Published:Updated:

''இலங்கை வீரர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்''

''இலங்கை வீரர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்''
''இலங்கை வீரர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்''

கோவை: அடுத்த வாரம் ஆரம்பிக்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது எனும் கோரிக்கை  தமிழகம் முழுவதும்  வலுப்பெற்றிருக்கும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை நாட்டினரை ஏன் அனுமதிக்க கூடாது என்ற விளக்கம் அடங்கிய துண்டு பிரசுரம் ஒன்று தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.  காலவரையற்ற உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்கள் ஒரு புறம் நடக்க, புத்த பிட்சுகள் மீது தாக்குதல், இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் என தங்கள் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார்கள்  தமிழர்கள். இந்த சூழலில் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது என்ற  கோரிக்கையும் வலுபெற்று வருகிறது.

அடுத்த வாரம்  தொடங்க இருக்கும் ஐ.பி.எல்.லில்  தமிழக அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோரும், தமிழகத்தைச் சேர்ந்த சன் குழும‌ நிறுவனத்தின் அணியான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் குமார சங்ககாரா, திசாரா பெரேரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

##~~##
டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மகிளா ஜெயவர்த்தனா, ஜீவன் மெண்டிஸ் ஆகியோரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சசிந்திரா  சேனநாயகா, மும்பை இந்தியன்ஸ் லசிந்தா மலிங்கா, புனே வாரியர்ஸ் இந்தியா அணியில் ஏஞ்சலா மேத்தியூஸ், அஜந்தா மெண்டிஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் முத்தையா,  தில்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் குசால் பெரைரா ஆகியோர் விளையாடுகின்றனர்.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் இரா.கலையரசு , ‘இலங்கை கிரிக்கெட்டும், இனவெறி அரசியலும்’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை எழுதி அதை  தமிழகம் முழுவதும் பிரசுரித்து வருகிறார்.
அந்த கடிதத்தில்,  “இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் சீசனில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா ரூ.50 லட்சத்துக்கும் அகிலா தனஞ்ஜெயா ரூ.10 லட்சத்துக்கும், சன் முழும நிறுவனத்தின் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரைரா  ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளமும் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?  தமிழர்களைக் கொள்ளையடித்து தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து கடைசியில் தமிழினத்தையே அழிக்கத் துடிக்கும் சிங்கள வெறியர்களின் கிரிக்கெட் விளையாட்டை நாம் எப்படி விசிலடித்து்க் கொண்டாடப் போகிறோமா?.
நம் ஈழத்தங்கைகளை தாய்மார்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து மார்பகங்களை அறுத்தவர்களுடன் கிரிக்கெட் விளையாட போகின்றோமா?
நம் இளைஞர்களை அம்மணமாக்கிக் கொன்று இனத்தை அழிப்பவர்களுடன் கோகோ கோலாவும் பெப்சியும் குடிக்க போகின்றோமா? நாளை நம் ஈழ சகோதரிகளை ஐ.பி.எல்.லில் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆட ராஜபக்சே அனுப்பி வைக்கும்போது அதையும் நாம் சோனியா, ராகுல் காந்தியுடன் உட்கார்ந்து ரசிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துபோகப் போகிறோமா?
அல்லது விளையாட்டு என்று சொல்லி சிங்களவனை வைத்து பணம் ஈட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நம்மை ஏமாற்றுபவர்களை இனியும் அனுமதிக்க போகிறோமா?  விளையாட்டு என்று சொல்லி ந‌ம்மை ஏமாற்றும் எவனையும் இனி தாய்த் தமிழ்நாட்டில் அனுமதியோம். சிங்களவனை வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு இடம் இது இல்லை. இனியும் அவர்களை வைத்து விளையாடினால் தமிழ்நாட்டை விட்டே அவர்களை  விரட்டுவோம்.
800 மீனவர்களை கொன்ற இலங்கையுடனான அனைத்து விளையாட்டு தொடர்புகளையும் இந்தியா உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காமன்வெல்த் நாடுகள் இனவெறி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 1977 ல் செய்துகொண்ட கிலெனீகல் ஒப்பந்தத்தை போல், ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி காமன்வெல்த்தில் உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 54 நாடுகளுடனான விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இலங்கையைத் தடை செய்ய வேண்டும் என இந்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
ஆசிய தடகள விளையாட்டு போட்டியைப்போல் இலங்கை இனவெறி வீரர்கள் பங்கு பெறும் ஐபிஎல் போட்டிகளுக்கும் சென்னையில் நடைபெறுவற்கு அனுமதி வழங்க கூடாது. தமிழகம் இருளில் தவித்திருக்கும் போது ஐபிஎல் போட்டிகளுக்கு வழங்கப்படும் தடையில்லா மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
தமிழக மாணவர்களே!  தமிழக இளைஞர்களே! ஒன்றிணைந்து போராடுவோம். தமிழக, இந்திய அரசுகளை மக்கள் மன்றத்தில் பணியவைப்போம். 2013 ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதை நம் போராட்டங்களால் தடை செய்வோம்”  என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-ச.ஜெ.ரவி