Published:Updated:

முன்பு 'கபில்தேவ்' இப்போது 'தோனி' சி.எஸ்.கே-வின் சின்சியர் ரசிகர் கருணாநிதி

முன்பு 'கபில்தேவ்' இப்போது 'தோனி' சி.எஸ்.கே-வின் சின்சியர் ரசிகர் கருணாநிதி
News
முன்பு 'கபில்தேவ்' இப்போது 'தோனி' சி.எஸ்.கே-வின் சின்சியர் ரசிகர் கருணாநிதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் மூத்த ரசிகரை இழந்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி விளையாட்டுத் துறைக்கு அளப்பரிய நன்மைகள் செய்துள்ளார். தடகள வீராங்கனை சாந்தி, தோஹா ஆசியப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு, உடனடியாக 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளித்தார் கருணாநிதி. சாந்தியின் வீட்டில் டிவி இல்லை என்பதைக் கேள்விப்பட்டு, அவருக்கு பெரிய டிவி ஒன்றை வாங்கி, பரிசாக அளித்தார். பின்னாளில் பாலின விவகாரத்தில் சிக்கி சாந்தியின் பதக்கம் பறிக்கப்பட்டபோதுகூட, கருணாநிதி ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து அவருக்கு ஆறுதல் கூறினார். `அரசு அளித்த பரிசு, சாந்தியிடமே இருக்கும்' எனவும் அறிவித்தார். சாந்தி இன்று தடகளப் பயிற்சியாளராக உருவெடுக்க, கருணாநிதி அளித்த அன்பும் ஆதரவும் ஒரு காரணம். 

விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதோடு கருணாநிதி ஓய்ந்துவிடுவதில்லை. சென்னையில் கிரிக்கெட் போட்டி நடந்தால் மைதானத்துக்கே சென்று நேரில் கண்டு ரசிப்பார். மைதானத்துக்குப் போக முடியாத சூழ்நிலையில், வீட்டிலேயே தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்துவிடுவார். துரைமுருகனும் தன் தலைவருடன் சேர்ந்துகொள்வார். ``சிலசமயத்தில் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக அரசு மீட்டிங்குகளைக்கூட ஒத்திவைத்துவிடுவார்'' என்று  ஒருமுறை கனிமொழி கூறினார்.

சி.எஸ்.கே அணியின் சீனியர் ரசிகர், அநேகமாக இவர்தான். சென்னை அணி மோதும் முக்கிய ஐ.பி.எல் ஆட்டங்களைக் காண பேரனுடன் சேப்பாக்கத்தில் ஆஜராகிவிடும் கருணாநிதி, தோனியின் தீவிர ரசிகர். சேப்பாக்கம் மைதானத்தில் கனிமொழியின் மகன் ஆதித்யாதான் தாத்தாவுக்கு கம்பேனியன். தாத்தாவும் பேரனும் போட்டிகுறித்து அலசி ஆராய்ந்த பிறகே வீடு திரும்புவார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தவும் கருணாநிதி தவறியதில்லை.  2011-ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றபோது, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கிப் பாராட்டினார். தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினுக்கு, தனியாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீரர் அஸ்வின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2014-ம் ஆண்டு, `Playing It My Way' என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட்டார் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் ரசிகர் என்ற வகையில் கருணாநிதி படிக்காமல் இருப்பாரா? சச்சின் புத்தகத்தை ஆர்வத்துடன் படித்த கருணாநிதி, புத்தகம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். `சச்சின், கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும்... பணிவுமிக்க நல்ல மனிதர். இதனாலேயே எனக்கு அவர் மீது தனி அன்பும் பிரியமும் உண்டு. அவரின் சுயசரிதையை ஆர்வத்துடன் படித்துவருகிறேன்' என, ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் கருணாநிதி. 2010-ம் ஆண்டு குவாலியரில் நடந்த ஒருநாள் போட்டியில் சச்சின் இரட்டைச்சதம் அடித்தபோது, நேரடியாக போன் செய்து வாழ்த்து சொன்னார். சச்சினுக்கு `பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டபோது, வாழ்த்து தெரிவித்தவர்களில் இவரும் ஒருவர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் பந்துவீச்சும், சென்னை வீரர் ஸ்ரீகாந்தின் அதிரடியும் கலைஞருக்கு மிகவும் பிடித்தவை. கருணாநிதியுடன் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் நெருங்கிய நட்புவைத்திருந்தார். சென்னைப் பெண்ணைத் திருமணம் முடித்த முரளிதரன், அவ்வப்போது கருணாநிதியை நேரில் சந்திப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். 

கடந்த மார்ச் மாதத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆனது. 94 வயது கருணாநிதி, தன் பேரனுக்கு பந்து வீசுவது போன்ற வீடியோ. எழுத்தைப்போல கிரிக்கெட் ஆட்டத்தையும் கருணாநிதி நேசித்தார். கருணாநிதியின் பேரன் ஆதித்யா சென்னை சேப்பாக்கம் சென்றால், தாத்தாவின் நினைவுகளில் மூழ்காமல் திரும்ப முடியுமா?