Published:Updated:

சச்சின் என்பது, பெயரல்ல; அது ஓர் உணர்வு... உற்சாகம்... உத்வேகம்! #HappyBirthdaySachin

சச்சின் என்பது, பெயரல்ல; அது ஓர் உணர்வு... உற்சாகம்... உத்வேகம்! #HappyBirthdaySachin
News
சச்சின் என்பது, பெயரல்ல; அது ஓர் உணர்வு... உற்சாகம்... உத்வேகம்! #HappyBirthdaySachin

சச்சின் என்பது, பெயரல்ல; அது ஓர் உணர்வு... உற்சாகம்... உத்வேகம்! #HappyBirthdaySachin

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு நிமிடம் எந்த வேலையும் செய்யாமல் `ஸ்டன்னாகி' நின்றிருக்கிறதா? மதங்கள் கடந்து இந்தியா முழுக்க ஆலயங்களில் ஒற்றை மனிதனுக்காக பிரார்த்தனைகள் நடத்தப்பட்டிருக்கின்றனவா? பங்கு வர்த்தகம் சில நிமிடம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறதா? பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் ஸ்தம்பித்திருக்கின்றனவா? கூட்டம் கூட்டமாக மக்கள் தெருக்களில் டி.வி-யின் முன்னால் நின்றதால் டிராஃபிக் ஜாம் ஆகியிருக்கிறதா? இது அத்தனையும் சச்சின் என்னும் ஒற்றை மனிதனுக்காக நடந்திருக்கின்றன.

கிரிக்கெட் கடவுள், ரன் மெஷின், லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு, இன்று 45-வது பிறந்த நாள். கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வுபெற்று கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், சச்சின்... சச்சின்... சச்சின் என்கிற கோஷம் இன்னமும் காதுகளில் எதிரொலித்துக்கொண்டேயிருக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சச்சினுடன் டிராவிட், கங்குலி, ஷேவாக் என உன்னதமான பல கிரிக்கெட்டர்கள் விளையாடியிருக்கிறார்கள்; சதங்கள் அடித்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்திருக்கிறார்கள். ஆனால், சச்சின் அடித்தால்தான் இந்தியாவுக்கே கொண்டாட்டம். சச்சின் களத்தில் நிற்பதுதான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நம்பிக்கை. சச்சின் சதம் அடித்தால்தான் அது தலைப்புச்செய்தி என, சச்சின் என்பது வெறும் பெயரல்ல... அது பல கோடி இந்தியர்களுக்கு ஓர் உணர்வு... உற்சாகம்... மிகப்பெரிய உத்வேகம். 

``நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனிமனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்'' 1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தபோது ஆஸ்திரேலியாவின் கேப்டன் மார்க் டெய்லர் சொன்ன வார்த்தைகள் இவை. ஆமாம்... கிரிக்கெட் இன்னும் பல சிறந்த வீரர்கள் உருவாக்கலாம்; பல சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால், இன்னொரு சச்சின் டெண்டுல்கரை மட்டும் இனி கிரிக்கெட் உலகம் பார்க்க முடியாது.

உலகக்கோப்பை தொடர் தோல்விகள், தோள்பட்டை - முதுகு காயங்கள், முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனங்கள், கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம்... என சச்சினின் 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கசப்பான பல சம்பவங்களும் அடக்கம். ஆனால், ஒருமுறைகூட அவர் நிதானம் தவறிப் பேசியதில்லை. மைதானத்தில் யாரையும் பார்த்து முறைத்ததில்லை. பந்து வீச்சாளர்களுக்கு கெட்டவார்த்தைகளால் பதில் சொன்னதில்லை. நடுவர்களைத் திட்டி வெளியேறியதில்லை. பேட்டிகளில் எந்த வீரரையும் குறை சொன்னதில்லை என சச்சினின் பேட்டிங் மட்டுமல்ல, அவர் ஆட்டத்தில் கடைப்பிடித்த ஒழுங்குதான் உலகம் முழுக்க அவருக்குப் பல கோடி ரசிகர்களை உருவாக்கியது.

டென்னிஸ், கால்பந்து, தடகளம் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பல காலம் கோலோச்சிய வீரர்கள் இருக்கிறார்கள். சாதனைகள் படைக்கும் வேகத்தில் அவர்கள் சறுக்கிய வரலாறு அதிகம். போதைமருந்து சர்ச்சைகள் முதல் பெண் சகவாசங்கள் வரை பல்வேறு காரணங்களால் தடம் தெரியாமல் பல வீரர்கள் அழிந்திருக்கிறார்கள். ஆனால் சச்சின், கிரிக்கெட் ஆடிய 24 ஆண்டுகளும் உச்சத்தில்தான் இருந்தார். காரணம், அவர் கிரிக்கெட்டை பேட்டால் விளையாடியவர் அல்ல... இதயத்தால் விளையாடியவர். 

எல்லோரும்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்... சதம் அடிக்கிறார்கள். ஆனால், சச்சினின் ஆட்டத்தில் இருந்த பர்ஃபெக்‌ஷனை மற்றவர்களின் ஆட்டத்தில் முழுமையாகப் பார்க்க முடிந்ததில்லை. சச்சினின் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் க்ளாஸ் ரகம். அவர் அடிக்கும் பெளண்டரிகள்  எல்லாமே கூஸ்பம்ப் மொமன்ட்டுகள்தான். கிரிக்கெட்டைக் கண்டபடி ஆடியவர்களுக்கு மத்தியில் ஃபீல்டர்களுக்கு இடையில் பந்தை விரட்டும் வித்தையைச் சொல்லிக்கொடுத்தவர் சச்சின்தான்.

பொடியன் டு பிதாமகன்!

16 வயதில் சின்னப் பொடியனாக பாகிஸ்தான் மைதானத்துக்குள் நுழைந்தபோது, முதல் போட்டியில் 15 ரன்கள் அடித்த சச்சின் வக்கார் யூனிஸ் பந்தில் க்ளீன் போல்டு. ``நான் என்னவெல்லாம் திட்டங்களோடு மைதானத்துக்குள் நுழைந்தேனோ அது எதுவுமே நிறைவேறவில்லை என விரக்தியடைந்தேன். `சர்வதேச கிரிக்கெட் விளையாட நான் தகுதியானவனல்ல' என்ற எண்ணம் அப்போது எழுந்தது. மறுபக்கம் `அடுத்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன்!' என்று எண்ணமும் தோன்றியது. அடுத்த டெஸ்ட்டில் 59 ரன் அடித்தேன்’’ என்று தனது முதல் பயண அனுபவத்தைப் பற்றிச் சொல்வார் சச்சின்.

பாகிஸ்தான் பயணத்தில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளும் டிராவாக, நான்காவது டெஸ்ட்டில் வெற்றிபெறும் வெறியுடன் ஆடியது பாகிஸ்தான். இந்தியா 34 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தபோது களம் இறங்கிய சச்சினின் மூக்கை வக்கார் யூனிஸின் பந்து பதம்பார்த்தது. மூக்கில் கட்டோடு அன்று விளையாடிய சச்சின், இந்தியாவைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். 

``1990-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது எனக்கும் சச்சினுக்கும் ஒரே அறைதான். அப்போது சச்சினை வியப்போடு பார்த்துக்கொண்டிருப்பேன். `எழுதுவது, சாப்பிடுவது என்பது எல்லாவற்றுக்குமே இடதுகைப் பழக்கம்கொண்ட இந்தப் பையன், கிரிக்கெட் பேட்டை மட்டும் வலது கையில் பிடித்து ஆடுகிறானே!' என வியப்பாக இருக்கும். இரண்டு கைகளிலுமே சக்திகொண்டவன் சச்சின் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். அப்படிப்பட்டவர்களை எளிதில் சமாளிக்க முடியாது’’ என்று சொன்னார் கபில்தேவ். 

ஷார்ஜாவில் மணல் சூறாவாளிக்கு இடையில் அவர் அடித்த சதம், மிக வேக மைதானமான பெர்த் மைதானத்தில் அவர் அடித்த சதம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் 200 ரன், வங்கதேசத்துக்கு எதிரான 100-வது சதம் என சச்சினின் ஒவ்வொரு சதமும் பலவித நெருக்கடிகளுக்கிடையே அடிக்கப்பட்டவைதான். 

சரிவில் இருந்து மீண்டவன்!

டென்னிஸ் எல்போ பிரச்னையால் சச்சின் சிக்கித்தவித்தபோது `எண்டுல்கர்’ எனத் தலைப்பிட்டு ஆங்கில நாளிதழ் ஒன்று முதல் பக்க செய்தி வெளியிட்டது. ஒட்டுமொத்த மீடியாவும் அவர் ஓய்வுபெறலாம் என கட்டுரைகள் வெளியிட்ட நேரம் அது. ``சிகிச்சை முடிந்ததும் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஆனால், என்னால் சரியாக விளையாட முடியவில்லை. அந்த நேரம் மனம் உடைந்துவிட்டேன். தூக்கம் வராமல் தவித்தேன். விடியற்காலை 3 மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டு மும்பை வீதிகளில் தனியாகச் சுற்ற ஆரம்பித்தேன். என்னால் ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. `கடவுளே என்னை கிரிக்கெட் விளையாட விடு. இல்லையென்றால் கொன்றுவிடு. கிரிக்கெட் விளையாடாமல் என்னால் ஒரு நாள், ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது’ எனக் கதறி அழுதேன். கிரிக்கெட்டைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது’’ என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் சச்சின். டென்னிஸ் எல்போ காயத்திலிருந்து மீள கடுமையாகப் போராடினார் சச்சின். அறுவைசிகிச்சைகள் முடிந்ததும் உடனே விளையாடவும் வந்துவிட்டார். பேட்டின் எடையைக் குறைத்து, ஆட்டத்தின் ஸ்டைலை மாற்றி, புதிய ஸ்ட்ரோக்குகளை விளையாட முயன்று என மீண்டும் ஜீரோவில் இருந்து ஆரம்பித்தார் சச்சின். டென்னிஸ் எல்போ காயத்துக்குப் பிறகுதான் கிரிக்கெட்டில் பல உச்சங்களைத் தொட்டார். 

அந்த நடை!

``பல சதங்கள் அடித்திருக்கிறேன். பல சாதனைகள் படைத்திருக்கிறேன். ஆனால், வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் வீரநடை நடந்திருக்கிறேன். ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து இந்தியாவை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற வைத்தப் பிறகு வீரநடை நடந்து பெவிலியனுக்குப் போனேன். அப்போது என் மனதில் நான் ஒரு விவியன் ரிச்சர்ட்ஸ் போல உணர்ந்தேன்’’ என்று சொல்லியிருக்கிறார் சச்சின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பிரையன் லாராவின் சாதனையைக் கடந்தபோது சச்சின் இப்படிச் சொன்னார், ``வெற்றி என்பது ஒரு பயணம். அதன் நடுவில் கற்கள் வீசப்படும். அதை மைல்கற்களாக மாற்றக் கற்றுக்கொண்டால் தொடர்ந்து வெற்றிபெறலாம்’’ என்றார். 

ஒரே அலுவலகத்தில் நீண்டகாலம் வேலை செய்பவர்களுக்கு வேலையில் ஒருவிதமான சலிப்பு ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கும் இது அடங்கும். ஆனால், 24 ஆண்டுகளாக எந்தவிதமான சலிப்பும் இல்லாமல் புதிதாகக் களம் இறங்கும் பேட்ஸ்மேனைப்போல் ஆடுவது சச்சினின் சுபாவம். கிரிக்கெட் மைதானத்தில் எந்தப் பக்கமாகவும் ஷாட்டுகளை அடிக்கும் திறன் படைத்த சச்சின், ஓய்வுபெறும் நாள் வரை நெட் பிராக்ட்டீஸ்களைத் தவறவிட்டதில்லை. காயங்களால் அவதிப்பட்ட சச்சின் பலமுறை ஃபார்ம் இல்லாமல் திணறியிருக்கிறார். ஆனால், மீண்டும் அவர் சதங்கள் அடிக்க அவருக்கு துணை நின்றது எக்காரணத்தைக்கொண்டும் அவர் பயிற்சியை விடாததுதான். 

இன்னமும் இந்தியா விளையாடும் மேட்சுகளில் நான் ஸ்ட்ரைக்கராக, ஸ்டைலிஷாக பேட்டைப் பிடித்தபடி, ஒற்றைக்காலில் சச்சின் நின்றுகொண்டு இருப்பதுபோலவே இருக்கிறது. இன்றல்ல... கிரிக்கெட்டின் இறுதிவரை சச்சின் கொடுத்த நம்பிக்கையை வேறு எந்த இந்தியனும் எப்போதும் கொடுக்கவே முடியாது!