விஜய் ஹசாரே டிராபி ஃபைனல்... டாஸ் போட வந்திருந்த கருண் நாயர் ``கே.எல் ராகுல் இன் ஃபார் சி.எம்.கௌதம்" என்று சொன்னபோது பெரிதாக யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படவில்லை. இலங்கையில் நடக்கும் முத்தரப்புத் தொடருக்கு முன்பாக ஒரு பயிற்சிப் போட்டி என்று சிலர் நினைத்தனர். `இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு' என்று சிலர் கருதினர். ஆனால், இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், தோனியின் இடத்துக்கு ராகுல் வைத்த குறியாகவும் இது தெரிகிறது.
தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பிய ராகுல், விஜய் ஹசாரே கோப்பையின் லீக் சுற்றில் பங்கேற்றார். முதல் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கி 3 ரன்கள் மட்டும் எடுத்தார். அப்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்தது. அந்த அணியில் இடம்பெறாததால்தான், அவர் இந்தியாவுக்குத் திரும்பினார். அடுத்த போட்டி அஸ்ஸாம் அணியுடன். விக்கெட் கீப்பர் சி.எம்.கௌதம் காயத்தால் ஆட முடியாத சூழல். கைவசம் இன்னொரு விக்கெட் கீப்பர் பி.ஆர்.சரத் இருக்கிறார். இதுதான் மாநில அணிக்காக அவரது முதல் தொடர். இந்தத் தொடர்களே இதுபோன்ற வீரர்களுக்காகத்தான். ஆனால்...
கௌதம் இடத்தில் களமிறங்கியது ஆல்ரவுண்டர் அனிருத்தா ஜோஷி. ஏற்கெனவே 2 ஆல்ரவுண்டர்கள் இருக்க, இன்னொரு ஆல்ரவுண்டரைக் களமிறக்கியது கர்நாடகா. சரத் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. ராகுல் கீப்பரானார். பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியிலும் கீப்பராகத் தொடர்ந்தார். தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி-20 அணியில் இடம்பெற்றிருந்ததால் அங்கு கிளம்பினார். ஒருநாள் போட்டிகளில் நம்பர் 4 வீரராகக் களமிறங்கிய ரஹானே இல்லாததால், தனக்கு இடம் கிடைக்குமென்று நம்பினார். ஆனால், அந்த இடத்தை ரெய்னா ஆக்கிரமித்துக்கொண்டார். 3 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில்தான், இலங்கைத் தொடருக்குப் பெரிய இடைவெளி இல்லாமல் இருந்தாலும், விஜய் ஹசாரே டிராபி ஃபைனலில் பங்கேற்றார் கே.எல்.ராகுல். மீண்டும் கீப்பராக.
விஜய் ஹசாரே தொடரில் ராகுல் விளையாட வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், அவர் கீப்பராக விளையாடியதன் அவசியம்...? 2015 இறுதியிலேயே தன்னை நல்ல டெஸ்ட் பிளேயேராக நிலைநிறுத்திக்கொண்டார் ராகுல். அந்தச் சமயத்தில் ஷிகர் தவான் தடுமாறியது, அவரை நிரந்தர ஓப்பனர் ஆக்கியது. 2016 ஐ.பி.எல் தொடரில் பட்டையைக் கிளப்ப, ஷார்ட் ஃபார்மட்டிலும் என்ட்ரி கொடுத்தார். முதல் ஒருநாள் போட்டியிலேயே சதம். அவரது கிரிக்கெட் கிராஃப் உயர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், சக ஓப்பனர்களின் ஃபார்மும் உச்சத்தில் இருந்தது இவருக்குப் பாதகமாக மாறிவிட்டது.
ரோஹித் - தவான் கூட்டணியை உடைக்க முடியவில்லை. அவ்வப்போது அவர்களில் ஒருவர் ஓய்வெடுக்கும்போது மட்டும் தலைகாட்டிக்கொண்டிருந்தார். மிடில் ஆர்டரில் பெரிதாக சோபிக்க முடியாததால், இவரை நடுகளத்தில் இறக்கிப் பரிசோதிக்க கோலி ரெடியாக இல்லை. ஓப்பனிங்கில் நன்றாகவே விளையாடியும்கூட தனக்கென்ற நிரந்தர இடத்தை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு அவ்வப்போது இவருக்குக் காயம் ஏற்பட, மீண்டும் தன் இடத்தை நிலைநிறுத்திக்கொண்டார் தவான். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும்கூட முரளி விஜய், தவான், ராகுல் மூவரில் யாருமே கன்ஃபார்ம் சாய்ஸ் என்றில்லை. மூவருக்குமே சம வாய்ப்பு இருந்தது. 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார் ராகுல். லிமிடெட் ஓவர் கிரிக்கெட் மட்டுமல்லாது, டெஸ்ட் போட்டியிலும் நிரந்தர இடம் இல்லாத நிலமை ஏற்பட்டுவிட்டது.
சரி, இப்போது ராகுல் இடத்தில் இருந்து யோசிப்போம். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகச் சிறப்பாக ஆடிவருகிறார். அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், 3 ஆண்டுகள் கழித்து தினேஷ் கார்த்திக் கம்பேக் கொடுக்கிறார். அவரைக்கூட மிடில் ஆர்டர் 'பேட்ஸ்மேன்' என்று எடுத்துக்கொள்வோம். பார்த்திவ் பட்டேல்...? 8 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு ஆடுகிறார். எப்படி...? விக்கெட் கீப்பர்! சஹா - பெரிய பேட்ஸ்மேன் இல்லை. ஆனால், நல்ல கீப்பர். அதனால் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். அவருக்குக் காயம் ஏற்பட்டதும், 8 ஆண்டுகள் கழித்து பார்த்திவ் அணிக்குள் நுழைகிறார். அதேபோல், ரிசப் பன்ட்... 20 வயதுதான். ஆனால், அவரை இந்திய அணியின் எதிர்காலமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். காரணம், இவர் கீப்பர்... தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனத்தை நோக்கிப் பயணிக்கிறது.
டெஸ்டில் நிரந்தர இடம் கிடைக்க விஜய், தவான் இருவரிடம் போட்டி போடவேண்டியுள்ளது. அந்த ஃபார்மட்டில் அவரால் மிடில் ஆர்டரில் ஆட முடியாது. ஒருநாள் போட்டியில் ரோஹித், தவான் இருவரையும் ரீப்ளேஸ் செய்வது கடினம். அடுத்து கோலி - தொடக்கூட முடியாது. மற்ற இரண்டு மிடில் ஆர்டர் ஸ்பாட்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்யா ரஹானே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே என ஒரு படையே இருக்கிறது. போதாக்குறைக்கு ரெய்னாவும் 'ஐ யம் பேக்' சொல்லிவிட்டார். இத்தனை பேரிடமும் மல்லுக்கட்ட முடியாது. ஆல்ரவுண்டர் இடம்.... போட்டியிட முடியாது. இரண்டு ஃபார்மட்களிலும் எஞ்சியிருப்பது ஒரே ஸ்பாட் - தோனியின் இடம்... விக்கெட் கீப்பிங்.
பார்ட் டைமாக நன்கு பழக்கம் உள்ளது. இதில் சிறப்பாகச் செயல்பட்டால், எப்படியும் நிரந்தர இடம் கிடைக்கும். சஹா, பார்த்திவ் பட்டேல் இருவரையும்விட நல்ல பேட்ஸ்மேன் என்பதால், இவருக்குச் சாதகம். ஒருநாள் போட்டியில் இன்னும் ஓராண்டுக்குத் தோனியின் இடத்தைத் தொட முடியாது. அதற்குப் பின்...? வயதாகிவிட்ட காரணத்தால் தினேஷ் கார்த்திக் ஓரங்கட்டப்படலாம். எஞ்சியிருக்கும் ஒரே போட்டி - பன்ட். ஓப்பனிங், மிடில் ஆர்டர் போட்டியை ஒப்பிட்டால், இது பெரிய கஷ்டமல்ல. 2019 உலகக்கோப்பைக்குள் கீப்பிங்கில் முன்னேற்றம் கண்டால், நிச்சயம் பன்ட்டை ஓவர்டேக் செய்யலாம். ஆக, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிரந்தர இடம் பிடிக்க இருக்கும் ஒரே எளிய வழி, தனக்கு அரைகுறையாகப் பழக்கப்பட்ட கீப்பிங் என்பதை ராகுல் உணர்ந்துள்ளார்.
அதனால்தான், கூடுதல் சுமை என்று தெரிந்திருந்தும் கர்நாடக அணியில் 'பேக்-அப்' கீப்பர் இருந்தும் இவர் கீப்பிங் செய்ய முன்வந்துள்ளார். இதில் இன்னொரு சாதகமும் இருக்கிறது. உலகக்கோப்பைக்கான அணித் தேர்வில், 'பேக் - அப்' ஓப்பனராக ரஹானேவைத்தான் கோலி டிக் செய்வார். மிட்ஃபீல்டிலும் இடம் உறுதியில்லை. அதேவேளை கீப்பிங்கில் நன்றாகத் தேறிவிட்டால், 'பேக் - அப்' ஓப்பனர், 'பேக் - அப்' கீப்பர் என்ற இரு வாய்ப்புகளும், முழு வாய்ப்பைத் தேடித் தரலாம். இந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கீப்பராகவும் இவரே செயல்படவுள்ளார். அதனால் தன்னை கீப்பராக நிரூபிப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார் என்பது உறுதி. இது அவரது பேட்டிங்கைப் பாதிக்காதவரை அணிக்கு நல்லது!