Published:Updated:

மரண அடி மாஸ்டர்... சி.எஸ்.கே ஏன் சிங்கம்..? இதான் பதில்! #CSKvsSRH

மரண அடி மாஸ்டர்... சி.எஸ்.கே ஏன் சிங்கம்..? இதான் பதில்! #CSKvsSRH
மரண அடி மாஸ்டர்... சி.எஸ்.கே ஏன் சிங்கம்..? இதான் பதில்! #CSKvsSRH

'கம்பேக்னா இப்படி இருக்கணும்' எனக் கெத்தாக விளையாடிக்காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 மாதங்களுக்கு முன்னால், `முன்னாள்' ஐபிஎல் அணியாக இருந்த சிஎஸ்கே., இப்போது சாம்பியன். திக்கித்திணறி கடைசி ஓவரில் வெற்றி பெற்று தொடரைத் தொடங்கியவர்கள், கொஞ்சம்கூட சன்ரைஸர்ஸுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஃபைனலில் வென்றுவிட்டனர். சதம் அடித்த வாட்சன் மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. எங்கிடி, சஹார் ஆகியோரின் பந்துவீச்சு, ரெய்னாவின் கூல் கேமியோ ஆகியவையும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணங்கள். நல்ல நிலையில் இருந்த சன்ரைஸர்ஸ் ஆட்டத்தைத் தவறவிட்டது எங்கே... சென்னையின் கைகள் ஓங்கியது எப்படி? #CSKvsSRH

பவர்பிளே : சன்ரைஸர்ஸ் = 42, சி.எஸ்.கே = 35. ஆனால்..!

சென்னை டாஸ் வென்று பௌலிங் தேர்வுசெய்ய, தவான் - கோஸ்வாமி ஜோடி நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கியது. நோ பாலோடு ஆட்டத்தைத் தொடங்கினாலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார் தீபக் சஹார். முதல் ஓவரில் 6 ரன். இரண்டாவது ஓவரில் தேவையில்லாமல் இரண்டாவது ரன்னுக்கு அசைப்பட்டு ரன் அவுட்டானார் கோஸ்வாமி. தவானுடன் வில்லியம்ஸன் ஜோடி சேர, சீராக ரன்ரேட் உயர்ந்தது. ஒவ்வொரு போட்டியிலும் தன் பந்துவீச்சில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காட்டுகிறார் எங்கிடி. நான்காவது ஓவரில் வில்லியம்ஸனை அவர் திணறவைக்க 6 பந்துகளும் டாட். மெயிடன்! 4 ஓவர் முடிவில் சன்ரைஸர்ஸ் 17/1. மிகவும் மோசமாக இருந்த சன்ரைஸர்ஸ் ரன்ரேட் அடுத்த இரண்டு ஓவர்களில் உயர்ந்தது. சஹார் ஓவரில் வில்லியம்ஸன் ஒரு பௌண்டரி ஒரு சிக்ஸர் அடிக்க, ஷர்துல் தாக்கூர் ஓவரில் தவான் லாங் ஆன் திசையில் அட்டகாசமாக ஒரு சிக்ஸர் அடித்தார். பவர்பிளே முடிந்தபோது அணியின் ஸ்கோர் 42/1. ரன்ரேட் : 7.00. 

சன்ரைஸர்ஸ் அணியைப் பொறுத்தவரை, இது அவர்களுக்கு நல்ல தொடக்கம்தான். மிடில் ஆர்டர் சுமாராக இருக்கும் நிலையில், அதிகம் விக்கெட்டுகளை இழக்கக் கூடாது என்பதே அவர்களுக்கு முக்கியத் தேவை. ஆனால், சூப்பர் கிங்ஸ், பவர்பிளேவை அவர்களைவிடவும் மெதுவாகத் தொடங்கியது. முதல் ஓவரிலேயே வாட்சனை அலறவிட்டார் புவி. இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என அவர் வேரியேஷன்கள் காட்ட, மெயிடனோடு தொடங்கியது சி.எஸ்.கே இன்னிங்ஸ். சந்தீப் ஷர்மா வீசிய இரண்டாவது ஓவரில் 5 ரன். புவி... மீண்டும் மிரட்டுகிறார். தீபக் ஹூடா ஓவர்த்ரோ செய்ய, ஒரு பந்தில் 5 ரன். மற்ற ஐந்துமே டாட் பால்கள். சந்தித்த முதல் 10 பந்துகளையுமே டாட் பாலாக்கினார் வாட்டோ. சந்தீப் ஓவரில் புயல் வேக ஸ்ட்ரெய்ட் டிரைவால் பௌண்டரி அடித்து ரன் விரதத்தை 11-வது பந்தில் கலைத்துக்கொண்டார். ஆனால், அந்த ஓவரிலேயே கேட்ச்சாகி வெளியேறினார் குவாலிஃபயர் நாயகன் டுப்ளெஸ்ஸி. 

ஐந்தாவது ஓவர்... முதல் தவறைச் செய்தார் வில்லியம்ஸன். விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புவனேஷ்வர் குமாருக்கு 3-வது ஓவர் கொடுத்தார். அவரது ஓவரை மிகவும் கவனமாகவே எதிர்கொண்ட சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள், அந்த ஓவரிலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அடுத்த ஓவர் மீண்டும் சந்தீப் கையில். அதுவரை அமைதியாக இருந்த வாட்சன், அந்த ஓவரில் மிட்விக்கெட் ஏரியாவில் ஒரு சிக்ஸரும், மிட் ஆஃப் திசையில் ஒரு பௌண்டரியும் அடிக்க, பவர்பிளேவில் 35 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. சன்ரைஸர்ஸ் ஸ்கோரை ஒப்பிடும்போது 7 ரன் குறைவு. ஆனால், புவியின் 3 ஓவர்கள் முடிந்துவிட்டன. ரஷீத் கானின் 4 ஓவர்கள் போக, இனி அவர்கள் கவனமாக ஆடவேண்டியது அந்த ஒரு ஓவர் மட்டும்தான். ஆக, மீதமிருக்கும் 14 ஓவர்களில் 9 ஓவர்களை டார்கெட் செய்யலாம் என்ற சாதகமான நிலை சென்னைக்கு!

டெத் ஓவர்கள் : ஆசம் எங்கிடி... சொதப்பல் பிராத்வெய்ட்!

என்ன... பிராத்வெய்ட் சொதப்பினாரா?! 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த வீரர் எப்படி சொதப்பியவராக முடியும்? நிச்சயம் ஆக முடியும். 3 சிக்ஸர்களிலேயே 18 ரன். மற்ற 8 பந்துகளிலும் சேர்த்து அவர் எடுத்தது 3 ரன்தான். `அடிச்சா சிக்ஸர்தான்' என அவர் சுற்றிக்கொண்டே இருக்க, 19 ஓவரில் மட்டும் 3 பந்துகளை டாட் பாலாக்கினார் பிராத்வெய்ட். விளைவு அந்த ஓவரில் வெறும் 8 ரன். எங்கிடி, பிராவோவின் `டெத் பௌலர்' ரோலைத் தனதாக்கிக்கொண்டு மிகச் சிறப்பாக பந்துவீசினார். பிராவோ போல ஸ்லோ பால்கள் மட்டுமே போடாமல், லைன் லென்த் என அனைத்து ஏரியாவிலும் பெர்ஃபெக்‌ஷன் காட்டினார். அவர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முடியாதபோது, குறைந்தபட்சம் சிங்கிள் ஆடி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்திருக்கலாம். நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்றிருந்த யூசுஃப் பதான் சிலபல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார். அவருக்கும் ஸ்ட்ரைக் கொடுக்காமல், குறைந்தபட்சம் 10 ரன்னையாவது குறைத்துவிட்டிருப்பார் பிராத்வெய்ட். 

அந்த ஓவரில் ரன் போயிருந்தால், 20-வது ஓவரை ஷர்துல் வீசியபோது அவருக்கு நெருக்கடி இருந்திருக்கும். அவரும் கூலாக பந்துவீச, கடைசி ஓவரில் வெறும் பத்தே ரன். 178 ரன்னோடு முடிவுக்கு வந்தது சன்ரைஸர்ஸ் இன்னிங்ஸ். பிராவோ வீசிய 18-வது ஓவர் தவிர்த்து மற்ற 4 ஓவர்களிலும் 10 ரன்னைத் தாண்டவில்லை. கடைசி 5 ஓவர்களில் அவர்கள் அடித்தது வெறும் 52 ரன். முதல் 6 ஓவர்களுக்கு 42 என்பது ஓகே ஸ்கோர்தான். ஆனால், கடைசி 5 ஓவர்களில் 52 என்பது மோசமான ஸ்கோர். சன்ரைஸர்ஸ் இந்த ஆட்டத்தில் சறுக்கிய இடம் இதுதான். அப்போ சென்னை டெத் ஓவர்களில் எப்படி பேட்டிங் செய்தது? 16-வது ஓவர் தொடங்கும்போதெல்லாம் வான்கடே மைதானம் மஞ்சளாகவே மாறியிருந்தது. 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி. கையில் 8 விக்கெட்டுகள். எப்படி பேட்டிங் செய்தால் என்ன? ஆட்டம் அதற்கு முன் மிடில் ஓவர்களிலேயே முடிந்துவிட்டது. அப்போதே சிஎஸ்கே வெற்றியை சாத்தியமாக்கிவிட்டார் வாட்சன்.

மிடில் ஓவர்கள்: பேட்டிங்கில் அசத்தி பௌலிங்கில் சொதப்பிய வில்லி அண்ட் கோ. தாண்டவமாடிய வாட்டோ!

பவர்பிளேவிலும் டெத் ஓவர்களிலும் ஓர் அணியால் ரன் குவித்துவிட முடியும். ஆனால், அந்த அணியின் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பது, மிடில் ஓவர்கள்தான். விக்கெட்டும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், ரன்ரேட்டும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பௌண்டரிகளும் அடிக்க வேண்டும், ஸ்ட்ரைக் ரொடேட் செய்தும் ஆடவேண்டும். 7 முதல் 15 ஓவர்கள் வரை இந்த நெருக்கடிகள் அனைத்தையும் சமாளித்து ஆட வேண்டும். அதிக ரன் வரும் பவர்பிளேவிலும் டெத் ஓவர்களிலும் சுமாராக விளையாடிய சன்ரைஸர்ஸ், மிடில் ஓவர்களில் நேர் எதிராக விளையாடியது. பவர்பிளேவின் கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடத் தொடங்கியிருந்த வில்லியம்ஸன் ரன்வேகத்தை மேலும் உயர்த்தினார். ஜடேஜா பந்துவீச்சில் தவான் (26 ரன்கள்) போல்டாக, அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடினார். கரண் ஷர்மாவின் லெக் பிரேக்கில் சன்ரைஸர்ஸ் கேப்டன் ஸ்டம்பிங் ஆகி 47 ரன்களில் வெளியேறினார். 

வழக்கமாக ஏனோதானோ என ஆடும் யூசுப் பதான், இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக ஆடினார். அதிகமாக பந்துகளை வீணடிக்காமல் சிங்கிள்கள் அடிப்பதிலும் கவனம் செலுத்தினார். மோசமான பந்துகளை மின்னல் வேகத்தில் பௌண்டரியை நோக்கி அனுப்பினார். அதனால் ரன்ரேட் சீராக 8-8.50 சுற்றி நகர்ந்துகொண்டிருந்தது. 7 முதல் 15 வரை, அந்த 9 ஓவர்களில் சன்ரைஸர்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்தது. மிடில் ஓவர்களில் அவர்களின் ரன்ரேட் 9.33. டி-20 போட்டிகளைப் பொறுத்தவரை, இது மிகவும் சிறப்பான செயல்பாடு. ஆனால், அந்தச் சிறப்பான செயல்பாட்டை பந்துவீச்சில் செய்யத் தவறியதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது சன்ரைஸர்ஸ் அணி. சிஎஸ்கே-வின் மிடில் ஓவர்களில் சன்ரைஸர்ஸ் பௌலர்கள் கொடுத்த ரன் 111. ரன்ரேட் 12.33 ! அதாவது மிடில் ஓவர்களில் மட்டும் 27 ரன் அதிகம் கொடுத்துள்ளது அந்த அணி. அந்த 27 ரன்கள் சந்தீப் ஷர்மா வீசிய ஒரே ஓவரில் கிடைத்தவை. ஆம், ஒரே ஓவரில் 27 ரன்! காரணம், ஷேன் வாட்சன்!

