Published:Updated:

பெங்களூருவுக்கு இன்னொரு தோல்வி... பச்சை ஜெர்ஸி ராசியில்லையா? #RCBvsRR

பெங்களூருவுக்கு இன்னொரு தோல்வி... பச்சை ஜெர்ஸி ராசியில்லையா? #RCBvsRR
பெங்களூருவுக்கு இன்னொரு தோல்வி... பச்சை ஜெர்ஸி ராசியில்லையா? #RCBvsRR

கோலியின் முன் மிகப்பெரிய கேள்வி ஒன்று இருக்கிறது . அது, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கும் கோலியின் கேப்டன்ஸிக்கு தொடர்பேயில்லையா என்பதே. இன்னும் 11 போட்டிகள் இருக்கின்றன. கோலி பதில் சொல்லட்டும். 

இன்று ஐ.பி.எல்லில் இரண்டு போட்டிகள். இரண்டுமே முக்கியமான போட்டிகள். காரணம் கோலியும் தோனியும். முதல் போட்டியில் பெங்களூரை ஃப்ரண்ட் லோடிங் வாஷின் மிஷின் கணக்காக துவைத்து எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 

போட்டிக்கு முன்:

இந்தப் போட்டிக்கு முன் இரண்டு அணிகளும் 2 போட்டிகள் விளையாடி ஒரு வெற்றி பெற்றிருந்தன. இன்று ராஜஸ்தன் தன் டீமை மாற்றவில்லை. பெங்களூரு இருக்கும் இரண்டு ஸ்பின்னர்கள் போதாது என பவான் நெகியைச் சேர்த்திருந்தது. சின்ன மைதானம். அதில் 3 ஸ்பின்னர்கள் என்பது ரிஸ்க்தான். ஆனால், கோலிக்குதான் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது ஆயிற்றே. ரன் அடிக்காத சர்ஃபராஸ் கானை தண்ணி தூக்கவிட்டு, நெகிக்கு வாய்ப்பு அளித்தார்.

இந்த முறை சிவப்பு ஜெர்ஸியை சலவைக்கு போட்டுவிட்டது பெங்களூரு. சீசனுக்கு ஒரு மேட்ச்சை பசுமைப் புரட்சிக்கு ஒதுக்குவது வழக்கம். டாஸ் போடும்போது ஒரு மரக்கன்றை ரஹானேவுக்கு வழங்கினார் கோலி. பச்சை ஜெர்ஸி பளபளத்தது. ஆனால், புள்ளி விவரம்தான் கொஞ்சம் பிரச்னை. இதுவரை பச்சை ஜெர்ஸியில் நடந்த 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே பெங்களூரு ஜெயித்திருந்தது. இந்த ரெக்கார்டுகளை எல்லாம் மீறி பெங்களூருதான் ஜெயிக்கும் என்பதே ப்ரீ-மேட்ச் நிலைமை.

யார் டாஸ் வென்றாலும் சேஸிங் எடுக்க வேண்டுமென்பதுதான் ஐ.பி.எல் 2018 எழுதப்படாத விதி. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவும் அப்படித்தான். அதனால் டாஸ் வென்ற கோலி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். 

போட்டியின்போது:

பெங்களூரு தனது சொந்த மைதானத்தில் முதல் மேட்ச் ஆடியபொழுது வாஷிங்டன் சுந்தருக்கு பவர் ப்ளே முழுவதுமே பந்து வீசும் வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால், இந்த முறை முதல் ஓவரே சுந்தருக்கு தந்தார் கோலி. அட்டகாசமான முதல் ஓவர். ஒரே ஒரு ரன் தான். “இந்த மேட்ச்ல நம்ம திட்டமே வேற” என கோலி சொல்வது போல் இருந்தது.

இந்த சீசன் முழுக்கவே ஏகப்பட்ட இஞ்சூரிகள். ஐ.பி.எல் என்பதே இஞ்சூரி பிரீமியர் லீக் மீம் போடுமளவுக்கு நிறைய காயங்கள்.(இதில் மும்பைக்கு ஏற்படும் காயம் கணக்கில் வராது. அது வேற டிபார்ட்மெண்ட்). இன்றைய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ரஹானேவுக்கு கால் பிடித்துக்கொண்டது. நல்லவேளையாக, ஃபிசியோ வந்து ‘மந்திரம்’ போட்டதும் சரியானது. அந்த மந்திரம் வேலை செய்து, சுந்தரின் ஓவரில் 4,6 என வெளுத்தார் ரஹானே. இந்த கிரவுண்டே ரஹானேவுக்கு ராசியானதுதான். 6 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாளில்தான் தனது முதல் டி20 சதத்தை இங்கே அடித்தார். அதுவும் பெங்களூருக்கு எதிராக. இன்றும் அது நடக்குமா என யோசித்தபோதே கிறிஸ் ஓக்ஸ் வீசிய ஸ்லோ பந்தில் அவுட் ஆனார் ரஹானே. 20 பந்தில் 36 ரன் என்பது ரஹானேவின் வேகத்துக்கு கொஞ்சம் அதிகம். அதனால், எப்படியும் 200 ரன் அடித்துவிடுவார்கள் என்பது அப்போதே தெரிந்தது. 

சஞ்சு சாம்சனின் ப்ளஸ் டைமிங்கா, பவரா என நினைக்க வைக்கும் முன் இரண்டு சிக்ஸர்களை வெளுத்தார். பெரிதாக ஃபுட் மூவ்மெண்ட் இல்லை. மோசமான பந்துகளும் இல்லை. ஆனால் இரண்டுமே நல்ல சிக்ஸர்ஸ். ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர் சாம்சனும் ஸ்டோக்ஸும். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 76 ரன் சேர்த்திருந்தது.

