Published:Updated:

''நாங்க மோசமா ஆடுவோம்... அவங்க எங்களைவிட மோசமா ஆடுவாங்க!'' - கோலி Vs ரோஹித் #RCBvMI

''நாங்க மோசமா ஆடுவோம்... அவங்க எங்களைவிட மோசமா ஆடுவாங்க!'' - கோலி Vs ரோஹித் #RCBvMI
''நாங்க மோசமா ஆடுவோம்... அவங்க எங்களைவிட மோசமா ஆடுவாங்க!'' - கோலி Vs ரோஹித் #RCBvMI

''நாங்க மோசமா விளையாடுவோம்... அவங்க எங்களைவிட மோசமாக விளையாடுவாங்க...'' - மும்பைக்கும்-பெங்களூருவுக்கும், கோலிக்கும் - ரோஹித்துக்கும் இந்த பன்ச்லைன் பக்காவாகப் பொருந்தும்! #RCBVSMI


2018 ஐபிஎல் கிரிக்கெட்டின் இரண்டு சொதப்பல் கேப்டன்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது.... அவர்கள் கையில் எதுவும் இல்லை... ஏதோ உருளுதாம்... மிரளுதாம் என்பதுபோல  அப்படி இப்படி விளையாடி... என்னென்னவோ செய்து, ஏதேதோ நடந்து... இறுதியில் இருவரில் யாரோ ஒருவர் வெற்றிபெறுவாரே அதுதான் நேற்று நடந்தது!
 


கோலி தன்னுடைய பெளலர்களைவிட ஜேபி டுமினி, ஹர்திக் பாண்ட்யா, மெக்ளீனிகன் என்கிற இந்த மூன்று மும்பை பெளலர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இந்த மூவர் வீசிய மூன்றே ஓவர்களில் 66 ரன்களை அப்படியே அல்வா போல பெங்களூரு அணிக்கு ஊட்டிவிட்டார்கள். 

கேப்டன், வைஸ் கேப்டனின் அதிரடி வியூகங்கள்?!

வியூகங்களோ, அதிரடி கேம் பிளான்களோ எதுவும் கிடையாது. 7 போட்டிகளில் 5-ல் தோல்வியடைந்துவிட்டோம் என்பதற்காகவே வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற போட்டியில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருந்தார்கள் இந்திய கிரிக்கெட்டின் கேப்டனும், துணை கேப்டனும். 
டீமில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய இரண்டு கேப்டன்களுமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ரோஹித் ஷர்மா ஏன் போன மேட்சில் பொலார்டை நீக்கினார் எனத் தெரியாது. அதேபோல் கோலி ஏன் கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தரை உட்காரவைத்தார் எனத் தெரியாது. ஆனால், இருவரையுமே மீண்டும் தங்கள் அணிகளுக்குள் கொண்டுவந்திருந்தார்கள் இரண்டு கேப்டன்களும்! இன்னொரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவை என்கிற நிலையிலும், போன மேட்சில் சிறப்பாகப் பந்துவீசிய முருகன் அஷ்வினை அணியில் சேர்க்கவில்லை கோலி. 


வாரி வழங்குவோம் பெளலிங்!

டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா கோலி டீமை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ஆஃப் ஸ்பின்னரான ஜேபி டுமினியைவைத்து முதல் ஓவரைத் தொடங்கினார் ரோஹித் ஷர்மா. கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலுமே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை மாற்றிக்கொண்டேவரும் கோலி, இன்றைய போட்டியில் டிகாக்குடன் ஓப்பனிங் பேட்ஸ்மென்னாக இறக்கியது மன்னன் வோரா. டுமினியின் இரண்டாவது பந்தையே சிக்ஸருக்கு அடித்து பெங்களூருவின் இன்னிங்ஸை சிக்ஸருடன் தொடங்கினார் வோரா. ஆனால், அடுத்த நான்கு பந்துகளும் டாட் பால்ஸ். 
இரண்டாவது ஓவர் மெக்ளீனிகன் வீச, இரண்டு ரன் மட்டுமே. இரண்டு ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு. மூன்றாவது ஓவர் வீசியவர் பும்ரா. இந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு. ஆனால், மூன்று ஓவர்களுக்கும் சேர்த்து நான்காவது ஓவரில் 'இந்தா எடுத்துக்கோ' எனப்போட்டுக்கொடுத்தார் ஜேபி டுமினி. 
முதல் பந்தில் மிட் ஆனில் ஒரு பவுண்டரி. அடுத்தப்பந்தில் மிட் ஆஃபில் ஒரு சிக்ஸர். இரண்டு பந்துகளும் அடிக்கப்பட லைன் அண்ட் லெங்க்தை மறந்த டுமினி ஸ்டம்புகளுக்கு வெளியே மூன்றாவது பந்தை வீச, மூன்றாவது பாலிலும் பவுண்டரி. நான்காவது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் பக்கம் ஒரு சிக்ஸர். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர், இரண்டு சிங்கிள் என  22 ரன்கள் அடித்தது பெங்களூரு. 


ஐந்தாவது ஓவருக்கு வந்தவர் மெக்ளீனிகன். இந்த ஓவரின் ஆறு பந்துகளையும் சந்தித்த டிகாக் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசிப்பந்தில் அவுட் ஆனார். ஷார்ட் மிட் விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் டிகாக். 1 டவுன் பேட்ஸ்மெனாக கோலிக்குப் பதில் வந்தவர் பிரண்டன் மெக்கல்லம். பவர் ப்ளேவின் கடைசி ஓவரை வீசியவர் மார்க்கண்டே. 6 ஓவர்களின் முடிவில் 50 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு!

ஹர்திக் பாண்டியாவின் அன்புப் பரிசு!

அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரண்டன் மெக்கல்லம் அப்படி ஆடவில்லை. மாறாக வோரா அடிக்க ஆரம்பித்தார். மார்க்கண்டேவின் ஓவரிலும் வோரா மேஜிக்கை நிகழ்த்தத் துடிக்க ஒரு சிக்ஸர் கிடைத்தது. ஆனால், அடுத்தப்பந்திலேயே வோரா, எல்பிடபிள்யு முறையில் அவுட். 
சாதுவாக இருந்த மெக்கல்லத்தை உசுப்பேற்ற வந்தார் பாண்டியா. 10-வது ஓவரை வீசிய பாண்டியா மெக்கல்லத்தின் பேட்டுக்கு உயிர்கொடுத்தார். மார்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்தப் பந்தை மெக்கல்லம் தூக்கியடிக்க, அது சிக்ஸர். அடுத்த ஃப்ரீ ஹிட் பாலை தனது வழக்கமான ஷாட்டான கீப்பர் தலைக்குப்பின்னால் திருப்பி அடித்தார் மெக்கல்லம். பாண்டியாவுக்கு வந்த சோதனை இரண்டு சிக்ஸர்களோடு முடியவில்லை. நான்காவது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி என 10-வது ஓவரில் 20 ரன்கள் அடித்தது பெங்களூரு. 
12 ஓவரில் மார்க்கண்டேவும் வெளுக்கப்பட்டார். கோலி ஒரு பவுண்டரி அடிக்க, மெக்கல்லம் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்து 104 ரன்களுடன் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது பெங்களூரு. ஆனால் 15-வது ஓவரில் ஆரம்பித்தது சோதனை. 

கோலி அவுட்!

