Published:Updated:

கெயில் புயலுக்கு ஈடுகொடுத்த எம்.எஸ்.டி மேஜிக் - ஒரு பவுண்டரியில் மிஸ்! #CSKvsKXIP

கெயில் புயலுக்கு ஈடுகொடுத்த எம்.எஸ்.டி மேஜிக் - ஒரு பவுண்டரியில் மிஸ்! #CSKvsKXIP
கெயில் புயலுக்கு ஈடுகொடுத்த எம்.எஸ்.டி மேஜிக் - ஒரு பவுண்டரியில் மிஸ்! #CSKvsKXIP

முதுகே வளையாமல் நின்றபடி ஆடுவதுதான் கெயில் ஸ்டைல். ஆனால், வழக்கத்துக்கு மாறான முதல் ஷாட். அதிலேயே தெரிந்தது ஒரு முடிவோடுதான் களமிறங்கியிருக்கிறார் என.

'ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகள்... இரண்டெல்லாம் இல்லை, எக்கச்சக்க ஆடுகள் நேற்று மொகாலியில் சந்தித்துக்கொண்டன. கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் பி டீம் என இரண்டு அணிகள் மோதிய போட்டிதான் நேற்று நடந்தது. தனது கேப்டன்சி திறமையால் பஞ்சாபை வெற்றி அடையச் செய்த அஸ்வின், கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும் சென்னைக்கு வெற்றியை தாரை வார்க்கக் காத்திருந்த மோகித். இருவருமே சென்னை அணியின் வார்ப்புகள்

டாஸ் வென்றால் இனி மைக்கை நீட்டி கேட்க எல்லாம் தேவையில்லை போல. எல்லாரும் பீல்டிங்கைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தோனியும் அப்படியே. மொகாலி பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளமென்பதால் சேஸிங் செய்வது சுலபமாக இருக்கும் என தோனி நினைத்திருக்கலாம். சென்னையில் காயமடைந்த ரெய்னாவுக்குப் பதில் முரளி விஜய், பஞ்சாப் அணியில் காயமடைந்த அக்சருக்குப் பதில் பரீந்தர் ஸ்ரன். ஸ்டோய்னிஸ் பெரிதாக சோபிக்காததால் கடோத்கஜன் கெயில் கையில் பேட்டைக் கொடுத்து 'அந்தா வெள்ளைக் கலருல ஒண்ணு பவுலர் கையில இருக்கு பாரு, அதை அப்பப்ப வெளியே அனுப்பிவிடு' என கிசுகிசுத்து வண்டியேற்றிவிட்டார் சேவாக்.

`என்னையவா ஏலத்துல எடுக்காம லூஸ்ல விடுறீங்க?' என தேக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் க்ரீஸில் காட்டினார் கெயில். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே முன்னால் கால் வைத்து ஒரு பவுண்டரி. 'சாப்பிட்டது செரிக்கல' ரீதியில் முதுகே வளையாமல் நின்றபடி ஆடுவதுதான் கெயில் ஸ்டைல். ஆனால், வழக்கத்துக்கு மாறான முதல் ஷாட். அதிலேயே தெரிந்தது ஒரு முடிவோடுதான் களமிறங்கியிருக்கிறார் என. சென்னைக்கு எதிராக கெயில் எப்போது ஆடினாலும் ஆஃப் ஸ்பின்னரைக் கொண்டு அவரை பெவிலியனுக்கு அனுப்புவார் தோனி. நேற்றும் அந்த நினைப்பில்தான் தமிழ்ப்புலவர் ஹர்பஜனைக் கொண்டு வந்தார். பாவம் ஒரே ஓவரில் 19 ரன்கள் பறிகொடுத்தார் பாஜி!

தாகூர், சஹார், பாஜி என யாரையும் பீம்பாய் விட்டுவைக்கவில்லை. பந்து பேட்ஸ்மேனை தொடும் வேகத்தைவிட பவுண்டரி தொடும் வேகம்தான் அதிகமாக இருந்தது. 'Give me more' என வளைத்து வளைத்து அடித்தார் கெயில். பார்வையாளர்கள் எல்லாம் பீல்டர்களாக மாறினார்கள். விளைவு, பவர்ப்ளே முடிவில் 75 ரன்கள். அதற்கடுத்த ஓவரிலேயே பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் கெயில். 22 பந்துகளில் அரைசதம். 7 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள். 'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?' என சென்னை ரசிகர்கள் புலம்ப, 'அழாதே தோழா, பஞ்சாபின் கோதுமை வயல்களில் பச்சிளம்குழந்தையாக ஓடித்திரிந்த நான் இன்று உன் துயர் துடைக்க இருக்கிறேன்' என ரீ-என்ட்ரியானார் பாஜி. 'இந்தா அடிச்சுக்க' என அவர் ஆசை காட்டிய ஃபுல் டாஸ் பாலை பிராவோ கையில் கொடுத்து வெளியேறினார் ராகுல்.

