Published:Updated:

ராக் ஸ்டார் ரஷித் கான்... மேஜிக்கல் முஜீப்... இந்தியாவுக்கு செக் வைக்குமா ஆஃப்கான்?

ராக் ஸ்டார் ரஷித் கான்... மேஜிக்கல் முஜீப்... இந்தியாவுக்கு செக் வைக்குமா ஆஃப்கான்?
ராக் ஸ்டார் ரஷித் கான்... மேஜிக்கல் முஜீப்... இந்தியாவுக்கு செக் வைக்குமா ஆஃப்கான்?

அசோஷியேட் டீம்களோடு ஜெயித்து எக்ஸ்ட்ரா பாயின்ட் பெற்று அடுத்த சுற்றுக்குப் போகலாம் என்று கனவு கண்ட நாள்கள் எல்லாம் கனவாகவே போய்விட்டது. இப்போது லிமிடெட் ஓவர் போட்டிகளின் டேஞ்சர் பாய்ஸே அசோஷியேட் அணிகள்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`அசோசியேட் டீம்களோடு ஜெயித்து எக்ஸ்ட்ரா பாயின்ட் பெற்று, அடுத்த சுற்றுக்குப் போகலாம்!' எனக் கனவுகண்ட நாள்கள் எல்லாம் கனவாகவே போய்விட்டன. இப்போது லிமிட்டெட் ஓவர் போட்டிகளின் டேஞ்சர் பாய்ஸே அசோசியேட் அணிகள்தான். முன்பெல்லாம் ஏதாவது ஒரு போட்டியை ஜெயித்து அதிர்ச்சி கொடுப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் இவர்களை எதிர்கொள்ள பெரிய அணிகளே பல கேம் ப்ளான்களோடுதான் களமிறங்குகின்றன. 2011 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி குவித்த 327 ரன்னை சேஸ் செய்தது அயர்லாந்து அணி. அதே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி நேற்று ஒருநாள் போட்டியில் 371 ரன் குவித்து, 8 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அதேபோல டி20 போட்டிகளில் இந்திய அணிக்கே டஃப் கொடுத்த வங்கதேச அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. 

ஐபிஎல்-லின் டாப் ஸ்பின்னர்களான ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் இருவரின் சுழலில் ரன்னைக் குவிக்க முடியாமல் வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறினர். தற்போது இந்தியாவோடு தன் அறிமுக டெஸ்ட்டில் ஆடப்போகும் ஆப்கானிஸ்தான், இந்தச் சுழற்பந்து வீச்சாளர் கூட்டணியைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. இந்திய வீரர்களுக்கு செக் வைப்பார்களா இந்த ஸ்பின் மேஜிக் இரட்டையர்கள்?!

ரஷித் கான்

``ரஷித் கான் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்று எப்போதும் நினைப்பதுண்டு. ஆனால், தற்போது எந்தவிதத் தயக்கமுமின்றி சொல்கிறேன் உலகளவில் டி20 போட்டிகளின் தலைசிறந்த பந்துவீச்சாளர் இவர்தான்" என்று சச்சின் கூறியுள்ளார். ஆம்! சந்தேகமேயின்றி இவர்தான் `நம்பர் 1' டி20 பந்துவீச்சாளர். 

`ஆப்கானிஸ்தானின் அஃப்ரிடி' எனச் செல்லமாக அழைக்கப்படும் ரஷித் கானுக்கு வயது 19. ஆப்கானிஸ்தானின் ஜாலாலாபாத் மாகாணத்தில் வசித்துவந்த ஒரு குடும்பத்தில், பத்து பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தவர் ரஷித் கான். சிறுவயதில் தன் சகோதரர்களோடு கிரிக்கெட் விளையாடிய ரஷித், பாகிஸ்தான் வீரரான அஃப்ரிடியின் பந்துவீச்சு ஸ்டைலைப் பின்பற்றத் தொடங்கினார். 2016-ம் ஆண்டு இங்கிலாந்து லைன்ஸ் அணிக்கு எதிராக தன் முதல் தரப் போட்டியை விளையாடத் தொடங்கினார். முதல் போட்டியிலேயே அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானது. ஆப்கானிஸ்தான் அணியில் இடம் கிடைத்த பிறகு, 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 4 கோடி ரூபாய்க்கு சன்ரைஸர்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். `அதிக விலைக்கு எடுக்கப்பட்ட அசோசியேட் அணி வீரர்' என்ற பெருமையையும் அடைந்தார்.

ஐபிஎல் மட்டுமல்ல பிக் பேஷ் (ஆஸ்திரேலியா), பி.எஸ்.எல் (பாகிஸ்தான்), சி.பி.எல் (மேற்கிந்திய தீவுகள்) என அனைத்து நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளிலும் தன் கொடியை ஏற்றினார் ரஷித் கான். மிட்செல் ஸ்டார்க், ஒருநாள் போட்டிகளில் தன்வசம் வைத்திருந்த அதிவேக 100 விக்கெட்டுகள் (52) என்ற சாதனையை முறியடித்ததும் இந்த அசோசியேட் கிரிக்கெட்டர்தான். 44 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கடந்தார் ரஷித். இது அவருக்கு, ஐசிசி ஒருநாள் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தைப் பெற்றுத் தந்தது. இவர் சிறந்த பெளலர் என்பதைத் தாண்டி மிகச்சிறந்த ஃபீல்டரும்கூட. ரஷித் கானின் உயரத்துக்கு, கோலி ஆன் சைடில் அடித்த அந்த ஃபிலிக் ஷாட்டை ஓடிவந்து ஒற்றைக் கையில் பிடித்ததெல்லாம் வெற லெவல்! ரன் ஆவுட் செய்வதற்கு லாங்கிலிருந்து அவர் வீசும் ஃபர்பெக்ட் த்ரோக்களே இதற்கு சாட்சி. இவர் ஃபீல்டிங்தான் இப்படி எனப் பார்த்தால், கொல்கத்தா அணிக்கு எதிராக இவர் குவித்த ரன்கள் அனைவரையும் மிரளவைத்தன. 10 பந்துகளில் 34 ரன் குவித்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார்.

ஐசிசியின் `அசோசியேட் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்', டி20ல் நம்பர் 1 பந்துவீச்சாளர், சச்சினின் பாராட்டு, சுழற்பந்து நாயகன் ஷேன் வார்னேவின் ட்வீட் என 19 வயதில் இவர் அடைந்திருக்கும் பெருமைகளையெல்லாம் தாண்டி, அசோசியேட் அணியின் வீரரான ரஷித் கானை `இந்தியாவுக்குத் தந்துவிடுங்கள்' எனக்  கேட்கும் அளவுக்கு அவரை விரும்புகிறார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். ``தோனி, கோலி, டி வில்லியர்ஸ் மூவரின் விக்கெட்டை வீழ்த்தியதுதான் எனது மிகச்சிறந்த பந்துவீச்சு" என சிலாகிக்கும் ரஷித் கானின் கூக்ளிக்கு, இன்னும் பல ஸ்பெஷல் விக்கெட்டுகள் காத்திருக்கின்றன.

முஜீப் உர் ரஹ்மான்

``Cricket Is My language'' என்று கூறும் முஜீப்-க்கு ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டுமே தெரியாது. அவருக்குத் தெரிந்தது ஆப்கானிய மொழியான `பாஷ்டோ' மட்டுமே. தன் பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களுடன் கிரிக்கெட்டை மட்டுமே மொழியாகக்கொண்டு 2018-ம் ஆண்டு ஐபிஎல்-லை எதிர்கொண்டுள்ளார் இந்த 17 வயது நம்பிக்கை நட்சத்திரம். ரஷித் கான் என்னும் மிகப்பெரிய சுழல் வீரர் இருக்கும் அணியில் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரும் பேசப்படுகிறார் என்பதே, இவருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய மரியாதை. 

