Published:Updated:

ஷாருக்கான் நம்பிக்கை... தினேஷ் கார்த்திக்கின் தன்னம்பிக்கை... கலக்கல் கேப்டன்! #RRvsKKR

ஷாருக்கான் நம்பிக்கை... தினேஷ் கார்த்திக்கின் தன்னம்பிக்கை... கலக்கல் கேப்டன்! #RRvsKKR
ஷாருக்கான் நம்பிக்கை... தினேஷ் கார்த்திக்கின் தன்னம்பிக்கை... கலக்கல் கேப்டன்! #RRvsKKR

வெற்றி கிடைக்கும்வரை களத்தில் நின்று 23 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் என அவுட் ஆகாமல் 42 ரன்கள் எடுத்து கேப்டனின் முக்கியத்துவத்தை கொல்கத்தாவுக்கு மட்டும் அல்ல எல்லா ஐபிஎல் ரசிகர்களுக்குமே உணர்த்தினார் தினேஷ் கார்த்திக்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் களத்திலும் ஆளப்போறான் தமிழன் மொமன்ட்கள்தான். சென்னை சூப்பர் கிங்ஸில் பாடம் பயின்றவன் பஞ்சாபுக்குப் பறந்து போய் சென்னையை எப்படி தோற்கடித்தானோ, அதேபோல் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுத்தந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை உச்சத்துக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறான் சைலன்ட் தமிழன். #RRvKKR

`இந்த நீதிமன்றம் பல விநோதமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என்பதுபோல இந்த ஐ.பி.எல் பல கேப்டன்களைச் சந்தித்திருக்கிறது. `கூல்’ கேப்டன்கள் முதல் `ஆங்கிரி பேர்டுகள்’ வரை கேப்டன்கள் பலவிதம். ஆனால், இவர் மட்டும் அதில் வித்தியாசம். என்ன செய்கிறார் என்றே வெளியே தெரியவில்லை. ஆனால், மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. 

இந்த ஆண்டு ஐ.பி.எல்-ன் தொடக்கத்தில் செம வீக் கேப்டனாகப் பார்க்கப்பட்டவர்தான் தினேஷ் கார்த்திக். முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியும் தினேஷ் கார்த்திக் மீது யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 202 ரன்கள் எடுத்தும் தோல்வி. வினய் குமாருக்கு அந்த கடைசி ஓவரை ஏன் கொடுத்தார் என்பதில் ஆரம்பித்து, ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் முடிவுகள் எல்லாமே தப்பு என்பதில் வந்து நின்றது. முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் அடுத்தடுத்து தோல்வி. தினேஷ் கார்த்திக்கிடம் தலைமைப் பண்புகள் இல்லை என்று கிட்டத்தட்ட முடிவே கட்டிவிட்டார்கள். ஆனால், அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் நம்பிக்கை இழக்கவில்லை.

 கொல்கத்தா அணிக்குள் அடுத்த ஆறு ஆண்டுகள் வரை விளையாடக்கூடிய இளைஞர்கள் இருக்கவேண்டும் என்பது ஷாரூக்கானின் டீம் பிளான். அதனால்தான் இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இளம் வீரர்களை வரிசைகட்டி எடுத்துக்கொண்டே இருந்தார்கள். 19 வயது ஷுப்மான் கில், 18 வயது நாகர்கோட்டி என முழுக்க முழுக்க இளம் படைதான். கொல்கத்தா அணியில் சீனியர்கள் என்றால் மிட்செல் ஜான்சனும், கேப்டன் தினேஷ் கார்த்திக்கும்தான்.

``இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக என்னுடைய திட்டங்களை கெளதம் கம்பீரிடம் சொன்னேன். சில விஷயங்கள் சரியாக வரவில்லை. அமைதியான முறையில் பிரிவதென்று முடிவெடுத்தோம். கன்சிஸ்டன்ஸி, பக்குவம், பொறுப்பு என கடந்த 10 ஆண்டுகளாக, ஐ.பி.எல் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் காட்டும் பர்ஃபாமென்ஸ் வேற லெவல். அவர் நிச்சயம் கொல்கத்தாவுக்கு வெற்றிகளைப் பெற்றுத்தருவார்'' என்றார் ஷாரூக் கான். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. 

 அமைதியாக, எந்த அதிரடியும், ஆர்பாட்டமும் இல்லாமல் தொடர்து அடுத்தடுத்த  இரண்டு போட்டிகளில் வென்று 'இவன் வேற மாதிரி' என்று கிரிக்கெட் உலகுக்குக் காட்டியிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

ராஜஸ்தான் போட்டியில் நடந்தது என்ன?

