Published:Updated:

எட்டுப் பந்தில் 29 ரன்கள்... கடைசிப் பந்தில் பிளாட் சிக்ஸர்... டிகே யூ பியூட்டி! #INDvBAN

எட்டுப் பந்தில் 29 ரன்கள்... கடைசிப் பந்தில் பிளாட் சிக்ஸர்... டிகே யூ பியூட்டி! #INDvBAN
எட்டுப் பந்தில் 29 ரன்கள்... கடைசிப் பந்தில் பிளாட் சிக்ஸர்... டிகே யூ பியூட்டி! #INDvBAN

விஜய் சங்கருக்கு நேற்றிரவு தூக்கமே வந்திருக்காது. ட்விட்டர் நோட்டிஃபிகேஷன் முழுவதும் கெட்ட வார்த்தைகளால் நிரம்பி வழிந்திருக்கும். விஜய் ஹஸாரே டிராபிக்கும் நிடாஹஸ் டிராபிக்கும் இடையிலான வித்தியாசம் புரிந்திருக்கும். அனுபவத்துக்கும் இளமைக்குமான இடைவெளி விளங்கியிருக்கும். பதற்றம் எப்படியெல்லாம் படுத்தி எடுக்கும் என்பது தெரிந்திருக்கும். முஸ்டஃபிசுர் ரஹ்மான் வீசிய 18-வது ஓவரின் அந்த ஐந்து பந்துகள் திரும்பத் திரும்ப மனத்திரையில் வந்து போயிருக்கும். #INDvBAN

`பேக் ஆஃப் எ லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த முதல் பந்தில் ரன் எடுக்க முடியாமல் போனபோதே சுதாரித்திருக்க வேண்டும். குட் லென்த்தில் அதே திசையில் வந்த அடுத்த பந்தை கவர் திசையில் ஒரு Punch அடிக்க நினைத்ததை, முஸ்டஃபிசுர் ஆஃப் கட்டரால் வெல்வார் என நினைத்துப் பார்க்கவேயில்லை. வெற்றிக்கு 18 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற சூழலில் பதற்றம் இருக்கத்தான் செய்யும். அந்தப் பதற்றத்தை எதிர் முனையில் இருந்த மணீஷ் பாண்டே தலையில் திணித்திருக்கலாம். இப்போது நினைத்து பிரயோஜனமில்லை. 

மூன்றாவது பந்தை அம்பயர் வைடு கொடுத்திருந்தால், கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்திருக்கும். நான்காவது பந்தையும் அதே லைனில், அதே லென்த்தில் வீசுவார் என எதிர்பார்க்கவில்லை. முஸ்டஃபிசுர்  அற்புதமான பெளலர். அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. ச்சே... முக்கியமான கட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. ரன் எடுக்கவில்லை என்பதை விட, பந்தை பேட்டால் தொடவே இல்லை.  இதற்கு மணீஷ் பாண்டே போல தூக்கிக் கொடுத்து அவுட்டாகியிருக்கலாம். ஒருவேளை ஸ்டம்ப்பிலிருந்து ஆஃப் சைடு நகராமல் இருந்திருக்கலாம். நகர்ந்து நின்றதுதான் பிரச்னை. அதுமட்டுமா பிரச்னை?

முஸ்டஃபிசுர் என் மனநிலையை நன்கு புரிந்து கொண்டார். இந்த மாதிரி தருணத்தில் பெளலரின் மனதை நான் படித்திருக்க வேண்டும். ஒருவேளை தினேஷ் கார்த்திக் மட்டும் அடித்துக் கொடுக்கவில்லை எனில், தோற்றிருப்போம். மொத்த பழியும் நம் மீது விழுந்திருக்கும். இப்ப மட்டும் என்னவாம். இந்தக் கறை எளிதில் போகாது. இந்நேரம் லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு லாயக்கில்லை என முடிவு கட்டியிருப்பார்களோ?! வாஷி நிரூபித்துவிட்டான். டிகே அண்ணன் கம்பேக் கொடுத்துவிட்டார். நான்தான்...!’ - கேள்விகளும் பதில்களும் மாறிமாறி எழுந்து விஜய் சங்கரைக் குழப்பி எடுத்திருக்கும். இதிலிருந்து மீள அவருக்கு நாளாகும். 

