Published:Updated:

கிரிக்கெட்னா சச்சின்... சச்சின்னா அந்தச் சிவப்புக்கோடு பேட் ..! - ஸ்டிக்கரில் புதைந்திருக்கும் இருபதாண்டு கொண்டாட்டம் #HappyBirthdaySachin

கிரிக்கெட்னா சச்சின்... சச்சின்னா அந்தச் சிவப்புக்கோடு பேட் ..! - ஸ்டிக்கரில் புதைந்திருக்கும் இருபதாண்டு கொண்டாட்டம்   #HappyBirthdaySachin
News
கிரிக்கெட்னா சச்சின்... சச்சின்னா அந்தச் சிவப்புக்கோடு பேட் ..! - ஸ்டிக்கரில் புதைந்திருக்கும் இருபதாண்டு கொண்டாட்டம் #HappyBirthdaySachin

கிரிக்கெட்னா சச்சின்... சச்சின்னா அந்தச் சிவப்புக்கோடு பேட் ..! - ஸ்டிக்கரில் புதைந்திருக்கும் இருபதாண்டு கொண்டாட்டம் #HappyBirthdaySachin

இன்று காலை ட்விட்டரில் லாக் இன் செய்ததும் ஹோம் பேஜ் முழுக்க ஒரேயொரு ஹேஷ்டேக்தான் நிரம்பியிருந்தது #HappyBirthdaySachin. கிரிக்கெட் எனும் கலையின் `தி பெஸ்ட்' கலைஞனுக்குப் பிறந்தநாள். ஒவ்வொருவரும் சச்சின் பற்றிய தங்களின் நாஸ்டால்ஜியா பதிவுகளைச் சிலாகித்திருந்தார்கள். ஷார்ஜா சதம், சிட்னி இரட்டைச்சதம், நூறாவது செஞ்சுரி என அந்த 25 வருட பயணத்தின் ஒவ்வொரு மைல்கல்லையும் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். நடுவே, அடுத்த சச்சின் என்று எல்லோராலும் கருதப்படும் பிரித்வி ஷா நெட் பிராக்டீஸ் செய்யும் ஸ்டில். அவரது கையில் இருந்ததோ MRF பேட்.நான் கிரிக்கெட்டைப் பார்க்கத் தொடங்கிய காலத்தில், அதற்கு அடிமையாகிக் கொண்டிருந்த நேரத்தில், சச்சின்தான் கிரிக்கெட் என்று இந்தியர்கள் நம்பிய சமயத்தில், உலகின் அதிசிறந்த பௌலர்களையெல்லாம் தெறிக்கவிட்டுக்கொண்டிருந்த அந்த MRF பேட்..! மூளைக்குள்ளிருக்கும் ஹிப்போகேம்பஸ் அதிவேகமாக வேலைசெய்தது. நியூரான்களின் வழி பாய்ந்த நினைவுகள் என்னுள் பதிந்திருந்த நாஸ்டால்ஜியா கதவுகளைத் திறந்துவிட்டது. 

அப்போதெல்லாம் அப்பாவோடு சேர்ந்து உட்கார்ந்து நானும் கிரிக்கெட் பார்ப்பேன். அந்தச் சின்ன உருவம் ஒவ்வொரு பந்தையும் வெளுத்துக்கொண்டிருக்கும். ஸ்பின், ஃபாஸ்ட் பாரபட்சமே கிடையாது. எப்படி அப்படி அடிக்கிறார் என்ற ஆச்சர்யம் ஒவ்வொரு போட்டியிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஃப்ரன்ட் ஃபுட், பேக்ஃபுட், ரிஸ்ட் மூவ்மென்ட், hand eye coordination போன்ற எதுவுமே தெரியாது. அதனால் `சச்சின் அடிக்கிறதுக்குக் காரணம் அந்த MRF பேட்தான்' என்று என் மனதில் பதிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் நான் பார்த்து அந்தப் பேட்டில் விளையாடிய ஒரே ஆள் சச்சின் மட்டும்தான். அதனால், ரன் அடிக்கணும்னா MRF பேட் வேண்டும். லாரா, ஸ்டீவ் வாஹ் உள்ளிட்டவர்களும் MRF பயன்படுத்தியது சில ஆண்டுகள் கழித்துத் தெரிந்தது. ஆனால், சச்சினுடையது ஸ்பெஷல். ஏனெனில் அது MRF - Genius!

அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை இங்கிலீஷ் வாத்தியாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். சச்சின் ஜீனியஸ் என்று அவரும் சொன்னார். அதனால்தான் சதங்களாக அடிக்கிறார் என்றும் புகழ்ந்தார். அவர் சதம் அடிக்கும் அந்தத் தருணத்தைக் கண்கொட்டாமல் பார்ப்பேன் என்று சிலாகித்தார். ஆம். அது மிகவும் ஸ்பெஷலான தருணம். அவர் சதமடித்துவிட்டால், அவர் ஹெல்மெட்டைக் கழட்டி வானத்தைப் பார்த்து நன்றி சொல்லும் படம்தான் அனைத்து செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கங்களிலும் இடம்பெற்றிருக்கும். வேகவேகமாக அந்தப் படத்தை வெட்டி எடுப்பேன். பக்கத்து வீட்டில் பேப்பர் வாங்கிக்கொண்டு வந்து மீண்டும் வெட்டத் தொடங்குவேன். இம்முறை சச்சினின் பேட்டை மட்டும். இப்படி வெட்டப்பட்ட ஒவ்வொரு பேட்டும் ஒவ்வொரு புக்குக்கு நடுவில். அந்தப் புக்தான் என் 'புக் கிரிக்கெட்' ஆயுதம்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஞாயிற்றுக்கிழமைகளில் என் சித்தப்பா கிரிக்கெட் விளையாடும் கிரவுண்டுக்கு வேடிக்கை பார்க்கப் போவேன். கார்க் பாலில் விளையாடுவார்கள் என்பதால் தூரமாக உட்காரச் சொல்லிவிடுவார். இரண்டு பேட்கள் வைத்திருப்பார்கள். ஒன்று என் ஆதர்ச MRF. இன்னொன்று BDM. பேட்டிங் பிடிப்பவர்கள் MRF பேட்டில்தான் விளையாடுவார்கள். சிங்கிள் எடுத்தால், உடனே சென்று பேட்டை மாற்றிக் கொள்வார்கள். இப்போதும் ஸ்டிரைக்கர் கையில் MRF தான். 'MRF-ல் தான் அடிக்க முடியும். அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். வாங்குனா MRF பேட்தான். விளையாடுனா MRF பேட்தான்'. அன்றே முடிவெடுத்துவிட்டேன். 'BDM பேட்டை சீஸன் பண்ணலடா' என்று சித்தப்பா சொன்ன எந்தக் காரணமும் எனக்குப் புரியவில்லை. ஏனெனில், கிரிக்கெட்னா MRF என்பது மூளை தாண்டி மனதினில் பதிந்துவிட்டது. 

சித்தப்பாவின் பேட் எடை அதிகம். என்னால் தூக்க முடியாது. அதனால் எனக்கு தென்னை மட்டையில் பேட் செய்து கொடுப்பார். அரிவாளை மெஷினாக்கி, மிக நேர்த்தியாகப் பச்சை மட்டையில் பேட் செய்து தருவார். ஆனால், எனக்கு அது போதாது. அதே அரிவாளால் MRF என்று அந்தத் தென்னை மட்டையின் இரண்டு பக்கமும் கீறித் தர வேண்டும். அப்போதான் விளையாடச் செல்வேன். அதுமட்டுமல்லாமல், என்னோடு விளையாடப் பல கண்டிஷன்கள் இருக்கும். நான் மட்டும் ரன் அடிக்க வேண்டுமென்பதால், அவருடைய MRF பேட்டைப் பயன்படுத்த சித்தப்பாவுக்குத் தடை. அதனால், அவருக்கும் தென்னை மட்டைதான். அந்தத் தென்னை மட்டையில் MRF என்று எழுதிக்கொள்ளவும் தடை. எதுவும் எழுதாமல்தான் விளையாடுவார். சின்னப் பையன் என்பதால், அழகாகப் பந்துபோடுவார், சீக்கிரம் அவுட்டாகிவிடுவார். 'விட்டுக்கொடுத்தார்' என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அந்த வயதில், என் வெற்றிக்குக்கூட MRF-யைத்தான் நான் காரணமாக நினைத்தேன். MRF-ல் அடிச்சதால்தான், சித்தப்பா MRF-ல் விளையாடாததால்தான் நான் ஜெயிச்சேன். MRF பைத்தியம் முற்றியது!

அன்று எங்கள் ஊரில் தேர்த்திருவிழா. புது பேட் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ராட்டன் தூரி, கொலம்பஸ் போன்ற விளையாட்டுகளையெல்லாம் மறந்து பேட் கடைக்கு ஓடினேன். கடையில் இருந்த பேட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். பிரிட்டானியா, BDM, SS, RNS, ஹீரோ ஹோண்டா... பட்டியல் நீண்டது. ஆனால், நான் தேடிப்போயிருந்த MRF அங்கு இல்லை. "அஞ்சு MRF பேட் கொண்டுவந்தேன். எல்லாமே தீந்துபோச்சு" கடைக்காரரின் பதில் பெரும் ஏமாற்றம் அளித்தது. MRF எனக்கு மட்டுமா ஃபேவரிட்? எல்லோருக்கும்தானே. சச்சின் விளையாடும் பேட் அல்லவா, சீக்கிரம் விற்றுத் தீர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், ஆறு வயதான எனக்கு அந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாப்பிடாமல் அழுதுகொண்டே தூங்கினேன். 

