இந்த சீசனின் சிறந்த பௌலிங் யூனிட்டான சன்ரைசர்ஸை நாராகக் கிழித்துத் தொங்கவிட்டு, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். முதலில் பேட்டிங் செய்த 4 போட்டிகளிலும் எதிரணிகளை சுருட்டி, அசத்தலாக வென்றிருந்தது ஹைதராபாத் அணி. ஆனால், வாட்சன் - ராயுடு இணையின் அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் கதிகலங்க, அவர்களின் 'டிஃபண்டிங் ரெக்கார்ட்' நேற்று புனேவை மையம் கொண்டிருந்த மேகங்கள் போல் கலைந்துபோனது. #CSKvSRH
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த தோனி, 5 கோடிக்கு எடுத்தும் பெரிய அளவில் பயன்படுத்தாமலேயே வைத்திருக்கும் கரண் ஷர்மாவுக்குப் பதில் தீபக் சாஹரைக் களமிறக்கினார். முதல் ஓவரின் முதல் பந்தில் மட்டும் ஒரு ரன் கொடுத்த சாஹர், அடுத்த ஐந்து பந்துகளையும் 'டாட் பால்'களாக வீசி அசத்தினார். இதுவரை நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்காததால் ஹேல்ஸ் - தவான் கூட்டணி மிகவும் பொறுமையாகவே ஆட்டத்தை எதிர்கொண்டது. ஆனால், இருவரும் 'ரொடேட்' செய்வதில்கூட கவனம் செலுத்தாததால் ஸ்கோர் மிகவும் மந்தமாக உயர்ந்தது. ஷர்துல் தாக்கூர் ஓவரில், தவான் pad-ல் பந்து பட, தாக்கூர் அப்பீல் செய்தார். இன்சைடு எட்ஜ் போலத் தெரிந்ததால் அம்பயர் அதை நிராகரித்தார். தாக்கூர் அதற்கு ரிவ்யூ வேண்டும் என்று சொல்ல, தோனி அதில் விருப்பம் காட்டவில்லை. ரிவ்யூ எடுக்கப்படவில்லை. ரீப்ளேவில் தவான் அவுட் என்பது தெளிவாகையில், `தோனி எப்படி தப்பான முடிவெடுத்தாரு' என்று அதிர்ந்துபோனார்கள் சென்னை ரசிகர்கள்!
சாஹர் வீசிய இரண்டாவது ஓவரில், பாயின்ட் திசையில் அடிக்க ஆசைப்பட்டு 2 ரன்களில் (9 பந்துகள்) ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அலெக்ஸ் ஹேல்ஸ். கடந்த போட்டியில் டேர்டெவில்ஸைப் பதம் பார்த்த தவான் - வில்லியம்சன் பார்ட்னர்ஷிப் மீண்டும் இணைந்தது. ஆனால், இப்போதும் டாட் பால்கள் எண்ணிக்கை குறையவில்லை. நடுநடுவே தவான் மட்டும் டேவிட் வில்லி, ஹர்பஜன் சிங் ஓவர்களில் பௌண்டரிகள் அடித்தார். சிக்கனமாகப் பந்து வீசிய சாஹருக்கு 4 ஓவர்களையும் ஒரேமூச்சில் கொடுத்து முடித்தார் தோனி. 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட். 24 பந்துகளில் 14 டாட் பால்கள். காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் போட்டியிலேயே பட்டையைக் கிளப்பினார் சாஹர். 9 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான டுவைன் பிராவோ இந்த சீசனில் எடுபடவில்லை. 'சரி மிடில் ஓவர் கொடுத்துப் பார்ப்போமே' என்று 10-வது ஓவரிலேயே அவரை அழைத்தார் தோனி. அதுவரை அமைதியாக இருந்தவர்கள், அங்கிருந்துதான் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஃபைன் லெக் திசையில் முதலில் வில்லியம்சன் ஒரு பௌண்டரி அடித்தார். பிறகு தவான் அதே ஏரியாவில் அடிக்க, ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றுகொண்டிருந்த பஞ்சாப் தமிழர் கால் சறுக்கி, பந்தையும் வழுக்கவிட்டு பௌண்டரிக்கு அனுப்பிவைத்தார். அடுத்த ஓவர் அசகாய சூரன் ஜடேஜா... சும்மாவே ஆஃப் சைடில் வெளுத்து வாங்கும் தவானுக்கு, ஸ்டம்புகளுக்கு வெளியே ஷார்டாகப் பந்துவீசிக்கொண்டிருந்தார். வாட்டமாக வரும் பந்துகளை அவர் விடுவாரா என்ன? கவர் திசையில் ஒரு பௌண்டரியும், லாங் ஆனில் ஒரு சிக்ஸரும் அடித்து ரன்ரேட்டைத் தட்டி எழுப்பினார்.
