Published:Updated:

கோலி - 20/20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் இல்லை... ஏன்? #RCBvCSK

கோலி - 20/20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் இல்லை... ஏன்? #RCBvCSK
கோலி - 20/20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் இல்லை... ஏன்? #RCBvCSK

கோலி - 20/20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் இல்லை... ஏன்? #RCBvCSK

உங்கள் அணி 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டது. உங்களின் ஓப்பனிங் பெளலர்கள் 80 ரன்களுக்குள் எதிரணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டனர். ஆனாலும், உங்களால் வெற்றிபெறமுடியவில்லை என்றால் தவறு எங்கேயிருக்கிறது கோலி?

விராட் கோலி இந்திய அணிக்குத் தலைமை தாங்கி பல வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கலாம். ஆனால், அந்த வெற்றிகளுக்குத் தன்னுடைய கேப்டன்ஸிதான் காரணம் என அவர் உரிமை கொண்டாட முடியாது என்பதை உலகுக்குச் சொல்லியிருக்கிறது கேப்டன் கோலியின் சமீபத்திய சொதப்பல்கள்.

ஒரு தலைவன் என்றால் அவனுக்கு இலக்கு என்பது இருக்க வேண்டும். இலக்கில்லாத தலைவன் தலைவனே கிடையாது. எது டார்கெட் என்று தெரிந்தால்தான் நீங்கள் டார்கெட்டை அடைவதற்கான பயணத்தில் பயணிக்க முடியும். தலைவன் என்பவன் சர்ப்ரைஸ்களைச் சந்திக்கலாம். ஆனால், சர்ப்ரைஸ்களை எப்படிச் சாமாளிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். ஒரு பிளான் சொதப்பினால், அடுத்த பிளான், அதற்கு அடுத்த பிளான் எனத் தாவ வேண்டும். ஆனால் கோலிக்கு டார்கெட் என்னவென்றே தெரியவில்லை.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால், ஐபிஎல் சாம்பியன்ஸ் என்கிற பட்டத்தை பெங்களூரு அணிக்கு வென்றுதரவேண்டும் என்பதுதான் கோலியின் இலக்கு. ஒரு போட்டியில் தோற்கலாம், ஒரு போட்டியில் வெற்றிபெறலாம். ஆனால், அந்தப் பிராசஸில் தோல்வியில் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்துக்கொண்டு, அடுத்தடுத்த போட்டிகளில் அதைச் சரிசெய்ய வேண்டும். 

இங்கேதான் கோலி, தோனியிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.

தோனி என்ன செய்தார் தெரியுமா?

2010 தென் ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. அதில் ஒரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணியுடன் மோதுகிறது. முதலில் ஆடும் சென்னை 162 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடும் விக்டோரியா அணியும் 162 ரன்கள் எடுக்க ஆட்டம் `டை’ ஆகிறது. போட்டி சூப்பர் ஓவருக்குப் போகிறது. சென்னையின் பெளலர்களில் அன்று சிறப்பாகப் பந்துவீசியவர் முத்தையா முரளிதரன். 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட் எடுத்து 17 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.

ஆட்டம் `டை’ ஆனதும் சென்னையின் பெளலர்கள் சூப்பர் ஓவர் வீசத் தயங்குகின்றனர். யார் சூப்பர் ஓவர் போடுகிறீர்கள் என்று தோனி கேட்கும்போது சீனியர்கள் எல்லோருமே சைலன்ட்டாக இருக்க அஷ்வின் மட்டும் நம்பிக்கையுடன் முன்னே வருகிறார். தோனி அஷ்வினிடம் பந்தைக் கொடுக்கிறார். டேவிட் ஹஸி மூன்று சிக்ஸர்கள் வெளுக்க, தோனியின் தவறான முடிவால் சென்னை அணி தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன.

ஆனால், தோனி இந்த விமர்சனங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாறாக, அஷ்வினுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார். `சீனியர்கள் எல்லோரும் இருக்க ஜுனியரான உன்மேல் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்' என்பதை அஷ்வினுக்கு உணர்த்தினார் தோனி. அந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் அஷ்வின்தான். 13 விக்கெட்டுகள் எடுத்து `கோல்டன் விக்கெட் அவார்டு’ மட்டுமல்லாது தொடர் நாயகன் விருதையும் வெல்கிறார் அஷ்வின். அதுதான் தோனியின் தலைமை!

