Published:Updated:

இரண்டு கையாலும் பவுலிங்... டி.என்.பி.எல் தொடரில் கலக்கும் மோகித்!

"திண்டுக்கல் டிராகன்ஸ் கூட ஆடுன மேட்ச்லதான், ரெண்டு கையையும் பயன்படுத்தி பெளவுலிங் போட்டேன். அது உலகம் முழுக்க ரிலே ஆனாதால சட்டுனு பத்திகிச்சு. நான் ரெண்டு கையிலயும் பந்து வீசுறது ட்விட்டர்ல டிரெண்ட் ஆச்சு. அன்னிக்கு நான் 77 ரன் எடுத்திருந்தேன். அதை எல்லாரும் மறந்துட்டாங்க."

இரண்டு கையாலும் பவுலிங்... டி.என்.பி.எல் தொடரில் கலக்கும் மோகித்!
இரண்டு கையாலும் பவுலிங்... டி.என்.பி.எல் தொடரில் கலக்கும் மோகித்!

`அண்ணே.. ஒரு பெட் மேட்ச் வெச்சுக்கலாம் வர்றீங்களா’ என சென்னை 600002 படத்தில் சீனியர்களை வம்புக்கு இழுக்கும் சுள்ளான்கள் போலவே இருக்கிறார் மோகித் ஹரிஹரன். ஜெர்கின், வலது கையில் ரப்பர் வளையம், இடது கையில் சிவப்பும், மஞ்சளுமாய் சில கயிறுகள், காலில் கருப்பு கயிறு, ஹவாய் செப்பல் என பக்கத்து வீட்டு பையனைப் போன்ற தோற்றம். 

சென்னை விவேகானந்தா கல்லூரி முதலாமாண்டு பிசிஏ மாணவன். குழந்தைத்தனம் இன்னும் முற்றிலுமாக விலகாத பதின்வயது. அம்பி போல சிறிது வெட்கத்துடன் தயங்கி தயங்கி பேசும் மோகித், மைதானத்தில் ரெமோவாக பட்டையைக் கிளப்புவார் என்பதுதான் ஹைலைட். கிரிக்கெட் விளையாட்டில் இடது கை, வலது கை ஆட்டக்காரர்கள், பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், மோகித் இரண்டு கைகளையும் பயன்படுத்தி பந்துவீசுவதில் வல்லவர். இவரது இந்தத் திறமை பலரையும் வியக்கவைத்துள்ளது. 

டி.என்.பி.எல் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் திருச்சி அணிக்காக ஆடிய மோகித், இந்த முறை காஞ்சி வீரன்ஸ் அணிக்காக களமிறங்கி இருக்கிறார். இந்த சீசனின் 12-வது லீக் போட்டி திண்டுக்கல் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சி வீரன் அணிகள் மோதின. திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றிபெற்றது. காஞ்சி வீரன்ஸ் தோல்வியைத் தழுவினாலும், அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது, இடது, வலது என இரண்டு கையாலும் பந்துவீசி அசத்தியதுடன், 77 ரன்களையும் தனது அணிக்காக பெற்றுத்தந்தார். 77 என்பது கொண்டாடப்படவேண்டிய எண்ணிக்கை. ஆனால், அவரது இரு கை பந்துவீச்சு, அவரது ரன் கணக்கை பின்னுக்குத் தள்ளிவிட்டது. 

கிரிக்கெட் வீரர்களில் சிலர் இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர், சில வேளைகளுக்கு இடது கையையும், சில வேலைகளுக்கு வலது கையையும் பயன்படுத்துவார்கள். உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர் வலது கை பேட்ஸ்மேன். ஆனால், இடது கையால் எழுதுவார். சௌரவ் கங்குலி இடதுகை பேட்ஸ்மேன். ஆனால், பந்து வீச வலது கையைப் பயன்படுத்துவார். வலது கை பழக்கமுள்ள டேவிட் வார்னர் இடது கை பேட்ஸ்மேன். இப்படி கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு கைகளையும் பயன்படுத்தி பந்து வீச்சும் ஆற்றல் படைத்தவர்கள் யாரும் இல்லை. தற்போது இந்திய அளவில் விதர்பாவைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் அக்ஷய் கர்னேவார் என்ற வீரர் மட்டுமே இரண்டு கைகளில் பந்துவீசி வருகிறார். அந்த வரிசையில் மோகித்தும் இணைந்துள்ளார். 

