Published:Updated:

ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று?

ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று?

ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று?

ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று?

ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று?

Published:Updated:
ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று?

2015 வேர்ல்டு கப். சிட்னியில இந்தியா - ஆஸ்திரேலியா செமி ஃபைனல். அதுவரைக்கும் இந்தியா ஒரு மேட்ச் கூடத் தோக்கல. ஆனாலும் ஒரு பயம். அந்த பயம் 2011 உலகக்கோப்பை குவாட்டர் ஃபைனல்லயும் இருந்துச்சு. இந்த செமி சிட்னியில, அந்த காலிறுதி அஹமதாபாத்ல. வெளியூர்ல ஆடுனப்போ இருந்த பயம் இந்தியால ஆடுனப்போவும் இருந்துச்சு. 2011 செமி ஃபைனல், ஃபைனல் மேட்ச் அப்பெல்லாம்கூட இல்லாத பயம், அந்த குவாட்டர் ஃபைனல்ல இருந்துச்சு. மேட்ச் முடியுற வரைக்கும் அந்த பயம் கொஞ்சம் கூட குறையல. மேட்ச்சோட எந்த தருணத்துலயும் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண முடியல. இதுக்கு ஒரே காரணம் - அந்த 2 மேட்ச்லயும் இந்தியா எதிர்த்து விளையாடுனது ஆஸ்திரேலியா. அந்த பயம் அப்போ வந்ததது இல்ல. 15 வருஷமா என்னை ஆட்டுவிச்ச பயம் அது!

2001 அல்லது 2002...அது எந்த வருஷம்னு நல்லா தெரியல. அப்பா கூட சேர்ந்து நானும் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சேன். அப்படியே அது வெறி ஆயிடுச்சு. அப்பப்போ பழைய மேட்ச்லாம் போடுவாங்க. அப்போலாம் அப்பா, வெஸ்ட் இண்டீஸ் டீம் பத்தி செமையா புகழ்வாரு. விவியன் ரிச்சர்ட்ஸ், மால்கம் மார்ஷல், அம்ப்ரோஸ்னு ஒவ்வொருத்தரப் பத்தியும் அள்ளி வீசுவாரு. கேக்கவே மெர்சலா இருக்கும். ஆனா, நான் பாத்த டைம்ல வெஸ்ட் இண்டீஸ்கு அவ்ளோ சீன்லாம் இல்ல. அப்பப்போ ஜெயிப்பாங்க. அடிக்கடி தோப்பாங்க. 

ஆனா, அந்த வெஸ்ட் இண்டீஸ் டீம் மாதிரி அப்போ ஒரு டீம் இருந்துச்சு. ஆஸ்திரேலியானு பேரு. மஞ்சள் கலர் ஜெர்சியில அவங்க வந்தா, மத்த டீமையெல்லாம் பந்தாடாம போக மாட்டாங்க. டீம்ல இருக்குற பதினோரு பேருமே மாஸ் பிளேயர்ஸா இருப்பாங்க. அவங்கள ஒரு மேட்ச்ல தோக்கடிச்சாலே அது பிரேக்கிங் நியூஸ். அப்போலாம் டி-20னா என்னென்னே தெரியாது. ஆனா, அதிரடி ஆட்டம் வேற லெவல்ல இருக்கும். பௌலிங்லாம் உச்சகட்ட வெறித்தனம். கில்கிறிஸ்ட், ஹெய்டன், பாண்ட்டிங், மார்டின், பெவன், சைமண்ட்ஸ், லேமன், ப்ரெட் லீ, வார்னே, மெக்ராத், கில்லெஸ்பீ... யப்பா! இப்போக்கூட அந்த டீம பத்தி நினைச்சா புல்லரிக்குது. அப்படி டீம் முழுக்க ஸ்டார்ஸா இருந்ததாலேயே அவங்க மேல ஒரு ஆர்வம் தானாவே வந்திடுச்சு. அந்த ஆர்வத்துக்குக் காரணம் கிரிக்கெட் கார்ட்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3-வது, 4-வது படிக்கும்போதெல்லாம், கிளாஸ்ல ரெண்டு மூணு பேராவது கிரிக்கெட் கார்ட், WWE கார்ட்லாம் வச்சிருப்போம். டீச்சர் யாராவது வரலனா அதுதான் எங்களுக்கு ஹாபி. அதுல சச்சின், முரளி, அக்ரம்லாம் நம்ம கையில இருந்தா ஈசியா எதிராளியோட கார்டை பிடுங்கிடலாம். அந்த மாதிரி பிளேயர்ஸ் ஒவ்வொரு டீம்லயும் ஒருத்தர், இல்லாட்டி ரெண்டு பேர் இருப்பாங்க. ஆனா, ஆஸ்திரேலியன் பிளேயர்ஸ் கார்ட் வந்தா, எல்லா கார்டுமே பவர்ஃபுல்லா இருக்கும். கில்கிறிஸ்ட் வந்தா கேட்சஸ், பான்டிங் வந்தா ரன்ஸ், பெவன், மார்டின்லாம் வந்தா பேட்டிங் ஆவ்ரேஜ், மெக்ராத்க்கு பெஸ்ட் பௌலிங், வார்னேவுக்கு பௌலிங் அவ்ரேஜ்னு எல்லா கார்டுமே வெயிட். 