அடுத்த ஓவர் வாட்சன்... முதல் பந்தை லாகவமாக பாயின்ட் திசையில் பௌண்டரி அடித்தார் வில்லி. அடுத்த பந்தை ஜடேஜாவைப் போலவே ஷார்ட் & அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வாட்டோ ஸ்லோ பாலாக வீச, ஆன் சைடில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் சன்ரைசர்ஸ் கேப்டன். "This is Kane Williamson 2.0" என்று சிலாகித்தார் ஹர்ஷா போக்ளே. வார்னர் என்ற மிகச்சிறந்த டி-20 பேட்ஸ்மேனை அந்த அணி இழந்த நிலையில், தன் ஆட்டத்தை முழுதுமாக மெருகேற்றி, வார்னரின் இடத்தை அப்படியே நிரப்பியுள்ள வில்லியம்சன் நிச்சயம் புது அவதாரம் எடுத்துள்ளார். இடது கை பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும்போது, மீண்டும் ஜடேஜாவை நம்பி ஓவர் கொடுத்தார் தோனி. இந்த முறை அரவுண்ட் தி ஸ்டம்ப்ஸ்... ஆனால், அதே லைன், அதே லென்த்... மிட் விக்கெட் திசையில் 'ஃப்ளாட்டாக' ஒரு அற்புதமான சிக்ஸர் பறக்கவிட்டு அரைசதம் கடந்தார் 'கபார்' தவான்.
ஹர்பஜன் ஓவரில் வில்லியம்சன் இறங்கி வந்து ஒரு சிக்ஸர் பறக்கவிட, 'எனக்கும் ஒண்ணு' என்று மிட் விக்கெட் ஏரியாவில் தவான் ஒன்று பறக்கவிட்டார். கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் எடுக்கப்பட, வேறு வழியில்லாமல் மீண்டும் வில்லி கையில் பந்தைக் கொடுத்தார் தோனி. வில்லியம்சன் ஒரு பௌண்டரி, தவான் இரண்டு! அதிலும் ஃபுல் லென்த் பந்தை பௌலரின் தலைக்கு மேல் அடித்த அந்தக் கடைசி பௌண்டரி வேற லெவல்! அந்த ஓவரிலும் 14 ரன்கள். கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு அடித்து நொறுக்கியது அந்தக் கூட்டணி. தன் 37-வது பந்தில் சிங்கிள் அடித்து ஐபிஎல் தொடரில் தன் 10-வது அரைசதம் அடித்தார் வில்லியம்சன். ஆனால், அந்த ஓவரிலேயே அந்த பார்ட்னர்ஷிப்பைப் பிரித்தார் பிராவோ. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட ஸ்லோ பாலை, பக்கத்து ஊர் வரை சென்று ஃபைன் லெக் திசையில் அடித்தார் தவான். இம்முறை ஹர்பஜன் விடவில்லை. கேட்ச். அவர் 79 ரன்களில் (49 ரன்கள்) வெளியேறியபோது சன்ரைசர்ஸின் ஸ்கோர் 141/2.