இதுதான் சமயம் என பவுலிங் சேஞ்ச் கொண்டுவந்தார் தோனி. வாட்டோ வீசிய ஓவர் முதன்முறையாக பவுண்டரி இல்லாமல் கடந்தது. அதன்பின் வந்த பிராவோ ஓவரும் அப்படியே. பீம்பாய் கெயில் பற்றி ஒரு பழமொழி உண்டு. 'என்ன டெலிவரி போட்டாலும் சிக்ஸ் அடிப்பவர் எதிர்ப்பார்க்காத நேரத்தில் சப்பையாக அவுட்டாவார்' என! நேற்றும் அதுதான் நடந்தது. வாட்சன் வீசிய ஷார்ட் பாலை கெயில் லேசாக தொட, அது ஃபைன் லெக்கில் இருந்த தாஹிர் கையில் சரணடைந்தது. கெயில் அவுட்டாகும்போது ஸ்கோர் 12 ஓவர்களில் 127! அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் அவர்களின் பெயர்களை டைப் செய்வதற்கு முன்பாகவே அவுட்டாகி வெளியேறினார்கள். ஆரோன் பின்ச் இரண்டாவது முறையாக கோல்டன் டக். அடுத்த 48 பந்துகளில் தட்டித்தட்டி 60 ரன்கள் எடுத்தது பஞ்சாப். 220-க்கு குறையாது என நினைத்த ஸ்கோரை 197-க்கே சுருட்டினார்கள் சென்னை பவுலர்கள். முக்கியமாக பிராவோவும் தாஹிரும்.

நீண்ட இடைவேளைக்குப் பின் சென்னை அணிக்காக ஓபனிங் இறங்கினார் விஜய். தேவைப்பட்ட ரன்ரேட் பத்து என்பதால் முதல் பந்தில் இருந்தே அடித்தாட வேண்டிய கட்டாயம். போன மேட்ச்சில் சூப்பர் ஸ்டார்ட் அளித்த வாட்சன் 11 ரன்களில் வெளியேற ஒன் டவுனில் இறங்கினார் ராயுடு. நான்கு ஓவர்களில் 40 ரன்கள் என நல்ல ரன்ரேட் இருந்த நிலையில், 'ஐ மிஸ் மை பங்காளி வாட்சன்' என டை பந்தில் அவுட்டாகி வெளியேறினார் விஜய். அடுத்து இறங்கிய பில்லிங்ஸை சோதிக்க ஸ்பின் அட்டாக் கொண்டுவந்தார் அஸ்வின். இன்ஸ்டன்ட் பலன். அஸ்வின் பந்தை ஸ்வீப் அடிக்க முற்பட்டு பேடில் வாங்க ரிவ்யூ சென்று விக்கெட் வாங்கினார் அஸ்வின்.

தோனி...! அவர் களம்புகுமுன் ஒரு சின்ன டேட்டா! பஞ்சாப் அணியோடு ஆடுவதென்றால் தோனிக்கு பக்கெட் பிரியாணி சாப்பிடுவது போல. அந்த அணிக்கெதிராக நான்கு அரைசதங்கள். ஆவரேஜ் 45.30, ஸ்ட்ரைக் ரேட் 153.04! ஆனாலும் ஃபார்ம் அவுட்டில் இருப்பதால் டவுட்டில் இருந்தார்கள் ரசிகர்கள். எப்போதும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் தோனி முதல் பந்தில் இருந்தே ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யத் தொடங்கினார். வசதியான பந்து கிடைத்தால் பவுண்டரி விரட்டவும் தவறவில்லை. நான்காவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தார்கள் தோனியும் ராயுடுவும். 