மெக்ளீனிகனின் ஓவரில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார் மெக்கல்லம். ரன் ரேட் இறங்க ஆரம்பித்து. 17 ஓவர்களின் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பெங்களூரு. கடைசி மூன்று ஓவர்களில் 'கோலி வில் பி பேக்' என ரசிகர்கள் எதிர்பார்க்க, பாண்டியா வீசிய முதல் பந்தில் மந்தீப் சிங் அவுட். அடுத்தப் பந்தில் கோலி பேக் டு பெவிலியன். இந்த ஓவரின் கடைசிப் பந்தில் வாஷிங்டன் சுந்தர் அவுட் என ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து பெங்களூரை தத்தளிக்கவைத்தார் பாண்டியா. 
ஆனால், கோலிக்கு கடவுள் இறக்கம் காட்டினார். முதல் மூன்று ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து விக்கெட்டையும் எடுத்திருந்த மெக்ளீனிகனுக்கு கடைசி ஓவரில் மரண அடி காத்திருந்தது. நான்காவது பந்தில் ஆரம்பித்தது அந்த சிக்ஸர் புயல். காலின் டி கிராண்ட்ஹோம்க்கு ஸ்லோ ஆஃப்கட்டர் போட, அதை மிட்விக்கெட் திசையில் தூக்கியடித்து சிக்ஸர் ஆக்கினார் கிராண்ட்ஹோம். ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார் . கடைசிப்பந்தை வயிற்றுக்கு மேல் ஃபுல் டாஸாகப் போட்டார் மெக்ளீனிகன். ஸ்கொயர் லெக் திசையில் இதைத் தூக்கி சிக்ஸர் அடித்தார் கிராண்ட்ஹோம். வயிற்றுக்கு மேல் வந்ததால் நோ பால் அறிவிக்கப்பட, கடைசிப் பந்து ஃப்ரீ ஹிட். யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு? மீண்டும் சிக்ஸர் விளாசினார் கிராண்ட்ஹோம். இந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் அடித்தது பெங்களூரு. 167 ரன்கள்  என டார்கெட்டை செட் செய்தது கோலியின் டீம்!


பெளலிங் பிளான்!

''நேத்து என்னப் பண்ணோமோ அதுதான் இன்னைக்கும்'' என்பதுபோலவே கூல் கேப்டனாக தனது பெளலர்களை இறக்கினார் கோலி. டிம் சவுத்திக்கு முதல் ஓவர். இஷாந்த் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் இறங்கினர். முதல் ஓவரில் யாதவ் ஒரு பவுண்டரி அடிக்க, மும்பை பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், முதல் ஓவரின் கடைசிப்பந்திலேயே விக்கெட். போல்டானார் கிஷன். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜார்க்கண்ட் வீரரான இஷாந்த் கிஷனின் மூன்றாவது டக் அவுட் இது. 
1 டவுன் வந்தவர் ரோஹித் இல்லை. ரோஹித்தின் புதிய நம்பிக்கை ஜேபி டுமினி. இரண்டாவது ஓவரை வழக்கம்போல உமேஷ் யாதவுக்கே கொடுத்தார் கோலி. டுமினி ஒரு பவுண்டரி, யாதவ் ஒரு பவுண்டரி என மொத்தம் 11 ரன்கள் இந்த ஓவரில் மும்பைக்கு கிடைத்தது. மூன்றாவது ஓவரை மீண்டும் டிம் சவுத்தி வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நான்காவது ஓவர் மீண்டும் உமேஷ் யாதவ் கையில். கோலியே எதிர்பார்க்காத அதிசயம்... ஏன் உமேஷ் யாதவே எதிர்பார்க்காத அதிசயம் நிகழ்ந்தது. சூர்யகுமார் முதல் பாலில் எல்பிடபிள்யு ஆகி அவுட் ஆக, அடுத்தப்பந்தில் ரோஹித் ஷர்மா அவுட். பேட்டில் லைட்டாக உரசியப் பந்து விக்கெட் கீப்பரிடம் போனது. உமேஷ் யாதவ் பெரிதாக அப்பீல் செய்யாத நிலையில் கீப்பர் டிகாக் கான்ஃபிடன்ட்டாக இருந்தார். நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால், டிகாக்கை நம்பினார் கோலி. ரிவியூ கேட்க அது க்ளீன் கேட்ச் எனத் தெரிந்தது. ரோஹித் டக் அவுட்.
நான்கு ஓவர்களின் முடிவில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை. உமேஷ் யாதவின் இரண்டு விக்கெட்டுகளை எதிர்பார்க்காத கோலி பவர் ப்ளேவின் ஆறாவது ஓவரையும் மீண்டும் உமேஷிடமே கொடுத்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் பொலார்டு ஒரு பவுண்டரி அடிக்க, கடைசிப்பந்தில் இன்னொரு நான்கு ரன்களை இலவசமாக வழங்கியது பெங்களூரு. சிங்கிள் ரன்னோடு முடிந்திருக்கவேண்டியது, ஓவர் த்ரோ ஆனாதால் 5 ரன்கள் போனது.


