Published:Updated:

கோலியின் அனைத்து பிளான்களும் ஃப்ளாப்... தொடரும் ஆர்.சி.பி. சோகம்! #MIvsRCB

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோலியின் அனைத்து பிளான்களும் ஃப்ளாப்...  தொடரும் ஆர்.சி.பி. சோகம்! #MIvsRCB
கோலியின் அனைத்து பிளான்களும் ஃப்ளாப்... தொடரும் ஆர்.சி.பி. சோகம்! #MIvsRCB

'இந்த ஐ.பி.எல்-ல டாஸ் வின் பண்ணிட்டாலே மேட்ச் வின் பண்ணிட்ட மாதிரிதான்' என்ற அனைவரின் எண்ணத்திலும் கரியைப் பூசிவிட்டார்கள் இதயத் திருடர்கள். கடைசி ஓவர்வரை வெற்றிக்காகப் போராடிப் போராடி தோற்றுக்கொண்டிருந்த மும்பை இந்தியன்சுக்கு முதல் வெற்றியையும் பரிசளித்துவிட்டார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`இந்த ஐ.பி.எல்-ல டாஸ் வின் பண்ணிட்டாலே மேட்ச் வின் பண்ணிட்ட மாதிரிதான்' என்ற அனைவரின் எண்ணத்திலும் கரியைப் பூசிவிட்டார்கள் இதயத் திருடர்கள். கடைசி ஓவர் வரை வெற்றிக்காகப் போராடிப் போராடி தோற்றுக்கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸுக்கு முதல் வெற்றியையும் பரிசளித்துவிட்டார்கள். 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றுவிட்டது ஆர்.சி.பி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏன் தோற்றது என்று எட்டு வருடமாகச் சொல்லிவரும் அதே காரணத்தைத்தான் இப்போதும் சொல்லப்போகிறோம். ஆம், அதேதான்...அந்த பௌலிங் தான். #IPL2018

முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகள். உமேஷ் யாதவ் வீசிய அந்த இரண்டு டெலிவரிகளும் உலகத்தரம். ஒரே லென்த்தில் இரண்டு பந்துகளையும் பிட்ச் செய்தார். ஆனால், வலது, இடது என இரு வேறு விதமான பேட்ஸ்மேன்களுக்கும் உள்ளே பந்தை ஸ்விங் செய்ததுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். இஷான் கிஷான் போல்டான அந்த பந்து வான்கடே அரண்டுவிட்டது. இப்படி ஒரு அசாத்திய தொடக்கம். ஆனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அடித்தது 213. அந்த அளவுக்கு மோசமாக இருந்தது ஆர்.சி.பி-யின் பௌலிங். இதற்கு முழுக்க முழுக்க பௌலர்களை மட்டுமே குறை சொல்லிட முடியாது.

டாஸ் போடுவதற்கு முன்பு ஆர்.சி.பி அணியில் அறிமுகமாவதற்காக கோரி ஆண்டர்சன் கையில் Debut Cap கொடுக்கப்படுகிறது. காலின் டி கிராந்தோம், மொயீன் அலி என ஏலத்தில் எடுத்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு ரீப்ளேஸ்மென்ட் வீரராக வந்தவரைக் களமிறக்கினார்கள். இடது கை பௌலர் வேண்டுமென்பதால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா? வெள்ளை நிறப் பந்தில் ஆண்டர்சன் விளையாடி 230 நாள்கள் ஆகியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஆடியதும் வெறும் மூன்றே முதல் தரப் போட்டிகள். அதிலும் பெரிதாகச் சோபிக்கவில்லை.  இது ஒருபுறமிருக்க, கேப்டன் கோலியின் பௌலிங் சாய்ஸ் வியக்க வைத்தது. 

கடந்த 3 சீசன்களாக, குருனால் பாண்டியா ஓவரில் டி வில்லியர்ஸ் விக்கெட்டைப் பறிகொடுப்பதைப் பற்றியும், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் விராட் திணறுவதைப் பற்றியும், லெக் ஸ்பின்னில் ரோஹித் ஷர்மா தடுமாறுவதைப் பற்றியும்தான் அத்துனை பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். கடந்த 28 இன்னிங்ஸில் 9 முறை லெக் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்துள்ளார் ரோஹித். ஸ்டிரைக் ரேட் கூட வெறும் 111.6 தான். அப்படியிருக்கையில் 9-வது ஓவர் வரை சஹால் கையில் கோலி பந்தைக் கொடுக்கவேயில்லை. ரோஹித் நன்றாக செட்டில் ஆகட்டும் என்று காத்திருந்தார்போல. சரி, தொடக்கத்தில்தான் இப்படியென்றால் ஃபினிஷிங் படுமோசம். 

