Published:Updated:

பத்தில் ஐந்து கேட்ச்... ஸ்லிப் ஃபீல்டிங்கில் கோலிக்கு பாடம் எடுக்கும் ஸ்மித்! #SAvAUS

பத்தில் ஐந்து கேட்ச்... ஸ்லிப் ஃபீல்டிங்கில் கோலிக்கு பாடம் எடுக்கும் ஸ்மித்! #SAvAUS

பத்தில் ஐந்து கேட்ச்... ஸ்லிப் ஃபீல்டிங்கில் கோலிக்கு பாடம் எடுக்கும் ஸ்மித்! #SAvAUS

Published:Updated:

பத்தில் ஐந்து கேட்ச்... ஸ்லிப் ஃபீல்டிங்கில் கோலிக்கு பாடம் எடுக்கும் ஸ்மித்! #SAvAUS

பத்தில் ஐந்து கேட்ச்... ஸ்லிப் ஃபீல்டிங்கில் கோலிக்கு பாடம் எடுக்கும் ஸ்மித்! #SAvAUS

பத்தில் ஐந்து கேட்ச்... ஸ்லிப் ஃபீல்டிங்கில் கோலிக்கு பாடம் எடுக்கும் ஸ்மித்! #SAvAUS

`விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்’ என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும், இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும், 'சர்வதேசக் கிரிக்கெட்டின் இரு துருவங்களாக உருவெடுத்து நிற்கும் அவர்கள் இருவரில், சிறந்த ஃபீல்டர் யார்' என்ற கேள்விக்கு கோலியை பல மைல் தூரம் பின்னுக்குத் தள்ளுகிறார் ஸ்டீவ் ஸ்மித். அதுவும் ஸ்லிப் கார்டனில் ஸ்மித் வேற லெவல்! கேப் டவுனில் நடக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 கேட்ச்கள் பிடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன்.

கோலி, தவான், ஜடேஜா, ரோஹித், ரஹானே, விஜய், ராகுல் என இன்றைய இந்திய அணியின் ஒவ்வொருவருமே சிறந்த ஃபீல்டர்கள். கடந்த கால இந்திய அணிகளைவிட, இந்த இளம் படை தனித்துத் தெரியக் காரணம் இவர்களின் ஃபீல்டிங். துடிப்பும் வேகமும் நிறைந்த இந்திய அணியின் ஃபீல்டிங், ஸ்லிப்பில் மட்டும் ஏனோ தொடர்ந்து சொதப்பிக்கொண்டே இருந்தது. இலங்கை, தென்னாப்பிரிக்கா என அனைத்து தொடர்களிலும் அது தொடர்ந்தது. அதிலும் குறிப்பாக, கோலி பல கேட்ச்களை ஸ்லிப்பில் நழுவவிட்டார். ரஹானே தவிர, ஸ்லிப்பில் வேறு எவரும் சரியாக செயல்படவில்லை. இதைப் பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துகொண்டேதான் இருக்கின்றன. 

``ஒரு நல்ல ஸ்லிப் ஃபீல்டர், மிகச் சிறந்த விக்கெட் கீப்பரைப் போல் பயிற்சி எடுக்கவேண்டும்" என்றார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேரில் கன்னினன். அவர் தலைசிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவர். தென்னாப்பிரிக்க தொடரின்போது ஸ்லிப்பில் இந்திய வீரர்கள் நிற்கும் முறையே தவறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். வேகப்பந்துவீச்சுக்கு உகந்த, ஸீமுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் இரட்டை மடங்கு கவனம் அவசியம். அது இந்திய வீரர்களிடம் இல்லை. தனது பேட்டிங்கின், சின்னச் சின்னத் தவறுகளையும் உடனுக்குடனே திருத்திக்கொள்ளும் விராட், இந்த விஷயத்தில் தன் தவறை, தன் அணியின் தவறை சரி செய்யவே இல்லை. 

``ஸ்லிப் ஃபீல்டர் என்பவர் ஒவ்வொரு பந்துக்கும் கழுகைப் போல் காத்திருக்க வேண்டும். அவரது கவனம் 100 சதவிகிதம் இருக்கவேண்டும். ஒரு சதவிகிதம் கவனக் குறைவு ஏற்பட்டாலும் பிசகு ஏற்படும். அப்படி ஏற்பட்டால், `டெண்டுல்கர் ட்ராப்டு ஆன் 20 அண்ட் 180 பை கல்லினன்' என்பதுபோன்ற பெயர்தான் நமக்கு மிஞ்சும். அது ஏற்படாமலிருக்க உச்சபட்ச கவனம் அவசியம்" என்கிறார் கல்லினன். நேற்று லயான் இப்படியான சங்கடத்தைத்தான் சந்தித்தார். 53 ரன்களில் இருந்தபோது எல்கர் அடித்த பந்தை பாயின்ட் திசையில் நின்றிருந்த லயான் தவறவிட்டார். எல்கர் சதமடித்துவிட்டார். கடைசிவரை ஆஸ்திரேலிய பௌலர்களுக்குத் தண்ணிகாட்டினார். அவர் பௌண்டரி அடிக்கும்போது, சதத்தை நெருங்கும்போது என எந்நேரமும், 'எல்கர் ட்ராப்டு ஆன் 53 பை லயான்' என்ற வாசகம்தான் ஸ்கோர் போர்டை நிரப்பியிருந்தது. ஒரு கேட்சை மிஸ் செய்வது என்பது அந்த அளவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அதுவும், ஸ்லிப்பில் எந்த நேரமும் பந்து வந்து இப்படியான சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். 

ஆனால், ஸ்டீவ் ஸ்மித்..! நேற்று முதல் நாள் வேகப்பந்துவீச்சில் 3 கேட்ச்கள் பிடித்திருந்தவர், இன்று நாதன் லயான் பந்துவீச்சில் 2 கேட்ச்கள் பிடித்தார். இந்த இன்னிங்ஸில் மட்டும் 5 கேட்ச்கள் பிடித்ததன்மூலம், ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச் பிடித்த ஃபீல்டர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்குக் காரணம், அவரது பெர்ஃபெக்ஷன். நேற்று பிடித்த 3 கேட்ச்களுமே ஒன்றோடொன்று மாறுபட்டவை. ஒவ்வொன்றும் ஒரு ரகம். 

மார்க்ரம் கொடுத்த அந்த முதல் கேட்ச், முதல் ஸ்லிப்புக்கும் இரண்டாவது ஸ்லிப்புக்கும் இடையில் மிகவும் தாழ்ந்து வந்தது. இருவருக்குமே கடினமான வாய்ப்புதான். அந்த ஷாட் அடிக்கப்படும்போது, ஸ்மித் தன் கைகளை முழங்கால் மீது வைத்திருந்தார். ஸ்லிப் ஃபீல்டிங் நுணுக்கங்களைப் பற்றி டேரில் கல்லினன் கூறியபோது, இப்படி முழங்கால்களின்மீது கைகளை வைத்திருப்பது தவறு என்று குறிப்பிடுகிறார். இதனால் ரியாக்ஷன் டைம் குறையும் என்பது அவர் கருத்து. அதுதான் உணமையும் கூட. இந்திய வீரர்கள் ஸ்லிப்பில் சொதப்பியதற்கு மிகமுக்கியக் காரணம் இதுதான். 

ஆனால், ஸ்மித் எப்படி சரியாக அதைப் பிடித்தார்..? அவரது கவனம் பந்தின்மீது 200 சதவிகிதம் இருந்தது என்றுதான் கூறவேண்டும். அவர் வலதுகை பழக்கம் உடையவர். பந்து வருவதோ இடதுபுறம். அதுவும் தாழ்வாக. பெரும்பாலான ஃபீல்டர்கள் இடையை இடதுபுறம் சாய்த்து, இடது கையால் பிடிக்கப் பார்ப்பார்கள். அப்படிச் செய்யும்போது கேட்சைத் தவறவிடும் வாய்ப்புகள் அதிகம். ஸ்மித் மிகவும் தெளிவு. முழு உடலையும் திருப்பி, இரண்டு கைகளையும் நீட்டி டைவ் அடித்தார். பந்து தப்பிச் செல்வதற்கு வழியே இல்லை. மார்க்ரம் அவுட்.

அடுத்து டு ப்ளெஸ்ஸி... இம்முறை ஸ்மித்தின் வலதுபுறம் மார்பளவு எழும்பி வந்தது. இப்பொழுதும் மிகத் துல்லியமாக பந்தைக் கணித்தார் ஸ்மித். வலது காலில் நன்றாக அழுத்தம் கொடுத்து, உடலை வளைத்து வலதுபுறம் திரும்பி, இரண்டு கைகளாலும் எளிதாகப் பிடித்தார். பௌலரின் கையிலிருந்து வெளியேறி, பேட்ஸ்மேனின் பேட்டில் பட்டுத் தன் கைகளை அடையும் அந்த நொடி வரை, ஒரு மைக்ரோ செகண்ட் கூட ஸ்மித்தின் கவனம் பந்தை விட்டு விலகுவதில்லை. மூன்றாவது கேட்ச் கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. டெம்பா பவுமா எட்ஜாக, ஸ்மித்தின் அடிவயிறு உயரத்துக்கு வந்தது பந்து. மிகவும் எளிதான கேட்ச். அவர் எப்படி மிஸ் செய்வார்..?

ஃபாஸ்ட் பௌலிங்கின்போது ஸ்லிப்பில் நிற்பது ஒரு ரகம் என்றால், ஸ்பின் பௌலிங்கின்போது அங்கு நிற்பது இன்னொரு ரகம். இன்னும் கூடுதலாக மெனக்கெடவேண்டும். தூரம் கம்மி... எதிர்வினையாற்ற இருக்கும் நேரமும் கம்மி... அப்படியான தருணத்தில் இன்னும் பெர்ஃபெக்டாக இருக்கவேண்டும். கவர் டிரைவ், ரிவர்ஸ் ஸ்வீப், ரிஸ்ட் ஸ்பின் போல் இதுவும் இரு கலைதான்! அந்தக் கலையில் ஸ்மித் கைதேர்ந்தவர். 

இன்று கம்மின்ஸ், ஹேசில்வுட் இருவரின் ஸ்பெல்லும் எடுபடாமல் போக, லயான் கையில் பந்தைக் கொடுத்துவிட்டு, முதல் ஸ்லிப்பில் போய் நின்றார் ஸ்மித். முதல் பந்து, ரபாடா அடிக்க, அவரது வயிற்றுக்கு நேரே சென்றது பந்து. சுழற்பந்துவீச்சின்போது, கொஞ்சம் விலகிச் செல்லும் பந்துகளைக்கூட எளிதாக வளைந்து பிடித்துவிடலாம். ஆனால், இதுபோன்ற பந்துகளைப் பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஸ்மித் தெறி ஷார்ப். கொஞ்சம் பின்னால் விழுந்து, அதையும் எளிதாகப் பிடித்தார். அடுத்த வந்த மோர்னே மோர்கல்... டிட்டோ அதே கேட்ச். ஐந்தாவது கேட்சை அழகாக கம்ப்ளீட் செய்தார் ஆஸி கேப்டன். தென்னாப்பிரிக்கா ஆல் அவுட். 

லயான் தவறவிட்ட ஒரு கேட்ச் தவிர்த்து, ஆஸ்திரேலியாவின் ஃபீல்டிங் பக்கா. தென்னாப்பிரிக்காவின் 10 விக்கெட்டுகளுமே கேட்ச் மூலம் வீழ்ந்தவை. எல்கர், டி வில்லியர்ஸ் அமைத்துக்கொடுத்த அற்புத அடித்தளத்தை உடைத்து, ஆட்டத்துக்குள் ஆஸ்திரேலியாவை எடுத்து வந்தது அவர்களின் ஃபீல்டிங்தான். அதில், அவர்களின் கேப்டனே மிகச்சிறந்த முன்மாதிரி. பேட்டிங்கில் கோலி அடிக்கும் கவர் டிரைவ்கள் போல், ஃப்ளிக் ஷாட்கள் போல் ஸ்மித்தால் அடிக்க முடியாது. அவரது கேமில் ஸ்டைலோ, அழகோ இல்லை. ஆனால், அது பெரிய இழப்பு இல்லை. ஏனெனில், ரன்களை எப்படி எடுக்கவேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆனால், ஃபீல்டிங்கில் ஸ்மித் போல் கோலி செயல்பட்டே தீரவேண்டும். ஏனெனில், 'Catches wins you matches!'