சூப்பர் ஹீரோக்கள் படத்தின் க்ளைமேக்ஸை போல பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது ஐபிஎல்! இனி வரும் ஒவ்வொரு மேட்ச்சுமே முக்கியம் என்ற நிலையில் யாருக்கும் பங்கமில்லை என்ற முன்முடிவோடு ஒரு மேட்ச் நடந்து முடிந்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லிக்கும் ஏற்கெனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிபடுத்திவிட்ட சென்னைக்குமான சம்பிரதாய மேட்ச் அது! #DDvCSK
டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி வழக்கம் போல பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் எதிர்பார்த்தபடியே வில்லிக்கு பதில் எங்கிடி நுழைந்தார். டெல்லி அணியில் இரண்டு மாற்றங்கள். ஜேசன் ராய்க்கு பதில் மேக்ஸ்வெல், டாலாவுக்கு பதில் அவேஷ்! சர்ப்ரைஸாக அணியில் மேக்ஸ்வெல், போல்ட், லாமிசேன் என மூன்றே வெளிநாட்டு வீரர்கள்தான். இழக்க ஒன்றுமில்லை என்பதால் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கலாம். மொத்த ஐ.பி.எல்லில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு குறைவாகக் கொண்டு ஒரு அணி களமிறங்குவது இது 14-வது தடவை.
ப்ரித்வி ஷாவும் கேப்டன் ஸ்ரேயாஸும் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலேயே இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என மிதக்கவிட்டார் சஹார். இதனால் கொஞ்சம் திணறித்தான் போனார் ஷா. ஓவர் முடிவில் ஐந்து ரன்கள்தான். எங்கிடியும் அதேபோல் தெறிக்கவிட ரன் எடுக்கவே சிரமப்பட்டனர் டெல்லி ஓபனர்கள். தட்டுத் தடுமாறி ரன் சேர்த்த ஷாவும் ஒருகட்டத்தில் சஹார் பந்தில் அவுட்டாக, நாளைய நம்பிக்கை நட்சத்திரமான ரிஷப் பன்ட் களமிறங்கினார்.
கேப்டன் தடுமாறுவதைப் பார்த்த பன்ட் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் பொறுப்பை கையிலெடுத்துக்கொண்டார். ஹர்பஜன் வீசிய 10-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 17 ரன்கள். மறுபக்கம், 'இந்தா அடிச்சுக்க' என ஏனோதானோவென வரும் பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டினார் ஸ்ரேயாஸ். ஆனால் ரன்னிங்கில் இருவருமே இந்த தடவை உஷாராகவே இருந்தார்கள். பழசெல்லாம் கண்ணு முன்னால வந்து போகுமா இல்லையா?
பத்து ஓவர்கள் முடிவில் 77 ரன்கள். அதில் கேப்டனின் பங்கு வெறும் 19 ரன்கள்தான். 'பத்து ஓவர் முடிஞ்சுட்டா எனக்கு பசிக்கும். நான் போறேன்' என எங்கிடி பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்துவிட்டு வெளியேறினார் ஸ்ரேயாஸ். 'பன்ட் இருக்க பயமேன்' என தைரியமாக இருந்தார்கள் டெல்லி ரசிகர்கள். 'பனில ஆடுனா காய்ச்சல் வரும் பன்ட்' என அதே ஓவரில் அவரையும் பெவிலியன் அனுப்பினார் எங்கிடி. தடுமாறத் தொடங்கியது டெல்லி.
சும்மாவே தடுமாறிக்கொண்டிருந்த பேட்ஸ்மேன்களை மேலும் அலறவிட்டார் ஜடேஜா. சுழன்று சுழன்று வந்த பந்துகளை கணிக்கவே சிரமப்பட்டார்கள் டெல்லி வீரர்கள். இதில் பொறுப்பாக ஆடவேண்டிய மேக்ஸ்வெல் வேறு, 'நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்' என ஜடேஜா பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முற்பட, பந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ஜட்டு பாய் நான்கு ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் எடுத்து 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.
இப்போது எல்லாருடைய கவனமும் சென்ற மேட்ச்சில் அடித்து வெளுத்த அபிஷேக் சர்மா மீதுதான். ஆனால் பிரஷர் தாங்கமுடியாமல் தாக்கூரின் பவுன்ஸரில் பஜ்ஜியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அபிஷேக். 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள். இதற்குள் ஒன்பது பவுலிங் சேஞ்ச்களை நிகழ்த்தியிருந்தார் மேஜிக்கல் கேப்டன் தோனி. அதுதான் ரன்ரேட்டை குறைவாகவே வைத்திருந்தது. அது எல்லாவற்றையும் ஒரே ஓவரில் காலி செய்தார் பிராவோ! 19 ஓவர்கள் முடிவில் 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி அணி. கடைசி ஓவர் வீச தோனிக்கு மூன்று ஆப்ஷன்கள் இருந்தன. சஹார் மூன்று ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். பிராவோ 3 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்திருந்தார். எங்கிடி 3 ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
இந்தத் தொடரில் பிராவோவின் டெப்த் பவுலிங் அவ்வளவாக எடுபடவில்லை. ஆனாலும் பிராவோவிற்கு வாய்ப்பளித்தார் தோனி. விளைவு, கடைசி ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸ்கள். 26 ரன்கள் மொத்தம். ஸ்கோர் சட்டென 162 ரன்களுக்கு சென்றுவிட்டது. பாவம் பிராவோவைப் பார்க்க, 'அவர் ஒருகாலத்துல பெரிய ரவுடிடா, இப்பத்தான் இப்படி ஆயிட்டாரு' என மெட்ராஸ் பட வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது. அதிரடியாக ஆடிய ஹர்ஷல் படேல் 16 பந்துகளில் 36 ரன்கள் வெளுத்தார். அதில் நான்கு சிக்ஸர்கள் அடக்கம்.
163 ரன்கள் இலக்கை முன்வைத்து இறங்கினார்கள் வெள்ளைக்கார வாட்டோவும் பாகுபலி ராயுடுவும். டெல்லியின் ஆஸ்தான பவுலரான போல்ட் முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரில் லாமிசேன் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதே ரீதியில் ஐந்து ஓவர்கள் முடிவில் 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை. ஆறாவது ஓவரில் அவேஷ் கானை குறிவைத்தார் ராயுடு. மூன்று சிக்ஸ், ஒரு பவுண்டரி என ஸ்கோரை படபடவென உயர்த்தினார். ஆறு ஓவர்கள் முடிவில் 44 ரன்கள்.
அடுத்த ஓவரில் மிஸ்ராவின் சுழல் வித்தையில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார் வாட்சன். அடுத்துக் களமிறங்கிய ரெய்னா க்ரீஸில் தடுமாற ராயுடு விறுவிறுவென ரன்களை சேர்த்தார். 28 பந்துகளில் அரைசதம் அடித்தவர் அடுத்த பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். அதோடு சென்னையின் ரன்ரேட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தனமாகத் தொடங்கியது. ரெய்னாவும் சரி, தோனியும் சரி ஸ்ட்ரைக் ரேட்டை மெயின்டைன் செய்ய நிறையத் தடுமாறினார்கள்.
அவர்கள் தடுமாறுவது போதாதென லாமிசேனும் தன் பங்கிற்கு பேட்ஸ்மேன்களை சோதித்தார். அவர் வீசிய நான்காவது ஓவரில் ஜடேஜா அடித்த ஒரு சிக்ஸ் மட்டும்தான். மற்றபடி எல்லாமே டாட் பால்களும் சிங்கிள்களும்தான். நான்கு ஓவர்கள் முடிவில் ரெய்னாவின் விக்கெட்டையும் வாங்கி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மிஸ்ரா மறுபுறம் மிரட்ட மிடில் ஓவர்கள் முழுவதும் மேட்ச் ஸ்பின்னர்கள் கன்ட்ரோலில்தான் இருந்தது.
கடைசி நான்கு ஓவர்களில் 58 ரன்கள் தேவை. ஆனால் ஹர்ஷல் படேலின் அபார பவுலிங்கில் சென்னை பேட்ஸ்மேன்கள் எடுக்க முடிந்தது வெறும் 3 ரன்கள்தான். அதற்கடுத்த ஓவரில் ஐந்து ரன்கள். தோனியும் ஆட்டமிழந்தார். அதோடு மேட்ச்சும் கையைவிட்டுச் சென்றுவிட்டது. சம்பிரதாயமாக வீசப்பட்ட கடைசி இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் வர, 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இளைஞர் பட்டாளம் இந்த வெற்றியின் மூலம் லிட்டர்கணக்கில் பூஸ்ட் குடித்திருக்கும்.
சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த மேட்ச்சில் வெற்றி பெற்றிருந்தால் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை உறுதி செய்திருக்கும். ஆனால் ஏனோ தொடக்கம் முதலே அசால்ட் ஆட்டிட்யூடில் இருந்தது போலவே தெரிந்தது. இரண்டாம் பாதியில் ஸ்லோவாக மாறக்கூடிய பிட்ச்சில் தோனி ஏன் செகண்ட் பேட்டிங் தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை. எங்கிடி, சஹார் ஆகியோரை விட்டுவிட்டு ஏன் பிராவோவிற்கு கடைசி ஓவரைக் கொடுத்தார் எனவும் தெரியவில்லை. சேஸிங்கிலும் ஸ்லோவாகவே ஆடினார்கள் சென்னை பேட்ஸ்மேன்கள். ப்ளே ஆஃப்பிற்கு முந்தைய டெஸ்டிங் க்ரவுண்டாக ஒருவேளை கேப்டன் கூல் இந்த மேட்ச்சை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் பலன் என்னவென்று அடுத்த வாரம்தான் தெரியும்.