Published:Updated:

இது கோலியின் தவறு மட்டுமல்ல... பி.சி.சி.ஐ மாறாதவரை தோல்வி தொடரும்! #ENGvIND

டெஸ்ட் கிரிக்கெட்டையும், ஐ.பி.எல் தொடரையும் ஒரே தராசில் வைத்துக்கொண்டிருக்கிறது பி.சி.சி.ஐ. இது மிக மிகப் பெரிய தவறு. 

இது கோலியின் தவறு மட்டுமல்ல... பி.சி.சி.ஐ மாறாதவரை தோல்வி தொடரும்! #ENGvIND
இது கோலியின் தவறு மட்டுமல்ல... பி.சி.சி.ஐ மாறாதவரை தோல்வி தொடரும்! #ENGvIND

கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளும், கேப்டன் கோலியின் அணித்தேர்வும் கேள்விக்குள்ளாகியுள்ளன. "வீரர்களைத் தேர்வு செய்ததில் கொஞ்சம் தவறுகள் நிகழ்ந்துவிட்டன" என்று லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு தன் தவறை ஓப்புக்கொண்டார் இந்தியக் கேப்டன் விராட் கோலி. அடுத்த போட்டிக்கு முன் அவர் மாற்றிக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், மாற வேண்டியது அவரது அணுகுமுறை மட்டுமல்ல... பி.சி.சி.ஐ சமீப காலமாக செய்துவரும் செலக்ஷன் தவறுகளும்தான்!

இந்திய பேட்ஸ்மேன்களில், இந்தத் தொடரில் ஆடியவர்களில் விஜய், புஜாரா மட்டுமே டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள். கோலி, தவான், ராகுல் மூவரும் 3 ஃபார்மட்களிலுமே இங்கிலாந்தில் விளையாடியுள்ளனர். 'ஆல் ரவுண்டர்' ஹர்டிக் பாண்டியாவும் இதுவரை இங்கிலாந்தில் ஆடிய 8 போட்டிகளிலுமே ஆடிவிட்டார். இந்திய அணியைப் பொறுத்தவரை ஒரு ஃபார்மட்டில் நன்றாக ஆடினால் அவர்களால் எல்லா ஃபார்மட்களிலும் ஜொலிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டையும், ஐ.பி.எல் தொடரையும் ஒரே தராசில் வைத்துக்கொண்டிருக்கிறது பி.சி.சி.ஐ. இது மிக மிகப் பெரிய தவறு. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன், கே.எல்.ராகுல் இந்தியாவின் நம்பிக்கையான டெஸ்ட் ஓப்பனர். சிட்னி, கொழும்பு, கிங்ஸ்டன் என வெளிநாட்டு மண்ணில் சதங்கள் அடித்து ஒரே ஆண்டில் அணியில் முக்கிய இடம் பிடித்தார். புனே (vs ஆஸ்திரேலியா), கொல்கத்தா (vs இலங்கை) என உள்ளூரிலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியபோதெல்லாம் நிலைத்து நின்று நம்பிக்கை தந்தார். அதுவரை டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்தவரை, இரண்டு ஐ.பி.எல் சீசன்களில் ஜொலித்ததால் அனைத்து ஃபார்மட்களுக்கும் தேர்வு செய்தனர். விளைவு - கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் அடித்திருப்பது 126 ரன்கள்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ராகுல் இடம்பெற வேண்டுமென்று இங்கிலாந்து ஒருநாள் தொடர் முடிந்ததிலிருந்து விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். இங்கு ஒரு நல்ல டெஸ்ட் பேட்ஸ்மேனை இந்தியா இழந்திருக்கிறதே! இத்தனைக்கும் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் விளையாட இந்திய அணியில் வீரர்கள் இல்லாமல் இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே போன்ற வீரர்கள் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்போது, ஒரு நல்ல டி-20 சீசனைக் காரணமாக வைத்து ராகுலை எடுத்துள்ளனர். சரி, ஒருநாள் அணியில் எடுத்ததற்கும் டெஸ்ட், போட்டியில் சொதப்புவதற்கும் பி.சி.சி.ஐ என்ன செய்யும்? காரணம் இருக்கிறது!

