Published:Updated:

சேப்பலுடன் 7 நாள்கள்... ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 2 #ACenturyIsNotEnough

சேப்பலுடன் 7 நாள்கள்... ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 2 #ACenturyIsNotEnough

சேப்பலுடன் 7 நாள்கள்... ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 2 #ACenturyIsNotEnough

சேப்பலுடன் 7 நாள்கள்... ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 2 #ACenturyIsNotEnough

சேப்பலுடன் 7 நாள்கள்... ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 2 #ACenturyIsNotEnough

Published:Updated:
சேப்பலுடன் 7 நாள்கள்... ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 2 #ACenturyIsNotEnough

டிசம்பர்  4, 2003 - இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பைத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதாக இருந்தது. அதற்கு முந்தைய தொடரை (2001-ல் இந்தியாவில் நடந்தது) இந்தியாதான் வென்றிருந்தது. அதுவும் ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான 15 டெஸ்ட் வெற்றி பயணத்தை உடைத்து... இந்த முறை ஆஸ்திரேலியாவில். இதுவரை அங்கு தொடரை வென்றதேயில்லை. அதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியிருந்த 28 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது. அதுவும், அசார் (1991-92), சச்சின் (1999-00) தலைமையிலான கடைசி இரண்டு தொடர்களில் 8 போட்டிகளில் 7 தோல்விகள். இந்த வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய தாகம் கொண்டிருந்தார் அன்றைய கேப்டன் சவுரவ் கங்குலி.

பௌன்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத இந்திய ஆடுகளங்களில் நெட் பிராக்டீஸ் எடுத்துக்கொண்டும், ஏ.சி அறையில் அமர்ந்து ஆலோசித்துக் கொண்டும் இருந்தால், எதையும் மாற்ற முடியாது என்று உணர்ந்திருந்தார். என்ன செய்வது? A Century Is Not Enough புத்தகத்தில், தான் இதற்காக ' கிரிக்கெட் உளவு' செய்ததாகக் குறிப்பிடுகிறார் தாதா. அதென்ன கிரிக்கெட் உளவு...?

A Century is Not Enough புத்தகத்தை ஆன்லைனில் வாசிக்க Juggernaut தளத்தை அணுகவும்

யுத்த களத்துக்கே சென்று, போருக்கான திட்டங்களை வகுப்பதுதான் கங்குலியின் திட்டம். ஆஸ்திரேலிய மைதானங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். ஜூலை மாதமே அங்கு போக தயாரானார். தன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டுமென்பதும் அந்தத் திட்டத்தின் ஓர் அங்கம். இந்தத் திட்டத்தில் தனக்கு உதவுவதற்காக கங்குலி தேர்வு செய்த ஆள்தான் சேப்பல்!

'Seven days with Greg Chappell' என்ற பகுதியில், இந்தப் பயணம் குறித்து எழுதியிருக்கும் கங்குலி, தனக்கும் சேப்பலுக்கும் இடையில் நடந்த சம்பவங்கள் பற்றியோ, உரையாடல்கள் பற்றியோ பெரிதாக விளக்கவில்லை. அந்த ஒரு வாரம் நல்ல படியாக முடிந்ததாக மட்டுமே குறிப்பிடுகிறார். இந்தப் பகுதியில் சேப்பல் பற்றிப் பேசத் தொடங்கிய தாதா, பின்னர் தன் முழு கவனத்தையும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரிலேயே செலுத்திவிட்டார். அந்தத் தொடருக்குத் தயாராக, என்னென்ன மாதிரியான ஆலோசனைகள் செய்தேன் என்று குறிப்பிட்ட இடங்களில்தான் பின்னர் சேப்பல் பெயர் அடிபட்டது. அந்த வகையில், இந்த 'சேப்டர்' முழுமை அடையாதது போன்றதோர் உணர்வைக் கொடுத்தது. ஆனால், அந்த டெஸ்ட் தொடர் திட்டங்களைப் பற்றி கங்குலி சொன்ன விஷயங்கள்... "கேப்டன்னா இப்டித்தான் இருக்கணும்" என்று நம்மை புல்லரிக்கச் செய்யும். அதைப் பற்றிப் பார்ப்போம். 

