Published:Updated:

சொதப்பல் பிரீமியர் லீக்!

சொதப்பல் பிரீமியர் லீக்!
பிரீமியம் ஸ்டோரி
சொதப்பல் பிரீமியர் லீக்!

பு.விவேக் ஆனந்த்

சொதப்பல் பிரீமியர் லீக்!

பு.விவேக் ஆனந்த்

Published:Updated:
சொதப்பல் பிரீமியர் லீக்!
பிரீமியம் ஸ்டோரி
சொதப்பல் பிரீமியர் லீக்!
சொதப்பல் பிரீமியர் லீக்!

கொண்டாட்டம், கோலாகலம், கவர்ச்சி, குத்தாட்டம்... என கிரிக்கெட் கொஞ்சமாகவும் மற்றவை அதிகமாகவும் இருப்பதுதான் ஐ.பி.எல் வழக்கம். ஆனால், இந்த ஆண்டு யார் கண்பட்டதோ ஓவர் சோகம், தடுமாறும் சறுக்கல்கள், வெறுப்பு காட்டும் ரசிகர்கள் என வழக்கத்துக்கு மாறாக ஐ.பி.எல் செம டல்லடிக்கிறது.

சரிந்த  டி.ஆர்.பி

மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டச் சர்ச்சைகளால், சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே-தான் நட்சத்திர அணி. கோடிக்கணக்கான ரசிகர்களைக்கொண்ட அணி. அது இல்லையென்றதும் இந்த முறை ஐ.பி.எல்-லில் ஆர்வம் காட்டவில்லை ரசிகர்கள். அது டி.ஆர்.பி-யில் அப்படியே எதிரொலித்தது.

உலகக்கோப்பை டி20 போட்டி முடிந்து ஒரு வாரம்கூட ஆகாமல் உடனே ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதுதான் ஓவர் டோஸ் ஆகிப்போனது. ஐந்து மாநிலத் தேர்தலில் மக்கள் மும்முரமாக இருப்பதும் ஐ.பி.எல்., தன்  பொலிவை இழக்க ஒரு காரணம். தொலைக்காட்சி பார்வையாளர்களை ஆய்வுசெய்யும் பார்க் இந்தியா அமைப்பு, `ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பித்த முதல் வாரத்தில், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்டது ஐ.பி.எல் போட்டிகள்தான் என்றாலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது ரேட்டிங்கில் மிகப் பெரிய சரிவு' என்கிறது.
 
தண்ணீர் சர்ச்சை

மஹாராஷ்டிரா மாநிலம், கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மும்பை, புனே என இரண்டு அணிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த கிரிக்கெட் மைதானங்களில், கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்காக சுமார் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுவதால் பலர் கொதித்து எழுந்தனர். இதையடுத்து ஐ.பி.எல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட, மே 1-ம் தேதிக்கு மேல்   மஹாராஷ்டிரா மாநிலத்துக்குள் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவதற்குத் தடைவிதித்தது மும்பை உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை உறுதிசெய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால் வேறு வழி இல்லாமல் ஹைதராபாத்துக்குப் போட்டிகளை மாற்றினார்கள்.  இதுவும் ஐ.பி.எல் டல்லடிக்க ஒரு முக்கியமான காரணம். 

சொதப்பல் பிரீமியர் லீக்!

ஃபேன்டசி கிரிக்கெட்

கடந்த ஐ.பி.எல் தொடர்களில்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது, ஃபேன்டசி கிரிக்கெட் விளையாட்டுதான். ஐ.பி.எல்-லின் பிரத்யேக வலைதளத்தில்  ரசிகர்களே  ஒரு கனவு அணியை உருவாக்கி விளையாடும் ஜாலி விளையாட்டு இது. லட்சக் கணக்கானவர்கள்  பங்கேற்கும் இந்த ஆட்டத்தில் அதிகமான புள்ளிகள் எடுப்பவர் களுக்கு ஐ.பி.எல் நிர்வாகமே பரிசு தரும். இந்த ஆண்டு ஐ.பி.எல் ஆரம்பிப்பதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக வலைதளம் முக்கி முனகி, திக்கித் திணற ஆரம்பித்து, ஒருகட்டத்தில் முழுவதுமாக முடங்கிவிட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் வலைதளம் இயங்கினாலும், கடந்த வருடங்களைப்போல சிறப்பாக இல்லை. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கடுப்பாகி விலக ஆரம்பித்துள்ளனர்.

கடுப்பேற்றிய கமென்ட்ரி

இந்த ஐ.பி.எல்-லில் அதிகம் நகைச்சுவையாக மாறிப்போனது  தமிழ் கமென்ட்ரிதான். `சும்மா வாரிவிட்டார்னு சொல்லலாம்', `நல்லா பெருக்கிவிட்டார்', `செல்லமாத் தட்டினார்', `மம்பட்டிய  எடுத்துச் செதுக்கிட்டார்' என தமிழ் கமென்ட்ரி வசனங்கள் கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சலின் உச்சத்துக்கே தள்ளின. சமீபத்திய கலாய் மெட்டீரியல் மீம்ஸ் எல்லாமே இந்தத் தமிழ் வர்ணனையாளர்களின் தகரடப்பா தமிழ் தான். `ஆங்கில கமென்ட்ரி உள்ள சேனலுக்கு, காசுகூட அதிகமா கொடுக்கிறோம். தயவுசெய்து இவங்க வாயை மூடுங்க ப்ளீஸ்' என ஆன்லைனில் கொதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஸ்கோர் கார்டு

போட்டிகளை டி.வி-யில் பார்ப்பது இந்த முறை மிகவும் மோசமான அனுபவமாக இருக்கிறது என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்து. காரணம், டி.வி-யில் நன்றாகத் தெரியும் அளவுக்கு இல்லாமல், சிறிய எழுத்துக்களில் ஸ்கோர் போர்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. பூதக்கண்ணாடி வைத்து ஸ்கோர் பார்க்கவேண்டிய நிலை. டி.வி-யில் மேட்ச் பார்த்தாலும், மேட்ச் விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள ஆன்லைனை நாடவேண்டிய கட்டாயம்.

சொதப்பல் பிரீமியர் லீக்!

காயம்... காயம்... காயம்!

ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக வீரர்கள் காயம் அடைந்தது இந்த ஐ.பி.எல்-லில்தான்.  அயல்நாட்டு வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறிகொண்டே இருக்கிறார்கள். இதை எழுதும்போதுகூட ஸ்டீவன் ஸ்மித் பெட்டியோடு விமானம் ஏறிவிட்டார். இதனால் போட்டிகளின் சுவாரஸ்யம் தாறுமாறாகக் குறைந்திருக்கிறது.  கெவின் பீட்டர்சன், ஃபாப் டூ பிளைசிஸ், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், சாமுவேல் பத்ரி என முக்கியமான வீரர்கள் பலரும் இல்லை. உள்ளூர் ஆட்டக்காரர் யுவராஜ் சிங்  பாதி போட்டிகளில் விளையாடவில்லை.

தல-தளபதிக்கு என்ன ஆச்சு?

ஐ.பி.எல் வரலாற்றில் தனது அணியை எட்டு முறை அரை இறுதிக்கு அழைத்துவந்தவர் தோனி. ஆனால், இந்த சீஸனில் தோனி தலைமை ஏற்றுள்ள புனே அணி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவருகிறது. விராட் கோஹ்லி தலைமையேற்றுள்ள பெங்களூரு அணியோ டிவில்லியர்ஸ், கெயில், வாட்சன் என நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது. தோனி - கோஹ்லி என தல, தளபதிகள் இருவர் தலைமையேற்ற அணிகளும் சொதப்பிவருவதும் பின்னடைவை உண்டாக்கியிருக்கிறது.   

`முதல் பாதிதான் இப்படி இருக்கு, இரண்டாவது பாதியில் இது மாறும், விறுவிறுப்பு கூடும்' என்கிறது ஐ.பி.எல் தரப்பு. ஆனால், அது சந்தேகம்தான்!