Published:Updated:

``சச்சினுக்கு நீ கேப்டனா... அசிங்கமாயில்ல...?" ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 3 #ACenturyIsNotEnough

``சச்சினுக்கு நீ கேப்டனா... அசிங்கமாயில்ல...?" ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 3 #ACenturyIsNotEnough

``சச்சினுக்கு நீ கேப்டனா... அசிங்கமாயில்ல...?" ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 3 #ACenturyIsNotEnough

``சச்சினுக்கு நீ கேப்டனா... அசிங்கமாயில்ல...?" ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 3 #ACenturyIsNotEnough

Published:Updated:

"சச்சின் போன்ற வீரர் விளையாடும் அணிக்கு நீ தலைமை தாங்குகிறாயா...? சச்சினுக்கு நீ கேப்டனா...? இது உனக்கு அசிங்கமாயில்லை?" பேட்டிங் செய்துகொண்டிருந்த கங்குலியின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழுந்தன. அவர் நிற்பது ஆஸ்திரேலியா என்பதை நன்கு உனர்ந்திருந்ததார். பிரெட் லீ வீசும் பந்தின் வேகத்தைவிட வார்த்தைகளின் வேகம் அதிகமாக இருக்கும். பௌலரை எதிர்கொள்வதா, இல்லை ஸ்டம்புகளுக்குப் பின்னால் நிற்பவர்களை எதிர்கொள்வதா என்ற குழப்பம் எப்பேர்பட்ட பேட்ஸ்மேனுக்கும் எழும். கங்குலி - கோபக்கார கிரிக்கெட் வீரராக இன்றும் அறியப்படுபவர், அமைதியாகவே இருந்தார். மேத்யூ ஹெய்டன், ஸ்டீவ் வாஹ் இருவரும் பேசிய வார்த்தைகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. 

ஸ்டுவார்ட் மெக்கில் வீசிய அந்தப் பந்தை ஸ்வீப் செய்துவிட்டு ஓடுகிறார். இரண்டாவது ரன்னை ஓடி முடித்துவிட்டு ஆர்ப்பரிக்கிறார். சதம். ஹெய்டன் கைதட்டி வாழ்த்துகிறார். அவருக்கான பதில் இப்படித்தான் கிடைத்தது. ஆனால், கடைசிப் போட்டி முடிந்ததும், தன்னைப் பழித்த ஸ்டீவ் வாஹ் முன்பு... தன் கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்டிருந்த அந்த ஜாம்பவான் முன்பு கோப்பையைத் தூக்கியபோது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் பதில் கிடைத்திருக்கும். 

கங்குலி எப்படிப்பட்ட கேப்டன் என்பதை ஸ்டீவ் வாஹ் பின்பு நன்கு உனர்ந்துவிட்டார். ``இந்திய அணி கிரிக்கெட் ஆடிய விதத்தை மாற்றிய முதல் கேப்டன் கங்குலிதான். இன்று இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் பெரிய வித்தியாசமில்லை" என்று சமீபத்தில் அவரே கூறினார். இதுதான் கேப்டனாக கங்குலி சாதித்த மிகப்பெரிய விஷயம். கேப்டனாக நியமிக்கப்பட்ட அந்தத் தருணம், அவர் கண்ட கனவு இதுதான். ஆம், இந்திய அணி கேப்டனாகப் பதவியேற்றதும் அவர் லட்சியமாக நினைத்தது.

'கேப்டன் பதவியை நான் வேறு மாதிரி அணுகினேன். பயமறியாது ஆக்ரோஷமாகச் செயல்படவேண்டும் என்று முடிவெடுத்தேன். இந்த அணிக்குப் புதிய அடையாளம் கொடுக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தேன். நான் செய்யவேண்டும் என நினைத்தது இரண்டு விஷயங்கள். வெளிநாட்டுத் தொடர்களில் வெற்றிபெற வேண்டும். அடுத்து, இந்திய அணியின் பாடி லேங்குவேஜை மாற்ற வேண்டும். இந்த இரண்டு விஷயமும் மாறினால், இந்தியாவுக்கான அடையாளம் மாறும் என்பதில் நம்பிக்கையாக இருந்தேன்' என்று புத்தகத்தில் கூறியுள்ளார் கங்குலி. 

ஆனால், கங்குலி கேப்டனாகப் பதவியேற்ற தருணம் சாதாரணமானது அல்ல. கிரிக்கெட் உலகே அசாதாரண சூழலில்தான் இயங்கிக் கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் சூதாட்டப் புகார்கள். இப்படியொரு தருணத்தில் அத்தனை வீரர்களும் மனம் தளர்ந்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் வீரர்களை ஒன்றிணைத்து, அவர்களின் அணுகுமுறையை மாற்றி, வெற்றிகளின் பின்னால் பயணிக்க வைப்பதென்பது... அப்பப்பா சாதாரண விஷயமல்ல. 'கடினமான சூழ்நிலைகளிலிருந்துதான் கதாநாயகர்கள் உருவாகிறார்கள்' என்கிறார் கங்குலி. ஆம், அதுதானே இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரைப் பற்றிப் பேசவைத்திருக்கிறது.

புத்தகத்தின் இந்தப் பகுதியை எதிர்பார்ப்போடு படிக்கும்போது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. சூதாட்டத்தைப் பற்றிப் பேசிய கங்குலி, அதன் முழு தாக்கத்தைப் பற்றியும் எழுதவில்லை. 'அணி வீரர்கள் அந்தப் பிரச்னையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு சில வீரர்களை அழைத்து தரகர்கள் தொடர்புகொண்டார்களா எனக் கேட்டேன். அப்படி எதுவும் நிகழாதது நிம்மதியாக இருந்தது. இந்தப் பிரச்னைகள் நடந்துகொண்டிருந்ததால் இளம் வீரர்களுக்கு சூதாட்டத்தின் சிக்கல்கள் புரிந்தன' என்ற வகையில் நிறுத்திக்கொண்டார். அன்றைய பயிற்சியாளர் கபில் தேவ் இந்தப் பிரச்னையினால் தவித்தது தனக்கு வருத்தமளித்ததாகவும் குறிப்பிட்டுள்ள கங்குலி, அப்போது அவர்களுக்கு இடையே உரையாடல்கள் ஏதேனும் நிகழ்ந்ததா என்பது பற்றிக் குறிப்பிடவில்லை. 

கபில்தேவ் ராஜினாமா செய்வதாக முடிவெடுத்தபோது கங்குலி இந்தியாவில் இல்லை. டிராவிட், கங்குலி இருவரும் இங்கிலாந்தில் கவுன்ட்டி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். 'யூ டியூப் - இன்டர்னெட் தலைமுறைக்கு முந்தைய காலம் என்பதால், தகவல் தாமதாகவே தெரிந்தது' என்று குறிப்பிட்டுள்ள கங்குலி, சற்றும் தாமதிக்காமல் தன் துணைக் கேப்டனிடம் ஆலோசனை செய்துள்ளார். அப்போது டிராவிட் விளையாடிவந்த 'கென்ட்' அணியின் பயிற்சியாளராக இருந்தார் ஜான் ரைட். அவரை டிராவிட், கங்குலியிடம் அறிமுகம் செய்து வைக்க, தாதாவுக்கு ரைட்டைப் பிடித்துப்போனது. உடனே ஓகே சொல்லிவிட்டார். காரணம் டிராவிட் மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. தன் முதல் தேர்வுக்குழுக் கூட்டத்தில் ''உங்களுடைய துணைக் கேப்டனாக யாரை நியமிக்கலாம்" என்று கேட்டதற்கு, துளியும் யோசிக்காமல், ''டிராவிட்" என்று சொல்லியவரல்லவா. இப்போதும் அந்த நம்பிக்கை நீடித்தது. 

வெறுமனே அணியை வழிநடத்துவதோடு அல்லாமல், இளம் திறமைகளைக் கண்டறிவதில் மிகவும் ஆர்வம் கொண்டார். யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், சேவாக் எனப் பலரை அவர் அடையாளம் கண்டதை உலகறியும். அவர்களை அணியில் அறிமுகமாக்கியதைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் கங்குலி பேசியுள்ளார். மேலும், 'மஹேந்திர சிங் தோனியை எனக்கு முதல் நாளில் இருந்தே பிடித்துவிட்டது. இந்திய அணிக்கு முக்கியமான மேட்ச் வின்னராக அவர் வருவார் என்று நினைத்தேன். எனது கணிப்பு தவறவில்லை' என்று எழுதியுள்ள கங்குலி, அந்த இடத்தில் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 

'2003 உலகக்கோப்பைத் தொடரில் தோனி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்... அந்தச் சமயம் அவர் இந்திய ரெயில்வேயில் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார் எனக் கேள்விப்பட்டு திடுக்கிட்டேன்' என்று கூறும் அவரது வார்த்தையில் பலத்த ஏமாற்றம். ஆம், ஓர் இடத்தில், உலகக்கோப்பையை வாங்காதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்ததென்றும் அவர் குறிப்பிடுகிறார். ஒருவேளை அவர் நினைத்ததுபோல் தோனி இருந்திருந்தால், அது இந்திய அணிக்குச் சாதகமாக இருந்திருக்குமோ என்னவோ!

அதேபோல், ஹர்பஜன் சிங் பற்றி தேர்வாளர் ஒருவர் கங்குலியிடம் கூறினாராம். அதுவரை ஹர்பஜன் பற்றி கங்குலி அறிந்திருக்கவில்லை. பாஜியை இந்திய அணி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த இடத்துக்கு வரச் செய்திருக்கிறார். அவர் வந்ததும், கும்பிளேவிடம் அவரை ஒப்படைத்துவிட்டாராம். அன்று ஹர்பஜனின் எதிர்காலத்தை கும்பிளேவின் கையில் ஒப்படைத்த அந்த மனிதன், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே கும்பிளேவுக்குப் போன் செய்கிறார் - "உங்களுடைய பிளேயிங் லெவனில் நான் ஆட்டோமேடிக் சாய்ஸ் இல்லையா...?" 

ஆம், அந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ நிகழ்ந்துவிட்டன. சூதாட்டச் சிக்கலுக்குப் பிறகு இந்தியக் கிரிக்கெட்டின் கறுப்புக் காலம் அதுதான். இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பை இளைஞர்கள் கொண்டு வடிவமைத்தவரின் முதுகெலும்பை உடைத்து அனுப்பியது காலம். 

A Century is Not Enough புத்தகத்தை ஆன்லைனில் வாசிக்க Juggernaut தளத்தை அணுகவும்