முஜிபுர் ரகுமானின் பந்தை தடுத்து சிங்கிள் எடுப்பது, ஃபாஸ்ட் பவுலர்கள் சிக்கினால் பவுண்டரி அடிப்பது என டீசன்ட் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது இந்த ஜோடி. 13 ஓவர்கள் முடிவில் 107 ரன்கள். களத்தில் இரண்டு செட்டிலான பேட்ஸ்மேன்கள். இவர்களைப் பிரிக்காவிட்டால் ஆபத்து என்பதை உணர்ந்தே இருந்தார் அஸ்வின். அதன் விளைவு எப்போதும் பீல்டிங்கில் சொதப்பும் அஸ்வினே ராயுடுவை க்ளீன் த்ரோ செய்து ரன் அவுட்டாக்கினார். 'சரி அடுத்து பிராவோதானே, நல்லதுதான்' என ரசிகர்கள் நினைக்க, களமிறங்கியது ஜடேஜா!

அநியாயத்திற்கு பொறுமையை சோதித்தார் ஜடேஜா! சிக்ஸ் அடிக்க வேண்டிய பந்துகளில் எல்லாம் சிங்கிள் தட்ட, மறுபுறம் தோனிக்கு தசைபிடிப்பு வேறு! குட்டி பிஸியோதெரபி எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் களமிறங்கினாலும் குனிந்து ஆட சிரமப்படுவது கண்கூடாகத் தெரிந்தது. ஆனாலும் ஜடேஜா சொதப்புவதால் வலியோடு பொறுப்பையும் சேர்த்தே சுமந்தார். மோகித் சர்மாவின் 18-வது ஓவரை குறிவைத்தார். இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அதில் 19 ரன்கள். டார்கெட் சட்டென குறைந்தது. அரைசதம் கடந்தார் தோனி. 34 பந்துகளில்...! Much needed Innings! 

இரண்டு ஓவர்களில் 36 ரன்கள். வலி அதிகமாக இருப்பதால் மின்னல்வேகத்தில் ஓடவும் முடியாது. ஒரே ஆப்ஷன் க்ரீஸில் இருந்தபடி பந்தை சிதறடிப்பதுதான். அதைத்தான் செய்தார். டை வீசிய 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி, பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு டூஸ்...! டெடிகேஷன் லெவல் - தோனி! கடைசி ஓவரில் 17 ரன்கள். ஒருவேளை நல்ல உடல்நிலையில் இருந்திருந்தால் ஈஸியாக எடுத்திருக்கலாமோ என்னவோ! தோனி அசாத்திய வலியில் இருக்கிறார், குனிந்து ஆடவே முடியாது என்பதை உணர்ந்த மோகித் எல்லாப் பந்துகளையும் வைட் டெலிவரியாகவே போட்டார். அப்படியும் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி பயங்காட்டினார் தோனி. 'நான் சில்லறையாதான் தருவேன். சிக்ஸ் எல்லாம் நோ' என திரும்பத் திரும்ப வைட் லென்த் டெலிவரிக்கள். கடைசி பால் சிக்ஸ் அடிக்க, நான்கு ரன்களில் தோற்றது சென்னை. தோனி 44 பந்துகளில் 79! அரங்கம் எழுந்து நின்று கைதட்டுகிறது. அஸ்வின் உள்ளிட்ட பஞ்சாப் வீரர்களும்!

தோற்றிருந்தாலும் இந்த ஆட்டத்தில் இருந்து எடுத்துக்கொள்ளவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் சென்னைக்கு நிறையவே இருக்கின்றன. ஒன்று டெத் ஓவர் பவுலிங்! போன ஆட்டத்தில் சொதப்பிய பவுலர்கள் டெத் ஓவர்களில் சூப்பராக பந்துவீசினார்கள். இரண்டாவது தோனியின் ஃபார்ம்! அணியில் வீக் லிங்க்காக இருந்த மிடில் ஆர்டர் தோனியின் கம்பேக் என்ட்ரி மூலம் பலமாகியுள்ளது. ரெய்னாவும் ஜடேஜாவும் இதேபோல் ரீ-என்ட்ரியானால் ப்ளே ஆஃப் செல்வது சுலபமாகிவிடும். எது எப்படியோ, கண்கள் பூக்கக் காத்திருந்த தோனி ரசிகர்களுக்கு நேற்றைய தினம் ஜாக்பாட்தான்!

அடுத்த கட்டுரைக்கு