அதுதான் ஆஸ்திரேலியா பத்தி நாங்க முதன்முதலா விவாதம் செய்யக் காரணமா இருந்துச்சு. ``எப்படிடா... ஆஸ்திரேலியன் பிளேயர்ஸ் மட்டும் இவ்வளவு பவர்ஃபுல்லா இருக்காங்க..", ``அவங்க மட்டும் எப்டிடா எல்லா மேட்ச்சும் ஜெயிக்கிறாங்க"னு ரொம்ப வியந்திருக்கோம். அப்போ கேம்ஸ் பீரியட்ல பக்கத்து கிளாஸ்கூட கிரிக்கெட் விளையாடுவோம். மேட்ச் தொடங்கறதுக்கு முன்னாடி ஆளாளுக்கு ஒரு பேரு வச்சிப்போம். நான் கங்குலி, என் ஃப்ரெண்டு சச்சின், ஒருத்தன் டிராவிட், கீப்பிங் செய்றவன் கில்கிறிஸ்ட், பௌலிங் போட்றவன் அக்ரம்னு ஆளாளுக்கு ஒரு பேரு. ஆனா எங்க டீமோட பேரு மட்டும் ஆஸ்திரேலியா! ஏன்னா... ஆஸ்திரேலியானாதான் ஜெயிக்க முடியும். ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும்.

அந்த வயசுல சச்சினோட ஸ்ட்ரெய்ட் ட்ரைவையோ, டிராவிட் பண்ற லேட் கட் ஷாட்டையோ ரசிக்கிற அளவுக்கு விவரம் இல்ல. எங்களப் பொறுத்தவரைக்கும் ஜெயிக்கிறவங்கதான் மாஸ். அதனால, ஆஸ்திரேலியாதான் Boss. ஊர்ல பெரிய பசங்க, கார்க் பால் டோர்னமன்ட் விளையாடுவாங்க. அதுல நிறைய டீம் மஞ்சள் கலர் டி-ஷர்ட்தான் போட்டிருப்பாங்க. ஆமா, என்னை மட்டுமில்ல எங்க மொத்த ஜெனரேஷனையும் வசியம் பண்ணியிருந்துச்சு...அதாங்க 90'ஸ் கிட்ஸ்...ஆஸ்திரேலியான்ற டீம் ஒரு வகையில எல்லோருக்குமே சொப்பனமா இருந்துச்சு.

