Published:Updated:

ஜட்டு மிஸ் லட்டு கேட்ச்... ஸ்பின்னில் தடுமாறிய சி.எஸ்.கே... கில்லர் கில்! #KKRvCSK

ஜட்டு மிஸ் லட்டு கேட்ச்... ஸ்பின்னில் தடுமாறிய சி.எஸ்.கே... கில்லர் கில்! #KKRvCSK
News
ஜட்டு மிஸ் லட்டு கேட்ச்... ஸ்பின்னில் தடுமாறிய சி.எஸ்.கே... கில்லர் கில்! #KKRvCSK

இளம்புயல் சுப்மன் கில் அனுபவம் வாய்ந்த பவுலர்களின் பந்துகளையும் அசால்ட்டாக டீல் செய்து பவுண்டரிகளுக்கு விரட்டிக்கொண்டே இருந்தார். நரைன் அவுட்டாக, அதன்பின் வந்த ரிங்கு சிங் தடுமாற, எதையுமே கண்டுகொள்ளவில்லை கில். அடித்து வெளுத்தார்... வெளுத்தார், வெளுத்துக்கொண்டே இருந்தார். 

ஐ.பி.எல் ஏலத்தில் எல்லா அணிகளும் படா படா ப்ளேயர்களை ஏலத்தில் எடுத்தபோது கொல்கத்தா மட்டும் இளம் வீரர்களை குறிப்பாக அண்டர் 19 வீரர்களை வரிசையாக ஏலத்தில் எடுத்தது. இது எந்த அளவிற்கு அணிக்கு பலம் சேர்க்கும் என்ற கேள்விக்கு நேற்று ஈடன் கார்டனில் வைத்து பதில் சொல்லியிருக்கிறார்கள் குட்டி கில்லிகள். #KKRvCSK

சென்னை அணி, டெல்லியுடனான வெற்றி கொடுத்த தெம்போடு களத்தில் இறங்கியது. கொல்கத்தாவிற்கோ இது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முக்கிய ஆட்டம். எனவே முழு உத்வேகத்துடன் களமிறங்கியது. சென்னை அணியில் மாற்றமில்லை. கடந்த போட்டியில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆன நிதிஷ் ராணாவிற்கு முழு ஓய்வு கொடுத்திருந்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக்.

சென்னை அணிக்கு இரண்டு ஃபாரீன் ஓபனர்கள் எப்போதும் ராசிதான். அந்த வகையில் வாட்சனும் டு ப்ளெஸ்ஸியும் தங்கள் கடமைகளை செவ்வனே செய்தார்கள். மிட்செல் ஜான்சனின் முதல் ஓவரிலேயே ஆளுக்கொரு பவுண்டரி பார்சல்! பியூஷ் சாவ்லா போட்ட இரண்டாவது ஓவரில் டு ப்ளெஸ்ஸி மேலும் இரண்டு பவுண்டரிகள் பார்சல் கட்டினார். முதல் நான்கு ஓவர்களையும் நான்கு பவுலர்கள் வீசினார்கள். ஆனாலும் சமாளித்து ஆடியது இந்த ஜோடி. ஜான்சனின் ஐந்தாவது ஓவரில், ஷார்ட் பிட்ச் பாலை சிக்ஸுக்கு அனுப்பினார் டு ப்ளெஸ்ஸி. 'பங்கு நானும் ஷார்ட் பால் செம்மையா ஆடுவேன்' என வாட்சனும் அவர் பங்குக்கு அதே பக்கம் சிக்ஸ் பறக்க விட, அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடுத்த ஓவரின் முதல் பாலிலேயே விக்கெட். பந்தை லேட்டாகக் கணித்து போல்டானார் டு ப்ளெஸ்ஸி. `என் நண்பன் விக்கெட்டையா வாங்குற?' என அடுத்து களமிறங்கிய ரெய்னா வரிசையாக பவுண்டரிகள் தட்டினார். சீராக ஆடிய இந்த இணை ரன்ரேட்டை 9-க்கு குறையவே விடவில்லை. 10 ஓவர்களில் 90 ரன்கள். சுனில் நரைன் புண்ணியத்தில் வாட்சன் வீடு திரும்ப, 'மேன் இன் ஃபார்ம்' ராயுடு களமிறங்கினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே குல்தீப்பின் ஸ்பின்னுக்கு ரெய்னா பலியாக `பாகுபலி... பாகுபலி... பாகுபலி' என கரகோஷங்களுக்கிடையே களமிறங்கினார் தோனி.

