Published:Updated:

``தமிழ்நாட்டுக்காக ஆடுனாலும், சி.எஸ்.கே-வுக்காக ஆட முடியலயே!’’ - தினேஷ் கார்த்திக் ஃபீலிங்ஸ்

``தமிழ்நாட்டுக்காக  ஆடுனாலும், சி.எஸ்.கே-வுக்காக ஆட முடியலயே!’’ - தினேஷ் கார்த்திக் ஃபீலிங்ஸ்
``தமிழ்நாட்டுக்காக ஆடுனாலும், சி.எஸ்.கே-வுக்காக ஆட முடியலயே!’’ - தினேஷ் கார்த்திக் ஃபீலிங்ஸ்

25,633 பந்துகளில் கிடைக்காத பெயர், எட்டுப் பந்துகளில் கிடைத்து விட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின், `மேட்ச் வின்னர்’என்ற பட்டம் அலங்கரித்திருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும்போது அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் தினேஷ் கார்த்திக், இலங்கையில் இருந்து திரும்பியதும் சென்னையில் நிருபர்களைச் சந்தித்தார். எட்டுப் பந்தில் 29 ரன்கள், கடைசிப் பந்தில் சிக்ஸர், ரோகித்திடம் கோபம் என எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னார்.

நீங்க இறங்கும்போது 2 ஓவர்ல 35 ரன் தேவை. அப்போ உங்க மனநிலை என்ன?

``சில நேரங்கள்ல வெளியே உட்கார்ந்து மேட்ச் பார்த்துட்டிருக்கும்போதுகூட பிரஷர் ரொம்ப இருக்கும். இந்த மேட்ச்லயும் அப்படித்தான். நிலைமை எப்படியிருந்தாலும், நான் மைதானதுக்குள்ள போயிட்டா, எவ்வளவு அமைதியா இருக்க முடியுமோ அவ்வளவு அமைதியா இருப்பேன். முதல் பால்ல சிக்ஸர் அடிச்சதும் ஒரு நம்பிக்கை கிடைச்சது. 

கிரீஸுக்குள் இருந்தப்போ, எந்த ஏரியாவுல, எந்த கேப்ல பந்தை அடிக்கணும்; ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பணும்... இந்த இரண்டு விஷயங்கள்லதான் கவனமா இருந்தேன். அதிர்ஷ்டவசமா எல்லாம் சரியா அமைஞ்சது. அந்த டைம்ல என்னைப் போலவே பெளலர்களும் நெருக்கடில இருந்தாங்க. அதை நான் பயன்படுத்திக்கிட்டேன்.''

கடைசிப் பந்துல சிக்ஸ் அடிக்க முடியும்னு நினைச்சீங்களா?

``சிக்ஸ் அடிக்க முடியும்னு நம்பிக்கை இருந்தது. அதே நேரத்துல டவுட்டும் இருந்தது. எப்படியாவது ஒரு ஃபோராவது அடிக்கணும்னு இருந்தேன். ஃபோர் அடிச்சா சூப்பர் ஓவர். பெளலர் ஓடி வரும்போதே ஜெயிச்ச மாதிரி ஒரு யோசனை வந்தது. திருப்பியும் பேக் டு நார்மல் வந்து, அந்தப் பந்தைப் பார்த்து ரியாக்ட் பண்ணணும்னு யோசிச்சேன்.''

 டி வில்லியர்ஸ் மாதிரி ஸ்கூப் ஷாட்லாம் அடிச்சீங்க... அதெல்லாம் முன்கூட்டியே பிளான் பண்ணதா?

``ஸ்கூப் ஷாட்லாம் பிராக்டீஸ் பண்றது கஷ்டமான விஷயம். அடிபட நிறைய சான்ஸ் இருக்கு. குத்துமதிப்பா இந்த இடத்துல பந்து வரப்போகுதுன்னு ஒரு ஃபீல் கிடைக்கும். அப்போ கரெக்ட்டா அடிச்சிடணும். அவ்வளவுதான். அதை பிராக்டீஸ்லாம் பண்ண முடியாது. டி வில்லியர்ஸ்கூட இந்த ஷாட் பிராக்டீஸ் பண்ண மாட்டார். அது அவருக்கு நேச்சுரலா வரும். நானும் அதே மாதிரிதான் அடிச்சேன். நிறையமுறை அந்த ஷாட் ட்ரை பண்ணியிருக்கேன். சில நேரம் கிளிக் ஆகும்; சில நேரம் மிஸ்ஸாகி போல்டாகும். இந்த மாதிரி நேரத்துல, ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்.'' 

ரோகித் நீங்க கோபமா இருந்ததா சொன்னாரே...?

``இந்த டோர்னமென்ட் முழுக்க நான் நம்பர் -6-லதான் ஆடியிருந்தேன். அதனால, ஃபைனல்லயும் ஆறாவது இடத்துலதான் இறங்கப் போறேன்னு நினைச்சிருந்தேன். ஆனா, ரோகித் திடீர்னு ஆர்டர் மாத்துனதும் கொஞ்சம் ஏமாற்றமா இருந்துச்சு. இருந்தாலும் ரோகித் மேல ஒரு நம்பிக்கை இருந்துச்சு. அவன் ஏதாவது பண்றான்னா ஒரு காரணம் இருக்கும். அவன் அவுட்டானதும் எங்கிட்ட வந்து, `முஸ்தஃபிசுர் போடும்போது உன்னோட ஷாட்ஸ் எக்ஸ்கியூட் பண்றது ரொம்ப முக்கியம். அந்தப் பையன் (விஜய் சங்கர்) ஃபர்ஸ்ட் டைம் ஆடுறான். அவன் கம்மி பிரஷர்ல ஆடுனா நல்லா இருக்கும்’னு சொன்னான். ரோகித் சொன்னதை என்னால ஏத்துக்க முடிஞ்சது.''

வாஷிங்டன், விஜய் சங்கர்கூட நீங்க தமிழ்ல பேசுனது...?!

``வாஷிங்டன் கூடவும், விஜய் சங்கர்கூடவும் தமிழ்ல பேசிப்பேசி பழக்கமாயிடுச்சு. திடீர்னு இங்கிலீஷ்ல பேசுனா, அது ஒரு மாதிரி நெருடலா இருக்கும். தமிழ்ல பேசுறது இயல்பான விஷயம். அவங்ககூட இங்கிலீஷ்ல பேசுனாதான் வித்தியாசமா இருக்கும். மத்தபடி, பேட்ஸ்மேனை ஏமாத்தணும்னுலாம் பண்ணல. இது பெரிய ஸ்ட்ரேட்டஜியும் இல்லை. என்கூட அவங்க ரொம்ப நாள் விளையாடியிருக்காங்க. அதனால என்னை நம்புவாங்க. எனக்கு என்ன தோணுதோ அதை சொல்வேன். நான் சொல்றது அவங்க கேம் பிளானுக்கு கரெக்டா இருந்தா, அதை அவங்க கேட்பாங்க. அவ்வளவுதான்.'' 

ஆனா, அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்துச்சு. ஏன்னா, பங்களாதேஷ் பிளேயர்ஸுக்கு இந்தியும் தெரியும், இங்கிலீஷும் தெரியும்...

(கேள்வியை முடிக்கும் முன்...) ``நான் சொன்னதால அவன் ( வாஷிங்டன் சுந்தர் ) நல்லா போடல. அவன் நிஜமாகவே திறமைக்காரன்.  சூப்பர் பெளலர். அதுல எந்த டவுட்டும் வேணாம். சின்னப் பையன்தான். ஆனா, கான்ஃபிடன்ட்டா இருக்கான். பவர்பிளேல எல்லா மேட்ச்லயும் மூணு ஓவர் போடுறது ரொம்ப ரொம்பக் கஷ்டமான விஷயம். அதுலேயும், ஃபாஸ்ட் பெளலர் இன்னொரு பக்கம் ரொம்ப ரன் கொடுத்திட்டிருந்தாங்க. அந்த மாதிரி நேரத்துல நல்லா போட்டதுக்காகவே அவனைப் பாராட்டணும். அவன்தான், `மேன் ஆஃப் தி  சீரிஸு’க்கு கரெக்டான ஆள். இந்த டோர்னமென்ட் முழுக்க வேற யாரையும், அவனோட பெளலிங் ஸ்கில்லோட மேட்ச் பண்ண முடியாது.'' 

பரபரப்பு டு அமைதியான கேரக்டர்... ரெண்டு வருஷத்துல எப்படி இவ்வளவு மாற்றம்?

``நான் ரொம்ப பரபரப்பான ஆள். அதை மாத்தவே முடியாது. பேட்டிங் ஆடும்போது வேற மாதிரி இருக்கும். இவ்ளோ மேட்ச் ஆடியிருக்கோம், இந்த மாதிரி சூழல்ல நான் என்ன பண்ணணும், என்னோட பேட்டிங் என்னன்னு எனக்குத் தெரியும். இந்த மேட்ச் நல்லா ஆடுனதால அமைதியா இருக்கிற மாதிரி தோணும். இல்லாட்டி நெர்வஸா இருக்கிறதா தோணும். களத்துல என்னோட கேரக்டர் அப்படியேதான் இருக்கு. பேட்டிங் ஆடும்போது ரொம்ப க்ளியரா இருப்பேன்.'' 

இந்திய அணியில் நிரந்தர இடத்துக்கான வாய்ப்பு?

``என்ன மாதிரி ஆளுக்கு ஒவ்வொரு டோர்னமென்ட்டும், ஒவ்வொரு இன்னிங்ஸும் ரொம்ப முக்கியம். இந்தியன் டீம்ல போட்டி அதிகம். வாய்ப்புக் கிடைக்கும்போது அதை சரியா பயன்படுத்திக்கணும். நிறைய பசங்க நல்லாவும் ஆடுறாங்க. அதனால்தான் இந்தியன் டீம் எல்லா ஃபார்மட்லேயும் சக்சஸ்ஃபுல்லா இருக்கு. டெஸ்ட்ல நம்பர் -1, ஒன்டேல நம்பர் -1, டி-20ல டாப்-3ல இருக்கோம்.'' 

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா சாம்பியன் பட்டம் ஜெயிக்குமா?

``இப்பவே எப்படிச் சொல்ல முடியும். பெரிய டோர்னமென்ட் அது. சாம்பியன் பட்டம்கிறது பெரிய விஷயம். சாம்பியனாகணும்னு எல்லாருக்கும் ஆசைதான். ஃபர்ஸ்ட் அந்த டீம்ல எவ்வளவு மாற்றம் பண்ண முடியுமோ அதைப் பண்ணணும். அடுத்து நல்லா ஆடணும். குவாலிஃபையர் போகணும். அதுதான் இலக்கு. டாப்-4 போயிட்டா, அதுக்கப்புறம் சான்ஸ் இருக்கு. ஆனா, அது போறதுக்குள்ள பல விஷயங்கள் வொர்க் பண்ண வேண்டியிருக்கு. முதல்ல அதுல ஃபோகஸ் பண்ணணும். அதுக்கப்புறம்தான் சாம்பியன்ஸ் பட்டம்லாம்.''

KKR கேப்டன் ஃபீலிங் எப்படி இருக்கு?

``இது எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பொறுப்பு. எனக்குக் கிடைச்ச பாக்கியம். பத்து வருஷமா KKR தொடர்ந்து நல்லா பர்ஃபார்ம் பண்ணிட்டு வர்றாங்க. இந்த வருஷம் அவங்ககூட ஆடுறதை ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டிருக்கேன்.''

தமிழக வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் வேறு அணிகளில் விளையாடுவது பற்றி...

''சி.எஸ்.கே-ல ஆடணும்கிறது என்னோட ரொம்ப நாள் கனவு. ஆசை. வாழ்க்கை முழுக்க நான் தமிழ்நாட்டுக்காகத்தான் கிரிக்கெட் ஆடியிருக்கேன். வேற எந்த ஸ்டேட்டுக்கும் ஆடினதில்லை. சி.எஸ்.கே-ன்ற ஒரு அமேஸிங் டீமுக்கு என்னால ஆட முடியாமப் போச்சு. ஐ.பி.எல்-ல சில ஸ்ட்ரேட்டஜி strategy இருக்கு. ஏலம் நம்ம கையில இல்லை. அவங்க எந்த பிளேயருக்காகவும் வெயிட் பண்ண முடியாது. குறிப்பிட்ட விலை மேலே போனாலோ, வேற டீம் எடுத்துட்டாலோ, ஒரு பிளேயரை எடுக்க முடியாம போகலாம். டெல்லில ஆடுறவன் பாம்பேல ஆடுறான், பாம்பேல இருக்கிறவன் சென்னைல ஆடுறான். ஐ.பி.எல் பியூட்டியே இதான். வேற வேற மக்கள் வேற வேற ஊருக்கு ஆடுறது.''

ஒரே டைம்ல இந்தியன் டீம்ல 3 தமிழக வீரர்கள்...

``இந்த டோர்னமென்ட்ல நாங்க மூணு பேர் இருந்தோம். இதைத் தவிர்த்து, அபினவ் முகுந்த், அஷ்வின், முரளி விஜய் ஆறு பேர் இருக்கோம். அதுல சீனியர் அஷ்வின்தான். நிறைய மேட்ச் ஆடியிருக்காரு. 300 விக்கெட் எடுத்திருக்காரு. இது ஜோக் இல்லை. இண்டியன் டீம்ல இவ்ளோ தமிழ்நாடு பிளேயர்ஸ் இருக்கிறது நல்ல விஷயம்.'' 

லிமிட்டட் ஓவர் டீம்ல வந்தாச்சு. டெஸ்ட் டீம்ல எப்ப பார்க்கலாம்?

``டெஸ்ட் கிரிக்கெட் ஆடணும்னு ஆசைதான். ஆனா, எதுல வாய்ப்பு கிடைக்குதோ அதுல பர்ஃபார்ம் பண்ண வேண்டியதுதான். இப்ப எப்படி ஒன் டே, டி-20ல வாய்ப்புக் கிடைச்சு நல்லா பண்ணிருக்கேனோ.. அதே மாதிரி டெஸ்ட்ல ஒரு வாய்ப்புக் கிடைச்சா சிறப்பா ஆடலாம்னு நம்பிக்கை இருக்கு.''

அடுத்த கட்டுரைக்கு