நம்பிக்கையைக் கெடுத்த கோலி!

 பெங்களூரில் நேற்று நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் சாஹலை 13-வது ஓவரோடு கோலி முடித்துவிட்டார். அதன்பிறகு பந்து வீசப்போகிறவர்கள் சிராஜும், கோரி ஆண்டர்சனும்தான் என்பது தோனிக்கும், சென்னை டீமுக்கும் தெரியும் வகையில்தான் தன்னுடைய பெளலிங் பிளானை வைத்திருந்தார் கோலி. பெளலிங் அட்டாக்கில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கூட கோலி, தோனிக்குத்தரவில்லை. 

18-வது ஓவரின் இறுதியில் அம்பதி ராயுடு அவுட்டாகிறார். இன்னும் 2 ஓவர்கள்தாம் இருக்கின்றன. 12 பந்துகளில் 30 ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற நிலை. பிராவோ களம் இறங்குகிறார். பிராவோ வேகப்பந்து வீச்சாளர்களை ஈஸியாக அடித்துவிடுவார். ஆனால், ஸ்பின்னர்களிடம் திணறுவார் என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. பெங்களூருவின் முக்கியமான ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருக்கு 3 ஓவர்கள் மீதம் இருக்கிறது. பிராவோவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரைக் களமிறக்கலாம். ஆனால், கோலி அதைச் செய்யவில்லை. 

``உனக்கு ஒரு ஓவர் கொடுத்தேன். 14 ரன்கள் அடித்துவிட்டார்கள். அவ்ளோதான்... ஓரமாய் போய் உட்காரு'' என்பதுபோலத்தான் இருந்தது கோலியின் ஆட்டியூட். 

சுந்தரை இழக்காதீர்கள் கோலி!

மிகப்பெரிய கான்ஃபிடன்ஸுடன் ஐபிஎல் தொடரைத் தொடங்கினார் வாஷிங்டன் சுந்தர். இலங்கைக்கு எதிரான 20/20 தொடரில் வாஷிங்டன் மிகச்சிறந்த பெளலராகப் புகழப்பட்டார். கான்ஃபிடன்ஸ் லெவலில் உச்சத்திலிருந்த சுந்தரின் கான்ஃபிடன்ஸை ஐபிஎல்-ல் வைத்து சிதைத்துவிட்டார் கோலி. வெற்றியோ, தோல்வியோ 19-வது ஓவரில் பிராவோவுக்கு எதிராக கோலி, சுந்தரைக் களமிறக்கியிருக்க வேண்டும். அது வாஷிங்டன் சுந்தருக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். அடுத்தடுத்த போட்டிகளில் கேப்டன் நம்மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என அவர் ஆடியிருப்பார். மார்க்கண்டே, முஜீப், ரஷித் கான் என ஸ்பின்னர்கள்தாம் இந்த ஐபிஎல்லின் ஹீரோஸ். பெங்களூரு அணிக்குள் இருக்கும் அப்படிப்பட்ட ஹீரோதான் வாஷிங்டன் சுந்தர். ஆனால் வாஷிங்டனின் நம்பிக்கையை மொத்தமாக காலி செய்துவிட்டார் கோலி. 

தன்னம்பிக்கை... தன்முனைப்பு வெர்சஸ் தலைமைப்பண்பு!

ஒரு பேட்ஸ்மேனாக கோலிக்குத் தன்னம்பிக்கை, தன் முனைப்பு என எல்லாமே உண்டு. ஆனால், கேப்டனாக இருப்பவர் தன்னை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. `200 ரன்கள் அடித்தாலும் கவலையில்லை; நான் அடித்துவிடுவேன்' என்று தன்னம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால், நான் அடிக்கவில்லை என்றால் யார் அடிப்பார்கள் என்கிற பிளான் வேண்டும். சிறந்த பெளலர்களை ஓப்பனிங்கிலேயே முடித்துவிட்டால், டெத் ஓவர்களில் யார் பந்துவீசுவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே கோலியிடம் இல்லாததே தொடர் தோல்விகளுக்குக் காரணம்.

இலக்கில்லாத தலைவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு இலக்குகளை நிர்ணயிக்க முடியாது.

அடுத்த கட்டுரைக்கு