Published:Updated:

கோலி பாய்ஸை காலிசெய்த இங்கிலாந்து... கேள்வியுடன் காத்திருக்கும் பிசிசிஐ

கோலி பாய்ஸை காலிசெய்த இங்கிலாந்து... கேள்வியுடன் காத்திருக்கும் பிசிசிஐ
கோலி பாய்ஸை காலிசெய்த இங்கிலாந்து... கேள்வியுடன் காத்திருக்கும் பிசிசிஐ

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் செயல்பாடுகள்குறித்து கேப்டன் கோலி  மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் கேட்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. டி- 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகின்றன. இதில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். முரளி விஜய் இரண்டு டெஸ்டிலும் ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.  முதல் டெஸ்டில் ஜொலித்த கேப்டன் கோலி, இந்தப் போட்டியில் விரைவிலேயே வெளியேற்றப்பட்டார். இரண்டாவது டெஸ்டில், அதிகபட்சமாக ரவிச்சந்திர அஸ்வின்  முறையே 33, 29 ரன்கள் எடுத்திருந்தார். உலகப்புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் படுதோல்வியை பிசிசிஐ-யால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  

2007-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் வெற்றியைப் பதிவுசெய்யவில்லை. 2011-ல், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் நிலைகுலையச் செய்தனர். இந்தியா படுதோல்வியடைந்தது. இந்தக் காயங்களுக்கு மருந்தாக இந்த டூர் அமையும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கு ஏற்றார்ப்போலவே முதல் டெஸ்டில் கோலி சதம் அடித்து அசத்தினார். இந்தியப் பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்துக்கு நெருக்கடியை கொடுத்தனர். இருந்தபோதும், 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைப் பறிகொடுத்தது. இருந்தாலும் போராடிக் கிடைத்த தோல்வி என்பதால், ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இரண்டாவது டெஸ்டில் எல்லாம் அப்படியே தலைகீழாக மாறியது. இந்த டெஸ்டில் இரண்டு போட்டிகளிலும் சேர்ந்து இந்திய அணி 90 ஓவர்கள் கூட ஆடவில்லை. அஸ்வின் எடுத்த 33, 29 ரன்தான் இந்தியா தரப்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி. 

இந்நிலையில்தான், பிசிசிஐ தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கேப்டன் கோலி  மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் இதுகுறித்து கேட்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், “ போதிய நேரம் இல்லை என இந்திய வீரர்கள் குற்றம் சாட்ட முடியாது. தென்னாப்பிரிக்கா சென்று விளையாடியபோது 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அப்போது அதிக போட்டிகளில் விளையாடியதால், பலு அதிகமானது. மேலும், பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடியவில்லை எனக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே, இந்தியா 'A' அணியில் மூத்த வீரர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கும் விதமாக  அனுப்பட்டனர். அவர்கள் கேட்ட சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், முடிவு தற்போது இப்படி வந்துள்ளது. ஆணையத்துக்கு தற்போது கேள்வி கேட்க உரிமையுள்ளது" என்றார்.

2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, 1-3 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரில் தோல்வியடைந்ததால்தான் அப்போது பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர், துணைப் பயிற்சியாளர்கள் ஜோ தவேஸ் , டிரெவோர் பென்னி ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ரவி சாஸ்திரி, சஞ்சய் பங்கர், ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தற்போது, இந்திய அணியின் மோசமான செயல்பாட்டால் இவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.