அப்போது சேப்பல் மீது கங்குலி நல்ல அபிப்ராயம் வைத்திருந்தார். சேப்பலின் கிரிக்கெட் அறிவு தன்னைக் கவர்ந்ததால், அவரிடம் ஆலோசனை பெற விரும்பினார் சவுரவ். ஆஸ்திரேலியா கிளம்பும் முன்னதாக சேப்பலிடம் பேசி அவரது விருப்பத்தை அறிந்த பிறகு, யாருக்கும் தெரியாமல் சென்றிருக்கிறார். அதுதான் சேப்பல் - கங்குலி அத்யாயத்தின் தொடக்கம். ஏழு நாள்கள். ஆஸ்திரேலிய தொடருக்கான தன் திட்டங்களுக்குத் தேவையான விஷயங்களையெல்லாம் அவரிடம் ஆலோசிக்கிறார். தன் பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறார். 

இந்தியா ஆடவிருக்கும் ஒவ்வொரு மைதானங்களைப் பற்றியும் case study செய்திருக்கிறார் தாதா. இந்திய ஆடுகளங்களில் தாங்கள் காண முடியாத 'பெரிய பௌண்டரி எல்லை'யை எப்படிச் சமாளிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். 'ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பௌலர்கள் எந்த லெங்தில் பந்துவீசவேண்டும்? எந்த ஆஸ்திரேலிய மைதானத்தில் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும்? எந்த எண்ட்-ல் இருந்து ஸ்பின்னர் பந்துவீசுவது உகந்தது? காபா (Gabba) மைதானத்தில் எந்தெந்த பௌலர்களைக் களமிறக்குவது நல்லது? அடிலெய்ட் போன்ற செவ்வகமான மைதானத்தில் எப்படி ஃபீல்டர்களை நிறுத்துவது?' என்று சின்னச்சின்ன விஷயங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார் கங்குலி. 

இதெல்லாம் கூட பரவாயில்லை. ஒரு மைதானத்தில் நின்று, ஜாஹிர் பந்துவீசுவது போலவும், அந்தப் பந்து ஹெய்டன் பேட்டில் பட்டு எட்ஜாவது போலவும், அதை டிராவிட், லட்சுமண் இருவரில் ஒருவர் பிடிப்பது போலவும் கற்பனை செய்து பார்த்துள்ளார். அந்தக் கற்பனை டிராவிட், லட்சுமண் இருவரும் சரியான இடங்களில் நிற்கிறார்களா என்று மனதில் கணக்கிடுகிறார். கேட்ச் வந்தால் அவர்களைத் தாண்டியோ, அவர்களுக்கு முன்னாலோ விழுந்துவிடுமோ என்று எண்ணி, அவர்கள் சரியாக எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்றெல்லாம் 'கால்குலேஷன்' போட்டுள்ளார். வீட்டில் விளையாட ஆளில்லாத சிறுபிள்ளை தன்னைச் சுற்றி எல்லாம் நடப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு விளையாடுவது போல் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் கற்பனைகளின் நடுவே, கனவுலகத்தில் வாழ்ந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்பதில் அவ்வளவு வெறி.

பின்னர், முதல் போட்டி நடக்கும் பிரிஸ்பேன் நகருக்குத் தன்னை அழைத்துச்செல்லும்படிக் கேட்டிருக்கிறார் சவுரவ். பனி அதிகமாக இருந்ததால், பிரிஸ்பேன் மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அதனால், அத்துடன் தன் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். அப்போது, தான் சேப்பல் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்ததாகக் கூறுகிறார். "அந்தப் பயணம் என் பேட்டிங்கில் நல்லதொரு முன்னேற்றத்தைக் கொடுத்தது. மிகவும் மகிழ்ச்சியாக அங்கிருந்து கிளம்பினேன். அப்போது அவருக்கு மனதார நன்றி சொன்னேன்" என்று கூறும் கங்குலி, "அந்தப் பயணம்தான் நான் தவறான முடிவெடுப்பதற்குக் காரணமாக அமைந்துவிட்டது" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மீபத்திய தென்னாப்பிரிக்க அணியுடனான இந்திய அணியின் டெஸ்ட் தொடர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை  ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அறிந்திருந்தது. அதற்கு 12 நாள்கள் முன்பு வரை 'கைப்புள்ள' இலங்கை அணியை துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தது இந்திய அணி. சரியாக ஒரு வாரம் முன்பு தென்னாப்பிரிக்காவில் தரையிறங்கினார்கள் இந்திய வீரர்கள். ஒரு பயிற்சி போட்டி கூட இல்லை. வெறும் வலை பயிற்சியோடு கேப்டவுனில் களம் புகுந்தனர். தோல்வி. ஒரு தொடருக்கு தொடக்கம் என்பது எவ்வளவு முக்கியம்...? அதைச் சாதகமாகப் பயன்படுத்தத் தவறிய இந்திய அணி, அடுத்த போட்டியில் தொடரையும் இழந்தது.