ஒரு வீரர், டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று ஃபார்மட்டிலும் விளையாடுமளவுக்கு மெச்சூரிட்டியுடன் இருக்கிறாரா என்பதை ஆராய வேண்டியது அவர்களின் பொறுப்புதான். ஒருநாள், டி-20 போட்டிகளில் தனக்கான இடத்தைப் பெற்றபிறகு ராகுலின் அணுகுமுறை முற்றிலுமாக மாறியிருக்கிறது. பௌலர்களை அட்டாக் செய்யவேண்டும் என்ற மனநிலையில்தான் டெஸ்ட் போட்டிகளிலும் களம் காண்கிறார். தவறான பந்துகளையும் அடிக்க முற்பட்டு வெளியேறுகிறார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் புஜாரா 25 பந்துகளில் 1 ரன்தான் அடித்தார். ஸ்டம்புக்கு வெளியே போகும் பந்துகளைத் தொடக்கூட இல்லை. அவ்வளவு நிதானமாக இருந்தார். ஆனால், ராகுல்..? தேவையில்லாமல் வெளியே போன பந்தைத் தொட, கேட்சாகி வெளியேறினார். ஒரு தேர்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கு எந்த பந்தை அடிப்பது என்பதைவிட, எந்த பந்தை விடுவது என்று நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். ஆனால், ராகுலின் புதிய அணுகுமுறை அவருக்குள் இருந்த டெஸ்ட் பேட்ஸ்மேனைத் தொலைத்திருக்கிறது.

இது ஒருபுறம் பிரச்னை என்றால், லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் நன்றாக விளையாடிவிட்டாலே அவர்களை டெஸ்ட் அணிக்கும் தேர்வு செய்வது எந்த வகையான லாஜிக் என்று தெரியவில்லை. ஹர்டிக் பாண்டியா... என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார். அவர் எதிர்காலத்துக்கான மிகமுக்கிய வீரர்தான். ஆனால், அவர் முழுமையான கிரிக்கெட்டராக மாறுவதற்கு முன் டெஸ்ட் வாய்ப்பு கொடுப்பது எந்த வகையில் நியாயம்? கருண் நாயர் எந்த வகையிலும் பாண்டியாவை விட மோசமான பேட்ஸ்மேன் கிடையாது. சரி,  பாண்டியா ஆல் ரவுண்டர் என்றாலும், பௌலிங்கில் அவர் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்றும் தெரியவில்லை. கருண், ஜடேஜா என டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்களின் இடத்தை ஆக்கிரமித்து, இரண்டையும் பேலன்ஸ் இல்லாமல் செய்கிறது இவரது தேர்வு. இந்தத் தொடருக்கு முன்பாக, 24 முதல் தரப் போட்டிகளில் விளையாடியிருந்த ஹர்டிக் கைப்பற்றியது 31 விக்கெட்டுகள்தான். அவரது பேட்டிங் சராசரி வெறும் 30.10. அதேசமயம், கருண் நாயர் முதல் தரப் போட்டிகளில் வைத்திருக்கும் சராசரி 51.09. இந்த ரஞ்சி சீசனில் அவரது சராசரி 68.00 (7 போட்டிகளில் 612 ரன்கள்). ஆனால், பிளேயிங் லெவனில் விளையாடியது 'ஆல் ரவுண்டர்' ஹர்டிக்!

இந்த இருவர் மட்டுமல்ல, தவான், குல்தீப் என்று எல்லா வீரர்களும் 3 வகையான போட்டிகளிலும் விளையாடுகின்றனர். தொடர்ந்து போட்டிகள் நடந்துகொண்டே இருக்கும் இந்தக் காலகட்டத்தில், அநேக வீரர்கள் 3 ஃபார்மட்களிலும் விளையாடுவது சரியான போக்கல்ல. இங்கிலாந்து அணியில் குக், மாலன், ஜென்னிங்ஸ், போப் என ஸ்பெஷலிஸ்ட்கள் அணிவகுக்கின்றனர். அவர்களுக்கு டி-20 அவசரம் கிடையாது. டெஸ்டை டெஸ்ட் போல் விளையாடுகின்றனர்.  3 ஃபார்மட்களிலும் ஆடும் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ போன்றோருக்கு ஒவ்வொரு ஃபார்மட்டிலும் ஒவ்வொரு ரோல். அதை அவர்களால் சரியாகச் செய்ய முடியும் என்பதை உறுதி செய்தபிறகே அந்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அதனால்தான் டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாட பட்லர் இவ்வளவு காலம் காத்திருக்கவேண்டியிருந்தது. ஆனால், இதுவே இந்தியாவாக இருந்தால், ஒரு நல்ல ஒருநாள் தொடர் போதும், உடனே டெஸ்ட் அணிக்குள் வந்துவிடுவார்கள். 