பிராவோ ஓவரின் கடைசிப் பந்தில் தவான் வெளியேற, ஷர்துல் வீசிய அடுத்த பந்திலேயே வில்லியம்சனும் வெளியேறினார். தேர்ட் மேன் திசையில் அவர் அடித்த ஷாட்டை, பேக்வேர்ட் பாயின்ட்டில் இருந்து ஓடிச்சென்று சூப்பராகக் கேட்ச் செய்தார் பிராவோ. அடுத்தடுத்த பந்துகளில் இரு முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்ததால், சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட் மீண்டும் குறையத் தொடங்கியது. கடைசி 23 பந்துகளில் இரண்டு பௌண்டரி, 1 சிக்ஸர் மட்டுமே. அதுமட்டுமின்றி default-ஆக விழும் மணிஷ் பாண்டேவின் விக்கெட். இங்கயே இப்படி ஆட்டம் காணுகிறார் இங்கிலாந்தில் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ்.
இதுவரை அவர்கள் 'டிஃபண்ட்' செய்தபோது தோற்றதில்லை. எதிரணியை 141 ரன்களுக்கு மேல் அடிக்கவிட்டதேயில்லை. அவர்கள்தான் இந்த சீசனின் சிறந்த பௌலிங் யூனிட். அதுக்கு...? எதைப் பற்றியும் கவலைப்படவில்லை ராயுடு - வாட்சன் ஜோடி. முதல் ஓவரிலிருந்தே அடித்துத் துவைக்கத் தொடங்கிவிட்டார்கள். சந்தீப் ஓவரில் சூப்பர் கட் ஷாட் மூலம் பௌண்டரி அடித்த வாட்சன், புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் தன் ஃபேவரிட் புல் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்தார். சந்தீப் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள். முதலில் ஃபைன் லெக் திசையில் ஒரு 'ஸ்லாக் ஸ்வீப்'... அடுத்து மீண்டும் ஒரு வாட்டோ ஸ்பெஷல் புல் ஷாட்!
நான்காவது ஓவர் முடிந்தபோது, ராயுடு சதம் அடிப்பார் என்றெல்லாம் யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். சென்னை அடித்திருந்த 28 ரன்களில் அவரின் பங்கு 2 ரன்கள் மட்டுமே. மற்ற 26 ரன்களையும் 36 வயது வாட்சன்தான் அடித்திருந்தார். ஆனால், அடுத்த ஓவரிலேயே தன் தாண்டவத்தைத் தொடங்கினார் ராயுடு. புவி பந்தை சூப்பராக கவர் திசையில் சிக்ஸர் அடித்தவர், ரஷித் கான் வீசிய அபாயகரமான 'Wrong-urn' பந்தை அசால்டாக டீல் செய்து பௌண்டரி அடித்தார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் ஆளுக்கு ஒரு பௌண்டரி அடிக்க, 6 ஓவர் முடிவில் 56 என்ற நல்ல நிலையில் இருந்தது சி.எஸ்.கே. 'சரி, பவர்பிளே முடிஞ்சிருச்சு... ரன் வேகம் குறையும்' என்று பார்த்தால், 7-வது ஓவரில் எடுக்கப்பட்டது 16 ரன்கள்! சித்தார்த் கௌல் ஓவரில் வெறியாட்டம் ஆடிட ராயுடு இரண்டு பௌண்டரிகளும், ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டார். அடுத்த 3 ஓவர்களில் மட்டும் இருவரும் கொஞ்சம் பொறுமையாக ஆடினார்கள். அந்த 3 ஓவர்களில் மொத்தமே 24 ரன்களே வந்திருந்தபோதிலும், ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது வந்துகொண்டே இருந்தது. வாட்சனும் 31 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார்.