மும்பை அணி 17 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருக்கிறது. வோக்ஸ் இரண்டு ஓவர்கள்தான் வீசியிருக்கிறார். சிராஜ், சஹால், ஆண்டர்சன் ஆகியோருக்கும் தலா 1 ஓவர் கைவசம் இருக்கிறது. முதல் ஓவரில் 16 ரன்கள் கொடுத்திருந்த சிராஜ், அடுத்த 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். அவர் 1 ஓவரும், வோக்ஸ் 2 ஓவர்களும் (அதுவரை எகானமி - 8.00) போடுவதுதான் சரி. எந்தக் கேப்டனாக இருந்தாலும் அதைத்தான் செய்வார்கள். பட் கோலி...! அந்த ஓவர் சிராஜுக்கு. அடுத்த ஓவர் வோக்ஸ். அப்போ கடைசி ஓவர்..? கோரி ஆண்டர்சன் வீச, ரோஹித் சிக்ஸரும் ஃபோருமாக விளாச அந்த ஓவரில் 21 ரன்கள். இந்தப் போட்டிக்கு முன்புவரை ஐ.பி.எல் வரலாற்றில் டெத் ஓவர்களில் மிகக் குறைந்த ரன்ரேட் வைத்திருந்த அணி மும்பை இந்தியன்ஸ்தான். அதுவும் வெறும் 8.00! ஆனால், இந்தப் போட்டியின் கடைசி 5 ஓவர்களில் நம் பெங்களூரு வள்ளல்கள் கொடுத்தது 70 ரன்கள். இங்கு ஒரு 20 ரன்களையாவது குறைத்திருந்தால் சேஸிங் கொஞ்சம் ஈசியாக இருந்திருக்கும். 

இந்தத் தவறெல்லாம் செய்தது போதாதென்று, சொதப்பிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவை வேறு ஃபார்முக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். முதல் ஓவரில் களமிறங்கியவர், கடைசி ஓவர்வரை நின்று கதகளி ஆடிவிட்டார்.  வாஷிங்டன் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில்,அடித்த அந்த கவர் டிரைவ் கோலிக்கே சவால் விடும். அப்படியொரு கிளாசிக்கல் ஷாட். முதல் இரண்டு ஓவர்களை சூப்பராக வீசிவிட்டு, கெத்தாக இரண்டாவது ஸ்பெல் போட வந்த உமேஷை, முதல் பந்திலேயே சிக்ஸருக்கு அனுப்பிய அந்த அடி...மிரட்டல்! உமேஷ் காலி. அவரின் இரண்டாவது ஸ்பெல்லில் 28 ரன்கள். எல்லாம் ரோஹித் உபயம். 

ஆனால் ரோஹித் வெறுமனே சிக்ஸர்களும் பௌண்டரிகளும் அடிக்கவில்லை, அடிக்க முற்படவில்லை. சொல்லப்போனால் மிகவும் சென்சிபிளாக விளையாடினார். முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட் இழந்துவிட்ட நிலையில், இன்னிங்ஸைக் கட்டமைப்பதில் கவனமாக இருந்தார். வழக்கமான மொக்கை போடாமல் ஸ்டிரைக் ரொட்டேட் செய்தார். மறுமுனையில் ஈவின் லூயிஸ் வாணவேடிக்கை காட்ட, பவர்பிளே முடிவில் 60 ரன்கள். அப்போதே ஆட்டத்தை தன்பக்கம் எடுத்து வந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ். 

லூயிஸ் அவுட்டாகும் வரை அடிக்கத் தோதான பந்துகளை மட்டும் தேர்வு செய்து விளையாடினார் ரோஹித். காட்டுத்தனமாக அடித்துக்கொண்டிருந்த அந்த கரீபிய வீரர் ஸ்டிரைக்கில் இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தார். 15 ஓவர்கள் முடிந்திருந்தபோது, ரோஹித் சந்தித்திருந்தது வெறும் 34 பந்துகள் மட்டுமே! அவரும் செட்டிலானார். ரன்ரேட்டும் ஒன்பதுக்குக் குறையாமல் நகர்ந்தது. அந்த அளவுக்கு இன்னிங்ஸை கணக்கிட்டு கச்சிதமாக நகர்த்தினார். லூயிஸ் அவுட்டானதும் ஹிட்மேன் மோடுக்கு மாறினார். தான் அதிக நேரம் ஸ்டிரைக்கில் இருப்பதை உறுதி செய்தார். குருனால், பொல்லார்ட் என அடுத்தடுத்த வந்தவர்களும் ரோஹித்துக்கு ஸ்டிரைக் கொடுப்பதில் கவனமாக இருந்தனர். 13-வது ஓவரில் 9.08-ஆக இருந்த ரன்ரேட் சத்தமில்லாமல் உயர்ந்து பத்தைத் தாண்டியது. மும்பை 213 என்ற இமாலய இலக்கை எட்டியது. 

ரோஹித் தெளிவாக இருந்த விஷயத்தில், மும்பை அணி கவனமாக இருந்த விஷயத்தில் ஆர்.சி.பி, கோலி கவனமாக இல்லை. அவர்களிடம் தெளிவும் இல்லை. மெக்கல்லம் இல்லாததால் தானே ஓப்பனிங் இறங்கினார் கோலி. 20 ஓவர்களும் அவுட்டாகாமல் நின்றார். ஆனால் அது என்ன பயன் கொடுத்தது? அவரும், டி வில்லியர்சும் டாப் ஆர்டரில் களம் கண்டுவிட, மிடில் ஆர்டர் ரொம்ப வீக் ஆனது. அவர்களால் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் ஆடவும் முடியவில்லை. கோலிக்கு ஸ்டிரைக் ரொட்டேட் செய்யவும் முடியவில்லை. பவர்பிளே முடிந்து 16-வது ஓவர் வரை ஒரு ஓவரில்கூட 10 ரன்களைத் தாண்டி எடுக்க முடியவில்லை. ரன்ரேட் 8 கூட இல்லை. கடைசியில் நிலைமை... 5 ஓவர்களில் 106 ரன்கள் தேவை. எப்படி முடியும்?

மனன் வோரா, பார்த்திவ் பட்டேல் என்று இரண்டு ஓப்பனர்களை வைத்துக்கொண்டும், தானே ஓப்பனிங் இறங்கியது நிச்சயம் தவறான முடிவுதான். ஏ.பி - இன்று என்ன ஆனதோ தெரியவில்லை? 5 ஓவர்கள்தான் முடிந்திருந்தது, ரன்ரேட்டும் ஒன்பதற்கும் மேல் இருக்கிறது. அப்படியிருக்கையில் தேவையில்லாத அவசரம். அந்த விக்கெட், அப்போதே ஆட்டத்தை மும்பை கையில் திணித்துவிட்டது. இப்படி இரண்டு வீரர்களை மட்டுமே ஒரு அணி நம்பியிருக்கும்போது அவர்கள் இருவருமே டாப் ஆர்டரில் களமிறங்குவது நிச்சயம் சரியான முடிவாக இருக்காது. அதற்கு இந்தப் போட்டி நல்ல எடுத்துக்காட்டு. 

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட இந்தப் போட்டியில் எத்தனையோ விஷயங்கள் இருந்தது. 'அடுத்த கிறிஸ் கெய்ல்' என்று வர்ணிக்கப்படும் ஈவின் லூயிஸ், தன் கரீபிய வித்தையை மொத்தமாக இறக்கினார். முகமது சிராஜ், வாஷிங்டன் பந்துகளை அட்ரஸ் இல்லாமல் ஆக்கினார். ஆபத்தான பௌலராகக் கருதப்படும் சஹாலின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்ஸர்கள் அடித்து அலறவிட்டார். 42 பந்துகளில் 65 ரன்கள். துவண்டு கிடந்திருந்த மும்பை இன்னிங்ஸை தூக்கி நிறுத்துவிட்டுச் சென்றார். கடைசி கட்டத்தில் ஹர்டிக் வந்து வாணவேடிக்கை காட்டி 5 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இப்படி இவர்கள் அடித்துக்கொண்டிருக்க, அந்த டென்ஷனையெல்லாம் அம்பயரிடம் காட்டி சண்டை போட்டார் கோலி.

ஐ.பி.எல்-லின் ஜாலி மேன் டேனி மாரிசன் அவருக்கு ஆரஞ்ச் கேப் கொடுத்தபோதும், "இப்போது இதை அணியும் மனநிலையில் நான் இல்லை" என்று வருந்தினார். அந்த வருத்தத்தில், அவர் ஆடிய அந்த அற்புத இன்னிங்ஸ், ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனை எல்லாம் மறைந்துபோனது. வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தம் அவரை அப்படி நடந்துகொள்ளச் செய்தது. 

ஆர்.சி.பி மீண்டுவருவது அவர்கள் பௌலர்கள் கையில் மட்டுமில்லை. மோசமான டீம் செலக்‌ஷன் செய்யும் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரின் கையிலும் இருக்கிறது. வழக்கமாக பாதித் தொடரில் சொதப்பும் பெங்களூரு இந்த முறை முதலில் இருந்தே தடுமாறி வருகிறது. பலமான அணியாக இருந்தும் வெற்றியை மிஸ் செய்வது எதனால் என்பதை அவர்கள் இனிமேலாவது யோசிக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு