இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிதாஹஸ் டிராபி டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த நான்காவது லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #SLvIND
மழை காரணமாக போட்டி ஒன்றரைமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் 19 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக ரிஷப் பன்ட் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றார். இலங்கை அணியில், 2 ஆட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்ட கேப்டன் சண்டிமாலுக்கு பதிலாக லக்மல் களம் கண்டார். இதனால் பொறுப்பு கேப்டனாக திசரா பெரேரா செயல்பட்டார். டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
பேட்டிங்கைத் தொடங்கிய இலங்கை அணிக்கு குணதிலகா, குசல் மெண்டிஸ் இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் ஓவரை வீசிய உனத்கட், முதல் பந்தில் ஓவர் த்ரோ உட்பட 5 ரன்னும், இரண்டாவது பந்தில் சிக்ஸர் உட்பட 15 ரன்களையும் விட்டுக் கொடுத்தார். இரண்டு ஓவரில் 25 ரன்கள் எடுத்த இலங்கை அணி மூன்றாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. ஷர்துல் தாகூரின் பந்தில் அடித்து ஆடிய குணதிலகா 17 (8) ரன்களில் சுரேஷ் ரெய்னாவின் அற்புதமான கேட்ச்சால் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து இறங்கிய முந்தைய ஆட்டத்தின் ஹீரோ குசல் பெரேரா, (3ரன்) வாஷிங்டன் சுந்தரின் பந்தில் போல்டானார். தரங்கா 22 ரன்களிலும் திசரா பெரேரா 15 ரன்களிலும் அவுட்டாக, குஷல் மென்டிஸ் மட்டும் அதிரடியாக அரைசதம் அடித்தார். ஜீவன் மென்டிஸ் வாஷிங்டன் பந்தில் போல்டானார். சாஹல் பந்தில் குசல் மென்டிஸ் கேட்ச் கொடுத்தும் விக்கெட்டை இழக்க இலங்கை அணியின் ரன்வேகம் குறைந்தது.
கடைசிக் கட்டத்தில் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால், இலங்கை அணி 19 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.கட்டுக்கோப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் 1 விக்கெட் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஒவரின் இரண்டாவது பந்தில் புல் ஷாட் சிக்ஸரும் மூன்றாவது பந்தில் பவுண்டரியும் அடித்தார். மீண்டும் ஃபார்முக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் ஷர்மா 11 ரன்களில் அவுட் ஆனார். ஷிகர் தவான் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருவரது விக்கெட்டையும் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயா சாய்த்தார். பின்னர் இறங்கிய லோகேஷ் ராகுல் 18 ரன்களில் ஜீவன் மென்டிஸ் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 27 ரன்கள் விளாசி அவுட் ஆனார். பவர் பிளேயின் முடிவில் இந்திய அணி 50 ரன்களை எடுத்தது.
கடைசிக் கட்டத்தில் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பாண்டே சற்று நிதானமாக ஆட தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடினார். 17.3 ஓவர்களில் 153 ரன்கள் கடந்து இந்திய அணி வெற்றி பெற்றது. மனிஷ் பாண்டே 42 ரன்களும் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் 5 வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.