ரன் வேகம் கொஞ்சம் குறைந்த நிலையில், 'இது தப்பாச்சே' என மீண்டும் சித்தார்த் கௌல் கையில் பந்தைக் கொடுத்தார் வில்லி. பௌன்சர் பந்தை மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்து அதே 31 பந்துகளில் ராயுடுவும் அரைசதம் அடித்தார். ஐந்தாவது பந்தில் ஒரு பௌண்டரியும் அடிக்க, அந்த ஓவரில் 13 ரன்கள். ரஷீத் ஓவரில், அவர் ஸ்வீப் செய்ய முற்பட எட்ஜாகி பந்து எகிறியது. ஆனால், அதுவும் ஸ்டேண்டில்தான் விழுந்தது. சன்ரைசர்ஸ் பௌலர்களும் ஃபீல்டர்களும் 'வேடிக்கை பார்ப்பவனா'கவே தெரிந்தார்கள். அடுத்த ஓவரில், ராயுடு சிக்ஸ் அடிக்க, வாட்சன் ஃபோர் அடிக்க, நொந்துபோனார் பௌலர் புவி! ரிசப் பன்ட் தொடங்கி வைத்தது, இரண்டு போட்டிகளாக அவரது பந்துவீச்சை வாட்டி எடுக்கிறார்கள்.
கடைசியாக 14-வது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப்பைப் பிரித்தது சன்ரைசர்ஸ். வழக்கமாக ராயுடுதான் ரன் அவுட் ஆவார். நேற்று ஒரு மாற்றத்துக்கு வாட்சனை அவுட்டாக்கிவிட்டார் ராயுடு. அவர் அடித்த பந்து கவர் திசையில் நின்றிருந்த வில்லியம்சன் கைக்கே செல்ல, யோசிக்காமல் ஓடிவிட்டார். அவர்தான் ஓடினார்... வாட்சனோ ஜாகிங் செய்துகொண்டிருந்தார். வில்லியம்சன் சரியாக கீப்பருக்குத் த்ரோ செய்ய, வாட்சன் (35 பந்துகளில் 57 ரன்கள்) அவுட். 81 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தியிருந்தது அந்தக் கூட்டணி. அடுத்து மிஸ்டர் ஐபிஎல் ரெய்னா, இரண்டே ரன்களில் வெளியேறினார். ரெய்னாவை வீழ்த்திய சந்தீப், அந்த ஓவரில் இன்னொரு சாதனையையும் படைத்தார். சூப்பர் கிங்ஸ் இன்னிங்சில் பௌண்டரியே அடிக்கப்படாத முதல் ஓவர் அதுதான். ஆனால், அடுத்த ஓவரில் அதற்கும் சேர்த்து ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் என்று வெளுத்தார் ராயுடு. ஷகிப்பின் அந்த ஓவரில் அதற்கு முன் தோனி கொடுத்த கேட்ச் வாய்ப்பை, லாங் ஆனில் நின்றிந்த மணிஷ் தவறவிட்டார். நல்ல வீரர்... ஆனால் யார் கண் பட்டதோ, இந்த சீசனில் அனைத்திலும் சொதப்புகிறார்.
90-யைத் தொட்டுவிட்டதாலும், வெற்றி நிச்சயமாகிவிட்டதாலும் அடுத்த இரண்டு ஓவர்களையும் நிதானமாக எதிர்கொண்டார் ராயுடு. 14 ரன்கள் தேவை... ராயுடு 98... தோனி சிக்ஸர். 7 ரன்கள் தேவை... ராயுடு 99... தோனி பௌண்டரி! ரசிகர்களுக்குக் கொஞ்சம் பக்கென்றுதான் இருந்தது. சச்சின் 200 அடித்த அந்த ஆட்டம் அனைவரின் கண் முன்னேவும் வந்துபோனது. அந்த இன்னிங்ஸைப் போலவே கடைசியில் ஒரு சிங்கிள் தட்டினார் தோனி. ராயுடு ஆன் 99... சிங்கிள்.. ராயுடு சதம்! வாட்டே இன்னிங்ஸ்..! வாட்சன், ராயுடு இருவருமே வெற்றியைத் தீர்மானித்துவிட்ட இந்தப்போட்டியில், கடைசியாக சிங்கிள் அடித்து ஆட்டத்தை முடித்தார் 'ஃபினிஷர்' தோனி! மிகச்சிறந்த பௌலிங் யூனிட்டைப் பந்தாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்.இந்த வெற்றியினாலும் மும்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியதாலும் 9-வது ஆண்டாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!