மூன்று ஃபார்மட்களிலும் ஆடும்போது வீரர்களால் சீராக விளையாட முடியாது. அந்தந்த ஃபார்மட்டுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியாது. அப்படி விளையாட வேண்டுமெனில் அவர்கள் கோலி, டேவிட் வார்னர் போல அதீத முதிர்ச்சி அடைந்திருக்கவேண்டும். இவ்வளவு ஏன், டி-20 போட்டிக்கு செட் ஆகாததால், ஜோ ரூட் கூட கடைசி போட்டியில் கழட்டிவிடப்பட்டாரே! ஒரு சீனியர் வீரருக்கே அந்தப் பிரச்னை இருக்கும்போது, பாண்டியா, குல்தீப், ராகுல் போன்ற வீரர்களை அனைத்து ஃபார்மட்களிலும் ஆடவைத்து அவர்களின் தனித்துவத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது பி.சி.சி.ஐ. 

இங்கு பி.சி.சி.ஐ டெஸ்ட் போட்டிகளை எப்படிப் பார்க்கிறது என்ற கேள்வி எழுகிறது. டி-20 போட்டிகளில் சோபித்துவிட்டாலே இந்திய டெஸ்ட் அணிக்கு இடம் கிடைத்துவிடுகிறது. ஐ.பி.எல் தொடர்தான் இந்திய அணிக்குள் வருவதற்கான நுழைவு வாயில் என்றாகிவிட்டது. ஆனால், அதுதான் 3 ஃபார்மட்களுக்குமான பொது வாயில் என்பதில்தான் சிக்கல். ஏனெனில், 85 ஆண்டுகளாக ரஞ்சி டிராஃபி நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதற்கான காரணம் வேண்டுமல்லவா! இந்தியாவின் பிரதான தொடரான ரஞ்சிக்கே அணித் தேர்வில் வேலையில்லையெனில் துலீப் டிராஃபி, விஜய் ஹசாரே எல்லாம் எதற்காகவோ? அதில் ஜொலித்தால் ஐபிஎல் வாய்ப்புகள் கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.

ஹர்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் என கடைசியாக இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைந்தவர்களின் ரஞ்சி செயல்பாடு என்ன? இதோ தொடர்ச்சியாக விளையாடி பும்ரா காயத்தால் அவதிப்படுகிறார். கோலியும் கூட லார்ட்ஸ் டெஸ்ட் முடிந்த பின், "தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக  ஓய்வில்லாமல் போட்டிகளில் விளையாடி வருவதால்கூட முதுகுவலி ஏற்பட்டிருக்கலாம்" என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஒருநாள், டி-20, ஐ.பி.எல் என தொடர்ந்து ஆடியவர், இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்து வேகங்களை தனி ஆளாக சமாளித்தவர் இன்று, மிகமுக்கியமான டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. குல்தீப்பின் தேர்வு அவரது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே கேள்விக்குறியாகிவிட்டது. டெஸ்ட் என்பது கிரிக்கெட்டின் கிளாசிக்கல் ஃபார்மட். இங்கு வெறும் சிக்ஸர்கள் அடிப்பவர்களாலும், கூக்லியாலும், வேகத்தாலும் விக்கெட் எடுப்பவர்களாலும் மட்டும் வெல்ல முடியாது. சரி, அப்போது இந்தியாவில் எத்தனை டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்கிறார்கள்?

இங்கிலாந்துக்குச் சென்ற 18 பேர் கொண்ட இந்திய அணியில் கே.எல்.ராகுல், இஷாந்த் ஷர்மா, முரளி விஜய், புஜாரா தவிர்த்து அத்தனை பேரும் லிமிட்டெட் ஓவர்களில் ஜொலித்து இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைந்தவர்கள்தான். ரஹானே, அஷ்வின், பும்ரா, ஷமி என இன்றைய சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததும் கூட, ஐ.பி.எல் தொடர்தான்! இப்படி இருக்கையில், எங்கிருந்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் வருவார்கள்? ரஞ்சி பெர்ஃபாமன்ஸ் என்பது கொஞ்சநாள் செய்தித்தாள்களில் இடம்பெற மட்டுமே! இந்திய சீனியர் அணிக்கான தேர்வில்தான் ஐ.பி.எல் தொடரின் பங்களிப்பு அதிகம் என்று நினைத்தால், இந்தியா - ஏ அணிக்குள் நுழைவதற்கும் அதுவே நுழைவுவாயிலாய் இருக்கிறது. 

