Published:Updated:

அனுபவம்... இளமை... திறமை... தமிழ்த் தலைவாஸ் புதிய டீம் எப்படி இருக்கு?

அனுபவம்... இளமை... திறமை... தமிழ்த் தலைவாஸ் புதிய டீம் எப்படி இருக்கு?
அனுபவம்... இளமை... திறமை... தமிழ்த் தலைவாஸ் புதிய டீம் எப்படி இருக்கு?

அனுபவம்... இளமை... திறமை... தமிழ்த் தலைவாஸ் புதிய டீம் எப்படி இருக்கு?

முதல் சீஸனிலேயே இளம் வீரர்களின் அனல் பறக்கும் ஆட்டத்தால் மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவிட்டது ப்ரோ கபடி லீக். முதல் நான்கு சீஸன்களில் எட்டு அணிகள்கொண்ட தொடராக நடந்தது. ஒவ்வோர் அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடினாலும் தமிழ்நாட்டை மையமாகக்கொண்ட அணி இல்லாதது பெரும்குறையாகவே இருந்தது. அந்தக் குறையைப் போக்கும் பொருட்டு சென்ற சீஸனில் `தொட்டுப்பாரு... நாங்க தாறுமாறு' என, தமிழ்த் தலைவாஸ் உள்பட புதிதாக நான்கு அணிகள் களமிறங்கின.

இந்த வருடத்துக்கான 6-வது ப்ரோ கபடி லீக் வீரர்களுக்கான ஏலம், மும்பையில் இரண்டு நாள்கள் நடந்தன. இதில் தமிழ்த் தலைவாஸ் அணி அனுபவமான முன்னணி வீரர்கள், இளம் புயல்கள் எனச் சிறந்த கலவையோடு புதிய அணியைத் தேர்வுசெய்துள்ளனர். தமிழ்த் தலைவாஸ் அணி கடந்த சீஸனில் ஆடிய மூன்று முக்கிய வீரர்களான ரைடிங் ஹீரோ அஜய் தாகூர், டிஃபண்டர்கள் அமித் ஹூடா அருண் ஆகியோரைத் தக்கவைத்துக்கொண்டது. மூன்று முக்கிய வீரர்களான மஞ்சித் சில்லர், ஜஸ்விர் சிங் மற்றும் சுகேஷ் ஹெக்டே உள்பட 19 பேரை உள்ளடக்கிய  தமிழ்த் தலைவாஸ் அணியில் 9 ரைடர்ஸ், 4 ஆல்ரவுண்டர் மற்றும் 6 டிஃபண்டர்கள் மிரட்ட உள்ளனர்.

அணியின் முக்கிய வீரர்கள் பற்றிய ஓர் அலசல்...

அஜய் தாகூர்

76 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் தக்கவைக்கப்பட்ட சிறந்த ரைடரான இவர், தமிழ்த் தலைவாஸ் அணியின் `பாயின்ட் மெஷின்' என்றே சொல்லலாம். ரைடுகளில் எல்லாம் முக்கியமான புள்ளிகளை எடுத்துவருகிறார். நெருக்கடியான சமயங்களில் அணியை வெற்றி பெறவைப்பதில் வல்லவர். 2016-ம் ஆண்டு ஈரானுக்கு எதிரான உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை, தனி ஒருவனாக 12 புள்ளிகள் எடுத்து வெற்றிபெறவைத்தார். சென்ற ஆண்டு ப்ரோ கபடியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 5 நொடியில் மூன்று புள்ளிகளை எடுத்து வெற்றியை வசமாக்கினார். அஜய் தாகூரின் உடல் வலிமையைவிட அவரின் தவளை உத்தி, பிரத்யேக பலம் வாய்ந்தது. இதுவரை 80 போட்டிகளில் விளையாடி, 529 புள்ளிகளுடன் மூன்றாவது லீடிங் ரைடராக உள்ளார்.

சுகேஷ் ஹெக்டே

இடதுபுற ரைடர்களில் ராகேஷ் குமார், பர்தீப் நர்வால் போல சிறப்பான புள்ளிகளை எடுப்பதில் சுகேஷ் வல்லவர். தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக ஆடும்போது ராகுல் சௌத்ரியின் கோ-பார்ட்னராக இருந்தவர் சுகேஷ். எதிர்பாராத நேரத்தில் டிஃபண்டராகப் பாய்ன்ட் எடுத்துத் தருவார். இதுவரை 67 மேட்ச்களில் 284 புள்ளிகளை எடுத்துள்ளார். அஜய் தாகூரின் அட்டாக்கிங் கேமில் இவரது பங்களிப்பும் வலுசேர்க்கும்விதமாக இருக்கும். இவரது ஏலத்தொகை 28 லட்சம் ரூபாய்.

மஞ்சித் சில்லர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான‌ மஞ்சித் சில்லரின் உடும்புப்பிடியிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதல்ல. ரைட் கவர், கார்னர் என எல்லா பொசிஷன்களிலும் தனி ஆளாக பட்டையைக் கிளப்புவார். இதேபோல் ரைடிலும் toe டச், போனஸ் எடுப்பதில் கெட்டிக்காரர். கடந்த சீஸன்களில் பெங்களூரு புல்ஸ், புனேரி பால்டன்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணிகளுக்கு கேப்டனாக இருந்து பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இதுவரை 74 மேட்சுகளில் 243 டேக்கிள் பாயின்ட்ஸ்களும் 19 ஹைஃபைவ் எடுத்தும் முதல் இடத்தில் உள்ளார். இவரை வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது தமிழ்த் தலைவாஸ்.