 21-ம் நூற்றாண்டில் பிறந்து, சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் முதல் ஆண் கிரிக்கெட்டர் முஜீப் உர் ரஹ்மான். ஐபிஎல்-லில் விளையாடிய மிகக் குறைந்த வயதுகொண்ட வீரரும் இவர்தான். ``அஜந்தா மெண்டிஸ், அஷ்வின் மற்றும் சுனில் நரைன் ஆகியோரின் வீடியோக்களை யூ டியூபில் பார்த்து சுழற்பந்து வீசக் கற்றுக்கொண்டேன்" என்கிறார் முஜீப். முன்னாள் ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அலி ஜத்ரான் இவரது உறவினர். அவர் நடத்தும் கிரிக்கெட் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து தன் சுழல் திறமையை மேலும் வளர்த்துக்கொண்டார். உள்ளூர் டி20 போட்டிகளில் கலக்கிவந்த முஜீப், 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியை விளையாடினார். முதல் போட்டியிலேயே 10 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றவர் இவர். தொடர்ந்து பிப்ரவரி 16, 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச அளவில் மிகக் குறைந்த வயதில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமைபெற்றார்.

2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே முஜீப் உர் ரஹ்மானை வாங்குவதில் கடும்போட்டி நிலவியது. இறுதியாக 4 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் கே.எல்.ராகுல் எப்படியோ, அதே அளவு பொறுப்பை பந்துவீச்சில் காட்டினார் முஜீப். 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். அவரது எகானமி 6.99. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் முஜீப். அது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஐபிஎல் மட்டுமல்லாது பிபிஎல் (வங்கதேசம்) லீக் போட்டியிலும் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 பிளாஸ்ட் தொடரிலும் தேர்வுசெய்யப்படுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இவர் வீசிய கூக்ளி, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி கணிப்பதற்குள் ஸ்டம்பைத் தட்டியது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் மிகச்சிறந்த பந்துகளுள் மிக முக்கியமானது அது. பந்துவீச்சில் இவர் காட்டும் மாற்றங்கள் முன்னணி பேட்ஸ்மேன்களையே திணறடிக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ரஷித் கானைப்போலவே சர்வதேச கிரிக்கெட்டில் இவருக்கும் ஒரு தனி இடம் உண்டு.

Photo Courtesy : ESPNCricinfo

வங்கதேசத்தை வீழத்திய மகிழ்ச்சியில் இருக்கும் இந்த இரண்டு ஸ்பின் சிங்கங்களும், பெங்களூருவில் வருகிற 14-ம் தேதி நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் முதல்முறையாகக் களமிறங்க உள்ளனர். ஐபிஎல் தொடரில் இவர்களின் விக்கெட் பட்டியலிலிருந்தது எல்லாமே ஸ்பின்னர்களை நன்றாக ஆடத்தெரிந்த தோனி, கோலி, டிவில்லியர்ஸ் போன்றவர்கள்தான். சர்வதேச வீரர்களை நிலை குலையச் செய்த இந்த இருவரும்தான் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் துருப்புச்சீட்டு. இந்திய அணியில் கோலி இல்லை என்றாலும் வலுவான அணியையே ஆப்கானுக்கு எதிரான தொடருக்கு இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது. பெங்களூருவில் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் என ஸ்பின்னர்கள் கொண்ட இந்திய அணியை இரண்டு மேஜிக்கல் பந்துவீச்சாளர்களை வைத்து அணுகுகிறது ஆப்கான். இவர்கள் இந்திய வீரர்களுக்கு செக் வைப்பார்களா, இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் இருவரின் பந்துகளைக் கணித்து விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ரன் சேர்ப்பார்களா? டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கெத்து காட்டும் இந்த இரு ஸ்பின்னர்களும், 5 நாள்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ஜொலிப்பார்களா ? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு