Published:Updated:

அடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி! - மகளிர் கிரிக்கெட்டின் டிரெண்ட்செட்டர் ஸ்மிரிதி #HBDSmriti

அடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி! - மகளிர் கிரிக்கெட்டின் டிரெண்ட்செட்டர் ஸ்மிரிதி #HBDSmriti

2000-த்தின் தொடக்கத்தில் இந்திய ஆண்கள் அணி எப்படியொரு மாற்றத்தைக் கண்டதோ, அப்படியொரு மாற்றம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் காரணங்களில் ஒருவராய், எதிர்காலத் திட்டங்களின்  மையப் புள்ளியார் இருப்பவர், இருக்கப் போகிறவர் இந்த 23 வயதுப் பெண்தான்!

Published:Updated:

அடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி! - மகளிர் கிரிக்கெட்டின் டிரெண்ட்செட்டர் ஸ்மிரிதி #HBDSmriti

2000-த்தின் தொடக்கத்தில் இந்திய ஆண்கள் அணி எப்படியொரு மாற்றத்தைக் கண்டதோ, அப்படியொரு மாற்றம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் காரணங்களில் ஒருவராய், எதிர்காலத் திட்டங்களின்  மையப் புள்ளியார் இருப்பவர், இருக்கப் போகிறவர் இந்த 23 வயதுப் பெண்தான்!

அடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி! - மகளிர் கிரிக்கெட்டின் டிரெண்ட்செட்டர் ஸ்மிரிதி #HBDSmriti

அதுவரை நம்மவர்களுக்கு அவள் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய மகளிர் அணியில் தெரிந்திருந்த இரண்டே பெயர்கள் - மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி. அந்தப் பெயர்களும் சாதனை பட்டியலில் பார்த்துத் தெரிந்ததே தவிர, மேட்ச்சைப் பார்த்து தெரிந்த பெயர்களில்லை. மேட்ச் பார்த்தா அது கிரிக்கெட்டா இருக்கணும், அதுல ஆடுறது பேட்ஸ்'மேனா' இருக்கணும். அவ்வளவுதான். ஆனால், இரண்டே போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் திருப்பினாள் அந்தப் பெண். ஸ்மிரிதி மந்தனா - சாம்பியன்ஸ் டிராஃபி நடந்துகொண்டிருந்தபோதே, மகளிர் உலகக் கோப்பையைத் தொடர்ந்து பார்க்கச் செய்தவர். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு இன்று வயது 23!

ஆம், 23 வயதுதான். அதற்குள் நட்சத்திர அந்தஸ்தை எட்டிவிட்டார் ஸ்மிரிதி. கடந்த ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பையில் இவர் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் பட்டையைக் கிளப்ப, `யாருயா இந்தப் பொண்ணு' என்று கவனிக்கத் தொடங்கினார்கள் நம் தோனி, கோலி ரசிகர்கள். நல்ல உயரம், ஒல்லியான தேகம், குழந்தைத் தன்மை குறையாத முகம், முன் நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றை, இடது கையில் ஸ்டைலிஷாக அமர்ந்திருக்கும் அந்த பேட்... சதம் அடித்ததைக் கொண்டாடும் மந்தனாவின் அந்தப் புகைப்படம் அந்தப் பெண் மீது அதீத கவனத்தை ஏற்படுத்தியது. 

சரி, அவர் ஆடியதை பார்க்கலாம் என்று ஹாட்ஸ்டார் திரைகளைத் தொட்டால், அங்கு தவானும், சேவாக்கும் கலந்ததுபோல் ஒரு ஆட்டம். சம்பிரதாயத்துக்காக ஆட்டத்தின் முதல் பந்தை கீப்பருக்கு விடுவது, பௌலர் எப்போ மோசமான பால் வீசுவார் எனக் காத்திருப்பது போன்ற பிசினெஸெல்லாம் அவரிடம் இருக்காது. ஸ்மிரிதியைப் பொறுத்தவரை, அவர் சந்திக்கும் ஒவ்வொரு பந்திலும் பௌண்டரி என்றே எழுதப்பட்டிருக்கும்போல! சேவாக்கிடம் பார்த்து நாம் வியந்த அதே ஆட்டம்.  அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் வருகிறதா, கவர் திசையில் ஒரு ட்ரைவ்... லெக் சைட் ஃபுல் லென்த் டெலிவரியா, ஃபைன் லெக் ஏரியாவுக்கு... ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனா, இந்தா மிட்விக்கெட்டுக்கு ஒரு புல்... என்ன இவர் இடதுகை பேட்ஸ்மேன் என்பது மட்டும்தான் வித்தியாசம். 

இந்திய பேட்ஸ்வுமன்களின் மீது அதுவரை எதிரணியினர் வைத்திருந்த அபிமானத்தை மொத்தமாக மாற்றியது மந்தனாவின் அந்த இரண்டு இன்னிங்ஸ். முன்பெல்லாம், `இந்தியா கூட ஃபர்ஸ்ட் பேட்டிங் பண்ணி 280+ எடுத்துட்டா போதும். அங்கயே மேட்ச ஜெயிச்சிடலாம்' என்ற மனநிலையில்தான் எதிரணிகள் விளையாடும். ஏனெனில், இந்திய பேட்ஸ்வுமன்கள் ரொம்பவுமே சாஃப்ட் கேம் ஆடுபவர்கள். பவுண்டரி அடிக்க ஒரு மோசமான பந்துக்காகக் காத்திருப்பார்கள். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைன் வந்தால் ஒன்-டே மேட்ச்சாக இருந்தாலும், டெஸ்ட் மேட்ச் மோட்தான். ஸ்மிரிதி அதை மாற்றினார். 

உலகக் கோப்பையின் முதல் போட்டி - பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கெதிராக. ஓபனர் பூனம் ராவத் வழக்கமான பாணியில் உருட்டிக்கொண்டிருக்கிறார். நடாலி ஷிவர், கேதரின் ப்ரன்ட், ஹீதர் நைட் கொண்ட பௌலிங் யூனிட்டை அப்படித்தான் டீல் செய்தாகவேண்டும். ஆனால், மறுபுறம் அவர்களையெல்லாம் போட்டு பொளந்துகொண்டிருக்கிறார் இந்த இளம் மங்கை. 11 பௌண்டரி, 2 சிக்ஸர்கள்... 71 பந்துகளில் 90 ரன்களைத் தொட்டுவிட்டார். 21 வயது... 90 களில் ஏற்படும் நெருக்கடியை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அடுத்த பந்தில் ஸ்மிரிதி அவுட். ஆனால், அவர் அவுட்டான விதம் நிச்சயம் ஸ்டேண்டிங் ஒவேஷன் கொடுக்கச் செய்யும். 

90 ரன்களில் பேட்டிங். இன்னும் 23 ஓவர்கள் மீதமிருக்கின்றன. அணியின் ரன்ரேட்டும் ஐந்துக்கு மேல் இருக்கிறது. பொறுமையாக ஆடியிருக்கலாம். இல்லை. `நான் மந்தனா. இதுதான் என் ஸ்டைல். இதுதான் என் ஆட்டம். இதுதான் என் அடையாளம்'... அந்தத் தருணத்திலும் ஒரு ஸ்லாக் ஷாட். ஆனால், மிட்விக்கெட்டிலேயே கேட்சாக வெளியேறினார். இருந்தாலும், அந்த நேரத்தில் அவர் முகத்தில் கொஞ்சம் கூட நெருக்கடி என்பது தெரியவில்லை. ஆனால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் நம் அணியின் மீது வைத்திருந்த அபிப்பிராயத்தை மொத்தமாக உடைத்துவிட்டுச் சென்றார் மந்தனா. அதுதான் இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு அவர் செய்த மிகப்பெரிய பங்களிப்பு. 

அடுத்த போட்டி... இங்கிலாந்திடம் தவறவிட்டதை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராச் செய்து முடித்தார். சதம் அடித்தார். இரண்டே இன்னிங்ஸ்களில் இந்தியாவின் சென்சேஷன். அதன்பிறகு அடுத்த 7 போட்டிகளிலும் சறுக்கல். ஓராண்டுக்கும் மேல் இடைவெளி. மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி. உலகக் கோப்பையை ஃபைனலில் தவறவிட்ட இந்திய அணிக்கும் அதே நெருக்கடி. ஆனால், தென்னாப்பிரிக்க மண்ணில், பௌலர்களுக்குச் சாதகமான ஆடுகளத்தில், தன்னையும், இந்திய மகளிர் அணியின் எழுச்சியையும் நிரூபித்தார் ஸ்மிரிதி. அதன்பிறகு அவர் ஆடியது வேற லெவல் ஆட்டம்.

தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், இங்கிலாந்து தொடர், இந்தியா - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா முத்தரப்புத் தொடர் என ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு ஃபார்மட்டிலும் வெளுத்து வாங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் 79 பந்துகளில் அரைசதம் கடந்து `என்னால் இப்படியும் ஆட முடியும்' என நிரூபித்தார். ஒவ்வொரு தொடரிலும் தன் அதிரடியோடு முதிர்ச்சியையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். இப்போது இந்திய டி-20 அணியின் துணை கேப்டன், அர்ஜுனா விருது  பரிந்துரை என 23 வயதிலேயே அடுத்தகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் ஸ்மிரிதி. 

டி-20 போட்டிகளில் இப்போது புதிய இளம் அணி உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒருநாள் போட்டி அணியின் அணுகுமுறையும் மாற்றம் கண்டுள்ளது. 2000-த்தின் தொடக்கத்தில் இந்திய ஆண்கள் அணி எப்படியொரு மாற்றத்தைக் கண்டதோ, அப்படியொரு மாற்றம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் காரணங்களில் ஒருவராய், எதிர்காலத் திட்டங்களின்  மையப் புள்ளியார் இருப்பவர், இருக்கப் போகிறவர் இந்த 23 வயதுப் பெண்தான்!