Published:Updated:

ஸ்பின்னர்ஸ் vs ஸ்பின்னர்ஸ்... சென்னையுடன் ஃபைனல் விளையாடப் போவது யார்?! #SRHvKKR

ஸ்பின்னர்ஸ் vs ஸ்பின்னர்ஸ்... சென்னையுடன் ஃபைனல் விளையாடப் போவது யார்?! #SRHvKKR
News
ஸ்பின்னர்ஸ் vs ஸ்பின்னர்ஸ்... சென்னையுடன் ஃபைனல் விளையாடப் போவது யார்?! #SRHvKKR

ஸ்பின்னர்ஸ் vs ஸ்பின்னர்ஸ்... சென்னையுடன் ஃபைனல் விளையாடப் போவது யார்?! #SRHvKKR

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளப் போவது யார் என்பதை முடிவு செய்யும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கவுள்ளது. முதல் குவாலிஃபையரில் சென்னையிடம் வீழ்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஹோம் டீம் கொல்கத்தா நைட்ரைடர்ஸை எதிர்கொள்ளவிருக்கிறது. #SRHvKKR

இதற்கு முன்பு ஈடன் கார்டனில் நடந்த எலிமினேட்டரில் ஸ்பின்னர்கள் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார்கள். பழைய ஈடன் ஆடுகளத்தைப் போல், அந்தப் போட்டியின்போது ஆடுகளம் சுழலுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இரண்டு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்கள் நிரம்பியுள்ள நிலையில், இந்தப் போட்டி இரு பௌலிங் யூனிட்டுகளுக்கும் இடையிலான யுத்தமாகவே இருக்கும். 

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்திருந்தபோதும், சுழற்பந்துவீச்சாளர்களின் 11 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் ஈஷ் சோதியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நைட்ரைடர்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். சன்ரைசர்ஸ் அணியில் ரஷீத் கான், ஷகிப் அல் ஹசன் என இரண்டு உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருப்பதால், கொல்கத்தாவின் பேட்டிங் ஆர்டரை ஒருகை பார்க்கலாம். ஓப்பனர் கிறிஸ் லின் சுழலில் திணறக்கூடியவர் என்பதால், ஷகிப்பை வில்லியம்சன் பவர்பிளேவின்போதே பயன்படுத்துவார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுழலுக்கு ஒத்துழைப்பு தராத மைதானங்களிலேயே ரஷீத் வித்தை காட்டுவார். ஆடுகளம் கடந்த போட்டியைப் போல் இருந்தால், அந்த ஆஃப்கன் வீரரைக் கட்டுப்படுத்துவது கடினம். அதேபோல் கொல்கத்தாவின் சுழல் கூட்டணியும் கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க பயங்கர உக்கிரமாக மாறிக்கொண்டிருக்கிறது. சுனில் நரைன் கூட சற்று ஓய்ந்துவிட்டார், ஆனால், குல்தீப் - பியூஷ் சாவ்லா கூட்டணி மிரட்டல் ஃபார்மில் இருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளாகவே குல்தீப் அசத்திக்கொண்டிருக்கிறார். அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் திணறுவது கண்கூடாகத் தெரிகிறது. கடந்த போட்டியில் ராஜஸ்தான் ஓப்பனர்களால் டார்கெட் செய்யப்பட்ட நரைன் எப்படியும் இன்று மீண்டுவர முயற்சி செய்வார். ஷிகர் தவான், கோஸ்வாமி என இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், பவர்பிளேவில் நித்திஷ் ராணாவும் ஓரிரு ஓவர்கள் சுழலில் மிரட்டக்கூடும்.

பேட்டிங்கில் ஷிகர் தவான் எப்போது அடிப்பார், எப்போது சொதப்புவார் என்று அவருக்கே தெரிவதில்லை. மனீஷ் பாண்டே, யுசுஃப் பதான் இருவரும் 10 போட்டிக்கு ஒரு போட்டி வீதம்தான் அடிப்பார்கள் போல. மொத்த பேட்டிங் யூனிட்டின் பாரத்தையும் கேப்டன் வில்லியம்சன் ஒருவரே சுமக்கவேண்டியுள்ளது. அவர் அடித்தால் ரன் வரும்... இல்லையேல் இல்லை. சென்னையுடனான போட்டியில் ஒரு ஷார்ட் பாலில் ஆடிய தவறான ஷாட் அவர் விக்கெட்டைக் காவு வாங்கியது. கொல்கத்தாவின் அபாயகரமான சுழல் கூட்டணியை எதிர்த்து விளையாடும்போது எந்தத் தவறும் செய்யாமல் இருப்பது அவசியம்.  

ஹைதராபாத்தைவிட கொல்கத்தா அணி கொஞ்சம் பலமாகக் காணப்படுகிறது. தினேஷ் கார்த்திக் தவிர யாரும் கன்சிஸ்டெட்டாக விளையாடவில்லை என்றாலும், ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் ஆடிவிடுகிறார்கள். பவர்பிளேவில் நரைன் 200-க்கும் மேலான ஸ்ட்ரைக் ரேட்டில் 20-25 ரன்கள் எடுத்தாலும் அது அவர்களுக்கு லாபம்தான். அவர் அடிக்கத் தவறினால் கிறிஸ் லின் எப்படியேனும் தேறிவிடுகிறார். ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடிய உத்தப்பா, பெரிய ஆட்டங்களில் சோபிப்பார் என்று எதிர்பார்க்கலாம். 19 வயது சுப்மான் கில், அவரால் முடிந்த மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். எல்லோரும் சோபிக்கத் தவறினால் ரஸ்ஸல் வந்து பொளந்துவிடுகிறார். நித்திஷ் ராணா மட்டும் இன்னும் தன்மீதான எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவில்லை. 

இரண்டு அணிகளின் பந்துவீச்சும் இந்த ஆடுகளத்தில் எடுபடும் என்பதால், அதிக ரன்களை இந்தப் போட்டியில் எதிர்பார்க்க முடியாது. முதலில் பேட்டிங் செய்து 160 ரன்களைக் கடந்துவிட்டாலே வெற்றி பெறுவது எளிதாகிவிடும்.