சி.அருண்

லெஃப்ட் கார்னர் மற்றும் கவர் பொசிஷன் என எல்லா இடங்களிலும் அருமையாக டிஃபன்ஸ் ஆடக்கூடிய வீரர் அருண். தமிழ்த் தலைவாஸ் அணியில் சென்ற சீஸனில் தனி ஆளாக எதிராளியை மடக்கி நிறைய ஹைஃபைவ் புள்ளிகளை எடுத்து வெற்றி பெறவைத்தார். தமிழக அளவில் சிறந்த இளம் டிஃபண்டராக அறியப்பட்ட அருண், ப்ரோ கபடியிலும் தனக்கே உரிய பாணியில் கலக்கிவருகிறார். சென்ற சீஸனில் சூப்பர் டேக்கிளில் அதிகப் புள்ளிகளை எடுத்துக் கெத்துக்காட்டினார். அவ்வப்போது சக டிஃபண்டர்களைக் கவனிக்காமல் தானாக அவுட் ஆகாமல் இருந்தால் புள்ளிகளை இன்னும் சிறப்பாகக் குவிப்பார். 36 லட்சம் ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டார். 

ஜஸ்வீர் சிங்:

12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜஸ்வீர் சிங், ப்ரோ கபடியின் உசேன் போல்ட். அந்த அளவுக்கு வேகம். எதிராளிகளின் மைண்ட்செட்டைப் புரிந்துகொண்டு செக் அப்'பாக ரைடு செல்லக்கூடியவர். ஜெய்ப்பூர் அணிக்காக தனது ஸ்பைடர் கிக் மூலம் முதல் சீஸனில் சாம்பியன் கோப்பையை வென்றவர். `காலத்தைக் கடத்து... காரியத்தை  நிகழ்த்து' என்பதைபோல், எம்ப்டி ரைடு போய்க்கொண்டே இருப்பார். உண்மையில் கடந்த இரு சீஸன்களில் 50 ரைடுகளுக்குமேல் பாய்ன்ட் எடுக்காமலேயே வந்துள்ளார். இருந்தாலும் `டூ ஆர் டை ரைடு' எனப்படும் இக்கட்டான நிலையில் புள்ளிகளை வேகமாக எடுத்து வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளார். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை சென்ற ஆண்டு பெற்றுள்ளார்.

பிரதாப்

இளங்கன்று பயமறியாது என்பதற்கு, தமிழ்த் தலைவாஸ் அணியின் சிறந்த உதாரணம் இவர். சென்ற சீஸனில் அமித் ஹூடா சில போட்டிகளில் சொதப்பும்போது பிரமாதமாக ஆல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் காட்டினார். பயிற்சியாளர் பாஸ்கரனின் நம்பிக்கையைக் குலைக்காமல் அற்புதமாக கார்னர் பொசிஷனில் விளையாடிய பிரதாப்பை, தமிழ்த் தலைவாஸ் அணி தக்கவைத்துள்ளது. இவருடைய விலை 6 லட்சம் ரூபாய்.

கோபு

8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முன்னணி வீரர்களில் ஒருவரான கோபு, தஞ்சை எதிர்நீச்சல், சன் பேப்பர், ஐ.சி.எஃப்., தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவரை, தமிழ்த் தலைவாஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. ரைட் கார்னர் லெஃப்ட் கார்னர் என இரு பொசிஷன்களிலும் சிறப்பாக டேக்கிள் செய்யக்கூடியவர். அனுபவம் மற்றும் பொறுமை இவரது கூடுதல் பலம் என்பதால், அமித் ஹூடாவுக்குப் பதிலாக ஆடும் செவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இவர் இந்தியக் கபடி அணியின் மூத்த வீரர் சேரலாதன் தர்மராஜின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஹூடா

69 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் தக்கவைக்கப்பட்ட ரைட் கார்னர் டிஃபண்டரான அமித், `ஏங்கில்' எனப்படும் கணுக்கால் பிடியில் வலிமையான வீரர். எதிரணி ரைடர் போனஸ் எடுக்கவிடாமல் தடுப்பதில் அதிக முனைப்புக் காட்டுவார். அவ்வப்போது சிறு சிறு தவறு செய்தாலும், சற்றும் யோசிக்காமல் எதிராளியை மடக்குவதில் திறமையானவர்.

இதேபோல் சென்ற ஆண்டு தமிழ்த் தலைவாஸ் அணியில் ஆடிய தர்ஷன், ரைட் கவரில் விளையாடக்கூடியவர். ஏற்கெனவே அனுபவ ஆல்ரவுண்டர் மஞ்சித் சில்லர் இருப்பதால் இவருக்கு வாய்ப்புக் கிடைப்பது சிரமமே. கொரியாவைச் சேர்ந்த வீரர்களான ஆல்ரவுண்டர் சான் சிக் பார்க் மற்றும் ஜே மின் லீ ஆகியோரை அடிப்படை விலையில் தமிழ்த் தலைவாஸ் அணி எடுத்தது. மற்ற வீரர்களான  அதுல், அனில் குமார், சுர்ஜீத் சிங் ஆகியோருடன் தமிழக அளவில் சிறப்பாக விளையாடியுள்ள‌ அபினந்தன், ஆனந்த், ஜெயசீலன் மற்றும் ஆல்ரவுண்டர் விமல்ராஜும் தமிழ்த் தலைவாஸ் சார்பில் கலக்கக் காத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு