Published:Updated:

சுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா? #EngvInd

சுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா? #EngvInd
சுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா? #EngvInd

ங்கிலாந்தை, இங்கிலாந்து மண்ணில் தோற்கடித்து உலகின் நம்பர் ஒன் அணியாக கோலியின் டீம் உயர்ந்துநிற்கும் என்கிற எதிர்பார்ப்புகள் எல்லாம் தரைமட்டமாகியிருக்கின்றன. டி20 தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் வெல்லும் என்பதுதான் எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்றாற்போல முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை செம ஈஸியாக வென்றது இந்தியா. ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியின் பக்கம் கூட இந்தியாவை நெருங்கவிடாமல் விரட்டியடித்திருக்கிறது இங்கிலாந்து. மீண்டும் ஒருமோசமான தோல்வியை சந்தித்து இங்கிலாந்திடம் 1-2 என தொடரை இழந்திருக்கிறது இந்தியா. இந்த தோல்விக்கு கோலி காரணமா... கோலியின் அணி காரணமா?

ப்ளேயிங் லெவனில் குழப்பும் கோலி!

இங்கிலாந்து தொடரில் டி20 ஆரம்பித்து, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் கட்டாயமாக இடம்பிடித்திருக்க வேண்டியவர் தினேஷ் கார்த்திக். ஃபார்மில் இருக்கும் முக்கியமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவர். ஆனால், அவரை மூன்று டி20 போட்டிகளிலும் சேர்க்காமல் ஃபார்மில் இல்லாத சுரேஷ் ரெய்னாவை வைத்துக்கொண்டு ஆடினார் கோலி. அதேபோல்  எவ்வளவு விமர்சனங்கள் எழுந்தபோதும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கும் தினேஷ் கார்த்திக்கை சேர்க்கவில்லை. லார்ட்ஸ் போட்டியில் சொதப்பினார் என்கிற ஒரே காரணத்துக்காக கே.எல் ராகுலை அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை உள்ளே கொண்டுவந்து, சுரேஷ் ரெய்னாவை உள்ளேயே வைத்ததன் மூலம் தனக்குச் சரியான ப்ளேயிங் லெவனை முடிவு செய்வதில் இருக்கும் குழப்பத்தை உலகுக்கு உணர்த்தினார் கோலி. 

பெளலிங்கைப் பொறுத்தவரை ஸ்ட்ரைக் பெளலரான புவனேஷ்வர் குமார் அணிக்குள் வந்துவிட்டார். உமேஷ் யாதவுக்கு பதிலாக உள்ளே கொண்டுவரப்பட்டவர் ஷ்ரதுல் தாக்கூர். தீபக் சாஹர் அல்லது சித்தார்த் கவுலையே அணிக்குள் வைத்திருக்கலாம். அதேபோல் குல்தீப் யாதவின் பெளலிங்கை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் படித்துவிட்டார்கள் என்பதால் மற்றோர் இடது கை ஸ்பின்னரான அக்ஸார் பட்டேலை கொண்டுவந்திருக்கலாம். ஆனால், சர்ப்ரைஸ் அல்லது `டேக்டிக்கல் மூவ்' என்று ராகுலுக்கு பதில் தினேஷ் கார்த்திக் என அணியின் மாற்றத்தை முடித்துக்கொண்டார் கோலி.

தடுமாறும் தோனி!

இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பைகளைப் பெற்றுத்தந்த கேப்டன் தோனி. 37 வயதான தோனி விமர்சனங்களை எல்லாம் உடைத்து ஐபிஎல் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சாம்பியன் கோப்பையைப் பெற்றுத்தந்தார். ஆனால்,  இங்கிலாந்து தொடரில் அவரின் பர்ஃபாமென்ஸ் என்பது சுமார் ரகம். உலகின் அத்தனை கிரிக்கெட்டர்களும் மதிக்கும், பெருமைப்படும், அந்த மைதானத்தில் விளையாடுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கருதும் புகழ்பெற்ற மைதானத்தில் தோனிக்கு அந்தப் பெரும் வாய்ப்பு கிடைத்தது. லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் என்கிற மைல்கல்லைக் கடந்தார் தோனி. ஆனால், மைதானத்தில் பெரிதாக கைத்தட்டல்களோ, விசில்களோ இல்லை. காரணம், மேட்ச் பார்க்கவந்தவர்கள் அனைவரும் தோனியின் ஆட்டத்தைப் பார்த்து வெறுப்பில் இருந்தனர். வெற்றிக்காக தோனி அன்று ஆடவே இல்லை. 59 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அவுட் ஆனார் தோனி. அதேபோன்று வெற்றிபெற்றால்தான் தொடரை வெல்ல முடியும் என்கிற போட்டியிலும் விளையாடினார் தோனி. மூன்றாவது ஒருநாள் போட்டியில், லீட்ஸ் மைதானத்திலும் தோனியின் பதுங்கும் ஆட்டமே தொடர்ந்தது. 90 நிமிடங்கள், ஒன்றரை மணி நேரம் களத்தில் நின்றவர், 66 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்தார். 

