Published:Updated:

கோலியின் தொடர் வெற்றிகளுக்கு பிரேக் போட்ட ஹேல்ஸ்... மீண்டுவந்த இங்கிலாந்து! #ENGvIND

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோலியின் தொடர் வெற்றிகளுக்கு பிரேக் போட்ட ஹேல்ஸ்... மீண்டுவந்த இங்கிலாந்து! #ENGvIND
கோலியின் தொடர் வெற்றிகளுக்கு பிரேக் போட்ட ஹேல்ஸ்... மீண்டுவந்த இங்கிலாந்து! #ENGvIND

முதல் மேட்ச் முடிந்தபின் இரண்டு நாள்களும் குல்தீப்பின் ஸ்பின்னைச் சமாளிக்கத்தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுப்பயிற்சியும் எடுத்தார்கள். இதற்காக மெர்லின் பெளலிங் மெஷின் மூலம் சிறப்புப் பயிற்சிகள் நடத்தப்பட்டது. இது தெரிந்தும் எந்த சர்ப்ரைஸும் இல்லாமல் களமிறங்கினார் கோலி.

இந்தியா அசால்ட்டாக ஆட... யாருக்கு எப்படிப் பந்துவீச வேண்டும், யார் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என செம கால்குலேஷனோடு ஆடி தொடரை 1-1 எனச் சமன் செய்திருக்கிறது இங்கிலாந்து. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றது. குல்தீப்பின் சுழலைச் சந்திக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீண்டும் திணறுவார்கள் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, நடந்ததோ வேறு. இந்திய பெளலர்களை மிரட்டி எடுத்துவிட்டார் அலெக்ஸ் ஹேல்ஸ்! #ENGvIND

டாஸ்!

பெளலிங்கிற்குச் சாதகமான கார்டிஃப் பிட்ச்சில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் பெளலிங்கைத் தேர்தெடுத்தார். இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாத நிலையில் இங்கிலாந்து புது பெளலரை அணிக்குள் சேர்த்திருந்தது. ஸ்பின்னர் மொயின் அலிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால் அணியில் இடம்பிடித்திருந்தார்.

டேவிட் வில்லியின் முதல் ஓவரிலேயே தடுமாறினார் ரோஹித் ஷர்மா. வயிற்றுக்கு மேல் பெளன்சர்களாகப் போடவேண்டும் என்று முடிவெடுத்து பந்துவீசுவதைப்போல வீசினார் இரண்டாவது ஓவர் போட்ட ஜேக் பால். முதல் பவுன்ஸரில் தப்பித்த ரோஹித் ஷர்மா அடுத்த பவுன்ஸரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 5 ரன்களில் ரோஹித் வெளியேற, அடுத்து அசால்ட்டாக ஓடி ரன் அவுட் ஆனார் ஷிகர் தவான். மூன்றாவது விக்கெட்டாக முந்தைதைய மேட்சின் சூப்பர் ஸ்டார் கே.எல் ராகுல் க்ளீன் போல்டு. லயம் ப்ளங்கெட்டின் பந்துவீச்சில் போல்டாகி 6 ரன்களில் வெளியேறினார் ராகுல். 5 ஓவர்களில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. 

விராட் கோலியுடன் கூட்டணிபோட்ட சுரேஷ் ரெய்னா கொஞ்சம் சரிவிலிருந்து இந்தியாவை மீட்டார். ஆனால், சுரேஷ் ரெய்னாவிடம் பழைய வேகம் இல்லாததுபோல் இருந்தது. பவுண்டரிகளை விட சிங்கிள்களிலேயே கவனம் செலுத்தினார். மறுபக்கம் கேப்டன் கோலி அடிக்கவேண்டிய பந்துகளை எல்லாம் பதம் பார்த்தார். ஒரு சிக்ஸர் கிட்டத்தட்ட கேட்ச் ஆக மாறவேண்டியது. ஜேசன் ராய் தவறவிட்ட அந்த கேட்ச் சிக்ஸானது. 

ரஷித்தின் ஓவரில் ஸ்டம்ப்பிங் மூலம் அவுட் ஆனார் சுரேஷ் ரெய்னா. 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 20 பந்துகளில் 27 ரன்கள் அடித்திருந்தார் ரெய்னா. 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. 12-வது ஓவரின் இடையே தோனி வந்தார். இன்னும் இருக்கும் 8 ஓவர்களில் 80 ரன்களாவது அடித்தால்தான் அது வின்னிங் ஸ்கோராக இருக்கும் என தோனி, கோலி இருவருக்குமே புரிந்தது. ஆனால், ரன்கள் அடிக்கமுடியாமல் திணறினார். கோலி, தோனி என பவர் ஹிட்டர்கள் இருந்தும் 15 ஓவர்களில் 93 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது இந்தியா. டேவிட் வில்லி வீசிய 18-வது ஓவரில் கோலி அவுட். 1 பவுண்டரி, 2 சிக்ஸர் என 38 பந்துகளில் 47 ரன்கள் அடித்திருந்தார் கோலி. ஹர்திக் பாண்ட்யா வந்தார். வில்லி வீசிய இந்த ஓவரில் 1 விக்கெட்டையும் இழந்து 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்தியா.

ஜேக் பால் வீசிய கடைசி ஓவர்தான் இந்தியாவை 150 ரன்கள் நெருங்கவைத்தது. இந்த ஓவரில் மட்டும் தோனி மூன்று பவுண்டரிகள் அடிக்க கடைசி ஓவரில் மொத்தம் 22 ரன்கள் கிடைத்தது. 149 ரன்களை டார்கெட்டாக செட் செய்தது இந்தியா. 

இங்கிலாந்தின் சேஸ்!
திட்டமிட்டதைவிட கிட்டத்தட்ட 20 ரன்கள் குறைவாக அடித்திருந்ததால் பெளலிங்கில் பல வியூகங்களை அமைப்பார் கோலி என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், பெளலிங் சேஞ்சில் தடுமாறினார் கோலி. உமேஷ் யாதவுக்கு முதல் ஓவரைக் கொடுத்தார். முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் இரண்டு பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்தார். இரண்டாவது ஓவர் புவனேஷ்வர் குமார். கோலிக்குச் சற்றே ஆறுதலான ஓவர் இது. இரண்டு ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அடித்தது. உமேஷ் யாதவின் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே ஜேசன் ராய் அவுட். ஆனால், இந்த ஓவரிலும் 2 பவுண்டரிகள் உட்பட 9 ரன்கள் கொடுத்தார் உமேஷ். நான்காவது ஓவர் மீண்டும் புவனேஷ்வர் குமார். இந்த ஓவரில் 3 ரன்கள் கொடுத்தார் அவர். ஐந்தாவது ஓவரைத் தொடர்ந்து உமேஷுக்கே கொடுத்தார் கோலி. இந்த ஓவரின் கடைசி பந்தில் ஜோஸ் பட்லர் அவுட். 5 ஓவர்களின் முடிவில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து. மூன்றாவது நான்காவது டவுனில் திணறுகிறார் என்பதால் ஜோ ரூட் இந்த மேட்சில் 1 டவுன் பேட்ஸ்மேனாக இறக்கப்பட்டார். ஆனால், சாஹலின் ஏழாவது ஓவரில் ரூட் அவுட். 9 ரன்களில் போல்டானார். 

10-வது ஓவரில்தான் துருப்புச்சீட்டான குல்தீப் யாதவைக் கொண்டுவந்தார் கோலி. முதல் ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்தார் குல்தீப். ஆனால், அடுத்த சாஹலின் ஓவரில் ஹேல்ஸ் தெறிக்கவிட்டார். 1 பவுண்டரி 1 சிக்ஸர். அடுத்து குல்தீப் யாதவும் அடி வாங்கினார். மோர்கன், ஹேல்ஸ் என இருவருமே குல்தீப்பின் பந்துகளை பவுண்டரி லைனுக்கு அனுப்பினர். இந்த ஓவரில் 13 ரன்கள் கொடுத்தார் குல்தீப். பாண்டியாவின் பந்துவீச்சில் மோர்கன் ஆட்டம் இழந்தாலும் ஹேல்ஸின் அதிரடி தொடர்ந்தது. குல்தீப்பின் மூன்றாவது ஓவரைப் பெரிதாக அடித்து ஆடாமல் சிங்கிள்ஸ் மூலமே சமாளித்தார் ஹேல்ஸ். ஆனால், குல்தீப்பின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து குல்தீப்பின் மனபலத்தைக் குறைத்தார் பார்ஸ்டோவ். கடந்த மேட்ச்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய குல்தீப் இந்த மேட்ச்சில் 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து விக்கெட் இல்லாமல் ஸ்பெல்லை முடித்தார். அடுத்து பார்ஸ்டோவ் அவுட் ஆனாலும் ஹேல்ஸை இந்திய பெளலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி என்கிற நிலை. புவனேஷ்வர் குமாரிடம் ஓவரைக்கொடுத்தார் கோலி. முதல் பந்திலேயே சிக்ஸர், அடுத்த பந்திலேயே பவுண்டரி என ஆட்டத்தை ஈஸியாக முடித்தார் ஹேல்ஸ். 41 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 58 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார் அலெக்ஸ் ஹேல்ஸ். 

சர்ப்ரைஸ் என்ன?
முதல் மேட்ச் முடிந்தபின் இரண்டு நாள்களும் குல்தீப்பின் ஸ்பின்னை சமாளிக்கத்தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுப்பயிற்சியும் எடுத்தார்கள். இதற்காக மெர்லின் பெளலிங் மெஷின் மூலம் சிறப்புப் பயிற்சிகள் நடத்தப்பட்டது. இது கோலிக்குத் தெரிந்தும் எந்த சர்ப்ரைஸும் இல்லாமல் வழக்கம்போலவே 10-வது ஓவரிலிருந்து குல்தீப்பை பந்துவீசவைத்தார். பவர் ப்ளேவில் இரண்டு ஓவர்கள், டெத் ஓவரில் ஒரு ஓவர் என கோலி முயற்சி செய்யவில்லை. இங்கிலாந்து இப்போது இந்தியாவின் பேட்டிங், பெளலிங் என இரண்டையுமே படித்துவிட்டது. மூன்றாவது மேட்ச்சில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றால் முன்னாள் கேப்டன் தோனி செய்வதுபோல சில பல சர்ப்ரைஸ்களை கோலி கொடுக்க வேண்டும். பேட்ஸ்மேன் மாற்றம், பேட்டிங் ஆர்டர் மாற்றம், பெளலிங் சேஞ் எனப் புதுமைகள் செய்யவேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்திடம் தொடரை இழக்கத்தான் வேண்டியிருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு