Published:Updated:

ஓராண்டு தடை சரியே... ஒரு வருஷம்லாம் ஓவர் பாஸ்..! ஸ்டீவ் ஸ்மித் தடை சரியா...தப்பா?!

ஓராண்டு தடை சரியே... ஒரு வருஷம்லாம் ஓவர் பாஸ்..! ஸ்டீவ் ஸ்மித் தடை சரியா...தப்பா?!

ஓராண்டு தடை சரியே... ஒரு வருஷம்லாம் ஓவர் பாஸ்..! ஸ்டீவ் ஸ்மித் தடை சரியா...தப்பா?!

Published:Updated:

ஓராண்டு தடை சரியே... ஒரு வருஷம்லாம் ஓவர் பாஸ்..! ஸ்டீவ் ஸ்மித் தடை சரியா...தப்பா?!

ஓராண்டு தடை சரியே... ஒரு வருஷம்லாம் ஓவர் பாஸ்..! ஸ்டீவ் ஸ்மித் தடை சரியா...தப்பா?!

ஓராண்டு தடை சரியே... ஒரு வருஷம்லாம் ஓவர் பாஸ்..! ஸ்டீவ் ஸ்மித் தடை சரியா...தப்பா?!

`ஸ்டீவ் ஸ்மித்' - ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் கடந்த சில நாள்களாக விவாதிக்கவைத்திருக்கும் பெயர்.  கேப்டவுன் டெஸ்ட்டில் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் சிக்கிய டேவிட் வார்னர்,  பேங்க்ராஃப்ட்,  ஸ்டீவ் ஸ்மித்  மூவருக்குமான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இணையத்தில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். அவர்களுள் ஸ்டீவ் ஸ்மித் குறித்த விமர்சனம் கவனிக்க வேண்டியது. 

28 வயதான ஸ்டீவ் ஸ்மித், மிகக் குறுகிய காலகட்டத்திலேயே கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை பலமாக ஆக்கிரமித்தவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாகப் பொறுப்பு வகித்துவந்த ஸ்டீவ் ஸ்மித், சிறப்பான பேட்டிங் ஆவரேஜையும் கொண்டிருந்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக  முக்கியமான காலகட்டம் இது. இந்தத் தருணத்தில்தான் அவருக்கு  ஓராண்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. தவிர டேவிட் வார்னருக்கு ஓராண்டும்  பேங்க்ராஃப்டுக்கு ஒன்பது மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட்டில் இதற்கு முன்பு வேறுவிதமான தவறுகள் நடந்திருந்தாலும், இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள தண்டனை விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிலும் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவின் பிரதமர், கிரிக்கெட் வாரியத்துடன் இந்தப் பிரச்னை குறித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மித்தை விமான நிலையத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. `ஸ்மித் செய்தது தவறுதான். அதற்காக அவரை போதைமருந்து கடத்தல்காரர் போல நடத்த வேண்டிய அவசியம் இல்லை’ என பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.  சிலர் `அவர் செய்த தவறுக்கு, இது மிகப்பெரிய தண்டனை!' எனவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். 

கிரிக்கெட் குறித்து தொடர்ந்து பேசி, எழுதிவரும் சுமந்த் ராமன், இந்தத் தண்டனை குறித்து நம்மிடம் பேசினார். ``ஆஸ்திரேலிய  கிரிக்கெட்  வாரியம், சரியான ஒரு முடிவைத்தான் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பெரும்கலங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நிகழ்வு. இது தனிமனிதன் செய்த தவறு அல்ல. அணியின் கேப்டன் உள்பட பலரும் சேர்ந்து செய்த ஒரு சதி. அதனால்தான் இதுபோன்ற ஒரு தண்டனையை  ஆஸ்திரேலிய  கிரிக்கெட்  வாரியம் வழங்கியுள்ளது.  

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அளித்த ரிப்போர்ட்டில் `உப்புக் காகிதம்' வைத்திருந்தார் என்பது பதிவாகியிருந்தது. அதுமட்டுமின்றி, பேன்ட்டுக்குள் உப்புக் காகிதம் வைத்திருப்பது வீடியோக்களில் பதிவாகியிருந்தும் அம்பயரிடம் `கறுப்புத் துணிதான் வைத்திருந்தோம்' எனச் சொல்கிறார்கள். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம், உப்புக் காகிதம் என்பதை மறைத்து  `அது `டேப்'தான்' என்றார்கள். இது, தெரியாமல் செய்த தவறு மாதிரியா இருக்கிறது? திட்டமிட்டே செய்த சதிதான். அதற்கு இதுபோன்ற தண்டனை வழங்கும்போதுதான் மற்ற வீரர்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்தும்.

ஸ்டீவ் ஸ்மித் நன்றாக விளையாடக்கூடியவர் என்ற காரணத்துக்காக அவர் செய்த தவறுக்கு தண்டனை மறுக்கக் கூடாது. `Players are not Bigger than the Game' எனச் சொல்வார்கள். கிரிக்கெட் விளையாட்டை எப்படி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, `தவறு செய்த நபர் சிறந்த பிளேயரா... இல்லையா?' எனப் பார்த்து தண்டனை வழங்கக் கூடாது. அவரால் அணிக்கு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்பதுதான் சரியான முடிவு. ஆஸ்திரேலியாவில் திறமைவாய்ந்த நேர்மையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். ஸ்மித் விளையாடாததால் ஆஸ்திரேலியாவே கிரிக்கெட்டை விடப்போகிறதா என்ன? கிரிக்கெட், ஆஸ்திரேலியாவின் `பிராண்டு அம்பாசிடர்'. அவர்களின் `இமேஜுக்கு' களங்கம் வந்தால், அது மக்களுக்கான கலங்கமாகப் பார்க்கிறார்கள். எனவேதான் ஆஸ்திரேலியாவின் பிரதமர் உள்பட இந்த விஷயத்தில் கவனமாக இருக்கிறார். ஒரு  மாதம், இரண்டு மாதம் என தண்டனை வழங்கியிருந்தால் அது அர்த்தமற்ற தண்டனையாக இருந்திருக்கும்'' என்றார்.  

கிரிக்கெட்  ஆர்வலரும் எழுத்தாளருமான அபிலாஷ் சந்திரனிடம் கருத்து கேட்டோம். 

``ஒருபுறம் ஸ்டீவ் ஸ்மித் இந்தத் தவறைச் செய்திருக்கக் கூடாது என்ற கருத்து இருந்தாலும், அவருக்கு வழங்கப்பட்டது மிகையான தண்டனைதான். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட்டை மிகக் கண்ணியமாக தாங்கள் நடத்துவது போன்ற

பிம்பத்தைத் தொடர்ச்சியாகக் கட்டமைத்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு நேர்எதிராக விளையாட்டில் தொடர்ந்து குற்றங்கள் செய்யக்கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கு முன்பு ஓர் ஆட்டத்தில்  வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக ஆட்டத்தின் கடைசிப் பந்தை `அண்டர்ஆர்ம் பாலாக'  வீசி போட்டியில் வென்ற வரலாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உண்டு.  இப்படிச் செய்துவிட்டு, கிரிக்கெட்டின் மகத்துவத்தைப் பற்றி அதிகம் பேசக்கூடியவர்களாகவும் தங்களைக் காட்டிக்கொள்வார்கள்.

இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள்போல ஆஸ்திரேலியர்கள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக அணுகாமல் லட்சியமாக அணுகுவதைப்போல் காட்டிக்கொள்வதுதான் பிரச்னை. அதனால்தான் அவர்கள் இந்த அளவுக்குக் கொந்தளிக்கிறார்கள். ஸ்டீவ் ஸ்மித் போன்ற சிறந்த ஆட்டக்காரரை `ஒரு வருடம்'  விளையாடத் தடைவிதிப்பது ஆஸ்திரேலியாவுக்குத்தான் சிக்கல். தடைக்காலம் முடிந்து வரும்போது அவரிடம் பழைய ஃபார்ம் இருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம். சில போட்டிகளில் தடை விதித்து அனுமதித்திருக்கலாம். ஆனால், ஒரு வருடத் தடை என்பது மோசமான முடிவு" என்றார் ஆதங்கத்தோடு.

தண்டனைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்மித், ``வாழ்க்கையில் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டேன்'' என, கண்கலங்கிப் பேசினார். கிரிக்கெட், விளையாட்டாக மட்டுமே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால்,  அதன் பின்னாலிருக்கும் கௌரவம், பெரும் பணம் எனப் பல விஷயங்கள் அதை வெறும் விளையாட்டாக மட்டுமே வைத்திருப்பதில்லை.