Published:Updated:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க முடிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க முடிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க முடிவு

சென்னை: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் வெடித்து வரும் வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் 2 பேரை நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மே 26ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டி சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், மொகாலி, ஜெய்ப்பூர், புனே, தர்மசாலா, ராய்ப்பூர், ராஞ்சி ஆகிய நகரங்களில் நடக்கிறது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால்  ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதனால் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று ஐ.பி.எல். அமைப்பை மற்ற அணிகளின் உரிமையாளர்கள் வற்புறுத்தினர்.

ஆனால் போட்டிகளை சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற இயலாது என்று ஐ.பி.எல். நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

##~~##
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்ஜை சந்தித்து பேசினர். அப்போது,  சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது குறித்தும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 
மாணவர்கள் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் சென்னையில் இலங்கை வீரர்களை கொண்டு போட்டி நடத்துவது குறித்து போலீசாருடன் என்.சீனிவாசன் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் போட்டிகளை நடத்த காவல்துறையினர் சில ஆலோசனைகளை வழங்கியதாகவும், அவற்றை ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவில் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக அவர் கூறியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்த பிரச்னையில் தீர்வு ஏற்படும் வகையில் தங்கள் அணியில் உள்ள நுவான் குலசகரா, அகிலா தனன்ஜெயா ஆகிய இலங்கை வீரர்களை நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடாமல் இருக்கும் வகையில் இந்த 2 பேரையும் அணியில் இருந்து இந்த சீசனுக்கு நீக்குவது என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் இலங்கை வீரர்கள் 13 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் பஞ்சாப் அணியை தவிர மற்ற 8 அணிகளில் இலங்கை வீரர்கள் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 2 இலங்கை வீரர்களை நீக்குவதுபோல மற்ற அணிகளும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமாவது இலங்கை வீரர்களை நீக்கினால் நன்றாக இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்காவும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஜெயவர்த்தனே, மெண்டீசும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தில்சான், முரளீதரனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் செனனாகயேயும், புனே வாரியர்ஸ் அணியில் மேத்யூஸ், அஜந்தா மெண்டீசும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் குஷால் பெரைராவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சங்ககரா, திசாரா பெரைராவும் உள்ளனர்.
ஆனால் மற்ற அணிகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து என்ன முடிவு செய்து இருக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.