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்  பெளலிங்கையே தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸின் கோட்டையான இந்த ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் தொடர்ந்து 5 ஆட்டங்களாக தோல்வியே கண்டதில்லை என்கிற கெத்துடன் களமிறங்கியது ராஜஸ்தான். கேப்டன் ரஹானே, ஷார்ட் இருவரும் ஓப்பனிங் இறங்க, எதிர்பக்கம் ஸ்பின்னர்களுடன் ஆட்டத்தை தொடங்கினார் கேப்டன் தினேஷ் கார்த்திக். 

பவர்ஃபுல் ஸ்பின்னர்ஸ்!

பியுஷ் சாவ்லா வீசிய முதல் ஓவரில் 3 ரன், குல்தீப் வீசிய இரண்டாவது ஓவரில் நான்கு ரன், மீண்டும் சாவ்லா வீசிய மூன்றாவது ஓவரில் வெறும் 1 ரன் என பவர்ப்ளேவின் பாதி ஓவர்களில் வெறும் 8 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் எடுக்க, நம்பிக்கை கொண்டார் தினேஷ் கார்த்திக். ஆனால், விக்கெட் எதுவும் விழாததால் நான்காவது ஓவரை குல்தீப்பிடம் கொடுக்காமல் சுனில் நரேனிடம் கொடுத்தார் கேப்டன்.

நரேனை சுளுக்கெடுத்தார் ரஹானே. முதல் நான்கு பந்துகளிலுமே தொடர்ந்து நான்கு பவுண்டரிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பறந்தது. இந்த ஓவரில் மட்டும் ராஜஸ்தானுக்கு 18 ரன்கள் கிடைத்தது. ஸ்பின்னில் இருந்து வேகப்பந்து வீச்சுக்கு மாறினார் கார்த்திக். இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மவி பெளலிங் போடவந்தார். சிக்ஸர், பவுண்டரி உள்பட இந்த ஓவரில் 13 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான். இரண்டு ஓவர்களும் மாறி மாறி ரன்கள் குவிந்ததால் பவர்ப்ளேவின் கடைசி ஓவரை மீண்டும் சாவ்லாவிடம் கொடுத்தார் கார்த்திக். 

பெளலர்களை மாற்றிக்கொண்டேயிரு!

சாவ்லா ஓவரில்  ரஹானேவால் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் விழாமல் 48 ரன்கள் எடுத்துவிட்டது ராஜஸ்தான். மீண்டும் பெளலிங் சேஞ்ச். இந்த முறை பந்து நித்திஷ் ராணா கையில். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் நடந்தது அந்த மேஜிக்கல் ட்விஸ்ட்.

மின்னல் வேக ரன் அவுட். ரஹானே எதிர்பார்க்கவே இல்லை. ராணா பந்தை லெக் சைடில் அடிக்க முயன்று  கிரிஸைவிட்டு வெளியே வரை சட்டென பந்தை எடுத்து ஸ்டம்ப்பில் அடித்தார் தினேஷ் கார்த்திக். ரஹானே அவுட் என்றாலும் இனிதான் ஆபத்தே இருக்கிறது என பயந்துகொண்டுதான் இருந்தார்கள் கொல்கத்தா வீரர்கள். காரணம் சஞ்சு சாம்சன்.

சோர்வான சாம்சன்!

சாம்சனுக்கு ஏனோ  இன்று செட் ஆகவில்லை. குல்தீப் யாதவின் பந்துகளை விரட்டி அடிக்காமல் சிங்கிள்ஸ் எடுப்பதிலேயே கவனம் செலுத்தினார். அந்த நிதானமான ஆட்டம் அடுத்த ஓவரிலும் இருந்திருக்கலாம். ஆனால், அவசரப்பட்டார் சாம்சன். மவியின் பந்தை சிக்ஸர் அடிக்கவேண்டும் என்று தூக்கியடிக்க, அது பேட்டில் சரியாக மீட் ஆகாமல் கேட்ச்  ஆனது. 7 ரன்னில் சாம்சன் அவுட் ஆக, ஆட்டம் கொல்கத்தா கன்ட்ரோலுக்குப் போனது.

டி'ஷார்ட் 44 ரன்களில் ஆட்டம் இழக்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 14 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். நரேனின் ஐபிஎல் வரலாற்றில், அதிக ரன் கொடுத்து விக்கெட் எடுக்காமல் இருந்தது இன்றுதான் (4-0-48-0)

ராஜஸ்தான் அணியை சுருட்டியது கொல்கத்தாவின் ஸ்பின் அட்டாக்தான். சாவ்லா, குல்தீப், ராணா என மூன்று ஸ்பின்னர்களும் வீசிய 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான். பெளலிங் ரொட்டேஷன் இந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்ததுதான் தினேஷ் கார்த்திக்குக்கான கிரெடிட்.

பொறுப்பாக ஆடினால் வெற்றி!

விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடினால் போதும், வெற்றி உறுதி என்கிற நிலையில் பேட்டிங் செய்ய வந்த  கொல்கத்தாவுக்கு முதல் ஓவரே அதிர்ச்சி. கிறிஸ் லின் மூன்றாவது பந்திலெயே க்ளீன் போல்ட். கெளதம் வீசிய சுழற்பந்து ஸ்டம்ப்புகளை சரித்தது.  ராபின் உத்தப்பா உள்ளே வர, சுனில் நரேன் ஃபார்முக்கு வந்தார்.

மூன்று ஓவர் வரை நிதானம் காத்த சுனில் நரேன், குல்கர்னியின் நான்காவது ஓவரில் சுழன்றடித்தார். தொடர்ந்து மூன்று பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரிகள். அடுத்த ஓவர் உத்தப்பாவின் ருத்ரதாண்டவம் .உனத்கட் வீசிய இந்த ஓவரிலும் மூன்று பவுண்டரிகள். பவர்ப்ளேவின் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 53 ரன்களுடன் கெத்தாக நின்றது கொல்கத்தா.

ஒன்பதாவது ஓவரில் சுனில் நரேன் ரன் அவுட். 25 பந்துகளில் 35 ரன்கள் என பதற்றப்படாமல் ஆடிய நரேன், ஒரு ரன்னுக்காக அவசரப்பட்டு ஓட, அவுட் ஆனார். ஆனால், ராபின் உத்தப்பாவிடம் எந்த அவசரமும் இல்லை. செம நிதானமான ஆட்டம். அடித்து ஆட வேண்டிய பந்துகளை மட்டுமே அடித்தார். மற்றபடி சைலன்ட் சிங்கிள்ஸ்தான். 

13-வது ஓவரில் ரன்ரேட்டை கொஞ்சம் உயர்த்துவதற்காக பவுன்சராக, நல்ல லைனில் வந்த பந்தை சிக்ஸருக்காக தூக்கியடித்தார் உத்தப்பா. பவுண்டரி லைனில் பென் ஸ்டோக்ஸ். சிக்ஸருக்குப் போக வேண்டிய பந்தை தடுத்து, அந்தரத்திலேயே பவுண்டரி லைனுக்கு முன்னாள் பந்தைப் பறக்கவிட்டு, அவர் பவுண்டரி லைனுக்குள் போய் வந்து, பறந்துவந்த பந்தை அசால்ட்டாகப் பிடித்து என... சில விநாடிகளில் சிறப்பான கேட்ச்  மூலம்  கவனம் ஈர்த்தார் ஸ்டோக்ஸ். ஆனால், அவரின் பந்துவீச்சில் எந்த அசத்தலும், அதிரடியும் இல்லை!

இது கேப்டன் ஆட்டம்!

கேப்டன் தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார். முதல் பந்தில் 2 ரன், அடுத்த பந்தில் 2 ரன், மூன்றாவது பந்தில் பவுண்டரி என மூன்று பந்துகளில் 8 ரன் என வந்த ஓவரிலேயே ஃபார்முக்கு வந்துவிட்டார். தேவையான ரன் ரேட் ஓவருக்கு 8 ரன் என்றபோதும்  தினேஷ் கார்த்திக்கும், ரானாவும் அவசரப்படாமல் ஆடினார்கள் . 

கடைசி நான்கு ஓவரில் 35 ரன்கள் தேவை. உனத்கட் பந்து வீசினார். தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர், ராணா ஒரு சிக்ஸர் என இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. ரஹானேவின் எந்த பெளலிங் சேஞ்சும் எடுபடவே இல்லை. கடைசி 2 ஓவரில் 10 ரன் தேவை. லாலின் வீசிய இந்த ஓவரில் ஆட்டம் முடிந்தது. சிக்ஸருடன் வெற்றியைக் கொண்டாடினார் தினேஷ் கார்த்திக்.

வெற்றி கிடைக்கும்வரை களத்தில் நின்று 23 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் என அவுட்டாகாமல் 42 ரன்கள் எடுத்து கேப்டனின் முக்கியத்துவத்தைக் கொல்கத்தாவுக்கு மட்டும் அல்ல, எல்லா ஐ.பி.எல் ரசிகர்களுக்குமே உணர்த்தினார் தினேஷ் கார்த்திக். 

கலக்குங்க டிகே!

அடுத்த கட்டுரைக்கு