 

பொலார்ட்டுக்கு டாட்டா!

பவர்ப்ளேக்குப் பிறகுதான் ஸ்பின்னர்கள். ஏழாவது ஓவர் சாஹல் கையில்! பந்து கன்னாபின்னாவென ஸ்பின் ஆக அரண்டுபோனார் பொலார்டு. அதில் ஒரு பந்து ஸ்பின்னாகி,  வைடாகி பவுண்டரிக்கே போனது. மொகமது சிராஜின் எட்டாவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட். பொலார்டு அவுட். 10-வது ஓவர் வாஷிங்டன் சுந்தர் கையில் வந்தது. ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என மொத்தம் 15 ரன்கள் இந்த ஓவரில் கொடுத்தார் சுந்தர். அவ்வளவுதான் இனிமேல் சுந்தருக்கு பெளலிங் வாய்ப்பு கிடைக்காது என கணித்ததுபோலவே நடந்தது. கோலி அதன்பிறகு சுந்தருக்கு வாய்ப்புத்தரவில்லை. 

பெங்களூருவை காப்பாற்றிய பாண்டியா பிரதர்ஸ்!

நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ஜேபி டுமினி 12-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். 29 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்தார் டுமினி. அதன்பிறகு ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா என இரண்டு சகோதரர்களின் பார்ட்னர்ஷிப்பில் எந்த அதிரடியும் இல்லை. கடைசி  5 ஓவர்களில் 62 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலை. கிராண்ட்ஹோமியை அடிக்க ஆரம்பித்தார் க்ருணால் பாண்டியா. க்ருணால் ஒரு சிக்ஸர் அடிக்க, ஓவரின் முடிவில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ஹர்திக். இந்த ஓவரில் மட்டும் மும்பைக்கு 17 ரன்கள். 
24 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்கிற நிலை. மொகமது சிராஜிடம் ஓவரைக் கொடுத்தார் கோலி. 10 ரன்கள் போனாலும் மிகச்சிறப்பாகவே பந்துவீசினார் சிராஜ். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான டிம் சவுத்தியிடம் 18-வது ஓவர் வந்தது. 18 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்கிற நிலை. களத்தில் இருப்பவர்கள் இருவருமே மிகச்சிறந்த 20/20 பேட்ஸ்மேன்கள். ஆனால், ரன்கள்தான் எடுக்கமுடியவில்லை. இந்த ஓவரில் 5 சிங்கள்கள் மட்டுமே. 12 பந்துகளில் 30 ரன்கள் தேவை என இலக்கை இன்னும் கடுமையாக்கிவிட்டுப் போனார் சவுத்தி.
சிராஜிடம் 19-வது ஓவர். க்ருணால் பாண்டியா அவுட். இந்த ஓவரிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்கிற நிலையில் மீண்டும் சவுத்தி. முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா அவுட். இந்த ஓவரில் கட்டிங் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தாலும் டார்க்கெட்டை முடிக்கமுடியவில்லை. மும்பைக்கு 6-வது தோல்வி. 


அம்பானியின் கனவு!

இந்தத் தோல்வியுடன் கிட்டத்தட்ட 2018 ஐபிஎல்லை விட்டு வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ். இனிவரும் 6 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும். அந்த அதிசயம் நிகழ்ந்து, மற்ற அணிகள் எல்லாம் தோற்றால் மும்பைக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மும்பை அடுத்து சந்திக்க இருப்பது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை. 
ஃபார்மில் இல்லாத ரோஹித் அணி, பயங்கர ஃபார்மில் இருக்கும் பஞ்சாபை வெல்வது என்பது அம்பானியின் கனவில் வேண்டுமானால் நிகழலாம். நிஜத்தில் நிகழ்ந்தால் அது வரலாறு!

அடுத்த கட்டுரைக்கு