சஹால் வீசிய 12-வது ஓவரின் முதல் பந்து. லெக் சைடு க்ரீஸுக்கு வெளியே சென்று ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸர் விளாசினார் கிளாசன். அரவுண்ட் தி ஸ்டம்ப் திசையிலிருந்து ஓவர் ஸ்டிக்குக்கு மாறினார் சஹால். லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்சாகி உள்ளே வந்தது. பொறுமையாக நின்று மிட் விக்கெட் திசைக்கு கிளாசன் புல் செய்தார். பௌண்டரி எல்லையைத் தாண்டி சிக்ஸரானது. 3-வது பந்து... மிடில் ஸ்டம்ப் லைனில் வந்தது. ஸ்விட்ச் ஹிட்... நான்கு ரன்கள். ஓவரின் கடைசிப் பந்து. இப்போது ஸ்ட்ரைக்கர் எண்டில் இருப்பது டுமினி. தென்னாப்பிரிக்க கேப்டன். பந்து ஆஃப் சைடு க்ரீஸுக்கு வெளியே சென்றது. மீண்டும் ஸ்லாக் ஸ்வீப்... சிக்ஸர். அந்த ஓவரில் 23 ரன்கள். மேட்சை அந்த ஆறு பந்துகளிலேயே இந்தியாவின் வசமிருந்து பறித்தனர் அந்த இரு பேட்ஸ்மேன்களும். அதுதான் அவர்களின் திட்டம். அவர்களின் ப்ரைம் டார்கெட் - சஹால்! SAvsIND
ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில்தான் முதல் முறையாக இந்திய ஸ்பின்னர்களைப் போட்டுத் தள்ளியது தென்னாப்பிரிக்கா. அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் டிவில்லியர்ஸ். அதிகமாக 'flight' கொடுக்கும் இந்திய ஸ்பின்னர்களை ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் இரண்டிலுமே டீல் செய்தார். அதிலும் குறிப்பாக சஹாலின் பந்துவீச்சைப் பின் தொடர்ந்து கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் தாண்டவம் ஆட, இந்தியா அந்தத் தொடரின் முதல் தோல்வியைச் சந்தித்தது. அது என்னமோ அந்தப் போட்டியில் மட்டும்தான் நிகழ்ந்தது. இந்தப் போட்டியில் மீண்டும் அதே ஃபார்முலாவைக் கையாண்டதுதான் தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்துள்ளது.
"நாம ஜெயிக்கணும்னா எதிரியோட ஆயுதத்தை முதல்ல அழிக்கணும்..." - செங்கிஸ்கானின் ஃபார்முலாவாக `இறுதிச் சுற்று’ படத்தில் மாதவன் சொன்னது. அந்த ஒருநாள் போட்டியிலும் சரி, நேற்றைய டி-20 போட்டியிலும் சரி, தென்னாப்பிரிக்கா செய்தது அதைத்தான். தென்னாப்பிரிக்கத் தொடரில் கோலி பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் சஹால். தன் ரிஸ்ட் ஸ்பின்னால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். முதல் 3 ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியவரை அடுத்த போட்டியில் பந்தாடினார் ஏபிடி. 33 பந்துகளில் 68 ரன்கள் விளாசினர். சஹால் ஒருபுறம் விளாசப்பட, குல்தீப், பாண்டியா, பும்ரா ஆகியோராலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. இந்தியா தோற்றது.
நேற்றும் அப்படியே நடந்தது. அவர் வீசிய முதல் ஓவரில் 1 சிக்ஸர், அடுத்த ஓவரில் 2 சிக்ஸர், மூன்றாவது ஓவரில் 3 சிக்ஸர்கள் என ரவுண்டு கட்டி அடித்தனர். அதுவும் ஓவரின் தொடக்கத்திலேயே அவர்கள் அதிரடி காட்டுவது, சஹாலின் நம்பிக்கையையும் குலைத்தது. தொடர்ச்சியாக 'outside the stump' லைன்களிலும், குட் லெந்திலுமே வீசிக்கொண்டிருக்க, அதை டுமினி, கிளாசன் இருவரும் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். அவரை அதிரடியாகக் கையாண்ட நம்பிக்கையோடு ஹர்டிக் பாண்டியா, உனத்கட் ஆகியோரையும் கூலாக டீல் செய்தனர். இந்தியாவின் வேகப்பந்து கூட்டணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புவி, உனத்கட், ஷர்துல் தாக்குர் என வெரைட்டியான பௌலர்கள் இருந்தும் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தவோ, விக்கெட்டுகளை வீழ்த்தவோ முடியவில்லை.
