Published:Updated:

கம் பேக்னா இப்படி இருக்கணும்... ஐபிஎல் சீஸனை அழகாக்கிய CSK! #IPL2018

கம் பேக்னா இப்படி இருக்கணும்... ஐபிஎல் சீஸனை அழகாக்கிய CSK! #IPL2018
கம் பேக்னா இப்படி இருக்கணும்... ஐபிஎல் சீஸனை அழகாக்கிய CSK! #IPL2018

தோ... ஒரே இன்னிங்ஸில் இரண்டாண்டுக் கால இடைவெளிக்கும் சேர்த்து விருந்துவைத்துவிட்டார், ஷேன் வாட்சன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ரசிகன் மிஸ் பண்ணிய அத்தனை தருணங்களையும் மீண்டும் உருவாக்கிக் கொடுத்துவிட்டது, சென்னை சூப்பர் கிங்க்ஸ். சாரி பாஸ்... சிஎஸ்கே. இந்த சீசனில் சிஎஸ்கே-யின் சின்ன ரீவைண்ட் இது.

சூதாட்டப் புகாரால் விதிக்கப்பட்ட இரண்டாண்டுத் தடை, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த     ஐபிஎல்-க்கே தண்டனையாகத்தான் அமைந்தது. இந்த அணிகளுக்கு மாற்றாக, பிசிசிஐ-யால் உருவாக்கப்பட்ட குஜராத், புனே அணிகளும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த சிஎஸ்கே-வும் சீசனிலேயே இல்லை. இந்த நிலைமை இந்த ஆண்டு மாறப்போகிறது எனத் தெரிந்ததுமே கொண்டாட்டத்திற்குத் தயாராகினர் சென்னை ரசிகர்கள். சேப்பாக்கம் மைதானத்தில் மஞ்சள் ஜெர்சியோடு களமிறங்கி, சிக்சர் அடித்துக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்தார் தோனி. அப்போது பறக்கத்தொடங்கிய மஞ்சள்கொடி, இதோ...இன்று மகுடத்தில் வந்து நிற்கிறது. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்திருக்கிறது சிஎஸ்கே.

இரண்டு ஆண்டுகள் முடிந்து மீண்டும் வீரர்கள் ஏலம்... யாரெல்லாம் சென்னை அணியிலேயே தொடர்வார்கள்? மீண்டும் பழைய சென்னை அணியே அமையுமா... சிஎஸ்கே பழைய ஃபார்முக்குத் திரும்புமா... தோனிதான் கேப்டனா? இப்படி, இன்னும் எக்கச்சக்க கேள்விகள் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்தன. தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவரை மட்டும் ரீட்டெய்ன் செய்துவிட்டு, ஏலத்தை சந்தித்தது சென்னை. ராயுடு, வாட்சன், டு ப்ளேசிஸ், ஹர்பஜன், தாஹிர் என சீனியர் வீரர்களாக சென்னை அணிக்குள் வரவே, 'அங்கிள்ஸ் அணி' எனக் கலாய்த்தனர் ரசிகர்கள். அனுபவம் மிக்க வீரர்கள் அணி என்றது சென்னை. ஏலம் முடிந்ததுமே, வீரர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு மார்க் போடத்தொடங்கினர் விமர்சகர்கள். எந்தப் பட்டியலிலும் சென்னைக்கு முதலிடம் பிடித்ததாக நினைவில்லை. சரி, களம்தானே அதை முடிவுசெய்ய வேண்டும்? முதல் போட்டியில் மும்பையோடு தொடங்கியது இந்த ஆண்டு யுத்தம்.

மும்பைக்கு சாதகமாகத் திரும்பிய அந்தப் போட்டியை அப்படியே சிக்ஸர்களால் சென்னைப் பக்கம் திருப்பினார் பிராவோ. முதல் போட்டி; சீசனின் முதல் வெற்றி. நீண்டநாள் கழித்து சென்னைக்கு கேப்டனாக தோனிக்கும், அந்த எனர்ஜியை சீசன் முழுவதும் குறையாமலே பார்த்துக்கொண்டது சென்னை. மற்ற அணிகளில் எல்லாம் கெயில், கே.எல்.ராகுல், பண்ட் , நரைன், டிவில்லியர்ஸ் என வீரர்கள் தனித்தனியாக ஜொலிக்க, சென்னையோ... எல்லா வீரர்களையும் விஸ்வரூபம் எடுக்கவைத்தது. மும்பையுடன் பிராவோ, கொல்கத்தாவுடன் பில்லிங்க்ஸ், பஞ்சாப் மற்றும் ஆர்.சி.பி-யுடன் தோனி, ராஜஸ்தானுடன் வாட்சன், ஹைதராபாத்துடன் ராயுடு, ப்ளேஆப்பில் டு ப்ளேசிஸ், பஞ்சாப்புடன் கடைசி போட்டியில் இங்கிடி, முக்கியமான கட்டத்தில் சஹார் மற்றும் தாக்கூர் என அணியின் எல்லா வீரர்களுமே ஜொலித்தனர். 140, 180 என எந்த ஸ்கோராக இருந்தாலும் கடைசி ஓவர் வரை சென்று சேஸ்செய்து, பிபி ஏறவைத்து அழகுபார்த்தது, யெல்லோ ஆர்மி. சீசனில் விளையாடிய எல்லா அணிகளையும் அசத்தல் பந்துவீச்சின்மூலம் ஆட்டம் காணவைத்த ஹைதராபாத் அணி, ஏனோ சென்னையை ஃபைனல் வரையிலுமே வெல்ல முடியவில்லை. லீக் முதல் ஃபைனல் வரைக்குமான நான்கு போட்டியிலுமே தோனி Vs வில்லியம்சன் போரில், தோனிக்கேதான் மீண்டும் மீண்டும் வெற்றி. 

நகம்கடிக்க வைத்த திரில்லர் மேட்ச், வெறித்தனமான இரண்டு தோனியின் ஃபினிஷிங் இன்னிங்க்ஸ்கள், பேட்ஸ்மேன்களின் வாணவேடிக்கை, ஹர்பஜன் மற்றும் தாஹிரின் தீந்தமிழ் ட்வீட்கள். இறுதியாக, சிஎஸ்கே-வுடன் மோதுவதுதான் ஐபிஎல் ஃபைனல் என்ற எழுதப்படாத இலக்கணம் என இந்த சீசன் முழுக்கவே முழு என்டர்டெய்ன் தந்தது சிஎஸ்கே. 

சிஎஸ்கே-வைக் கொண்டாட தோனிதான் முதல் காரணம். ஆனால், தோனி மட்டுமே முழுக் காரணம் கிடையாது. இவை எல்லாமும்தான்! சரிதானே?