ரெய்னாவுக்கு முன்னதாக மூன்றாவது டவுன் பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் தோனி. 25வது ஓவரில் உள்ளே வந்தவர் 45-வது ஓவர் வரை களத்தில் நின்றார். ஆதில் ரஷித், மொயின் அலி என இந்த இரண்டு ஸ்பின்னர்களின் ஓவர்களையும் அவ்வளவுப் பொறுமையாக ஏன் ஆடினார், அடிக்கவே முடியாத பந்துகள் போல ஏன் தோனி பம்மினார் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.

கோலியின் கேப்டன்ஸி!

2018 ஐபிஎல் போட்டிகளின்போது கோலியின் கேப்டன்ஸி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. டிவில்லியர்ஸ், மெக்கல்லம், டிகாக், சாஹல், சவுத்தி என ஸ்டார் ப்ளேயர்களை வைத்துக்கொண்டும் லீக் ஸ்டேஜைக்கூடத் தாண்ட முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்தது அவர் தலைமையிலான பெங்களூரு அணி. சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்காததும், சரியான இடைவெளிகளில் பெளலர்களை மாற்றாததும், பேட்டிங் ஆர்டரை சரி செய்யாததுமே தோல்விகளுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அது இப்போது இந்திய அணியிலும் தொடர்கிறது.
பேட்ஸ்மேனாக கோலியை எந்தக் குறையும் சொல்லமுடியாது. ஆனால் கேப்டனாக அவர் கடுமையான சில முடிவுகளை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதே இங்கிலாந்து மைதானங்களில்தாம் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை நடக்கவிருக்கிறது. இங்கு பெறும் வெற்றிகள் இந்திய அணிக்கு மிகப்பெரிய கான்ஃபிடென்ஸைத் தரும். அதேபோல் இங்கு விளையாடும் வீரர்களுக்கும் பெரிய அனுபவத்தைத்தரும். ஆனால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடக்கூடியவர்களான கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் என இளம் வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் உட்காரவைத்துவிட்டு சீனியர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் தருவது நல்ல தலைவனுக்கான குணம் இல்லை.

பேட்டிங் ஆர்டர்!

4வது, 5வது டவுன் அதாவது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசை இன்னும் இந்தியாவுக்கு செட் ஆகாமலேயே இருக்கிறது. ஆனால் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அம்பதி ராயுடு, அஜிங்கியா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் என எந்த ஆர்டரிலும் இறங்கி ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களை வெறும் பார்வையாளர்களாக உட்காரவைத்துக்கொண்டிருப்பது யாருக்கு நஷ்டம்? பேட்டிங்கில் செம ஸ்ட்ராங் எனச் சொல்லிக்கொள்ளும் இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளாக சேஸிங்கிலும், செட்டிங்கிலும் ரன்கள் குவிக்கத் திணறுவது எதனால்?

லீட்ஸ் சொல்லும் செய்தி!

பேட்டிங் விக்கெட்டான லீட்ஸ் மைதானத்தில் 256 ரன்கள் என்பது சேஸிங்குக்கான ரன்களே இல்லை. மொயின் அலி, ரஷித்தின் ஸ்பின் இந்திய பேட்ஸ்மேன்களை பயமுறுத்துகிறது என்னும்போது சாஹல், குல்தீப் யாதவின் ஸ்பின்னும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வெளியேற்றியிருக்க வேண்டும்தானே? ஆனால் சாஹல், குல்தீப் என இருவருக்குமே விக்கெட் கிடைக்கவில்லை. ஜோ ரூட், இயான் மோர்கன் என இருவருமே அவ்வளவு ஈஸியாக சாஹல், குல்தீப்பின் பந்துகளை எதிர்கொண்டனர். இந்த இரண்டு ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே 96 ரன்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எடுத்தார்கள். இந்தப் போட்டியில் 2 இங்கிலாந்து விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தாலும் பெளலர்கள் எடுத்தது ஒன்றே ஒன்றுதான். மற்றொன்று ரன் அவுட். இந்தியாவின் பெளலிங் இங்கிலாந்துக்கு எதிராக சுத்தமாக எடுபடவில்லை என்பதுதான் உண்மை. 

பும்ரா, புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப், சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ் என பெளலர்களை சரியான நேரத்தில், சரியான விக்கெட்டுகளில் கோலி பயன்படுத்தவேண்டும். 

இங்கிலாந்து தோல்வி இன்னும் இந்தியாவின் ஒருநாள் போட்டிகளுக்கான அணி செட் ஆகவில்லை என்பதைத்தான் சொல்கிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மாற்றம் செய்யப்படவேண்டும். அதேபோல் பெளலிங்கிலும் மாற்றங்கள் இருந்தால் மட்டுமே 2019 கனவு நனவாகும்!