என் அழுகை பார்த்து ஒரு வாரத்தில் வாங்கித் தருவதாகச் சொன்னார் அப்பா. சமாதானம் கிடைக்கவில்லை. அடுத்தநாள் பேட் வேண்டுமென்று சித்தப்பாவிடம் சொல்லி அழுதுவிட்டேன். இரண்டு நாள் கழித்து டி.வி.ஸ் 50-ல் என்னை மர இழைப்பகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அவருடைய நண்பர் ஒருவரிடம் முன்பே சொல்லியிருப்பார்போல். நன்றாகச் செய்யப்பட்டிருந்த பேட் ஒன்று தயாராக இருந்தது. என்னால் தூக்கவும் முடிந்தது. "ஆனா இது MRF இல்லையே" என் கேள்வி கேட்டு சிரித்தார் மாமா. 

வீட்டுக்கு வந்து சிவப்பு ஸ்கெட்சில் M போட முயன்றார். ஒரு கோட்டுக்கு மேல் அடர்த்தியாகப் போட முடியவில்லை. மீண்டும் பாவமாக அவர் முகத்தைப் பார்த்தேன். வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். 10 நிமிடம் கழித்து வந்தார். இம்முறை பெரிய ஸ்கெட்ச். அதன் பெயர் மார்க்கர் என்றார். MRF அழகாக எழுதப்பட்டது. 'ஜீனியஸ்?' இம்முறை என் கன்னத்தை செல்லமாகத் தட்டிவிட்டு அதையும் எழுதிக் கொடுத்தார். என் முதல் பேட்... MRF பேட் ரெடி! அந்தப் பேட்டைப் பிடித்த தருணம் என்னை நானே கிரிக்கெட் வீரனாக நினைத்துக்கொண்டேன். காற்றிலேயே பேட்டைப் போட்டுச் சுழற்றினேன். அவரைப்போல் ஸ்ட்ரெயிட் டிரைவ் அடித்தேன். அவரைப்போல் பேட்டைத் தூக்கி வானத்தை அன்னாந்து பார்த்தேன். அந்தப் பேட் பிடித்த தருணம்... தட் சந்திரமுகியா மாறிய கங்கா மொமன்ட்தான்! நான் மட்டுமல்ல, என் பள்ளியில், தெருவில், ஊரில்... என் வயதை ஒத்த அனைவருமே என்னைப்போல் MRF பைத்தியங்கள்தான். 

அதன் பிறகு, பள்ளி முடிக்கும் வரை ஐந்தாறு பேட்கள் வாங்கியிருப்பேன். அப்போதெல்லாம் பேட்டின் தரம் பார்த்தே வாங்கினேன். ஸ்டிக்கரைப் பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனாலும், MRF மீதிருந்த கிரேஸ் குறைந்ததில்லை. எந்தப் பேட் வாங்கினாலும் சரி, கடையில் இருக்கும் ஒரு MRF பேட்டையாவது எடுத்து காற்றில் சுழற்றாமல் வந்ததில்லை. கிரிக்கெட் விளையாடுவதை விட்டபிறகு, அவ்வப்போது எங்காவது பேட்டைப் பிடிக்கும்போதெல்லாம்கூட முதல்முறை அந்த MRF பேட் பிடித்த ஞாபகம்தான் வந்துபோகும். அதன்பிறகு ரீபோக், ஆர்.பி.கே, கிரே நிக்கோல்ஸ் போன்ற பேட்கள் மீதுகூட பலருக்கு ஈர்ப்பு இருந்தது. ஆனால், MRF மீதிருந்தது பைத்தியக்காரத்தனம். அதுபோல் இனி எப்போதும் ஒரு பேட்டின்மீது யாரும் ஈர்ப்புக்கொள்ளப்போவதில்லை. 

ஒரு ஹேஷ்டேக், ஒரு போட்டோ... இவை என்னை 18 வருடங்கள் பின்னோக்கி நகர்த்திவிட்டன. சொல்லப்போனால் அந்தப் பேட்தான் என்னை பின்னோக்கி நகர்த்தியது. ஒரு பேட்டுக்குப் பின்னால் இத்தனை நினைவுகள் பிணைந்து கிடக்கின்றன. காரணம்... அந்தப் பேட்டைப் பயன்படுத்தியவர். 22 யார்டுகளுக்கு நடுவே 25 வருடங்கள் பயணித்த அந்த மனிதனின் வாழ்க்கை கிரிக்கெட் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு ஸ்பெஷல் தருணத்தைக் கொடுத்திருக்கும். எத்தனை கிரிக்கெட் வீரர்கள் வந்துபோனாலும், எத்தனை சந்தோஷமான தருணங்களை அவர்கள் கொடுத்தாலும், சச்சின் கொடுத்த நெகிழ்ச்சி அவற்றில் இருக்காது. அதற்குப் பெரிய காரணம் எல்லாம் ஒன்றுமில்லை. ரொம்ப சிம்பிள் - இவர் பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்!