Published:Updated:

அன்று அடையாளம், இன்று அவமானம்... ஸ்மித், வார்னர் தடையின் பின்னணி!

ஸ்மித்

#BallTampering #Sandpapergate

Published:Updated:

அன்று அடையாளம், இன்று அவமானம்... ஸ்மித், வார்னர் தடையின் பின்னணி!

#BallTampering #Sandpapergate

ஸ்மித்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் எப்போதும் தனிநபர் துதி பாடாது என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டது. தேசிய அணியின் கேப்டன்... டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேன்... கவலையில்லை. உலகின் டாப் கிளாஸ் ஓப்பனர்... கவலையில்லை. நீ யாராக இருந்தாலும் சரி, விசாரணைக்குள் வந்துவிட்டால் தூக்கி வீசப்படுவாய். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் வீசப்பட்டுவிட்டனர். ஐ.சி.சி என்னவோ ஒரு  போட்டிக்குத்தான் தடை விதித்திருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் இருவருக்கும் ஓராண்டு தடை விதித்துவிட்டது. ஜூனியர் வீரர் பேங்க்ராஃப்ட் ஒன்பது மாத தடை பெற்றுள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு சிலருக்கு அதிர்ச்சிதான். ஆனால், அவர்கள் இதை இழப்பாக ஒருபோதும் கருதமாட்டார்கள். ஸ்டீவ் வாஹை விளாசியவர்களுக்கு ஸ்டீவ் ஸ்மித் எம்மாத்திரம்..?

`பால் டேம்பரிங்' பிரச்னை சீரியஸான மறுநாள், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டார். விசாரணை விசாரணையாக நடைபெற்றது. போட்டிக்குப் பின்பு நடந்த பிரஸ் மீட்டில் ஸ்மித், பேங்க்ராஃப்ட் சொன்ன விஷயங்களும் பொய் எனத் தெரிந்தது. சதர்லேண்ட் செய்த விசாரணையின்போது மூவரும் அதுவரை மறைத்திருந்த உண்மையைக் கூறினார்கள். அதன்பேரில், தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ஆனால், அதிலும் சில குழப்பங்கள். ஸ்மித், வார்னர் இருவருக்கும் 1 வருடம், பேங்க்ராஃப்ட் பெற்ற தடையோ 9 மாதம். ஸ்மித், பேங்க்ராஃப்ட் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் பதவிக்குப் பரிசீலனை செய்யப்படலாம். ஆனால், வார்னர் இனி எப்போதும் தேசிய அணிக்குக் கேப்டன் இல்லை. ஏன் இப்படி மாறுபட்ட தண்டனை. காரணம் - அந்த விசாரணை. 

வார்னர் : பந்தை சேதப்படுத்தலாம் என்ற ஐடியாவின் காரணகர்த்தா. பேங்க்ராஃப்டை இந்த வேலைக்குப் பணித்தார். `பந்தை எப்படிச் சேதப்படுத்துவது' என்று அவருக்குச் சொல்லியும் கொடுத்தார். இவை மட்டுமே வார்னர் பெற்ற தண்டனையின் காரணங்கள் அல்ல. கேப்டவுன் போட்டியின்போது நடுவர்கள் நடத்திய விசாரணையில் பொய் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்த விஷயத்துக்காக அவர் பெரிதாக வருந்தியதாகத் தெரியவில்லை என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் காரணங்களுக்காகத்தான் ஸ்மித் பெற்றதைவிட இவருக்குக் கொஞ்சம் கடுமையான தண்டனை. 

ஸ்டீவ் ஸ்மித் : இந்தத் திட்டம் தெரிந்திருந்தும் அதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. ஆதாரத்தை மறைப்பது குறித்து அலோசனை தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் பற்றி, இதில் தொடர்புடையவர்கள் பற்றிப் பொதுவெளியில் பொய்யான விஷயங்களைப் பதிவிட்டிருக்கிறார். 

பேங்க்ராஃப்ட் : சீனியர்கள் வழிகாட்டுதலின் பேரில் தவறான செயலைச் செய்துள்ளார். பத்திரிகையாளர் சந்தின்போது தான் பயன்படுத்தியது டேப் என்று பொய்யான தகவலைக் கூறியுள்ளார். 

இந்தக் காரணங்களை வைத்துத்தான் இவர்களுக்குத் தண்டனை முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் வெளிவந்த உண்மைகளை வெளியே சொல்லியிருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது ஆஸ்திரேலியா. அதுமட்டுமன்றி அணியின் மிகவும் முக்கியமான வீரர்களுக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்கவும் அவர்கள் தயங்கவில்லை. பிற நாட்டு வல்லுநர்கள்கூட இதைக் கடுமையான தண்டனை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியா கவலைப்படாது. அவர்கள் கறாரான கிரிக்கெட் போர்டு என்பது ஒருபுறம். இந்தத் தண்டனைகளின் பின்னணியில் இருப்பது ஒரு தேசத்தின் தன்மானப் பிரச்னை.

ஆஸ்திரேலியா - விளையாட்டுகளால் அடையாளம் பெற்ற தேசம். அந்த நாட்டின் பெயரைச் சொன்னால், ராக்கெட் அறிவியல், பொருளாதாரம், மதவாதம், தீவிரவாதம், உள்நாட்டுக் கலவரம், சினிமா, ஆன்மிகம், அரசியல் என எதைப் பற்றியும் இந்த உலகம் முதலில் பேசாது. கிரிக்கெட், ஹாக்கி, நீச்சல் போன்றவைதான் பேசுபொருளாக இருக்கும். அந்தத் தேசத்தின் சர்வதேச வளர்ச்சியுமே விளையாட்டை மையப்படுத்திதான் இருந்தது. அதனால்தான் உலகின் எந்தவொரு விளையாட்டுத் தொடராயிருந்தாலும், அதை நடத்துவதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

இதற்கு உதாரணம் - `Australian of the year' விருது. ஆண்டுதோறும் மிகச்சிறந்த ஆஸ்திரேலியர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படும். இதுவரை 62 ஆண்டுகளில், 14 முறை விளையாட்டு வீரர், வீராங்கணைகள் அந்த விருதை வென்றுள்ளனர். மொத்தமுள்ள 11 துறைகளில் வேறு எந்தத் துறையும் இத்தனை விருதுகள் வாங்கியதில்லை. இவர்கள் விளையாட்டுக்குத் தரும் முக்கியத்துவத்தால்தான், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்று இவர்கள் நாட்டில் நடக்கிறது. இதுமட்டுமா..?

உலகமே பிரமிக்கும் வகையில் 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொட்டி 2000-ம் ஆண்டில் ஒலிம்பிக் தொடரை நடத்தினார்கள். ஆறே ஆண்டுகள் கழித்து 1.14 பில்லியன் டாலர்கள் செலவில் காமன்வெல்த் போட்டி. இப்போது மீண்டும் 1.5 பில்லியன் டாலர்கள் செலவில் அடுத்த மாதம் இன்னொரு காமன்வெல்த் போட்டித் தொடர். இதற்கு நடுவே 2002-ல் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை, 2003-ல் ரக்பி யூனியன் உலகக்கோப்பை, 2015-ல் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2017-ல் ரக்பி லீக் போன்றவற்றையும் நடத்தியிருக்கிறார்கள். 2020 டி-20 உலகக் கோப்பை நடக்கப் போவதும் இங்குதான். இவை வெறும் சாம்பிள்தான்! இவை தவிர்த்து சிலபல ஒலிம்பிக், காமன்வெல்த், உலகச் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை போட்டிகள் 1938 முதலே இங்கு நடைபெற்றுவருகின்றன. 

இத்தனை தொடர்களுக்குச் செலவு செய்ய அவர்கள் தயங்குவதில்லை. ஒலிம்பிக் கமிட்டிக்கு அரசு நிதி தருவதில்லை. ஆனால், உதவிகள் கிடைக்கின்றன. காரணம், மொத்த தேசமும் தங்களின் அடையாளத்துக்கு உதவ தயாராக இருக்கிறது. தங்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு விளையாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை அரசு உள்பட அனைவருமே அறிந்துள்ளனர். சரி, ஸ்மித் - வார்னர் விஷயத்தைப் பற்றிப் பேசும்போது இதையெல்லாம் ஏன் அலச வேண்டும்? காரணம் இல்லாமல் இல்லை... விளையாட்டு அவர்களுக்கு அடையாளமெனில், விளையாட்டு வீரர்கள்தானே அந்த நாட்டின் முகம். 

புகழ்பெற்ற ஆஸ்திரேலியர்கள் என்றால்கூட நம் நினைவுக்கு வருவது பிராட்மேன், ஹெர்ப் ஈலியாட், மார்கரட் கோர்ட், டென்னிஸ் லில்லி போன்றவர்கள்தாம். அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் சல்லடை போட்டுத்தான் தேடவேண்டும். ஸ்போர்ட்ஸ் பெர்சனாலிடிகளின் வெற்றி, ஆஸ்திரேலியாவின் வெற்றி. அவர்கள் புகழ் பெற்றால் ஆஸ்திரேலியா புகழ் பெறும். அவர்களின் குணமே, ஆஸ்திரேலியர்களின், ஆஸ்திரேலியாவின் குணமாகப் பார்க்கப்படும். 

கில்கிறிஸ்ட் ஓய்வு பெற்றபோது, ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், ``கில்லி ஓய்வைப் பற்றி நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்" என்று கூறினார். காரணம், அவர் போன்ற விக்கெட் கீப்பர் கிடைக்கமாட்டார் என்பதற்காக அல்ல! `இந்த ஆஸ்திரேலியாக்காரன் மாதிரி நேர்மையான பிளேயர் யாராச்சும் உண்டா?’ என்ற உலகத்தின் பார்வைக்காக. ஆக்ரோஷ குணம் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அனைவரும் வெறுத்தாலும், இந்த ஒற்றை மனிதனின் குணம் அதையெல்லாம் ஈடு கட்டியது. இதுதான் இப்போது பிரச்னை! இன்று பேங்க்ராஃப்ட், ஸ்மித், வார்னர் மூவரும்தானே ஆஸ்திரேலியாவின் முகமாக நிற்கிறார்கள். தங்கள் முகத்தில் பூசப்பட்ட கரியைத் துடைப்பது எப்படி?

மொத்த உலகமும் அதைப் பார்த்துவிட்டது. வேறு யாரேனும் அதை நோண்டுவதற்குள் நாமாகத் துடைத்துக்கொள்வதே கௌரவம். அதனால்தான், அந்த நாட்டின் பிரதமர் மார்கம் டர்ன்புல் பிரச்னை நடந்த மறுநாளே பேட்டி கொடுத்தார். இரண்டு நாள்கள் கழித்து, `ஸ்லெட்ஜிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இதுவரை எந்தப் பிரதமரும் பேசாத டாபிக் எல்லாம் தொட்டுப் பேசினார். காரணம், இந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதித்துவிட்டது. லான்ஸ் ஆம்ஸ்ட்ராங், ஹென்சி குரோனியே, அசாருதீன் போன்றவர்களெல்லாம் பிரச்னைகளில் மாட்டியபோது, அந்தந்த நாட்டு அரசுகள் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. அரசின் இந்தத் தலையீடு கிரிக்கெட் ஆஸ்திரேலியா மீதான அழுத்தத்தை அதிகரித்துவிட்டது.

ஆஸ்திரேலியர்கள் ஆக்ரோஷமானவர்கள் என்ற பார்வை இருந்தது உண்மை. ஆனால், ஏமாற்றுக்காரர்கள் என்ற பெயர் எடுத்ததில்லை. சரியாக ஓராண்டுக்கு முன்பு, இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் ரிவ்யூ கேட்ட விஷயத்திலும் பிரச்னை எழுந்தது. ஒவ்வொரு தொடரிலும் ஸ்லெட்ஜிங் எல்லை மீறியது. இப்போது அனைத்தையும் மீறிய ஒரு பிரச்னை. அதில் பிரதமர் தலையீடு... அதனால்தான் இவ்வளவு கடினமான ரியாக்ஷன் கொடுத்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

``ஒரு வருடம் என்பது கொஞ்சம் அதிகபட்ச தண்டனைதான். 6 மாதங்கள் என்பது ஓரளவு சரியாக இருந்திருக்கும்" என்கிறார் ஹர்ஷா போக்ளே. பலரும் இதே கருத்தைத்தான் சமூக வலைதளங்களில் முன்வைக்கிறார்கள். ஸ்மித், வார்னர், பேங்க்ராஃப்ட் ஆகியோருக்குத் தண்டனை கொஞ்சம் அதிகம்தான். ஆனால், கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு இது மிகவும் சரியான முடிவுதான். ஏன்...?

ஸ்மித்தை உரசிய ரபாடா 2 போட்டிகளில் விளையாட ஐ.சி.சி தடை விதிக்கிறது. பந்தை சேதப்படுத்தியவர்களுக்கு 1 போட்டியில் விளையாடத் தடை. இங்கு இந்தப் பாகுபாட்டின் காரணத்தை விளக்க அவசியம் இல்லை. அதிகார வர்க்கம் மீதான கரிசனம் விளையாட்டு உலகிலும் இருக்கத்தானே செய்கிறது. இந்த வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் ஆடுவது பற்றி முடிவெடுக்க இன்று மதியம் வரை பி.சி.சி.ஐ-க்கு தைரியம் இல்லை. வியாபாரம் பாதிக்குமே! இப்போது ஆஸ்திரேலியாவே இந்த முடிவை எடுத்திருப்பது நிச்சயம், மேல்மட்ட அணிகளாகக் கருதப்படும் இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகளுக்கு நெருக்கடி கொடுக்கும். ஐ.பி.எல் தொடரில் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் காரணம் இதுதான். 'நாங்கள் ஸ்வச் பாரத்' என்று சொல்லிக்கொள்ள வேண்டுமே!

`பால் டேம்பரிங்' பழைய பிரச்னை... ஆனால், அதற்கு புதுவடிவம் கொடுத்து, புது முடிவும் கொடுத்துள்ளது ஆஸ்திரேலியா. ஒரு வருடத்துக்கு வார்னர் இல்லை: ஐ.பி.எல் பாதிக்கும், டி-20 போட்டிகள் பாதிக்கும்... ஸ்மித் இல்லை : கிரிக்கெட்டின் உயிர் டெஸ்ட் கிரிக்கெட் பாதிக்கும். ஆஸ்திரேலியா ஆடும் போட்டிகளில் பரபரப்பு குறையும். ஆனால், அதன்பிறகான கிரிக்கெட் நேர்மையாக இருக்கும். கிரிக்கெட், கிரிக்கெட்டாக இருக்கும்..!