
இந்திய அயர்லாந்து அணிகள் மோதிய 2 -வது டி20 போட்டியில் இந்தியா அயர்லாந்து அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
Photo credit: BCCI/Twitter
இந்திய அயர்லாந்து அணிகள் மோதும் 2 -வது டி20 போட்டி இன்று டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்யப் பணித்தது. இங்கிலாந்து தொடருக்கு ஆயத்தம் ஆகும் விதமாகக் கடந்த போட்டியில் விளையாடப் பலருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் கோலி களமிறங்கினர். கோலி 9 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரெய்னா மற்றும் ராகுல் ஜோடி அதிரடியில் இறங்கியது. இதனால் இந்திய அணியின் ரன்ரேட் சிறப்பாக இருந்தது. அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ராகுல் 36 பந்துகளில் 70 ரன்களிலும், ரெய்னா 45 பந்துகளில் 69 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துக் களமிறங்கிய முதல் போட்டியின் நாயகன் ரோகித் இந்த முறை டக் அவுட் ஆனார். இறுதிக் கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் இறங்க இந்தியா 200 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. பாண்ட்யா 9 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
Photo credit: BCCI/Twitter
பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து அணி. இந்த முறை சித்தார்த் கவுல் மற்றும் உமேஷ் யாதவ் இந்திய அணியின் பந்துவீச்சை தொடங்கினர். முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்டிர்லிங் ஆட்டமிழக்க, அதன் பின்னர் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. 12.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் மூலம் இந்தியா அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ராகுல் ஆட்டநாயகானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சஹால் தொடர் நாயகன் விருதை வென்றார்.