ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு, பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்றார்.
21 வது காமன்வெல்த் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளுடன் ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் நேற்று தொடங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்தக் காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இன்று காலை நடந்த ஆண்களுக்கான பளுதூக்குதலில், 56 கிலோ பிரிவில் இந்தியாவின் குருராஜ் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், தற்போது பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் மணிப்பூர், இம்பால் பகுதியைச் சேர்ந்த மீராபாய் சாய்கோம் சானு அபாரமாகச் செயல்பட்டு, தங்கம் வென்றதோடு காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனையும் படைத்தார். இந்தக் காமன்வெல்த் போட்டித் தொடரில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.