உனத்கட் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்திருந்தார் கிளாசன். ஆனால், அவை மோசமாக வீசப்பட்ட 'ஸ்லோ பால்'களால் வந்த விளைவு. அந்தப் பந்துகளை விளாச, கிளாசன் எந்த சிரத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய ஃபூட்-மூவ்மென்ட் கொடுக்காமல், நின்ற இடத்தில் இருந்தே லாங் ஆன் திசைக்கு ஒன்று, மிட்விக்கெட்டுக்கு ஒன்று எனப் பறக்கவிட்டார். ஆனால், சஹால் பௌலிங்கில் அப்படியில்லை. தன் கால்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்தினார். ஸ்டம்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், விலகி ஆடினார். அதிகமாக ஸ்வீப் செய்ய முற்பட்டார். அனைத்தும் பலன் கொடுத்தது. 30 பந்துகளில் 69 ரன்கள். மிரட்டிவிட்டார்!
டுமினி - சரியான தருணத்தில் கேப்டன் இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் அமைதிகாட்டியவர், கிளாசன், சஹாலைக் கையாண்ட விதத்தைப் பார்த்து, தானும் கோதாவில் இறங்கிவிட்டார். இத்தனை நாள்கள் டுமினியின் ஆட்டத்தில் அனைவரும் மிஸ் செய்த பர்ஃபக்ஷன் மீண்டும் வெளிப்பட்டுவிட்டது. கிளாசன், மில்லர் இருவரும் அடுத்தடுத்த வெளியேற, இந்தியாவின் கை ஓங்குவதுபோல் இருந்தது. ஆனால், டுமினி நிலைத்து நின்றுவிட்டார். அடிக்கடி க்ரீஸிலிருந்து வெளியே வந்து பௌலர்களை சார்ஜ் செய்தார். 19-வது ஓவரில், ஷர்துல் பந்துவீச்சில் அவர் விளாசிய அந்த சிக்ஸர்... ஆசம்!
இந்தப் போட்டியில், இந்தியா இன்னும் 20 ரன்கள் சேர்த்து எடுத்திருந்தால், கடைசி வரை டஃப் கொடுத்திருக்கலாம். ஆனாலும், இந்தியாவுக்கான ஆறுதல், மிடில் ஆர்டரின் பேட்டிங். கோலியின் சர்ப்ரைஸ் சொதப்பலும், ரோஹித்தின் யூஷுவல் சொதப்பலும் மிடில் ஆர்டர் மீதான பிரஷரை அதிகரித்துவிட்டது. இப்படியான நிலையில் மனீஷ் பாண்டே, தோனி இருவரும் நன்றாகவே விளையாடினார். குறிப்பாக மனீஷ். ஏனெனில், இந்தத் தொடரிலும் ஆடாமல் விட்டிருந்தால், தேசிய அணியில் அவருக்கான இடம் கேள்விக்குறியாகியிருக்கும். சரியான நேரத்தில் டாப் இன்னிங்ஸ்.
சுரேஷ் ரெய்னா - இன்னும் பழைய ரெய்னா தெரியவில்லை. ஆட்டத்தில் கொஞ்சம் தொய்வு இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் அதைச் சரிசெய்தால், ஒருநாள் அணிக்கான என்ட்ரி நிச்சயம். தோனி - மாஸ்டர் க்ளாஸ் இன்னிங்ஸ். 28 பந்துகளில் 52 ரன்கள். எப்படியோ, ஒருநாள் தொடரைப்போல் இல்லாமல், டி-20 தொடரின் கடைசிப் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்துவிட்டது. கோலி தலைமையில் இந்தியா ஒருநாள், டி-20 தொடர்களை இழந்ததில்லை. அந்தச் சாதனைக்கு தென்னாப்பிரிக்கா முட்டுக்கட்டை போடுமா...?