10 ஓவருக்கு பின் ‘ஆக்டிவ் மோடு”க்கு மாறியது ராஜஸ்தான். சாம்சன், ஸ்டோக்ஸ், பட்லர் மூவரும் சின்னசாமி ஸ்டேடியத்தின் டெசிபல் கூட விடவேயில்லை. சாம்சனின் அரை சதத்தை பெங்களூருவாசிகள் கொண்டாடியிருக்கலாம். அட்டகாசமான இன்னிங்க்ஸ் அது. 

19-வது ஓவரில் வோக்ஸ் பந்தில் கோலியிடம் கேட்ச் தந்து அவுட் ஆனார் பட்லர். ஆனால், கேட்ச் பிடித்த கேப்டன் கோலி அதைக் கொண்டாடவேயில்லை. ‘அதான் இவ்ளோ ரன் அடிச்சிட்டீங்களே…போங்கடா’ என்பது போலவே இருந்தது அந்தச் செயல். அதன்பின், வோக்ஸ் ஹைஃபை கொடுக்க சிரித்தார் மிஸ்டர்.அனுஷ்கா. பெங்களூரு அணியின் ஸ்டார் ஆக டி-காக்கை சொல்லியே ஆக வேண்டும். உமேஷ் யாதவும் கெஜ்ரோலியாவும் வீசிய வைடுகளை தாவி தாவி பவுண்டரி போகாமல் தடுத்தார் இந்த தென்னாப்பிரிக்கா கீப்பர்.

20-வது ஓவரை ராகுல் திரிபாதி குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். 4,6,4 என அடிக்க, ஸ்கோர் 200-ஐ தாண்டியது.பெங்களூருக்கு எதிராக ராஜஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் (217) இது. சாம்சன் 45 பந்துகளில் 92 ரன். சாஹல் தவிர வேறு எந்த பவுலரும் தப்பிக்கவில்லை. இந்தியாவுக்காக 3 ஃபார்மட்டிலும் விளையாட ஆசை என்ற உமேஷ் யாதவ் 4 ஓவரில் 59 ரன். 218 எடுத்தால் அதுதான் ஐ.பி.எல் வரலாற்றின் சிறந்த சேஸ் என்ற சூழலில் பேட்டிங் செய்ய வந்தது பெங்களூரு. 

பச்சை ஜெர்ஸி; ஆனால் பேடும் ஹெம்லெட்டும் சிவப்பு என்ற தெலுங்கு ஹீரோ போல் களத்துக்கு வந்தார் மெக்கல்லம். முதல் பாலே 4. ஆனால் பச்சை ஹெல்மெட் போடாத பாவம். அதே ஓவரில் கேட்ச் தந்து அவுட்டும் ஆனார். கோலிக்கும் அதே காம்போதான்; ஆனால் 2வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து டெசிபலைக் கூட்டினார் கேப்டன். 

டி-காக்கும் கோலியும் அட்டகாசத்தைத் தொடர, நிமிர்ந்து உட்கார்ந்தது சின்னசாமி ஸ்டேடியம். ஆனால், நீடிக்கவில்லை. டி-காக் அவுட் ஆக, டி-வில்லியர்ஸ் - கோலி ஜோடி சேர்ந்தது. ஒரு நல்ல ரன் அவுட் சான்ஸை கீப்பர் பட்லர் மிஸ் செய்ய, டி-வில்லியர்ஸ் தப்பித்தார். அடுத்த ஓவரே கோலி பவுண்டரி லைனில் கேட்ச் தந்து அவுட் ஆனது சோகம். 57 ரன் ஓக்கேதான் என்றாலும் 217 ரன்னை சேஸ் செய்ய அது போதாதே.

சிறிது நேரத்திலே டி-வில்லியர்ஸூம் அவுட் ஆக ‘வீட்டுக்கு போலாமா வேணாமா’ மோடுக்கு போனது பெங்களூரு. அந்த அமைதியை கலைக்க முயன்றது மந்தீப்பின் ஸ்டிரெயிட் சிக்ஸ். ஆனால், சுனாமி வரும்போது சுண்டல் வாங்கி ரசிக்கவா முடியும்? தோல்வியை மானசீகமாக அப்போதே ஏற்றுக்கொண்டது சின்னசாமி ஸ்டேடியம். 

வந்தவர்களை குதூகலமாக்க மந்தீப்பும் சுந்தரும் கொஞ்ச நேரம் வாணவேடிக்கை காட்ட, ரன் ரேட் அதிகம் விழாமல் தப்பித்தது. ஆனால், சொந்த மண்ணில் தோல்வி, 3-ல் 2 தோல்வி என பெங்களூரு ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது ஆர்சிபி

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சாம்சனும், பவுலிங்கில் கோலியையும் டி-வில்லியர்ஸையும் அவுட் ஆக்கிய கோபாலும் ராஜஸ்தானின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள். இருந்தாலும் ஆட்ட நாயகன் விருது சாம்சனுக்கே தரப்பட வேண்டும்; தரப்பட்டது.

கோலியின் முன் மிகப்பெரிய கேள்வி ஒன்று இருக்கிறது . அது, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கும் கோலியின் கேப்டன்ஸிக்கு தொடர்பேயில்லையா என்பதே. இன்னும் 11 போட்டிகள் இருக்கின்றன. கோலி பதில் சொல்லட்டும். 

அடுத்த கட்டுரைக்கு