ஆனா, போகப்போக அவங்கமேல வெறுப்பு ஏற்படாமலும் இல்ல. அது ஸ்டார்ட் ஆனது 2003 ஃபைனல்ல. வேர்ல்ட் கப் ஃபைனல்ல இந்தியாவ தோக்கடிச்சிட்டாங்க. இதுக்கு மேல என்ன வேணும் அவங்கள வெறுக்க! அதுவும் 'பாண்ட்டிங் ஸ்ப்ரிங் பேட் வச்சு விளையாடுனான்'னு கிளப்பிவிட்டு அந்த மனுஷனையும் வெறுக்க வச்சிட்டாங்க. அந்த வெறுப்பு ஒருபக்கம் வளர்ந்துட்டே இருந்துச்சு. ஆனா, 'இவங்க எப்படிய்யா ஜெயிச்சிட்டு இருக்காங்க'னு முன்ன இருந்த வியப்பு மட்டும் போகவேயில்ல. 

மத்த டீம்லாம் டெஸ்ட் விளையாடுனா போர் அடிச்சிடும். இந்தியா ஆடுற மேட்சே சேவாக் அவுட் ஆகற வரைக்கும்தான் பார்ப்போம். ஆனா, இந்தப் பயலுக ஆடுனா டெஸ்ட் மேட்ச்கூட செம லைவ்லியா இருக்கும். எதிரணி பேட்ஸ்மேன வம்பிழுக்கிறது, விசித்திரமா ஃபீல்டிங் நிக்க வைக்கிறது, ஆஷஸ் தொடங்கிட்டா களேபரம் பண்றதுனு, இன்னிக்கு யோசிச்சுப் பார்த்தா, 'டெஸ்ட் ஃபார்மட் வீழாம இருந்ததுக்குக் காரணமே இவங்கதானோனு' தோணும். மலிங்கா, பிராவோ மாதிரி ஆளுகலாம் ஐ.பி.எல் விளையாடறதுக்காக நேஷனல் டீம விட்டு வந்தா, இந்தப் பயலுக ஆஷஸ் விளையாட ஐ.பி.எல்-ல இருந்து வெளிய போவாங்க. எல்லோரும் காச மட்டுமே குறியா நினைக்கறப்போ, அவங்களோட ஆட்டிட்யூட் ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். இப்படி ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலிய என்ன ஆச்சர்யப்பட வச்சிட்டேதான் இருந்துச்சு.

இன்டர்நெட் அப்டின்ற விஷயம் வாழ்கைக்குள்ள வந்தப்றம், அவங்க மேல இருந்த ஆச்சர்யம் இன்னும் கூடுச்சு. பிராட்மேன் சராசரி 99.94-னு தெரிஞ்சு தலையே சுத்திடுச்சு. ஸ்பின்னுக்கு உதவாதுனு இன்னைக்கு நாம சொல்ற எல்லா பிட்ச்லயும் வார்னே மாயாஜாலம் காட்டிருக்காப்டி. பெஸ்ட் ஸ்லிப் ஃபீல்டர் யாருனு கூகுள்ட்ட கேட்டா மார்க் வாஹ்னு சொல்லுது. பெஸ்ட் கீப்பர் யாரு? கில்கிறிஸ்ட். பெஸ்ட் கேப்டன்? பாண்ட்டிங். பெஸ்ட் ஸ்பின்னர்? வார்னே. பெஸ்ட் ஆவ்ரேஜ்? பெவன். எல்லாத்துக்கும் மேல genuine கிரிக்கெட்டர் யாருனு பாத்தா கில்கிறிஸ்ட் பேருதான் பல வெப்சைட்லயும் முதல்ல வருது. அடப் போங்கய்யா... 

சரி நம்ம ஆளுகளோட பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் பத்திலாம் தெரிஞ்சுக்கலாம்னு அதே கூகுள் பயபுள்ளகிட்ட கேட்டேன். சச்சினுக்கு சார்ஜா செஞ்சுரி, கங்குலிக்கு ப்ரிஸ்பேன் சதம், டிராவிட்டுக்கு அடிலெய்ட் டெஸ்ட், வி.வி.எஸ்.லட்சுமண்க்கு கொல்கத்தா டெஸ்ட்னு ஆஸ்திரேலியா கூட அவங்க அடிச்சதாவே காட்டுது. சரி, பௌலர்களுக்குப் பாக்கலாம்னா... ஜாஹிர்க்கு மொஹாலி டெஸ்ட், அகார்கர்க்கு அடிலெய்ட் டெஸ்ட், ஹர்பஜனுக்கு ஈடன் கார்டன்னு திரும்பவும் அதே சிலபஸ்தான். எல்லாத்துலயும் எதிரணி ஆஸ்திரேலியா. ஏன்... மத்ததெல்லாம் டீமே இல்லையானு தோணும். 

