Published:Updated:

சென்னை அணியின் பரம வைரி, பிராவோவின் பாம்பு டான்ஸ் - ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? #SurveyResults

இரண்டாண்டுகள் கழித்து களம் காணப்போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கவேண்டும் என வாசகர்களிடம் ஒரு சர்வே நடத்தினோம். அதில் வந்த ரிசல்ட் இது.

சென்னை அணியின் பரம வைரி, பிராவோவின் பாம்பு டான்ஸ் - ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? #SurveyResults
சென்னை அணியின் பரம வைரி, பிராவோவின் பாம்பு டான்ஸ் - ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? #SurveyResults

இந்த சம்மரின் சூப்பர் ஸ்பெஷல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகத்தான் இருக்கும். ஐ.பி.எல் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இரண்டாண்டுகள் கழித்து களம் காணப்போகும் சென்னை அணி எப்படி இருக்கவேண்டும் என வாசகர்களிடம் ஒரு சர்வே நடத்தினோம். அதில் வந்த ஆயிரக்கணக்கான ரெஸ்பான்ஸ்களின் ரிசல்ட் இது. சர்வேயில் சில சர்ப்ரைஸ் விஷயங்களும் இருக்கின்றன.

1) முரளி விஜயை ஓபனிங் பேட்ஸ்மேன் இடத்துக்குத்தான் கடைசியாக எடுத்தது சி.எஸ்.கே. அப்படியானால் அவரோடு களமிறங்க வேண்டியது யாராக இருக்கும் என்ற கேள்விக்கு வாட்சன் என 67 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே டி20 போட்டிகளில் முரட்டு பார்மில் இருக்கிறார் வாட்சன். எனவே அவர் களமிறங்குவது பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்திருக்கலாம்.

2) அஸ்வின் அணியில் இல்லாத நிலையில், லோக்கலில் ஆடி அனுபவமுள்ள ஜடேஜாதான் ஸ்பின் அட்டாக்கை வழிநடத்த வேண்டும். அவரோடு இணைந்து ஹர்பஜன் விரல்வித்தை செய்தால் நன்றாக இருக்கும் 50 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். தமிழில் ட்வீட் போடுவது, தமிழ்ப்பாட்டுக்கு ஆடுவது என பஞ்சாப் தமிழராகவே மாறியிருப்பதால் ஹர்பஜனுக்கு இந்த அமோக ஆதரவு போல.

3) தோனியை வேறமாதிரி பார்த்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் கேட்ட ஜாலி கேள்வி இது. தலயாக கொண்டாடப்படும் தோனி மிடில் ஆர்டரில் இறங்குவதால் அவரின் ஆக்‌ஷன் காட்சிகள் மிஸ்ஸாகின்றன. அதை மனதில் வைத்து அவர் ஒன்டவுனில் இறங்கவேண்டும் என 55 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். ஒருகாலத்தில் ஒன்டவுனில் இறங்கி வெளுத்தவர்தானே... கேட்டுதா தல?

4) பிராவோ, வாட்சன், டுப்ளெஸிஸ் அணியில் இடம்பிடிப்பது கிட்டத்தட்ட உறுதி. அந்த நான்காவது வீரர் யாராக இருக்கும் என்ற கேள்விக்கு ஃபாஸ்ட் பவுலர்களான எங்கிடி, மார்க் வுட் இருவரும் கிட்டத்தட்ட ஒரே அளவில் ஓட்டுகள் வாங்கியிருக்கிறார்கள். சென்னை அணியின் மிகப்பெரிய குறையே அனுபவம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலர் இல்லாததுதானே! அதை இருவரும் தீர்ப்பார்கள் என நம்புவோம்.

5) ஆளாளுக்கு சென்னை அணியின் மெர்சல், காலா வெர்ஷன்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சென்னை அணிக்குப் பொருத்தமான பாடல் என்னவாக இருக்கும்? வேறென்ன! 'வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' பாடல்தான். தலைவர் பாடலில் தல அண்ட் கோ! தெறி!

6) வாட்சன், பிராவோ, ஜடேஜா, கேதர் ஜாதவ் என ஆல்ரவுண்டர்களுக்கு சென்னை அணியில் பஞ்சமே இல்லை. ஆனாலும், காயமடைந்த சான்ட்னருக்கு பதில் இன்னொரு ஆல்ரவுண்டரைத்தான் எடுக்கவேண்டும் என 57 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். அப்படி எடுக்கப்பட்டாலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே!

7) சென்னை அணியின் மிகப்பெரிய பிளஸ் பீல்டிங்தான். 'என்னைத் தாண்டி தொடு பார்க்கலாம்' என பவுண்டரி லைனின் பந்தை மிரட்டுவார்கள் சென்னை வீரர்கள். இந்த சீசனில் சென்னை அணியின் சிறந்த பீல்டர் சந்தேகமே இல்லாமல் ரெய்னாதான் என சத்தியம் செய்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஐ.பி.எல் வரலாற்றில் அதிக கேட்ச்கள் பிடித்தது ரெய்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

8) சீரியஸாக செல்லும் மேட்ச்சையும் ஜாலி கேலி தருணங்களாக மாற்றக்கூடிய என்டர்டெயினர்களுக்கு சி.எஸ்.கேவில் பஞ்சமில்லை. இந்த ஆண்டு ரசிகர்களை குஷியாக்கப் போவது எது என்ற கேள்விக்கு பிராவோவின் இடுப்பு கம் பாம்பு டான்ஸ்தான் ஏகபோக ஆதரவோடு தேர்வாகியிருக்கிறது. 2011-ல் இருந்தே சென்னையின் மாஸ் என்டர்டெயினர் அவர்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

9) ஆரஞ்ச் கேப்பாகட்டும், பர்ப்பிள் கேப்பாகட்டும் சென்னை அணி வீரர்களின் தலையில் இல்லாமல் போனதேயில்லை. எக்கச்சக்க மேட்ச் வின்னர்களைக் கொண்ட சென்னை அணியின் சார்பில் தொடர் நாயகன் விருதை யார் வாங்குவார்கள் என்ற கேள்விக்கு ஐ.பி.எல்லின் ஆல்டைம் ரன் ஸ்கோரரான ரெய்னாதான் அதிக ஓட்டுகள் வாங்கியிருக்கிறார். 

10) பார்சிலோனா vs ரியல் மாட்ரிட், Lakers vs pistons என கிளப் அணிகளுக்குள்ளும் பரம வைரிகள் உண்டு. ஐ.பி.எல்லில் அப்படியான பரம வைரிகள் சென்னை - மும்பை என்பது சராசரி ரசிகனுக்கும் தெரியும். இந்த சீசனிலும் அது தொடரும் என நம்புகிறார்கள் ரசிகர்கள். இரண்டு அணிகளும் மொத்தம் 24 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில் 13 தடவை மும்பையும் 11 தடவை சென்னையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த சீசன் சென்னைக்கு சாதகமாக இருக்கும் என்பது சேப்பாக்கம் சுற்றுவட்டாரத்தின் எதிர்பார்ப்பு.