முதல் பத்து பந்துகளில் ரன்னே இல்லை. அடுத்த 47 பந்துகளில் (@248.94) 117 ரன் குவித்து தனி ஆளாக ஆட்டத்தை சன்ரைஸர்ஸ் பக்கமிருந்து கடத்திச்சென்றுவிட்டார். தொடக்கத்தில் வாட்சன் தடுமாறிக்கொண்டிந்தபோது, சித்தார்த் கௌல் கையில் பந்தைக் கொடுத்தார் வில்லி. இந்திய அணிக்குத் தேர்வாகும் முன் நன்றாக பந்துவீசிக்கொண்டிருந்தவர், அதன் பிறகு தொடர்ந்து ரன்னை வாரிவழங்கிக்கொண்டிருந்தார். ஃபைனல் என்ற நினைப்பு கொஞ்சமும் இல்லாமல் இந்தப் போட்டியிலும் அதைத் தொடர்ந்தார். தொடர்ந்து லெக் ஸ்டம்ப் லைனிலேயே வீசிக்கொண்டிருக்க, ரெய்னா பௌண்டரிகளாக விளாசினார். ரெய்னா ஒருபுறம் அடித்து ஆட, நெருக்கடி குறைந்த வாட்சன் `பீஸ்ட்' மோடுக்கு மாறினார். வான்கடேவின் ஒவ்வொரு ஸ்டேண்டுக்கும் பந்துகளை அனுப்பிக்கொண்டிருந்தார். கௌல் வீசிய இரண்டு ஓவர்களில் 32 ரன்கள், ஷகிப்பின் ஓவரில் 15 ரன்கள், சந்தீப் வீசிய 13 ஓவரில் 27 என ஒவ்வொரு ஓவரிலும் இரட்டை இலக்க ஸ்கோர்களை அடித்துக்கொண்டிருந்தார் வாட்சன். 

ஒரு கட்டத்தில் கொஞ்சம் ஓட சிரமப்பட்டதால், `நோ ரன்னிங்... ஒன்லி ஹிட்டிங்' என அனைத்துப் பௌலர்களையும் விரட்டி விரட்டி வெளுத்தார். ரஷீத் கான் வந்தபோதும் சிங்கிள்களைத் தாண்டி பேராசைப்படவில்லை. பவர்பிளே முடிவில் கொண்டிருந்த அதே ப்ளான்தான்... புவி, ரஷீத் ஓவரில் விக்கெட் விழக் கூடாது... திட்டமிட்டதுபோலவே அந்த 8 ஓவர்களில் (41 ரன்கள்) விக்கெட்டே விழவில்லை. அவர்களுக்கும் சேர்த்து சந்தீப், கௌல், ஷகீப் ஆகியோர் ரன்களை வாரி வழங்க, 13-வது ஓவரிலேயே ஆட்டத்தில் தன் பிடியை இழந்துவிட்டது சன்ரைஸர்ஸ். அதைத் துண்டித்தவர் 36 வயது சீனியர் கிங் வாட்சன்!

'டீம் முழுக்க சீனியர் சிட்டிசன்கள்' என்று விமர்சனம் செய்யப்பட்ட சிஎஸ்கே., `We are born Champions' என்பதை நிரூபித்துள்ளது. 9 ஆண்டுகளில், 7 ஃபைனல்கள், 3 கோப்பைகள் என அசைக்க முடியாத அணியாக, ஐபிஎல் தொடரின் அடையாளமாக விளங்குகிறது!

கம்பேக்னா இப்படி இருக்கணும்!