Published:Updated:

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அசத்தும் அயர்லாந்து, ஸ்காட்லாந்து! ஆப்கானிஸ்தான் என்ன செய்கிறது?! #WCQ2018

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அசத்தும் அயர்லாந்து, ஸ்காட்லாந்து! ஆப்கானிஸ்தான் என்ன செய்கிறது?! #WCQ2018
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அசத்தும் அயர்லாந்து, ஸ்காட்லாந்து! ஆப்கானிஸ்தான் என்ன செய்கிறது?! #WCQ2018

கிரிக்கெட் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் உலகக்கோப்பை என்றால் சொல்லவும் வேண்டுமா? அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கவிருக்கும் போட்டிகளில் எந்தெந்த அணிகள் விளையாடப்போகின்றன என்கிற பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. ஆம், உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளைத் தேர்வுசெய்யும் தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்டன. கடந்த சில வருடங்களாக வங்கதேச அணி சிறப்பாக விளையாடிவருவதால், பந்தயத்தில் முன்னேறி வெஸ்ட் இண்டீஸைத் தகுதிச்சுற்றுக்கு அனுப்பிவிட்டது. முதல் இரண்டு உலகக்கோப்பையை வென்ற வேஸ்ட் இண்டீஸோடு பெரிய அணிகளுக்கெல்லாம் சவால்விடும் திறமைகொண்ட ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதிசுற்றுப் போட்டிகளில் விளையாடுவதால் `தகுதிபெறப்போவது யார்?' என்கிற பரபரப்பு வந்துவிடுவது இயல்புதானே!

புள்ளிப்பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மற்றும் ICC சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஹாங்காங், பப்புவா நியூ கினியா என நான்கு அணிகளும், இரண்டாம் சுற்றில் வெற்றிபெற்ற நேபாளம் மற்றும் அரபு அமீரகம் என மொத்தம் பத்து அணிகள் இந்தத் தகுதிச்சுற்றில் விளையாடிவருகின்றன. இவற்றுள் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, அரபு அமீரகம், நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா என ஐந்து அணிகள் குரூப் A-விலும், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாள் ஆகிய ஐந்து அணிகள் குரூப் B-யிலும் இடம்பெற்றுள்ளன. முதல் சுற்றில் ஒவ்வோர் அணியும், அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்தச் சுற்றில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் அணிகள் `சூப்பர் 6' சுற்றுக்குத் தகுதிபெறும். `சூப்பர் 6'-ல் முதலில் வரும் இரண்டு அணிகள், ஏற்கெனவே தகுதிபெற்ற எட்டு அணிகளுடன் சேர்த்து ஐந்து ஐந்தாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். 

நடப்பு T20 சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மற்ற வடிவிலான போட்டிகள் என்றால் `அந்தத் திராட்சை புளிக்கும்' என்பதுபோல படுமோசமாக விளையாடுகிறது. இந்தப் பத்தில் இரண்டு அணிகள் மட்டுமே தகுதிபெறும் என்பதால், `இரண்டுமுறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் தேர்வாகுமா, உலகக்கோப்பையில் விளையாடுமா?' என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. அரபு அமீரகத்துக்கு எதிரான முதல் போட்டியில் கெய்ல் மற்றும் ஹெட்மேயேர் ஆகியோரின் சத்தத்துடன் 357 ரன்களை அடித்துக் குவித்தாலும், அவர்களின் பௌலிங் சுமார்தான். ஹோல்டர் மட்டும் சிறப்பாக 10 ஓவர் வீசி, 5 விக்கெட்டுகளை எடுத்தார். மற்றவர்களின் பந்துவீச்சு சொல்லுமளவுக்கு இல்லை. முதல் போட்டியை வென்றுவிட்டபோதிலும், இந்தத் தொடரை ஆதிக்கம் செலுத்தி மற்ற போட்டிகளையும் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

இந்தத் தொடரில் மிரட்டி, ஆராவாரத்துடன் உலகக்கோப்பைக்கு வந்துசேரும் என்று நினைத்த ஆப்கானிஸ்தான் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி. இளம்வயதில் கேப்டனான ரஷீத் கானின் தலைமையில் அதிரடி விக்கெட் கீப்பர் சேஷாத், முகமது நபி என சிறந்த வீரர்களுடன் திறமைவாய்ந்த அணியாகக் கிளம்பியது ஆப்கானிஸ்தான். ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர்களுக்கு கடினம் குடுத்து கடைசி வரை போட்டியைக் கொண்டுசெல்ல மட்டுமே முடிந்தது. அவர்கள் நிதானமாக அந்தப் போட்டியை வென்று சென்றார்கள். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஆனாலும் வெறும் இரண்டு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே போட்டியை வென்றுவிட்டது. இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் ரொம்பவே சுமார்தான். இதன் பிறகு வரும் அனைத்து போட்டிகளையும் வென்றால்தான், உலகக்கோப்பைக்கு தகுதிபெறும் கனவையாவது காண முடியும் என்கிற நிலைமையில் உள்ளது ஆப்கானிஸ்தான். 

எதிர்பார்த்ததுபோலவே இரண்டு போட்டிகளையும் எளிதாக வென்றுவிட்டது அயர்லாந்து. முதல் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூ கினியாவையும் எளிதாக வென்றுவிட்டது. அயர்லாந்தில் ஐந்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்படுவதால் எளிதில் தகுதிபெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கின்றனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு போட்டி மட்டுமே அவர்களுக்கு சவாலாக இருக்கும். மற்றபடி அடுத்த சுற்றுக்கு இப்போதே வருகிறது அயர்லாந்து அணி. இரண்டு போட்டிகளை வென்று சற்று  மகிழ்ச்சியான நிலையிலேயே உள்ளது ஜிம்பாப்வே.

ஆப்கானிஸ்தானையே எளிதாக வென்ற ஸ்காட்லாந்த்து, அடுத்த போட்டியில் ஹாங்காங்கை பந்தாடியது. அந்த அணியின் பேட்டிங் சற்று சுமார்தான். எனினும், பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. சிறப்பான இரண்டு வெற்றிகள் மூலம் இந்தத் தொடரின் வலுவான அணியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது ஸ்காட்லாந்து. கத்துக்குட்டி அணிகள் நன்றாக விளையாடினாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி மீதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். `ஒருகாலத்துல எப்படி இருந்த டீம் தெரியுமா!' என மூத்த கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் இப்போது ஃபீலிங்கில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இந்த கரீபியப் புயல்கள் இந்தத் தொடரை வெல்லவேண்டும்.