ரொம்ப நாள் கழித்து தினேஷ் கார்த்திக் நேற்றிரவு நிம்மதியாகத் தூங்கியிருப்பார். மீடியா, சோசியல் மீடியா எங்கு திரும்பினாலும் அவர் புராணம்தான். எட்டு பந்துகளில் 29 ரன்கள்... கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி... வாட்டே இன்னிங்ஸ்... சச்சின் டெண்டுல்கரில் இருந்து சாமானிய கிரிக்கெட் ரசிகன் வரை அனைவரும் பாராட்டுகிறார்கள். வேறென்ன வேண்டும். இத்தனை ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டில் இதற்கு முன் அவருக்கு இப்படியொரு புகழ் கிடைத்ததில்லை. `எல்லாமே பெர்ஃபெக்ட் கிரிக்கெட் ஷாட்... அதிலும் கடைசியாக அடித்த அந்த ஃபிளாட் சிக்ஸர்.... இன்கிரிடிபிள்’ - என்கிறார் கவாஸ்கர். 

கவாஸ்கர் சொல்வதுபோல எல்லாமே பெர்ஃபெக்ட் ஷாட்கள். டிகே களமிறங்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை. அதற்கு முந்தைய ஓவரில்தான்  முஸ்டஃபிசுர் இந்த டோர்னமென்ட்டின் சிறந்த ஓவரை வீசிச் சென்றிருக்கிறார். 19-வது ஓவரை வீசும் ருபெல் ஹுசைனுக்கும் அந்தப் பெயரை வாங்கிக் கொடுக்கக் கூடாது என்பதில் தினேஷ் கார்த்திக் கவனமாக இருந்தார். இனி ஒவ்வொரு பந்தும் முக்கியம். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பயணிக்க வேண்டும். முதல் பந்து புல் டாஸ். இதை விட வேற வாய்ப்பு கிடைக்காது. டிகே அதை அப்படியே லாங் ஆனில் சிக்ஸர் பறக்க விட்டார். நம்பிக்கை பிறந்தது. இந்தியாவுக்கும், அவருக்கும்... டென்ஷன் இப்போது வங்கதேசம் வசம். 

வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் வேகமாக ஓடி வந்து ருபெல் காதில் ஏதோ சொல்கிறார். ருபெல் தலையாட்டினாரே தவிர, பதற்றம் குறையவில்லை. இந்தப் பதற்றத்தில் அவரால் யார்க்கர் வீச முடியாது. டாட் பால் வீசமுடியாது. அல்ல, பந்து எந்த லென்த்தில் வந்தாலும், எந்த லைனில் வந்தாலும் அடிக்கலாம் என டிகே கான்ஃபிடன்ட்டாக இருக்கிறார். ஃபீல்டிங் மாற்றப்படுகிறது. லாங் ஆன், லாங் ஆஃப், டீப் மிட் விக்கெட் என எல்லா ஏரியாவிலும் கேட்ச் பிடிக்க ஆள் நிறுத்தியாகிவிட்டது. எங்கெங்கு ஆள் நிறுத்தினாலும் பேட்ஸ்மேன் அடிக்க ஆரம்பித்து விட்டால் எப்படியும் கேப் கிடைக்கும். ஆம், இரண்டாவது பந்தில் லாங் ஆனில் பவுண்டரி. கொழும்பு ஆர்ப்பரித்தது சென்னை சேப்பாக்கம் போல!

ஷகிப் அல் ஹசன் விக்கித்து நின்றார். அவரிடம் வார்த்தையில்லை. `அடுத்த பந்தை இப்படிப் போடு’ என சொல்லமுடியவில்லை. மூன்றாவது பந்து. குட் லென்த்தில் லெக் ஸ்டம்பை நோக்கி வருகிறது. Stand and deliver என்று சொல்வார்களே, அப்படி அடித்தார் டிகே. ஸ்கொய் லெக் பக்கம் சிக்ஸர். வெற்றி, வங்கதேசத்தின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து இந்திய டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் கதவைத் தட்டியது. அடுத்த பந்து டாட் பால். டி-20-க்கே உரிய டென்ஷன். ஆனால், ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுத்த டிகே, கடைசி பந்தில் மண்டி போட்டு லாங் லெக் பக்கம் ஸ்கூப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார். டிகே - டி வில்லியர்ஸாக மாறிய தருணம் அது. அந்த ஓவரில் 22 ரன்கள். ருபெல் வங்கதேச ரசிகர்களின் எதிரியானார். 

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை. ஒரு வைட், முதல் பந்தில் ரன்னில்லை. இரண்டாவது பந்தில் விஜய் சங்கர் சிங்கிள், மூன்றாவது பந்தில் டிகே சிங்கிள், நான்காவது பந்தில் விஜய் சங்கர் பவுண்டரி அடித்துவிட்டு, அடுத்த பந்தில் அவுட்டாக, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை. சிக்ஸர் மட்டுமே ஒரே சாய்ஸ். 4 அடித்தால் மேட்ச் சூப்பர் ஓவருக்குப் போகும். செளமியா சர்க்கர் அந்தக் கடைசி பந்தை எப்படி போடப் போகிறார்... மீண்டும் டென்ஷன். ரிசல்ட் என்னவானாலும் நல்ல பேட்ஸ்மேன் எனப் பெயரெடுத்தாகிவிட்டது என்பதால், தினேஷ் கார்த்திக்  நிதானமாகவே இருந்தார். கடைசி பந்து. அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைன். டிகே அதை எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஃபிளாட்டாக சிக்ஸர் அடித்தார். பெர்ஃபெக்ட் ஷாட். இந்தியா வெற்றி. செளமியா சர்க்கார் தலைமேல் கைவைத்து பிட்ச்சிலேயே நிலைகுலைந்தார். இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் அநியாயத்துக்கு அலம்பல் செய்த சப்ஸ்டிட்யூட் பிளேயர் நுருல் தலைமேல் கைவைத்தார். வங்கதேச வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களால் நாகினி டான்ஸ் ஆட முடியவில்லை. அதை இப்போது இலங்கை ரசிகர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். ஆம், இலங்கை ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடினர். இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக்கை உச்சி முகர்ந்தனர். 

சபீர் ரஹ்மானின் 77 ரன்கள், சாஹல், வாஷிங்டன் கூட்டணியின் சுழல் ஜாலம், ரோஹித் ஷர்மாவின் மெத்தன அரைசதம்,  முஸ்டஃபிசுர் ரஹ்மானின் பெஸ்ட் ஓவர் இவையனைத்தையும் 15 நிமிடத்தில், எட்டு பந்துகளில், மூன்று சிக்ஸர்களில், இரண்டு பவுண்டரிகளில் ஓவர்டேக் செய்துவிட்டார் தினேஷ் கார்த்திக். அரை மணி நேரத்துக்கு முன்புவரை டாப் ஆர்டரில் இறக்கிவிடவில்லை என கடுப்பில் இருந்த டிகே, இப்போது கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார். ``நான் அவுட்டாகி dugout சென்றபோது, தன்னை 6-வதாக இறக்கவிடவில்லை என தினேஷ் அப்செட்டில் இருந்தார். உங்கள் திறமையை வைத்து, கடைசி நான்கைந்து ஓவர்களில் நீங்கள்தான் ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என அவரிடம் சொன்னேன். அவர் இப்போது அணியை வெற்றிபெறச் செய்த மகிழ்ச்சியில் இருக்கிறார்’’என்றார் கேப்டன் ரோஹித். தினேஷ் இந்த ருத்ராதாண்டவம் ஆடாமல் இருந்திருந்தால், விஜய் ஷங்கருக்கு விழும் திட்டுகள் அனைத்தும் ரோஹித்துக்கும் விழுந்திருக்கும். இப்போதும் சமூக வலைதளங்களில், இதன் பெயர் Brilliant Captaincy decision தானா என ரோஹித்தை வசைபாடிக்கொண்டு இருக்கின்றனர். 

" இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினம். வாய்ப்பு கிடைத்தால், அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் "  மேட்ச் வின்னர் தினேஷ் கார்த்திக் உதிர்த்த வார்த்தைகள் இவை. சக தமிழக வீரர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், அனைத்து இந்திய வீரர்களுமேகூட. இரண்டாம் இன்னிங்ஸில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழன் தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துகள்!