திண்டுக்கல்லில் ஒரு விடுதியில் தங்கியிருந்த மோகித்தைச் சந்தித்தேன். பேட்டி என்றதும் ‘எதுக்குண்ணா...’ என்றபடியே வெள்ளந்தி சிரிப்பும், கண்களில் மின்னி மறையும் கூச்சம் கலந்த முகபாவனையுடன் நெளிந்தபடியே அமர்ந்த மோகித்தைப் பார்க்கும்போது...

காத்திருக்கும் வரை நமது பெயர் காற்றென்றே இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயலென புரியவைப்போம்‘

என்ற மு.மேக்தாவின் கவிதை வரிகள்தான் எண்ண அலைகளில் மேலெழுந்து நின்றது.

``நான் சென்னை பையன். அப்பா ரயில்வே ஸ்டாஃப். என் அண்ணாவும் கிரிக்கெட்டர்தான். டி.என்.பி.எல் போட்டிகள்ல திருச்சி அணிக்காக விளையாடுறான். என் அப்பா கிரிக்கெட் வீரர். ரயில்வே அணிக்காக நாற்பது வருஷம் விளையாடியிருக்கார். சிறந்த கோச். சின்ன வயசுலயே அப்பாவோட கிரவுண்டுக்குப் போயிடுவேன். ஏழு, எட்டு வயசுல இருந்தே கிரிக்கெட் ஆடிகிட்டு இருக்கேன். இன்னிக்கு வரைக்கும் அப்பாதான் எங்க கோச். கிரிக்கெட்ல இருக்க சின்ன சின்ன நுணுக்கங்களைக் கத்துக்கொடுப்பார். அப்பா பல ஜாம்பவான்களோட கிரிக்கெட் ஆடியிருக்கிறார். அவரோட அனுபவங்களை எங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கார். அப்பா இந்தியா டீம்ல ஆடணும்னு விரும்புனார். ஆனா, அது நடக்கலை. எங்களை எப்படியாவது இந்திய அணிக்காக ஆடவெச்சுடணும்னு லட்சியத்தோட இருக்கார்.’’ 

``அப்ப எனக்கு பதினோரு வயசு இருக்கும். சும்மா விளையாட்டுக்காக ரெண்டு கையிலயும் பெளவுலிங் பண்ணிட்டே இருப்பேன். அதைப் பார்த்துட்டு அப்பா தான் என்க்ரேஜ் பண்ணுனாரு. இப்ப ரெண்டு கையாலயும் என்னால பந்துவீச முடியுது. நான் ஆஃப் ஸ்பின்னர். ரெண்டு கையிலயும் இப்ப கன்ட்ரோல் கிடைக்குது. `இன்னும் இதை ஷார்ப் பண்ணணும்’னு அப்பா சொல்லுவார். நானும் ஷார்ப் பண்ணிகிட்டே இருக்கேன். பேசிக்கலி நான் ஒரு பேட்ஸ்மேன். அப்பா என்னை பேட்ஸ்மேனா உருவாக்கத்தான் நினைச்சார். இப்பவும், ‘பேட்டிங்ல கவனம் செலுத்து’ன்னுதான் சொல்லிகிட்டே இருப்பார். ஆனா, ரெண்டு கையாலும் பெளவுலிங் போடுறதால என்னோட பேட்டிங் திறமை வெளிய தெரியாம போக சான்ஸ் இருக்குன்னு தோணும். அதே மாதிரிதான் ஆகிடுது. திண்டுக்கல் டிராகன்ஸ் கூட ஆடுன மேட்ச்லதான், ரெண்டு கையையும் பயன்படுத்தி பெளவுலிங் போட்டேன். அது உலகம் முழுக்க ரிலே ஆனாதால சட்டுனு பத்திகிச்சு. நான் ரெண்டு கையிலயும் பந்து வீசுறது ட்விட்டர்ல டிரெண்ட் ஆச்சு. அன்னிக்கு நான் 77 ரன் எடுத்திருந்தேன். அதை எல்லாரும் மறந்துட்டாங்க.

