள்" என்று தன்னைத்தானே தரம் தாழ்த்திக்கொண்டவர் விராட்.

அவ்வளவு மோசமான ஆட்டிட்யூட் கொண்டவராக இருந்தால், தான் கிரிக்கெட்டின் உட்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்படும்போதும் சீனியர்களுக்கு மரியாதை கொடுப்பாரா. ஒருநாள் போட்டிகளில் தோனியின் ஆலோசனைகளைக் கேட்க அவரது ஈகோ இன்னமும் இடம் கொடுக்கிறதே. `நான் தான் கேப்டன்' என்று தனிச்சையாக முடிவுகள் எடுக்கலாமே! ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் தோனிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அவ்வப்போது களத்தில் வீரர்களிடம் கோபப்பட்டுள்ளார். ஆனால், அந்த விஷயத்திலும் இப்போது தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். மற்றபடி ஒவ்வொரு வீரரையும் தவறாமல் ஆதரிக்கிறார். சக வீரர்களை, சீனியர்களை, முன்னாள் ஜாம்பவான்களை, கடைக்கோடி ரசிகர்கள் வரை ஒவ்வொருவரையும் மதிக்கும் இந்த வீரனின் ஆட்டிட்யூட் தவறானதா?

``ஒரு நல்ல வீரராக திறமை முக்கியம். ஒரு மிகச்சிறந்த வீரராக கோலியைப் போன்ற ஆட்டிட்யூட் முக்கியம்" என்றார் கவாஸ்கர். தன் மகனிடம் ``உனக்கு ஒரு ரோல் மாடல் இருக்கவேண்டும் என்றால் அது விராட் கோலிதான்" என்றார் ஸ்டீவ் வாஹ். அவர்களுக்குத் தெரிந்தது கோலியின் விளையாட்டு தாகம் மட்டுமே. மற்றபடி கோலியின் ஆட்டிட்யூடை அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு விளையாட்டும், அதற்குள் இருக்கும் உளவியலும் தெரியும். விளையாட்டையும் அதன் உளவியலையும் முழுதாகப் புரிந்துகொண்டாலே விராட் எனும் மகத்தான வீரனைப் புரிந்துகொள்ள முடியும். சில இடங்களில் தன் டெம்போவை அவர் இழக்கிறார்தான். ஆனால், அவற்றைச் சரிசெய்துகொண்டேதான் இருக்கிறார்.

விராட் இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த `ஜென்டில் பாய்!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு