Published:Updated:

அதிரடி தவான்...ஆசம் புவி...இந்தியா அசத்தல் வெற்றி! #SAvsIND

அதிரடி தவான்...ஆசம் புவி...இந்தியா அசத்தல் வெற்றி! #SAvsIND
அதிரடி தவான்...ஆசம் புவி...இந்தியா அசத்தல் வெற்றி! #SAvsIND

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரின் முதலாவது போட்டி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பொறுப்பு கேப்டன் டுமினி பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.. தென்னாப்பிரிக்கா அணியில் காயம் காரணமாக மாயாஜால பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் ஆடவில்லை. அறிமுக வீரர்களாக விக்கெட் கீப்பர் ஹென்ரிக் கிளாசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலா சர்வதேச 20 ஓவர் போட்டியில் அடியெடுத்து வைத்தனர். இந்திய அணியில் ஓராண்டுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னா களாமிறங்கினார். விரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 11.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஐபிஎல் அதிர்ஷ்டக்காரன் ஜெய்தேவ் உனத்கட் இடம் பெற்றனர். #SAvsIND

இந்திய இன்னிங்க்ஸின் முதல் ஓவரிலேயே ரோஹித் ஷர்மா பேட்டர்சனின் ஷார்ட் பிட்ச் பந்துகளில் இரு 'புல்ஷாட்' சிக்ஸர்களை அடித்தார். அறிமுக வீ்ரர் டாலா வீசிய இரண்டாவது ஓவரில் அதே ஷார்ட் பிட்ச் பந்தில் அப்பர்கட் அடிக்க முயன்று 21 ரன்களில் விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் அவுட் ஆனார் ரோஹித்.  இதனையடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா மிட் ஆன் திசையில் ஒரு சிக்ஸர் அடித்தார். கம்பேக் போட்டியில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15 ரன்களில் டாலா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் இறங்கிய கேப்டன் விராட் கோலியும் சிகர் தவானும் தலா ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினர். 

முதல் பவர் பிளேயில்,தென்னாப்பிரிக்காவின் ஷார்ட் பிட்ச் தாக்குதல் எடுபடாமல் போனதாலும் ஒருசில கேட்ச்களை வீணடித்ததாலும் இந்திய அணி 78 ரன்கள் எடுத்தது. விராட் கோலி -தவான் பார்ட்னர் ஷிப் மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்ததும் விராட் கோலி 26 ரன்களில் வெளியேறினார். அடுத்து மனிஷ் பாண்டே இறங்கினார். விக்கெட்டுகள் சீராக வீழ்ந்தபோதும் தவான் அதிரடியைத் தொடர்ந்தார். ஆனால், இந்த முறை அதிகமாக  கிரீசை விட்டு இறங்கி ஆடாமல் லெக் ஸ்டம்ப்பிற்கும் ஒரு அடி தள்ளி எப்பொழுதும் போல ஆப்சைடில் அதிகமாக பவுண்டரிகள் விளாசினார். 72 ரன்களில் ஆல்ரவுண்டர் பெலக்வாயோ பந்தில் அவர் அவுட் ஆனதும் இந்தியாவின் ரன் ரேட்டும் சரியத் தொடங்கியது.

பாண்டேவும் தோனியும் ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். தோனி 16 ரன்களில் அவுட் ஆக இறுதியில் பாண்டியா இரு பவுண்டரி அடிக்க 20 ஓவரில் 220 ரன்களை தாண்டுமென எதிர்பார்த்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது. 

பின்னர் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்மட்ஸ் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அமர்க்களமாக இன்னிங்ஸைத் தொடங்கினார். பின்னர் சுதாரித்த 'ஸ்விங் கிங்' புவனேஷ்வர் குமார், ஸ்மட்ஸை 14 ரன்களிலும்  டுமினியை 3 ரன்களிலும் அவுட் ஆக்கினார். அடுத்து அபாயகரமான பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் இறங்கினார். மில்லர் அடித்த பந்தை பும்ரா பவுண்டரி லைனை தாண்டி அந்தரத்தில் தடுத்தார். ஆனால் பவுண்டரி லைனில் அவர் கால்பட்டதால் ஆறு ரன்கள் வழங்கப்பட்டது. ஆனாலும் பாண்டியா பந்தில் 9 ரன்களில் விரைவில் அவர் வெளியேற, பவர் பிளேயின் முடிவில் 50/3 என தடுமாறியது தென்னாப்பிரிக்க அணி. பின்னர் சுதாரித்த ஓபனர் ஹென்ரிக்ஸ் மற்றும் ஆல் ரவுண்டர் பெஹர்தீன் சரியான பார்ட்னர் ஷிப் அமைத்தனர். நான்காவது விகெட்டுக்கு இவர்கள் இருவரும் 81 சேர்த்தனர். கடைசி 3 ஓவரில் 50 ரன் தேவைப்பட்ட போது ஹென்ரிக்ஸ் 70 ரன்களிலும்  பெஹர்டைன் 39 ரன்களிலும் வெளியேறினர். கிளாசன் மற்றும் மோரிஸ் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க தென்னாப்பிரிக்காவின் வெற்றி வேகம் முற்றிலும் குறைந்தது.

20 ஓவரின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணியால் 175 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. 28 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடர்ச்சியாக 20/20 கிரிக்கெட்டில் பெற்ற 5 வது வெற்றியாகும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்கிற சாதனையும் படைத்தார்.