ஒரு முக்கிய அணியுடனான டெஸ்ட் தொடரை எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு கேப்டன் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கங்குலி அப்படிப்பட்டவர். அந்த ஆஸ்திரேலிய தொடருக்கான அட்டவணை தயாரானது. கங்குலிக்கு அது போதுமானதாகத் தெரியவில்லை. அன்றைய பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு போன் செய்கிறார். ``நாங்கள் போட்டி தொடங்குவதற்கு 3 வாரத்துக்கு முன்பே ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். 3 பயிற்சி போட்டிகளிலாவது பங்கேற்க வேண்டும்" என்கிறார். கேப்டனின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. இந்தியா 3 பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய சீதோஷ்ண நிலைக்கு.. அந்த ஆடுகளங்களுக்கு... அதன் பௌன்ஸுக்கு... இந்தியா தயார்.

பிரிஸ்பேனில் முதல் போட்டி. அந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி 20 செஷன்கள் பயிற்சிபெற்ற அனுபவத்தைப் பெற்றிருந்தது. கேப்டன் கங்குலி சதம் அடிக்கிறார். போட்டி டிரா. அடுத்த போட்டியில் டிராவிட் சதம். வெற்றி. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி. 3-வது போட்டியில் தோல்வி. 4-வது போட்டி... ஸ்டீவ் வாஹ் என்னும் ஜாம்பவானின் கடைசிப் போட்டி. மைதானத்தில் உணர்ச்சிப் பெருக்கு. கிரிக்கெட் உலகைக் கட்டியாண்ட ஸ்டீவ், தன் கடைசிப் போட்டியில், தன் சொந்த மண்ணில், தன் அணியின் தோல்வியைத் தவிர்க்கப் போராடுகிறார். இந்தியா உலக கிரிக்கெட்டில் சூப்பர் பவராக உயர்ந்த தருணம் அது. தொடர் முடிந்தது. கோப்பை வாங்கச் செல்கிறார் கங்குலி. சொந்த ஊரைப் போன்ற கரகோஷம். இந்திய அணிக்கு அவ்வளவு மதிப்பு கொடுத்தார்கள். ஆசியக் கண்டத்துக்கு வெளியே இந்திய அணிக்குக் கிடைத்த முதல் கௌரவம்!

தன் வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றியாக இதைக் குறிப்பிடுகிறார் கங்குலி. ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஒரு அணியை தடுமாற வைத்த அந்தத் தருணத்தை யாரால் மறந்திட முடியும். எதிரணி வீரர்களைப் பெரிதாக மதிக்காத ஆஸ்திரேலிய வீரர்கள், இந்த இந்திய அணியிடம் அடங்கிய அந்த தருணத்தை யாரால் மறந்திட முடியும். அந்த உற்சாகம்தான் கங்குலிக்கு சேப்பல் மீது இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. அடுத்த பயிற்சியாளராக அவர் வரவேண்டுமென சண்டையிடச் செய்தது. தனது முடிவாலேயே தன் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனத்தை முடிவு செய்யச் செய்தது. இதைப் பற்றி எழுதிய இடத்தில், கங்குலி இந்த வரிகளைச் சாதாரணமாக எழுதியிருப்பார் - ``மொத்த தேசத்தையும் ஆட்கொண்டேன்... அதன் ஒரு குடிமகனைத் தவிர..." ஆனால், அவரை வெறித்தனமாக ரசித்த கிறுக்கர்களால் அதைச் சாதாரணமாக கடந்துவிட முடியாது. காரணம், அந்த வார்த்தை... 3 ஆண்டு போராட்டத்தின் வலி... புறக்கணிப்பின் வலி...!

A Century is Not Enough புத்தகத்தை ஆன்லைனில் வாசிக்க Juggernaut தளத்தை அணுகவும்

``சச்சினுக்கு நீ கேப்டனா...? வெக்கமாயில்ல...!" - கங்குலியிடம் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த ஜாம்பவான் யார்...? அடுத்த பாகத்தில்...