ஆனால், திரும்பவும் வந்து செய்வினை வைத்தார் நரைன். ராயுடு அவுட்! அந்தப் பக்கம் களமிறங்கியது ஜடேஜா! அவரின் அபார ஆட்டத்திறன் பற்றி அனைவருக்கும் தெரியுமென்பதால் கடைசி வரை ஸ்ட்ரைக்கர் எண்டில் தோனியே இருந்து சிக்கிய பந்துகளை பறக்கவிட்டார். 'எங்ககிட்ட ரன்  கொடுக்கணும்னே உங்களை ஏலத்துக்கு எடுத்துருக்காங்களா?' என கேட்டுக் கேட்டு ஜான்சன் பந்துகளை வெளுத்தனர் சென்னை பேட்ஸ்மேன்கள். ஆனாலும் ஸ்பின்னர்கள் ரன்களை கட்டுப்படுத்த 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் எடுத்தது சென்னை. தோனி 25 பந்துகளில் 43 ரன்கள். என்ன ஒரே குறை நரைன் பந்தை ஆட ரொம்பவே தடுமாறினார். ஐ.பி.எல்லில் நரைன் வீசிய 59 பந்துகளில் தோனி ஒரு பவுண்டரி கூட அடித்ததில்லை என்பது சோக எஸ்.டி.டி!

எங்கிடி முதல் ஓவரிலேயே லின்னை பெவிலியன் அனுப்பினார். அடுத்த ஓவரே நரைனும் நடையைக் கட்டியிருக்கவேண்டியது. ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சூப்பர் சப்பை கேட்ச்களை தவறவிட்டார். அவ்வளவு ஈஸியான கேட்ச்சை தவறவிட்டதுக்கு நியாயமாக பந்தே மைதானக் கூரையில் இருந்து விழுந்து ஆத்மஹத்தி செய்துகொண்டிருக்கும். நீங்க டீம்ல இருக்குறதே பீல்டிங் பண்ண மட்டும்தான்! அதையும் கோட்டைவிட்டா என்னா பாஸு பண்றது?

சுதாரித்துக்கொண்ட நரைன் அடித்து வெளுக்கத் தொடங்கினார். மறுபக்கம் உத்தபாவும். இருவரும் விறுவிறுவென ஸ்கோரை ஏற்ற, ஆசிப்பின் ஆவ்சம் பால் ஒன்றில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் உத்தப்பா. அதன்பின் தான் வந்தார் இளம்புயல் சுப்மன் கில். அனுபவம் வாய்ந்த பவுலர்களின் பந்துகளையும் அசால்ட்டாக டீல் செய்து பவுண்டரிகளுக்கு விரட்டிக்கொண்டே இருந்தார். நரைன் அவுட்டாக, அதன்பின் வந்த ரிங்கு சிங் தடுமாற, எதையுமே கண்டுகொள்ளவில்லை கில். அடித்து வெளுத்தார்... வெளுத்தார், வெளுத்துக்கொண்டே இருந்தார். 

ஆறாவதாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக ஆட, கிட்டத்தட்ட 15-வது ஓவரிலேயே ரிசல்ட் முடிவாகிவிட்டது. ரன்ரேட்டை கணக்கு வைத்து இரண்டு அணிகளும் க்ளைமாக்ஸை ஆடி முடித்தன. 18 ஓவர்களில் இலக்கை எட்டியது கொல்கத்தா. எல்லாப் புகழும் கில்லர் ஷாட்கள் ஆடிய கில்லுக்கே! He deserves the MOM award! ஆனால் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கலக்கிய நரைனுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டு சென்றது. 

இந்தத் தோல்வியால் சென்னைக்குப் பெரிய பாதிப்பில்லை. ஆனால் கடைசி நான்கு இடங்களில் இருக்கும் பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, மும்பை அணிகளுக்கான ப்ளே ஆஃப் வாய்ப்புகள் இன்னும் சுருங்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட அடுத்து வரும் எல்லா ஆட்டங்களிலும் அந்த நான்கு அணிகளும் ஜெயித்தால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு! கச்சேரி இப்போதுதான் களை கட்டுகிறது.