மயாங்க் அகர்வால் - காலம்காலமாக உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் எடுத்து வருகிறார். கடந்த ரஞ்சி சீசனில் கூட 1,160 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஐ.பி.எல் தொடர் வந்தால் மட்டும் சொதப்பிவிடுவார். அதன் விளைவு - இன்னும் இந்தியா - ஏ அணிக்குத்தான் விளையாடி வருகிறார்.  'இந்திய அணியில் ஏற்கெனவே 3 ஓப்பனர்கள் இருக்கிறார்கள். அகர்வாலும் ஓப்பனர். அதனால் இடமில்லை' என்ற பதில் வரும். புஜாராவை உட்கார வைத்து ராகுலை 3-ம் இடத்தில் இறக்கி விடுபவர்கள், அகர்வாலையும் பயன்படுத்திப் பார்க்கலாமே! இவருக்காவது நிரந்தரமாக இந்திய ஏ அணியில் இடம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதுவும் இல்லை. 

இந்த ரஞ்சி சீசனில் 9 போட்டிகளில் 775 ரன்கள் (சராசரி : 64.58) குவித்திருந்த விதர்பா வீரர் சஞ்சய் ராமசாமி, தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்கா - ஏ அணிக்கு எதிரான `இந்தியா ஏ’  டெஸ்ட் அணியில் இல்லை. ரஞ்சி கோப்பையில் மட்டுமல்ல, இரானி கோப்பை ( 53, 27*) போட்டியிலும், போர்ட் பிரஸிடன்ட் அணிக்காக ஆடிய போட்டியிலும் (87) மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால், அவருக்கு இந்தியா - ஏ அணியில் இடமில்லை. அதேபோல் 20 வயது பஞ்சாப் வீரர் அன்மோல்ப்ரீத் சிங். 5 ரஞ்சி போட்டிகளில் 2 இரட்டைச் சதங்கள் உள்பட 753 ரன்கள் (சராசரி : 125.50 ) குவித்திருந்தார். அவருக்கும் இந்தியா ஏ அணியில் இடமில்லை. 

'ஒரு சீசனில் நன்றாக ஆடிவிட்டால் உடனே இடம் கிடைத்துவிடுமா' என்ற கேள்வி எழும். ஆனால், இவர்கள் இடத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பது பிரித்வி ஷா, சஹால், அக்சர் படேல் போன்ற லிமிடட் ஓவர் வீரர்கள் எனும்போது எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? 6 ரஞ்சி போட்டிகளில் 34 விக்கெட்டுகள் (ஸ்டிரைக் ரேட் : 40.9) வீழ்த்திய தர்மேந்திரசிங் ஜடேஜாவுக்கு போர்ட் பிரெஸிடன்ட் அணிதான். ஆனால், சுழலுக்குச் சாதகமான இந்திய ஆடுகளத்தில், முதல் தரப் போட்டிகளில் 68.8 என்ற பௌலிங் ஸ்டிரைக் ரேட் எடுத்திருக்கும் சஹால் `ஏ’ அணியில் விளையாடிக்கொண்டிருக்கிறார். இதுதான் இந்தியாவில் ரஞ்சிப் போட்டிக்கும், அதில் ஜொலிப்பவர்களுக்குமான மரியாதை.

இந்திய அணிக்குள் வருபவர்களெல்லாம் ஐ.பி.எல் தொடர்களிலிருந்துதான் வருகிறார்கள். பி.சி.சி.ஐ அதைத்தான் தங்களின் செலக்ஷன் பாலிசியாக வைத்திருக்கிறது. அப்படியிருக்கையில் நிச்சயம் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் உருவாகப் போவதில்லை. அப்படி உருவானாலும், கே.எல்.ராகுலுக்கு நடந்ததுபோல், ஒரு ஐ.பி.எல் சீசன், அவர்களுக்குள்ளிருக்கும் டெஸ்ட் பேட்ஸ்மேனைக் கொன்றுவிடும். எந்த ஃபார்மட்டுக்கு, எந்தத் தொடரிலிருந்து வீரர்களை எடுக்கவேண்டும் என்பதை பி.சி.சி.ஐ தெளிவுபடுத்தவேண்டும். இல்லையேல், இந்தியாவுக்கு வெளியே எங்கு போனாலும் தோல்விகள் துரத்திக்கொண்டுதான் இருக்கும்.