அதுதான் உண்மையும்கூட. 90களுக்குப் பிறகு ஒரு கிரிக்கெட் பிளேயரோட பேரு ரொம்ப நாள் நிலைக்கனும்னா, ஒண்ணு அவன் ஆஸ்திரேலியா கூட அடிச்சிருக்கணும், இல்ல ஆஸ்திரேலியாவுல அடிச்சிருக்கணும். கங்குலியை ஒரு சிறந்த கேப்டனாக, கொண்டாடக் காரணம், 'ஆஸ்திரேலியாவுக்கு டஃப் கொடுத்தாரு' அப்டின்றதுதானே...! இதெல்லாம் தெரிஞ்சும் ஆஸ்திரேலியா மேல ஆச்சர்யம் வரலேன்னாதான் ஆச்சர்யம். 

அடிக்கடி இன்னொரு விஷயம் தோணும். வேர்ல்ட் கப் மாதிரி ஒரு டோர்னமென்ட்ல, இந்தியா தோத்துடுச்சுனா, நாம உடனே சப்போர்ட் பண்ற டீம் சவுத் ஆஃப்ரிக்கா. டி வில்லியர்ஸ்தான் இதுக்குக் காரணம்னு இன்னைக்கு மீம்ஸ் போட்டுட்டு இருக்கோம். ஆனா, யோசிச்சுப் பாத்தா அதுக்குக் காரணமும் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியா இருந்த ஃபார்முக்கு, அவங்கள சாதாரணமா தோக்கறடிக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு. ஆனா, சவுத் ஆஃப்ரிக்கா ஆஸியோட செவுல்லயே அடிச்சு ஜெயிச்சுதே அந்த ஒரு ஆட்டம்... 434 ரன்னை சேஸ் பண்னி மரண மாஸ் வெற்றி. அது யாராலும் ஜீரணிக்க முடியாத தோல்வி. அப்படியொரு தோல்விய ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்துச்சு proteas டீம். 

ஏற்கெனவே 1999 வேர்ல்ட் கப் செமியில ஆஸ்திரேலியா கூட ஆடிய மேட்ச் டை ஆகி, தென்னாப்பிரிக்கா வெளிய போயிருக்கும். அப்போ இருந்தே அவங்க மேல நமக்கு ஒரு சிம்பதி இருந்துச்சு. அதுகூட அந்த 434 சேஸ் சேந்து, அவங்க பொசுக்குனு நம்ம செல்லப்பிள்ளை ஆகிட்டாங்க. 2007 வேர்ல்ட் கப்ல இந்தியா லீக்லயே வெளியேற... அப்றம், நான், என் ஃப்ரெண்ட்ஸ்லாம் சவுத் ஆஃப்ரிக்காவத்தான் சப்போர்ட் பண்ணோம். காரணம், அவங்களால மட்டும்தான் ஆஸ்திரேலியாவ தோக்கடிக்க முடியும்னு நினைச்சோம். ஆனா, அது நடக்கல. அந்த சவுத் ஆஃப்ரிக்காவ ரெண்டு முறை தோக்கடிச்சு, அந்தக் கோப்பையையும் ஜெயிச்சு ஹாட்ரிக் அடிச்சுது ஆஸ்திரேலியா. அவங்கமேல இருந்த வெறுப்பும் பிரமிப்பும் அதிகமாயிட்டே இருந்துச்சு. 

'ஜென்டில்மேன்ஸ் கேம்னு' சொல்லி, ஸ்லெட்ஜிங்குக்காக ஆஸ்திரேலியாவை நிறையப் பேர் வெறுக்கற மாதிரி என்னால வெறுக்கவும் முடியல. ஏன்னா, ஸ்லெட்ஜிங் இல்லாத கிரிக்கெட்டில் சுவராஸ்யம் இல்லைன்னு நம்புறேன். இலங்கைல நடந்த அந்த மொக்க டி-20 டோர்னமென்ட 'நாகினி டேன்ஸ்' இல்லைனா நாமளே கூடப் பாத்திருக்க மாட்டோம். இன்னைக்கு பிட்ச்ல பங்களாதேஷ் பிளேயர்ஸ் வரைக்கும் ரியாக்ட் பண்றாங்கனா, அதுக்கு ஸ்லெட்ஜிங்தான் காரணம். கிரிக்கெட்ட என்டர்டெய்ன்மென்ட்டா பாத்துட்டா, அதுல ஸ்லெட்ஜிங் இல்லைனா அது கம்ப்ளீட் என்டர்டெய்ன்மென்ட்டா இருக்காது. அதுல ஆஸி பிளேயர்ஸ் கொஞ்சம் எல்லை மீறி போராங்கதான். ஆனா, ஆஷஸ் டெஸ்டோ, சவுத் ஆஃப்ரிக்கா சீரிஸோ, இந்தியா ஆடாத ஒரு மேட்ச்சை நாம இன்னைக்கு இவ்ளோ சீரியஸா ஃபாலோ பண்ண ஸ்லெட்ஜிங்தான் முக்கியமான காரணம். 

ஸ்லெட்ஜிங் மட்டும் இல்ல... கிரிக்கெட்டுக்கு நடுவல எத்தனையோ புது விஷயங்கள நமக்குக் கொண்டுவந்ததும் அவங்கதான். இன்னைக்கு சவுத் ஆஃப்ரிக்கா 'பிங்க் ஜெர்சி' போட்டு விளையாடறதப் பத்திப் பேசுறோம். ஆனா, முதன் முதலா 'கேன்சர் விழிப்புஉணர்வு'னு சொல்லி பிங்க் கேப் போட்டு விளையாடுனதுதான் ஆஸ்திரேலியாதான். மெக்ராத்தோட கேன்சர் அறக்கட்டளைக்காக 'மார்பக புற்றுநோய் விழிப்புஉணர்வு' ஏற்படுத்த இதை செஞ்சாங்க. 

நிறைய பேர் இதெல்லாம் பண்றாங்க. அது விளம்பரத்துகாக்கூட இருந்திருக்கலாம். ஆனா, அந்தச் சின்ன வயசுல அதெல்லாம் பெரிய விஷயமா இருந்துச்சு. அதுவரை பிரமிச்ச, திட்டுன, வெறுத்த ஆஸ்திரேலியா மேல மேலும் பிரமிப்பு கூடுச்சு. இப்படித்தான் 7 வயசுல தொடங்கி, 15 வருஷமா ஆஸ்திரேலியா அப்டின்ற பிம்பம் எனக்குள்ள வளர்ந்து கிடந்துச்சு. அது எனக்குப் பிடிக்குமா, பிடிக்காதானுகூட சரியா சொல்ல முடியாது. ஆனா, நான் அவங்களப் பார்த்து ஆச்சர்யப்படுறேன்!

ஸ்மித், வார்னர் பிரச்னையெல்லாம் ஓஞ்சு, நாலாவது டெஸ்ட் ஆரம்பம். டாஸ் போட வந்த டிம் பெய்னைப் பார்க்கும்போது,  'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' டயலாக்தான் ஞாபகம் வந்துச்சு. ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்ட்டிங், மைக்கேல் கிளார்க்னு ஆளுமைகளைப் பாத்த இடத்துல, அடையாளம் இல்லாத ஒரு ஆள். இன்னைக்கு உக்காந்து கிரிக்கெட் கார்ட் விளையாடுனா அவருக்குத் தனி கார்ட் இருக்குமானு தெரியல. ஆனா, அவர்தான் கேப்டன். கம்மின்ஸ் தவிர்த்து, மத்த 10 பேரும் ஐ.பி.எல்-ல இல்லாதவங்க. ஏதோ பிராக்டீஸ் மேட்ச் விளையாடுற 'போர்ட் பிரஸிடென்ட் லெவன்' டீம் மாதிரி இருந்துச்சு. பாக்கவே ரொம்ப சங்கட்டமா இருந்துச்சு.

2003 வேர்ல்டு கப் ஃபைனல்ல இந்தியாவ தோக்கடிச்ச அந்த ஆஸ்திரேலியன் டீமோட பிளேயிங் லெவன் இன்னமும் ஞாபகம் இருக்கு. அப்படியொரு மாஸ் டீம். ஒவ்வொரு ஆஸ்திரேலியன் டீமுமே அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இருந்துச்சு. ஆனா இன்னைக்கு..? ஜோ பர்ன்ஸ், ரென்ஷா, சேயர்ஸ்... கூகுளுக்கே அவங்களப் பத்தி தெரியுமானு தெரியல. அப்படி இருக்கு டீம். இந்த டெஸ்ட்ல 492 ரன் வித்யாசத்துல சவுத் ஆஃப்ரிக்காகிட்ட தோத்திருக்கு. ஜெயிக்கிறதெல்லாம்கூட இரண்டாம்பட்சம். ஆனா, 15 வருஷமா நான் பார்த்த பல விஷயங்கள் இப்போ இல்ல. அந்த டீமைப் பாத்து நம்மள வியக்க வச்ச கெத்து, ஆட்டிட்யூட், நம்மள ரசிக்க வச்ச அந்த திமிறு எதுவுமே இல்ல. அவங்க முகத்துல தெரிஞ்சது ஆராம இருந்த அவமானத்தோட வடு மட்டும்தான். 

ஒரே ஒரு சம்பவம், நான் 15 வருஷமா கட்டி வச்சிருந்த பிம்பத்த உடைச்சிருச்சு. நான் மட்டுமில்ல, எத்தனையோ 90ஸ் கிட்ஸோட பழைய நினைவுகள்ல கருப்பு பெயின்ட் ஊத்திடுச்சு. இந்த மேட்ச் பாக்க புடிக்கவே இல்ல. ஏன்னா, அதுல விளையாடுனது நான் பாத்து ரசிச்ச ஆஸ்திரேலியா இல்ல. பெரிய தப்போ, சின்ன தப்போ, ஒருவகையில அது ஈரோடுல பிறந்த என்னவரைக்கும் பாதிச்சிடுச்சு. எனக்கு அடுத்த தலைமுறைக்கு இப்போ இந்தியா இருக்கு. தோனி, கோலி, ரோஹித்னு அவங்களுக்கு ஹீரோஸ் இருக்காங்க. இந்தியா இப்போ ஆதிக்கம் செலுத்திட்டு இருக்கு. அவங்களுக்கு ஆஸ்திரேலியா பத்திக் கவலை இல்லை. ஆனா, எனக்கு..?

என் அப்பா வெஸ்ட் இண்டீஸ் பத்தி என்கிட்ட சொல்லி சிலாகித்த மாதிரி, நான் என் மகன்கிட்ட எதைப்பத்தி சொல்லுவேன்? சொல்லலாம்... தொடர்ந்து 3 முறை கப் அடிச்ச ஆஸ்திரேலியா பத்தி, வில்லாதி வில்லனா இருந்த அந்த பிளேயர்ஸ் பத்தி, அவங்க திறமையைப் பத்தி சொல்லலாம். அப்படிச் சொல்லும்போது, "எது... அந்த ஏமாத்துக்கார டீம்தான!"னு அவன் திருப்பி கேட்டா... அதுக்கு என்ன பதில் சொல்ல? அந்த ஒத்தக் கேள்வி, என்னோட வியப்பை, பிரமிப்பை, கிரிக்கெட் காதலை, பல வருட நினைவுகளை, நான் கட்டிவச்ச பிம்பத்தை உடைக்கும்!