Published:Updated:

"காமன்வெல்த் தடகளத்தில் தங்கம்..!" புதுக்கோட்டை சூர்யா இலக்கு

"காமன்வெல்த் தடகளத்தில் தங்கம்..!"  புதுக்கோட்டை சூர்யா இலக்கு
"காமன்வெல்த் தடகளத்தில் தங்கம்..!" புதுக்கோட்டை சூர்யா இலக்கு

நேரத்தின் உன்னதத்தை விளையாட்டு வீரனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, தடகள வீரனிடம்... ``வெறும் 26 நொடியில் என்னோட ஒலிம்பிக் வாய்ப்பு மிஸ்ஸாயிடுச்சு. ஒவ்வொரு Lap-லயும் ஒரு செகண்ட் மிச்சம் வச்சிருந்தா கூட, நானும் ஒலிம்பிக்ல ஓடியிருப்பேன்...’ - என 2016 ரியோ ஒலிம்பிக் வாய்ப்பு மிஸ்ஸானது குறித்து வருத்தப்பட்ட தடகள வீராங்கனை எல்.சூர்யா இன்று, காமன்வெல்த் போட்டியின் மெடல் வின்னர் கன்டெஸ்டன்ட். தகுதிச்சுற்றுக்கான இலக்கை 07:00 நொடிகளுக்கு முன்னதாகவே அடைந்து, 2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்குத் தேர்வாகி இருக்கிறார்.

ரயில்வேயில் வேலை. வயது 27. தடகளம்தான் வாழ்க்கை என முடிவெடுத்ததற்கு பரிசும் கிடைத்துவிட்டது. மற்ற பெண்களைப் போல திருமணம், குடும்பம் என வாழ்க்கையை நகர்த்தி இருக்கலாம். ஆடிய கால்கள் மட்டுமல்ல ஓடிய கால்களும் ஒருபோதும் நிற்காது. `இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதுக்கு பெருசா எதாவது சாதனை பண்ணனும்னு ஆசை. அதனாலதான் இன்னும் ஓடிட்டி இருக்கேன். இவ்ளோ நாள் ஓடிட்டோம். இன்னொரு ட்ரை பண்ணலாமேன்னுதான் ஒவ்வொருமுறையும் முயற்சி பண்றேன். பட்டுன்னு ஸ்போர்ட்ஸை விட்டுட்டு, அப்புறம் லைஃப் லாங் யோசிச்சிட்டு இருக்க கூடாது இல்லையா?’ எனச் சொல்லும் சூர்யா, ஒலிம்பிக் வாய்ப்பு மிஸ்ஸானதும், மற்றவர்களைப் போலவே தடகளத்துக்கு குட்பை சொல்ல நினைத்தார். அந்த நினைப்புக்கே முட்டுக்கட்டை போட்டவர் பயிற்சியாளர் சுரேந்தர் சிங்.

எல்.சூர்யா, புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். தந்தை லோகநாதன் தடகள பயிற்சியாளர் என்பதால், பத்து வயதில் இருந்தே சூர்யா ஓடத் தொடங்கி விட்டார். 100 மீட்டரில் வேகமாக ஓடுவதற்கு ஏற்ற உடல்வாகு இல்லை என்பதால், தொலைதூர ஓட்டத்தில் கவனம் செலுத்தினார். ஜுனியரான சூர்யா தன் 12 வயதில் சீனியர் லெவல் போட்டிகளில் தங்கம் தட்டினார்.  மிரண்டு போன தமிழ்நாடு தடகள சங்கம் `சின்ன பிள்ளையை ஏன் சீனியர் மீட்ல ஓட வைக்கிறிங்க’ என லோகநாதனை கண்டித்தது. ஆனால், அவர்தான் இன்று சர்வதேச அளவில் 5,000, 10,000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து வருகிறார். 
பெண்களுக்கான டிஸ்டன்ஸ் ரன்னிங்கில் இந்திய அளவில் சூர்யாவை மிஞ்ச ஆளில்லை.  

`படிப்பிலும் நான் சமத்து. நான் நினைத்திருந்தால் டாக்டர் அல்லது இன்ஜினியர் ஆயிருக்கலாம். ஆனால், என் கனவு நேஷனல் சாம்பியன். நினைத்தபடியே சர்வதேச அளவிலும் பதக்கங்கள் வாங்கி விட்டேன்’ என சொல்லும் சூர்யாதான், கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில், தடகளத்தில் இருந்து பதக்கம் வெல்வதற்கான நம்பிக்கை நட்சத்திரம். ஏனெனில், இதுவரையிலான காமன்வெல்த் போட்டிகளில், டிராக் அண்ட் ஃபீல்ட் என்று சொல்லக்கூடிய டிராக்கில் பதக்கம் வென்றவர்கள் சொற்பம். தொடர் ஓட்டம் தவிர்த்து  400 மீ ஓட்டத்தில் மில்கா சிங் (1958 - கார்டிஃப்), 10,000 மீ ஓட்டத்தில் கவிதா ராவுத் ( 2010 டெல்லி) மட்டுமே தடகளத்தில் பதக்கம் வென்றுள்ளனர். விரைவில் சூர்யாவும் அந்த வரிசையில் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாளுக்கு நாள் சூர்யாவின் பெர்சனல் பெஸ்ட் நேரம் குறைந்துகொண்டே வருகிறது.

பாட்டியாலாவில் நடந்த 2018 ஃபெடரேஷன் கோப்பை தொடரின் 5,000 மீ ஓட்டத்திலும் சூர்யா முதலிடம் பிடித்தார். ஆனால், அந்தப் பிரிவில் அவரால் காமன்வெல்த் போட்டிக்கான இலக்கை அடையமுடியவில்லை. எப்படியாவது 10,000 மீ. ஓட்டத்தில் டார்கெட்டை அடைந்துவிட வேண்டும் என்பதில் சூர்யாவை விட அதிக முனைப்பு காட்டினார் சுரேந்தர். அவர் எதிர்பார்த்தது போலவே 25 சுற்றுகள் கொண்ட 10,000 மீ தூரத்தை 32:23:96 நிமிடத்தில் கடந்து தங்கம் வென்றார். கூடவே, காமன்வெல்த்தில் பங்கேற்கும் வாய்ப்பையும்... 5,000 மீ ஓட்டத்திலும் சூர்யாவை அனுமதிக்க இந்திய தடகள சங்கம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. 

காமன்வெல்த் போட்டிகளில் சூர்யா பங்கேற்பது இது முதன்முறை அல்ல. 2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார். ஆனால், அப்போது அவரால் ஆறாவது இடமே வர முடிந்தது. இன்று அப்படியில்லை. இந்திய அளவில் பெண்களுக்கான தொலைதூர ஓட்டப் பந்தயத்தில் சூர்யாதான் கில்லி. 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் 10,000 மீ ஓட்டத்தில் கென்ய வீராங்கனைகளே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். மூன்றாவதாக வந்த எமிலி செபட், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக நான்கு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார். இந்தமுறையும் கென்ய வீராங்கனைகளே  ஆதிக்கம் செலுத்தக்கூடும். ஆனால், எப்படியும் தங்கம் கிடைக்கும் என்பதில் சூர்யா நம்பிக்கையுடன் இருக்கிறார்.