கே.எல் ராகுல், விராட் கோலி எனக்கு பிடிச்ச கிரிக்கெட்டர்ஸ். டி.என்பி.எல் ஆரம்பிச்ச பிறகு, வெளியே தெரியாம இருந்த பல திறமையான வீரர்கள் வெளிய வந்திருக்காங்க. இந்த போட்டி உலகம் முழுக்க ஒளிபரப்பாகுறதால, திறமையா விளையாடுற வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிது. தமிழ்நாட்டுல இன்னும் திறமையான பல கிரிக்கெட் வீரர்கள் இருக்காங்க. டி.என்பி.எல் மாதிரி அந்தந்த மாவட்ட அளவுல அடிக்கடி போட்டிகள் நடத்தணும். அப்பத்தான் பல திறமைசாலிகள் கிடைப்பாங்க. எங்களுக்கு களம் அமைச்சுக்கொடுத்த டி.என்பி.எல்-க்கு நன்றி’’ என்றார் மோகித்.

 எதிர்கால கிரிக்கெட்டில் மோகித் பல உச்சங்களைத் தொட வாழ்த்தி விடைபெற்றேன். 

மோகித் ஹரிஹரனின் தந்தை, ரவிசங்கரிடம் பேசினேன். ``என்னோட பையன்றதால சொல்லல. அவன் நல்ல கிரிக்கெட்டர். சின்ன வயசுல இருந்தே என்கூட பிராக்டீஸ் வந்து வந்து கிரிக்கெட் அவனோட உடம்புல ஊறிப்போச்சு. பெரிய பையன் ஜகன்நாத், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி இருக்கான். அவன் நல்ல பேட்ஸ்மேன். ஹரிஹரனும் திறமையான பையன்தான். ஆப் ஸ்பின் நல்லா போடுவான். விளையாட்டுத்தனமா ரெண்டு கையிலயும் பெளவுலிங் போட்டுகிட்டு இருந்தான். அதை முறைப்படுத்தி முறையா பயிற்சி எடுத்துகிட்டான். இப்ப அதுவே அவனோட தனிப்பட்ட அடையாளமாகிப்போச்சு. லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட்ல பெளவுலிங் போடுவான், ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு லெப்ட்ல பெளவுலிங் போடுறது ஒரு நுணுக்கம். அது அவனுக்கு கைவந்திருக்கு. அவன சிறந்த பேட்ஸ்மேனா உருவாக்கனும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கும் மேல இப்ப ஆல்ரவுண்டரா இருக்கான். இந்திய அணிக்காக என் பசங்க விளையாடணும் அதுதான் என்னோட கனவு’’ என்றார்.

ஒரே வேலையையும் இரண்டு கையாலும் செய்யக்கூடிய திறமை படைத்தவர்களை, ஆம்பிடெக்ஸ்ட்ரஸ் (Ambidextrous) என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இது லத்தின் வார்த்தை. லத்தின் மொழியில் ஆம்பி என்றால் இரண்டும் என்று அர்த்தம். டெக்ஸ்டர் என்பதற்கு இடது அல்லது ஃபேவரபில் (Favorable) என்று பொருள். ஆம்பிடெக்ஸ்ட்ரஸ் என்றால் இரண்டும் சுலபமாக பயன்படுத்துதல் என்று பொருள்.